பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் அலூசியன் ஆகிய எரிமலைத் தீவுகளிலும், ஓரிகன், கலிபோர்னியா, மெக்சிகோ, பெரு, மற்றும் சிலி ஆகிய நிலப்பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த எரிமலைத் தீவுகளிலும், நிலப்பகுதிகளிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக்கொண்டு இருக்கின்றன.
கடந்த 2004-ம் ஆண்டு பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்திருக்கும் வட அமெரிக்காவின் ஓரிகன் நகரக் கடல் பகுதியில் பத்தே நாளில் அறுநூற்றுக்கும் அதிக முறை, நில அதிர்ச்சிகள் ஏற்பட்டன. இதே போன்று 2005-ம் ஆண்டிலும் இரண்டே வாரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முறை நிலம் அதிர்ந்தது.
முக்கியமாக ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981-ம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகர கடற்கரையில் இருந்து 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்படவில்லை.
ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989-ம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள். எனவே தரைப் பகுதியில் இருந்து எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பது நிரூபணமாகிறது. ஆனால் பசிபிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜப்பான் போன்ற எரிமலைத் தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அதாவது பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரையானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு நகரும் பசிபிக் கடல் தரையானது, ஜப்பானுக்கு கீழாக செல்வதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
மேலும் பசிபிக் கடல் தரை வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் கூற்றுக்கு ஆதாரமாகப் பசிபிக் கடல் பகுதியில் வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையில் நாலாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக அமைந்திருக்கும் ஹவாய் எரிமலைத் தீவுகளைக் குறிப்பிடுகின்றனர்.
அதாவது பசிபிக் கடல் பகுதியில், பூமிக்கு அடியில் ஒரு இடத்தில் பாறைக்குழம்பு கடல் தரையைப் பொத்துக் கொண்டு, கடல் தரைக்கு மேலே எரிமலையாக உருவாகியதாகவும், அதே நேரத்தில் கடல் தரையும் வடமேற்கு திசையில் நகர்ந்ததால், எரிமலையும் கடல் தரையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தது என்றும், மறுபடியும் எரிமலை மையத்திற்கு மேலே நகர்ந்து வந்த பசிபிக் கடல் தரைக்கு மேல் புதியதாக ஒரு எரிமலை உருவானதாகவும், அந்த எரிமலையும் கடல் தரையுடன் வடமேற்கு திசையில் நகர்ந்தது என்றும், இது போன்று தொடர்ந்து பலமுறை நடைபெற்றதால், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி வரிசையாகப் பல எரிமலைத் தீவுகள் உருவாகியது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் பசிபிக் கடல் தரை அதே இடத்தில் தான் இருக்கிறது. குறிப்பாக பசிபிக் கடல் தரை நகர்ந்து கொண்டு இருப்பதற்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் அதே ஹவாய்த் தீவு வரிசைக்குத் தெற்கே, ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் லைன் தீவுகள் என்று அழைக்கப்படும் இன்னொரு எரிமலை வரிசைத் தீவுகளும் அமைந்திருக்கின்றன.
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று உண்மையில் பசிபிக் கடல் தரையானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தால், ஹவாய் எரிமலை வரிசைத் தீவுகளுக்கு அருகில் இருக்கும் லைன் எரிமலை வரிசைத் தீவுகளும், ஹவாய் தீவு வரிசைக்கு இணையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் லைன் எரிமலை வரிசைத் தீவுகள், ஹவாய் எரிமலை வரிசைத் தீவுகளுக்கு இணையாக அமைந்திருக்கவில்லை.
லைன் வரிசைத் தீவுகள், ஹவாய்த் தீவு வரிசையில் இருந்து சற்று மாறுபட்டு விலகிச் செல்கிறது. எனவே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போன்று பசிபிக் கடற்தரை நகர்ந்து கொண்டு இருக்கவில்லை என்பது பசிபிக் கடல் தரையின்மேல் வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கும் வரிசைத் தீவுகள் மூலம் நிரூபணமாகிறது. எனவே பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நியூசிலாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் போன்ற எரிமலைத் தீவுகளில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு, அந்தத் தீவுகளில் உள்ள எரிமலை மற்றும் எரிமலையைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகள் அவ்வப்பொழுது மேல் நோக்கி உயர்வதே காரணம் ஆகும்.
- விஞ்ஞானி க.பொன்முடி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்
- விவரங்கள்
- விஞ்ஞானி க.பொன்முடி
- பிரிவு: புவி அறிவியல்