கீற்றில் தேட...

மனிதர்கள் குப்பைகள் என்று வீசியெறியும் பொருட்களை எடுத்துச் சென்று கூடுகளை அமைக்க பறவைகள் எப்போதுமே தயங்கியதில்லை. ஆனால் நெதர்லாந்தில் ராட்டர்டாம் மற்றும் பெல்ஜியத்தில் ஆண்ட்வெர்ப் (Antwerp) பகுதியில் மரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுகள் நகரப் பகுதியில் வாழும் காக்கைகள் மற்றும் மேக்பை (Magpie) பறவைகளை விரட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த கூர்முனைகளால் ஆன நீண்ட உலோகக் கீற்றுகளை பயன்படுத்தி வியப்பூட்டும் கை வேலைப்பாட்டுடன் தங்கள் முழு கூட்டையும் கட்டியுள்ளன.

காக்கை கூடுகளும் மேக்பை கூடுகளும்

இது பறவையியல் துறை நிபுணர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேக்பை என்பது காகக் குடும்பத்தைச் சேர்ந்த சில இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர். இதில் ஐரோவாசிய மேக்பை என்ற பறவை உலகின் அதிக நுண்ணறிவுள்ள விலங்குகளில் ஒன்று. கண்ணாடி முன்பு நிற்கும் போது தன்னை உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றுள்ள மிகச் சில விலங்குகளில் ஒன்று.

வண்ணாத்திக்குருவி, கறுப்பு வெள்ளைக் குருவி, குண்டு கரிச்சான், பாலகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இது பாடும் பறவை காடுகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ்கின்றன. இந்த கண்டுபிடிப்பு ராட்டர்டாம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், லேடண்ட் (Leiden) நேச்சராலிஸ் (Naturalis) உயிர் பன்மயத்தன்மை மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளை இது பற்றி மேலும் ஆராயத் தூண்டியது.nest 467இந்த தேடல் க்ளாஸ்கோவிலும் நெதர்லாந்து என்ஸ்கெட் (Enschede) என்ற இடத்திலும் இதே போன்ற கூடுகளைக் கண்டுபிடிக்க உதவியது. ”விரட்ட வைத்திருந்தவற்றை எடுத்து பறவைகள் தங்களுக்கான கூடுகளைக் கட்டுகின்றன. இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று மரங்கள் பராமரிப்பின்போது ராட்டர்டாம் இரயில் நிலையத்திற்கு அருகில் இத்தகைய காக்கை கூடு ஒன்றை கண்டுபிடித்த ராட்டர்டாம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் கீஸ் மோலிகர் (Kees Moeliker) கூறுகிறார்.

ராட்டர்டாம் கூடு காகத்தால் கட்டப்பட்டது. மற்ற மூன்று கூடுகளும் பெரிய குவிமாடம் போல கூடு கட்டும் இயல்புடைய மேக்பை பறவைகளால் கட்டப்பட்டவை. பறவைகளை பயமுறுத்தி விரட்ட அமைக்கப்பட்டிருந்த கூர்முனை பொருட்களை உறுதியான கூடைக் கட்ட உதவும் கட்டுமானப் பொருட்களாக காக்கைகள் பயன்படுத்துகின்றன.

ஆனால் இவற்றின் பயனை நன்கறிந்த மேக்பைகள் கூர்முனைப்பொருட்கள் பெரும்பாலானவற்றையும் கூட்டின் மேற்கூரையை அமைத்துக் கட்டுகின்றன. இதன் மூலம் இவை தங்கள் எதிரிகளான பூச்சிகள், மற்ற பறவைகளை பயமுறுத்தி விரட்டுகின்றன. “இவை கட்டும் கூடுகள் மிக நேர்த்தியானவை” என்று நேச்சராலிஸ் உயிர் பன்மயத்தன்மை மையத்தின் பறவை கூடு ஆராய்ச்சியாளர் மற்றும் உயிரியலாளர் ஆக் ப்ளோரியன் ஹீம்ஸ்ட்ரா (Auke-Florian Hiemstra) கூறுகிறார்.

நகர்ப்புற வாழ்க்கைக்கு தகவமைத்துக் கொள்ளும் பறவைகள்

நகரப் பொருட்களை கொண்டு கட்டப்பட்ட பறவைக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறையல்ல. 1933ல் தென்னாப்பிரிக்க அருங்காட்சியகம் ஒன்று கடினமான தாமிரம், துருபிடித்தல் மற்றும் நீரால் பாதிக்கப்படாமல் இருக்க துத்தநாகம் போன்ற வெந்நிற உலோகங்களால் பூசப்பட்ட இரும்பு மற்றும் கூர்முனைகளை உடைய உறுதியான கம்பியால் கட்டப்பட்ட காக்கை கூடு ஒன்றைப் பற்றிய செய்தியை வெளியிட்டது.

ஆணிகள், ஸ்க்ரூக்கள், மருந்தேற்று குழல்கள் போன்ற பொருட்களும் இந்த கூட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீஸ் மோலிகர் ராட்டர்டாம் துறைமுகத்தில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஒரு புறாவின் கூட்டைக் கண்டுபிடித்தார்.

“பசுமை எதுவும் இல்லாத அங்கு தொழிற்சாலை, கான்க்ரீட், மாசுபட்ட காற்று மட்டுமே இருந்தன. அந்த கூடு கிளைகளால் கட்டப்படவில்லை. நார்க்கம்பி வலையால் கட்டப்பட்டிருந்தது. நகர்ப்புற சூழலுக்கு பறவைகள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. காக்கை மற்றும் மேக்பை கூடுகளின் கண்டுபிடிப்பு இதை வலியுறுத்துகிறது. இந்த விவரங்கள் ராட்டர்டாம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் டேன்சி (Deinsea) என்ற வருடாந்திர வெளியீட்டில் விவரிக்கப்பட்டுள்ளது”என்று கீஸ் கூறுகிறார்.

கவர்ச்சிகரமாக மேற்கூரை அமைக்கும் பறவைகள்

குப்பைகளில் இருந்து பழைய கூர்முனை பொருட்கள், கீற்றுகளை சேகரிப்பதற்கு பதில் காகங்களும் மேக்பைகளும் கட்டிடங்களில் அவை பொருத்தப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடித்து அவற்றை அங்கிருந்து கழற்றி எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றன. இப்பண்பு மற்ற இனப் பறவைகளிலும் காணப்படுகிறது” என்று வாத்துகளுக்கு இடையில் நிகழும் ஓரின நெக்ரோபிலியா (homosexual necrophilia) என்ற நிகழ்வை முதல்முதலில் ஆவணப்படுத்திய மோலிகர் கூறுகிறார்.

சில இன வாத்துகள் இறந்த வாத்துகளுடன் உடலுறவு கொள்ளும் பண்பு ஓரின நெக்ரோபிலியா என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1991 முதல் வழக்கத்திற்கு மாறான முக்கிய பத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் இக் நோபெல் விருது (Ig Nobel prize) வழங்கப்பட்டது.

சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பைகள், மீன் பிடி வலைகள் போன்ற மனிதர்களால் உருவாக்கப்படும் ஆபத்தான கழிவுப்பொருட்களை இருநூறு இனப் பறவைகள் கூடு கட்ட பயன்படுத்துகின்றன என்று ஐரோப்பிய ஆய்வுக்குழு சமீபத்தில் எச்சரித்துள்ளது. “மனிதன் தங்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களை கொண்டே சாதுரியமாக கூடு கட்டும் அறிவாற்றல் காக்கை குடும்ப கோர்விட் (Corvid) இனப்பறவைகளிடமே அதிகம் உள்ளது. கூடுகளின் பாதுகாப்பிற்கு மட்டும் இல்லாமல் இப்பொருட்களை தங்கள் இணையைக் கவர உதவும் கவர்ச்சிப் பொருளாகவும் பறவைகள் பயன்படுத்துகின்றன” என்று ஐரோப்பிய ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக பறவையியலாளருமான டாக்டர் ஜிம் ரெனால்ட்ஸ் (Dr Jim Reynolds) கூறுகிறார்.

நகர்ப்புற பறவைகளுடன் நாம்

இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்ட்டல் (Bristol) நகரின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள க்ளிஃப்ட்டன் (Clifton) போன்ற இடங்களில் கூர்முனைப் பொருட்கள் கட்டிட முனைகளில் கூடு கட்டுவதையும் புறாக்கள் போன்றவை மரக்கிளைகளில் இருந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் மீது எச்சங்களை இடுவதையும் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

நாம் பறவைகளை அச்சுறுத்தக் கூடாது. அவற்றுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவை புத்திசாலித்தனம் மிகுந்தவை. கடினமான நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்ப பொருந்தி வாழும் வழிகளைக் கண்டுபிடித்து வாழ்கின்றன. காகங்களும் மேக்பைகளும் நம் கதாநாயகர்கள்! பறவைகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்கள்

https://www.theguardian.com/science/2023/jul/11/crows-and-magpies-show-their-metal-by-using-anti-bird-spikes-to-build-nests?CMP=Share_AndroidApp_Other

&

https://www.theguardian.com/education/2005/mar/08/highereducation.research?CMP=Share_AndroidApp_Other

&

https://www.mathrubhumi.com/environment/columns/crows-and-magpies-using-anti-bird-spikes-to-build-nests-nature-future-1.8790715

சிதம்பரம் இரவிச்சந்திரன்