கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது.
ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறைகிறது. இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருக்குமானால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். எப்படி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு? காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு!
ஹைட்ரஜன் பெராக்சைடை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் டிரை அசிடோன் டிரை பெராக்சைடு (TATP) வெடிகுண்டுகளைத்தான் பயங்கரவாதிகள் இப்போது பயன்படுத்தி வருகின்றார்கள்.
"சார், என்னுடைய டூத்பேஸ்ட்டில்கூட பெராக்ஸைடு சேர்க்கப்பட்டிருக்கிறது. என்னையும் விமானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிடுவார்களா?" என்றொரு குரல் கேட்கிறது. இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் "சில்"லு புத்திசாலித்தனமானதாம். வெடிகுண்டில் சேர்க்கப்பட்டுள்ள பெராக்ஸைடை மட்டும்தான் அடையாளம் காட்டுமாம்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.
ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.
இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?
அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு. பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்து பார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.
பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது. படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம். கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச் செய்யுமாம். பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதும்தான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.
பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்; பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம் என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறதா?
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
வேர்செல்களை உபயோகித்து உடலில் திசுக்களைப் புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகம் முழுவதும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வளரும் கருவிலிருந்து வேர்செல்களை எடுத்துப் பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழி குழந்தை பிரசவித்தவுடன் தூக்கி வீசப்படும் நஞ்சுக்கொடியிலிருந்து வேர்செல்களைப் பிரித்தெடுப்பதே.
ஆனால் அதை சர்வசாதாரணமாக பெண்களின் மாதாந்திர உதிரப்போக்கிலிருந்து கூட வேர்ச்செல்களைப் பெறமுடியும். இரத்தத்தில் காணப்படும் வேர் செல்களை ஸ்ட்ரோமல்-ஸ்டெம் செல் என்பார்கள். கருவிலிருந்து பெற்ற வேர்செல்களிலிருந்து சகலவிதமான திசுக்களையும் அடையலாம். இயலாவிட்டாலும் அடிபோஜெனிக், காண்ட்ரோஜெனிக், ஆஸ்டியோஜெனிக், அதாவது கொழுப்புத்திசு, இணைப்புத்திசு, எலும்புத்திசு, உட்தோல் திசுக்களில் இதயத்திசு மற்றும் நரம்பு செல்களை அதிலிருந்து பெறமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.இனி செய்யப்போகும் வேர்செல் சிகிச்சைகளுக்கு பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும். எதை தீட்டென்றும் அசூசை என்றும் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது இன்று.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: தொழில்நுட்பம்
சம்சாரம் அது மின்சாரம் என்பதில் சம்சாரத்தைப் பற்றி ஓரளவாவது(!) அறியும் நமக்கு மின்சாரத்தைப் பற்றி எந்த அளவுக்குத் தெரியும்? இந்த சிந்தனையில் விளைந்ததே இந்த சிறு கட்டுரை. சில அடிப்படை விஷயங்களோடு தொடங்குவோம்.
மின் அழுத்தம் (voltage), மின் ஓட்டம் (current), மின் தடை (resistance).
நம் வீட்டிலுள்ள எல்லா மின்சார சாதனங்களிலும் (230V, 5A) என்பது போன்று குறிக்கப்பட்டிருப்பதை அநேகம் பேர் பார்த்திருப்போம். இதில் உள்ள V உணர்த்துவது voltage, A என்பது ampere என்பதின் சுருக்கம்.
மின்னோட்டத்தை கணக்கிட உதவும் அலகு ampere. மின்னழுத்தத்தை அளவிட volts. இதோடு மின் தடை (resistance).
இந்த மூன்றையும் ஒரு உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயல்வோம். காலையில் எழுந்ததும் நாம் பல் விளக்கப் பயன்படுத்தும் பற்பசை குழாயை எடுத்துக்கொள்வோம். அதனுள் இருக்கும் பற்பசையை மின்னோட்டம் (current) என்று வைத்துக்கொள்வோம். அந்த பசை வெளிவர நாம் கொடுக்கும் அழுத்தம்தான் மின்னழுத்தம் (voltage). பசை வெளியேற ஒரு எதிர்ப்பை அந்தக் குழாய் கொடுக்குமே அதுதான் மின் தடை (resistance).
அழுத்தம்(voltage) அதிகமாய் கொடுத்தால் அதிக அளவில் பசை (current) வெளியே வரும். அப்படி வெளிவரும் அளவு அந்த குழாய் தரும் எதிர்ப்பையும் சார்ந்த ஒன்று தானே? இப்போது இந்த மூன்று காரணிகளையும் இணைக்கும் வாய்ப்பாடு (formula) ஒன்றைப் பார்ப்போம்.
V = I x R
அதாவது,
மின்னழுத்தம் = மின்னோட்டம் x மின் தடை
இதை முன்னிறுத்தி மின்னியலின் ஆதாரமான அடிப்படை விதி (Ohms law) ஒன்று உள்ளது.
["At constant temperature, the current flowing through a conductor is directly proprtional to the voltage difference between its ends"]
"ஒரு கடத்தியின் (conductor or wire) வழியே செல்லும் மின்னோட்டம் (current) அதன் இரு முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தத்தை (voltage) நேரடியாகச் சார்ந்தது."
இந்த கட்டுரையின் புரிதல் மற்றும் தெளிவு பற்றிய உங்களின் கருத்துகளைப் பார்த்தபின், அடுத்த பகுதியில் இன்னும் சற்று முன்னெடுத்துச் செல்ல விருப்பம்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?
- காற்றாடி விமானம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ