கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
கிழக்கத்திய நாடுகளில் கையாளப்பட்டு வரும் ஒரு மருத்துவமுறைதான் அக்குபங்சர். மிக நுண்ணிய ஊசிகளை உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் செலுத்தி வலியை மறக்கச்செய்யவும், சிகிச்சை அளிக்கவும் இந்த அக்குபங்சர் மருத்துவமுறை பயன்படுகிறது. இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பயன்பட்டுவந்த இந்த அக்குபங்சர் மருத்துவமுறை இப்போது கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் புதிய அறிவியல் செய்தி.
ஜிப்ஸி...இது ஒரு குதிரையின் பெயர். குதிகாலில் பீடித்த நோயால் அவதிப்பட்ட ஜிப்ஸியின் வலியை துரத்தியடித்து, எலும்புகளின் வலிமையைப்பெருக்கி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தது அக்குபங்சர் மருத்துவ முறை. பாரம்பரிய மருத்துவ முறையுடன் இணைந்துதான் இந்த சிகிச்சை செய்யப்பட்டது.
வர்ஜீனியா டெக் நகரத்திலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய மற்றும் பெரிய மிருகங்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடைகளின் தோல் நோய்கள், தசை மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், நரம்புமண்டலம் சார்ந்த நோய்கள் இவற்றுக்கெல்லாம் அக்குபங்க்சர் சிகிச்சை பலனளிக்கிறது என்கிறார் இங்கு பணியாற்றும் டாக்டர் மார்க் கிரிஸ்மான். கடந்த பத்தாண்டுகளாக இந்த சிகிச்சை முறையில் விற்பன்னராக இவர் இருக்கிறார்.
கால்நடைகளுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியும் சான்றிதழ்படிப்பும் கூட இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறதாம்.
பழமையான மருத்துவ முறைக்கு அக்குபங்சர் மருத்துவ முறை ஒரு மாற்று அல்ல. பழமையான மருத்துவ முறையுடன் அக்குபங்க்சர் மருத்துவ முறை இணைந்து செயல்படுகிறது என்கிறார் டாக்டர் கிரிஸ்மான்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
விளையும் பயிர் முளையிலே என்பது தமிழ் முதுமொழி. குழந்தைகள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. முரட்டுத்தனம், அடுத்த குழந்தையை தாக்குதல் ஆகிய குணங்கள் சில குழந்தைகளிடம் இயல்பிலேயே இருப்பது உண்டு. பள்ளிப்பருவத்தை எட்டும் முன்பாகவே குழந்தைகளின் கூட்டுணர்வுத்திறன் வெளிப்பட்டு விடுகிறது என்பது ஆராய்ச்சியின் முடிவு.
பள்ளி செல்லும் வயது அடையாத குழந்தைகளுக்காக முன்பருவ பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகும் வாய்ப்பு இந்த பள்ளிகள் மூலம் கிடைக்கிறது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்பழக்கங்கள் இந்தப் பள்ளிகள் மூலம் விதைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அவர்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகூட இங்குதான் கிடைக்கிறது. சில குழந்தைகள் இயல்பிலேயே முரட்டுத்தனம் வாய்ந்தவர்களாயும், மற்ற குழந்தைகளைத் தாக்கும் குணமுடையவர்களாயும் இருப்பார்கள். பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாதவர்களாயும் இருப்பது இயல்பானதுதான். இப்படிப்பட்ட குழந்தைகளின் நட்புவட்டம் சிறியதாக இருக்கும். பிற்காலத்தில் வளர்ந்தபின்னரும் கூட சமூகத்தில் மற்றவர்களிடம் நல்ல உறவை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.
சிறுவர்களின் கூட்டுணர்வைக் குறித்த ஆய்வு அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆறு முன்பருவ பள்ளிகளின் வகுப்பறைகளில் இருந்து 97 குழந்தைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளின் நடத்தைகளைப் பற்றிய தகவல்களை அவர்களின் ஆசிரியர்கள் கொடுத்தனர். Q-connectivity முறையில் ஒவ்வொரு குழந்தையும் எத்தனை குழந்தைகளுடன் உறவாடியது, எத்தனை முறைகள் உறவாடியது, அவர்களின் முரட்டுத்தனத்தின் அளவு, வகுப்பில் ஈடுபாடு இவையனைத்தும் சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது.
முரட்டுத்தனம், கோப உணர்வு, வகுப்பில் ஈடுபாடு காட்டாமை ஆகிய குணங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு மிகக்குறைவான நண்பர்கள் மட்டுமே இருந்தனர். மாறாக மென்மை, நன்கு பழகும் குணம் இவற்றுடன் வகுப்பில் ஈடுபாடு காட்டும் குழந்தைகளின் நட்புவட்டம் பெரியதாக இருந்தது. இந்த முடிவுகள் முன்பருவபள்ளி வயதினருக்கு மட்டுமல்லாது வளர்ந்த பிள்ளைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருந்தன. இந்த முடிவுகள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பொதுவாக இருந்தன.
The Child is The Father of The Man என்பார்கள். குழந்தைகளே இப்படியென்றால் சமூகமும் அப்படித்தானே இருக்கும். விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன?
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- விஞ்ஞானி க.பொன்முடி
- பிரிவு: புவி அறிவியல்
பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் அலூசியன் ஆகிய எரிமலைத் தீவுகளிலும், ஓரிகன், கலிபோர்னியா, மெக்சிகோ, பெரு, மற்றும் சிலி ஆகிய நிலப்பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த எரிமலைத் தீவுகளிலும், நிலப்பகுதிகளிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக்கொண்டு இருக்கின்றன.
கடந்த 2004-ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் ஓரிகன் நகரக் கடல் பகுதியில் பத்தே நாளில் அறுநூற்றுக்கும் அதிக முறை, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டன. இதே போன்று 2005-ம் ஆண்டிலும் இரண்டே வாரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முறை நிலம் அதிர்ந்தது.
முக்கியமாக ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981-ம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகர கடற்கரையில் இருந்து 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்படவில்லை.
ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989-ம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள். எனவே தரைப் பகுதியில் இருந்து எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பது நிரூபணமாகிறது. ஆனால் பசிபிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் போன்ற எரிமலைத் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அதாவது பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரையானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகரும் பசிபிக் கடல் தரையானது, ஜப்பானுக்கு கீழாக செல்வதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
மேலும் பசிபிக் கடல் தரை வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாகப் பசிபிக் கடல் பகுதியில் வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக அமைந்திருக்கும் ஹவாய் எரிமலைத் தீவுகளைக் குறிப்பிடுகின்றனர்.
அதாவது பசிபிக் கடல் பகுதியில், பூமிக்கு அடியில் ஒரு இடத்தில் பாறைக்குழம்பு கடல் தரையைப் பொத்துக் கொண்டு, கடல் தரைக்கு மேலே எரிமலையாக உருவாகியதாகவும், அதே நேரத்தில் கடல் தரையும் வடமேற்கு திசையில் நகர்ந்ததால், எரிமலையும் கடல் தரையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தது என்றும், மறுபடியும் எரிமலை மையத்திற்கு மேலே நகர்ந்து வந்த பசிபிக் கடல் தரைக்கு மேல் புதியதாக ஒரு எரிமலை உருவானதாகவும், அந்த எரிமலையும் கடல் தரையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தது என்றும், இது போன்று தொடர்ந்து பலமுறை நடைபெற்றதால், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி வரிசையாகப் பல எரிமலைத் தீவுகள் உருவாகியது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் பசிபிக் கடல் தரை அதே இடத்தில் தான் இருக்கிறது. குறிப்பாக பசிபிக் கடல் தரை நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் அதே ஹவாய்த் தீவு வரிசைக்குத் தெற்கே, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் லைன் தீவுகள் என்று அழைக்கப்படும் இன்னொரு எரிமலை வரிசைத் தீவுகளும் அமைந்திருக்கின்றன.
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று உண்மையில் பசிபிக் கடல் தரையானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தால், ஹவாய் எரிமலை வரிசைத் தீவுகளுக்கு அருகில் இருக்கும் லைன் எரிமலை வரிசைத் தீவுகளும், ஹவாய் தீவு வரிசைக்கு இணையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் லைன் எரிமலை வரிசைத் தீவுகள், ஹவாய் எரிமலை வரிசைத் தீவுகளுக்கு இணையாக அமைந்திருக்கவில்லை.
லைன் வரிசைத் தீவுகள், ஹவாய்த் தீவு வரிசையில் இருந்து சற்று மாறுபட்டு விலகிச் செல்கிறது. எனவே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று பசிபிக் கடற்தரை நகர்ந்து கொண்டு இருக்கவில்லை என்பது பசிபிக் கடல் தரையின்மேல் வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கும் வரிசைத் தீவுகள் மூலம் நிரூபணமாகிறது. எனவே பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற எரிமலைத் தீவுகளில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு, அந்தத் தீவுகளில் உள்ள எரிமலை மற்றும் எரிமலையைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகள் அவ்வப்பொழுது மேல் நோக்கி உயர்வதே காரணம் ஆகும்.
- விஞ்ஞானி க.பொன்முடி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
ஜப்பானின் Nankai கடற்பகுதிதான் உலகிலேயே அதிகமான நிலநடுக்கங்களை சந்தித்துவரும் இடம். இந்தப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் வலிமை ரிக்டர் அளவுகோளில் 8.3 ஆகும். இந்த இடம் ஜப்பானின் தென்மேற்கே உள்ளது. ஒரு பன்னாட்டு அறிஞர்குழு இந்த கடற்பகுதியில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கென Chikyu என்று பெயரிடப்பட்டு ஜப்பானிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மொழியில் Chikyu என்றால் பூமிப்பந்து என்று பொருளாம். இந்தகப்பலில் தங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் குழுவில் ஐரோப்பா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். 57,000 டன் எடையுள்ள இந்தக் கப்பலின் முதல் ஆய்வுப்பயணம் இதுவே என்பதும் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வுக்கப்பல் இதுதான் என்பதும் கூடுதல் சிறப்புகள். இந்தக்கப்பலில் இருந்துகொண்டு புவியோட்டின் tectonic platesஐ எட்டக்கூடிய 6,000 மீட்டர் ஆழத்திற்கு துளையிடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கப்பல் 12,000 மீட்டர்வரையில் பூமியை துளையிடும் ஆற்றல் கொண்டது.
பூமியின் மேலோடு பல அடுக்குகளைக் கொண்டது பூமியின் உட்பகுதியை கற்கோளம் என்றும் மென்பாறைக்கோளம் என்றும் இரு கூறுகளாக பிரிக்கிறார்கள். கற்கோளம் குளிர்ந்ததும், உறுதியானதும் ஆகும். மென்பாறைக்கோளம், சூடானதாகவும் உறுதி குறைந்ததும் ஆகும். மண்ணியல் கோட்பாட்டின்படி கற்கோளம் வெவ்வேறான tectonic தட்டுகளின் மீது திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்துகொண்டிருக்கிறது. மென்பாறைக்கோளத்தின் தன்மை இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது. இவை tectonic தட்டுகளை வெவ்வேறு திசைகளில் நகரச்செய்கின்றன. இரண்டு தட்டுகள் சந்திக்கும் பொதுவான எல்லையில்தான் நிலநடுக்கம், எரிமலை போன்ற நிலஉருவவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஒரு மெல்லிய tectonic மண்தட்டு வலிமையான கண்டத்தின்மீது மோதும்போது ஏற்படும் கீழ்நோக்கிய நகர்வு (subduction of two tectonic plates) குறித்த ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளும். tectonic plates உரசிக்கொள்ளும் ஆழம்வரை துளையிட்டு மண்படிவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதுடன் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகளைப் பொருத்துவதும் இந்த ஆய்வுகளின் நோக்கமாகும்.
நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதுதான் இந்த ஆய்வுகளின் நோக்கம் என்று இந்தக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு டோபின் கூறுகிறார். இவர் விஸ்கான்சி-மாடிஸன் பல்கலைக்கழகத்தின் மண்ணியல் நிபுணர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னறிவிப்புகள் இப்போதும் கிடைக்கின்றன. ஆனால் அவை சில வினாடிகளுக்கு முன்பு மட்டுமே கிடைக்கின்றன. இந்த ஆய்வுகளின் அன்றாட முன்னேற்றத்தை NanTroSEIZE ன் இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். NanTroSEIZE என்பது Nankai Trough Seismogenic Zone Experiment என்பதன் சுருக்கப்பெயராகும்.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க: http://www.jamstec.go.jp/chikyu/eng/index.html.
- கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
- ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?
- ஈறுகெட்ட நாகரிகம்
- பூமிக்கு அடியில் ஆராய்ச்சி
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்