பார்வையற்றவர்கள் இல்லாத உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அகக்கண்களால் குருடாகிப் போய்க்கொண்டிருக்கிறவர்களின் எண்ணிக்கைதான் நாளுக்கு நாள் உயரத்தில் போய்க்கொண்டிருக்கிறது. புறக்கண்களால் காணமுடியாதவர்களின் வாழ்வில் புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பார்வையற்றோர் இப்போது கார் ஓட்ட முடியும். ஆம்..... இது உண்மைதான். வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல்துறை மாணவர்கள் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார்கள். தூரத்தை அளவிட லேசர் ஒளிக்கற்றைகள், குரல் மூலம் வெளியிடும் கட்டளைகளை ஏற்கும் ஏற்பிகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்த வாகனத்தின் உதவியால் பார்வையற்றோரால் வாகனங்களை ஓட்ட முடியும்; வேகமெடுக்க முடியும்; எல்லாவற்றிற்கும் மேலாக நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தவும் முடியும்.

லேசர் ஒளிக்கற்றைகள் அகண்ட அலைவரிசைக் கற்றைகளின் துணைகொண்டு சுற்றுப்புறத்தை துருவி ஆராய்கின்றன. இவை வெளியிடும் கட்டளைகள் மூலம் பாதுகாப்பான பயணம் பார்வையற்ற ஓட்டுநருக்கு உறுதிசெய்யப்படுகிறது. ஓட்டுநர் அணிந்திருக்கும் சிறப்பு மேலுடையில் அதிர்வுகளை ஏற்படுத்தி வேக எச்சரிக்கை செய்யப்படுகிறது. ‘கிளிக்’ ஓசைகள் மூலம் எண்ணிக்கைகள் வெளியிடப்படுகின்றன. வேகம், திசைகள் இவையாவும் கருவிகளின் குரலோசைமூலம் வெளியிடப்படுகின்றன. அழுத்தப்பட்ட காற்றின் துணைகொண்டு வாகனத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள தடைகள் பற்றிய அறிவிப்பு பெறப்படுகிறது. காரில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கம்ப்யூட்டர் தொகுப்பு லேசர் கற்றைமூலம் தூரத்தை அளவிடும் வேலையைச் செய்கிறது. முடிவுகளை குரல்ஒலி வாயிலாகவும், அதிர்வுகளகவும் வெளியிடுகிறது. இந்த ‘ஒலி’யும் ‘அதிர்வு’களுமே ஓட்டுநருக்கு ‘கண்’களாக செயல்படுகின்றன.

சோதனை ஓட்டத்தின்போது ஓட்டுநரின் இருக்கையில் ஒரு பார்வையற்றவரும் அவருக்குத் துணையாக மாணவர் குழுவும் அமர்ந்திருந்தனர். மாணவர்குழுவின் கட்டளைகளைவிட கருவிகள்மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகள்தான் மிகவும் துல்லியமாக இருந்தன. மனிதர்களின் கணக்கீடு சிலசமயங்களில் தெளிவாக இருப்பதில்லை. உதாரணமாக ‘இடது பக்கம் திரும்பு’ என்றால் கொஞ்சமாகத் திரும்பவேண்டுமா? அல்லது அதிகமாகத் திரும்பவேண்டுமா? என்பதில் குழப்பம். ஆனால் கருவிகள் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகள் மிகத்துல்லியமாகவும், குழப்பத்திற்கு இடமின்றியும் இருந்தன.

ஒரு சோதனை ஓட்டத்தின் முடிவில் பார்வையற்ற ஆய்வாளர்களில் ஒருவர் “எங்களுக்கு நிலவுக்கு பயணம் செய்ததுபோல் இருந்தது” என்று கூறினார். பார்வையற்றோர் பிறர் உதவியின்றி வாழ வழி பிறந்திருப்பதாக தேசிய பார்வையற்றோர் கழகம் சோதனை ஓட்ட முடிவில் கருத்து தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின்போது ‘இருவழி கட்டளை ஏற்பு’ தொழில்நுட்பத்தின் புதிய கூறுகள் புலப்பட்டன. அவையனைத்தும் பார்வையற்றோர் வாழ்வில் இன்னும் பல மாற்றங்களை நிச்சயமாக ஏற்படுத்தும். இந்தக் கண்டுபிடிப்பு பல பொறியியல் சிக்கல்களை தீர்த்துவைத்துள்ளது. இவற்றால் பார்வையற்றோருக்கு இன்னும் பல வசதிகள் கிடைக்கப்போகின்றன.

பார்வையற்றோர் ஓட்டுவதற்கான ஒரு வாகனத்தை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணி வேறொன்று இருக்கிறது. அரசும் அரசின் சட்டவிதிகளும் புதிய வாகனத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதுதான் மிகக்கடினம். இப்போது மூட்டைபூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த வாகனம் இன்னும் சீரமைக்கப்படவிருக்கிறது. மின்சாரத்தின் உதவியால் ஓடக்கூடிய வாகனமாக இதை மாற்றுவது என்று 2009-10 ஆம் ஆண்டிற்கான மாணவர்குழு தீர்மானித்துள்ளது. முழுவதும் மின்சாரத்தால் இயங்கும்போது வாகனத்தின் அதிர்வுகள் குறைவாக இருக்கும்; கம்ப்யூட்டருக்கு அளிக்கப்படும் மின்னோட்டம் சீராக இருக்கும்; லேசர் ஒளிஉணர் கருவிகள் இன்னும் துல்லியமாக இயங்கும்.

தகவல்: மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/07/090715160813.htm

Pin It