இது ஒரு துப்பறியும் கதை போல. இழக்கப்பட்ட 126 பறவை இனங்களை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று பறவையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்பறவைகள் குறைந்த பட்சம் ஒரு பத்தாண்டு காலம் காணப்படாத இனங்கள். இவற்றில் ஒரு சில இனங்கள் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக காணப்படவில்லை.
இவை உயிருடன் உள்ளனவா என்பது உறுதியாகத் தெரியாத நிலையிலேயே இந்த முயற்சி. இன்னும் அழியவில்லை என்ற உறுதியுடன் இந்த பறவையினங்களின் பட்டியலை ஆய்வாளர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையில் அண்மையில் வெளியிட்டுள்ளனர். மக்கள், பறவையியலாளர்களின் உதவியுடன் புதிய தேடல் தொடங்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன பறவையினங்களைத் தேடி
Coppery Thorntail மற்றும் நியூ கலிடோர்னியாவைச் சேர்ந்த லாரிகீட் (lorikeet) போன்றவை அறிவியலால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தொலைந்து போனவற்றில் அடங்கும். இது வரை தொகுக்கப்பட்டதில் இதுவே மிக விரிவான பட்டியல் என்று கருதப்படுகிறது. ஆர்வமுள்ள பறவையியலாளர்கள் மற்றும் அமெச்சூர் ஆய்வாளர்கள் பூமியின் தொலைதூரப் பகுதிகளில் வாழ்வதாக நம்பப்படும் இவை பற்றிய விவரங்களை ஆவணப்படுத்தப்பட்ட மில்லியன் கணக்கான பதிவுகளில் இருந்து தொகுத்தனர்.
கடந்த பத்தாண்டுகளாக காணப்படாத பறவையினங்கள் பற்றிய பதிவுகள் புதிய தரவுகளாக ஆராயப்படுகின்றன. இவை பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) அழிந்த மற்றும் வனப்பகுதிகளில் அழிந்த உயிரினங்களாக கணிக்கப்பட்டவற்றின் சிவப்பு பட்டியலில் இடம் பெறாதவை.
“காணாமல் போகக் காரணம் என்ன என்பதை அறிந்து மீண்டும் இவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு துப்பறியும் கதையைப் போன்றது” என்று அமெரிக்க பறவைப் பாதுகாப்பு (American Bird Conservancy) சங்கத்தின் இழந்த பறவைகளைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் (Search for Lost Birds) இயக்குனர் ஜான் சி மிட்டமயர் (John C Mittermeier) கூறுகிறார்.
இந்த அமைப்பு பன்னாட்டு பறவை சங்கம் (BirdLife International), ரிவைல்டு (Re:wild) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது.
இந்த பட்டியல் வெளியிடப்படுவதால் இழந்த இந்த உயிரினங்களை மீண்டும் பார்க்க நேரும்போது மக்கள் அது குறித்த தகவல்களைத் தர முடியும். இந்தப் பட்டியலில் இருக்கும் சில உயிரினங்களைக் கண்டுபிடிப்பது சவால்கள் நிறைந்தது. கண்டறியப்பட முடியாதவையாகவும் இவை இருக்கலாம். என்றாலும் சரியான இடத்தில் தேடினால் பல பறவையினங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இவற்றில் பெரும்பாலானவை வெப்ப மண்டலப் பகுதிகளில் குறிப்பாக சிறிய தீவுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றன. ஓசியானா பகுதியில் 56, ஆப்பிரிக்காவில் 31 மற்றும் ஆசியாவில் இருந்து 27 பறவையினங்கள் தேடலுக்கான இந்த பட்டியலில் உள்ளன. வெள்ளை வாலுள்ள டிட்டைரா (white-tailed tityra) என்ற பறவையினம் 195 ஆண்டுகளாகக் காணப்படவில்லை. இது மிக நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் பறவையினம்.
எங்கோ வாழும் பறவைகள்
1829ல் இதன் ஒரே ஒரு மாதிரி பிரேசில் போர்ட்டோ வெல்ஹோ (Porto Velho) பகுதியில் இருந்து மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் 2006ல் இப்பறவை ஒரே ஒரு முறை நேரில் பார்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பட்டியலில் இருக்கும் மற்ற பறவைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத இனங்கள். இதில் Coppery Thorntail பறவை புதிரான ஹம்மிங் பறவை இனத்தைச் சேர்ந்தது. இதன் இரண்டு மாதிரிகள் 1852ம் ஆண்டுக்கு முன் கிடைத்தன.
இப்போது வாழும் இடம் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் இந்த பறவையினம் பொலிவியாவில் எங்கோ ஒரு இடத்தில் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. நியூ கலிடோர்னியா லாரிகீட் பறவையினம் கிளிகள் குடும்பத்தைச் சேர்ந்தவை. 1859ல் நன்கு பாதுகாக்கப்பட்ட இப்பறவையினத்தின் இரண்டு மாதிரிகள் கிடைத்தன. 65% பறவையினங்கள் ஆய்வாளர்களால் ஏற்கனவே அழியும் ஆபத்தில் உள்ளவையாக இருக்கக்கூடும் என்று பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் கருதுகிறது.
பறவையியலாளர்கள், மற்றும் குடிமக்கள் அறிவியலுக்கான (citizen science) இணைய தளத்தில் இருந்து பெறப்பட்ட 42 மில்லியன் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் தரவுகளில் இருந்து கிடைத்த ஒலிப்பதிவு விவரங்களை ஆராய்ந்தனர். eBird இணையதளத்தில் கடந்த பத்தாண்டில் ஆவணப்படுத்தப்படாத பறவையினங்கள், அருங்காட்சியக சேகரங்கள், ஆய்வுக்கட்டுரைகளின் வாசிப்பில் இருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடந்தன. இதில் சில இனங்கள் தொலைதூரப் பகுதிகளில் வாழ்பவை.
இதனால் இவை பற்றிய விவரங்கள் உள்ளூர் சமூகத்தினருக்கு நன்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எடுத்துக்காட்டு பெரிய கறுப்பு நேப்டு பெதஸ்ன்ட் புறா (black-naped pheasant-pigeon). நூறாண்டுகளுக்கும் மேலாக காணப்படாத இந்த இனம் பாப்புவா நியூ கினியாவில் ஒரே ஒரு தீவில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படுகிறது.
2022ல் இப்பறவையினத்தைப் பார்த்ததாக, இதன் அழைப்பைக் கேட்டதாக உள்ளூர் வேட்டைக்காரர்கள் கூறியபோது இது ஆய்வாளர்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளூரில் இது ஆர்வோ (“Auwo”) என்று அழைக்கப்படுகிறது. 2021 முதல் நடந்த ஆரம்பப் பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு 144 பறவையினங்கள் இழக்கப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இழந்த மனித குலத்தின் பெரும் செல்வம்
14 இனங்கள் சூழல் பாதுகாப்பாளர்கள் மற்றும் மக்களால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இது வரை 126 இனங்கள் பற்றி உயிருடன் வாழ்வது மீண்டும் அறியப்பட்டுள்ளன. வேறு பல இனங்கள் சிறைபட்ட நிலையில் உள்ளன. சில இனங்கள் வகைப்பாட்டியல் ரீதியில் ஆராயப்படுகின்றன.
மக்கள் மற்றும் பறவையியலாளர்கள் இழந்த பறவைகளைக் கண்டுபிடிக்கும்போது அவற்றின் தேடலுக்கான அமைப்பில் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை அனுப்ப கோரப்பட்டுள்ளது.
“இந்த பறவையினங்கள் பூமியில் இன்னமும் உயிருடன் வாழ்கின்றன என்றே நம்பப்படுகிறது. அனைத்து வகையான தகவல்களைப் பயன்படுத்தி இதை நாம் நிரூபிக்க வேண்டும். பல அரிய பறவையினங்கள் அசாதாரணமான இடங்களில் வாழ்கின்றன. இவை பற்றி நாம் முன்பே பெற்ற அறிவைக் கொண்டு இவற்றை மீண்டும் கண்டறிந்து பாதுகாப்போம்” என்று சர்வதேச பறவையியல் அமைப்பின் ஆய்வாளர் ராஜர் சாஃப்ஃபர்டு (Roger Safford) கூறுகிறார்.
காணாமல் போன இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அது மனித குலம் இழந்த பெரும் செல்வம் மீண்டும் கிடைத்தது போல ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/jun/17/birders-126-lost-bird-species-aoe?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்