கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றத்தால் உலக சுகாதாரம் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் விஞ்ஞானி அந்தோனி மெக்மைக்கேல். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல். அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகிறார்:
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டுமே பரவி வந்த மலேரியா தற்போது கிழக்கு ஆப்பிரிக்க மேட்டுப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஸ்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற தண்ணீர் நத்தைகளால் தொற்றும் நோய் சீனாவின் வடக்குப் பகுதிக்கு பரவிவிட்டது. இந்த நத்தைகளை முன்பு இந்தப் பகுதியில் பார்க்க முடியாமல் இருந்தது.
உணவாகப் பயன்படும் சிப்பிமீன் நச்சாவது தொடர்பாகவும் தகவல்கள் வருகின்றன. அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்த இந்த சிப்பிமீன், தற்போது அப்பகுதியில் மிகச் சாதாரணமாக பார்க்கக் கிடைக்கிறது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தால், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அன்றாட வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளின் தாக்கம் உயர்வதன் காரணமாகவே இந்த இறப்புகள் பெருமளவு ஏற்படுகின்றன. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.
இது போன்ற பிரச்சினைகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? முதியவர்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், குறைந்த தரமுள்ள வீடுகளில் வாழும் ஏழைகள் ஆகியோர் வெப்பஅலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ வெப்பஅலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சிறிய-காற்றோட்ட வசதிகள் இல்லாத அடுக்குமாடிகளில் வாழ்ந்தவர்கள்தான். கடுமையான வெப்பத்தால் சமூக அமைதி கெடும் என்பதாலும் மேலும் சிலர் இறந்ததாக தகவல்கள் வந்தன. வெப்பநிலை அதிகரிப்பால் பெரும்பாலோர் அடுக்குமாடிகளில் குடியிருப்பு வீடுகளுக்குள் அடைந்து கொண்டதால், நடத்தை சார்ந்த மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.
வேறு என்ன சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்? ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் வாழும் இனுயிட் மக்களிடம் ஏற்படும் உடல் பருத்தல் மற்றும் காலநிலை மாற்றம் இடையிலான சுவாரசியமான தொடர்பாகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.
இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்?
இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.
காலநிலை மாற்றத்துக்கு தகவமைத்துக் கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? 10 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கால ஆபத்துகள் தொடர்பாக நமக்கு முழுமையான புரிதல் இல்லை என்றாலும்கூட, ஆபத்துகளின் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகிறது. அனைத்து ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவது சாதகமான ஒரு சூழ்நிலை அல்ல.
குறிப்பாக தெற்கு ஆசியாவின் உணவுதானிய மகசூலில் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும். மண்வளம் அதிகமாக சுரண்டப்படும், நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நிலை என்ன?
பொருளாதார வளர்ச்சி பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே உலக வங்கி முதன்மை அக்கறை செலுத்தி வந்தது. மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களும் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவை என்று தற்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை உலக சுகாதார நிறுவனம் பழைமை மனப்பான்மையுடனே அணுகுகிறது. இந்த ஆண்டுதான் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினை என்று முதன்முறையாக கூறியுள்ளது. இது மிகப் பெரிய முன்னெடுப்பு.
தமிழில் : ஆதி வள்ளியப்பன்
நன்றி: டவுன் டு எர்த்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
மனிதர்களிலும், விலங்குகளிலும் காணப்படும் இயல்பூக்கம் தாகம் எனப்படும். தாகத்தின் விளைவாக நாம் திரவங்களைத் தேடுகிறோம். உடலில் உள்ள திரவத்தின் சமநிலையை பராமரிப்பதற்கான கருவியாக தாக உணர்வு செயல்படுகிறது.
உடலில் திரவப்பொருட்கள் குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும்போதோ தாக உணர்வு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளின்போது மூளை வேகமாக செயல்பட்டு தாக உணர்வை ஏற்படுத்துகிறது.
உடலில் தொடர்ந்து நீரிழப்பு இருக்குமானால் அது பலவகையான சிக்கல்களின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் நரம்பியல் கோளாறுகளின் விளைவாக மூளையின் செயல்திறன் குறையும்; சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அளவுக்கதிகமான தாக உணர்வை polydipsia என்கிறோம். அதிகப்படியாக சிறுநீர் போதல் polyuria எனப்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
தாக உணர்வு மையநரம்பு மண்டலத்தினால் உணரப்படுகிறது. extracellular thirst என்பது உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும். intracellular thirst என்பது உடலில் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதால் ஏற்படும் தாக உணர்வு ஆகும்.
இரண்டுவகையான தாக உணர்வுகளுமே மூளையின் மைய நரம்புமண்டலத்தால்தான் உணரப்படுகின்றன.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
கி.மு.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய விஞ்ஞானியின் பெயர்தான் சரகன். இன்று உலகம் முழுவதும் ஆராயப்படும் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட மாமேதை இவர்.
சில குழந்தைகள் குண்டாகவும், சிலர் ஒல்லியாகவும் இருப்பார்கள். வேறுசிலர் பிறக்கும்போதே உடற்குறையுடன் பிறப்பார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்தான் காரணம் என்று முன்பெல்லாம் கருதி வந்தனர். ஆனால் சரகன் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் தாயின் சினை முட்டையும், தந்தையின் உயிரணுவுமே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்று உலகிற்கு அறிவித்தார்.
உடலுக்கு நோய்வந்தபின் ஓடித்திரிவதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்று ஆரோக்கிய வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர்தான் இந்த சரகர். ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்யும் முன்பாக அவருடைய சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு தெரிந்து வைத்தியம் செய்யவேண்டும் என்று கூறியவரும் இவர்தான்.
மனித உடலின் அமைப்பையும், உடல் உறுப்புகளின் தன்மையையும் ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்திலேயே உடலில் உள்ள எலும்புகள், பற்கள் பற்றிய எண்ணிக்கையைக் கண்டறிந்தவர் இவர். மனித இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் அது 13 இரத்தக்குழாய்களின் உதவியால் உடல் முழுவதும் தொடர்பு கொண்டுள்ளது என்றும், எண்ணற்ற இரத்தக்குழாய்கள் மனித உடலில் உள்ளன என்றும் ஆராய்ந்து அறிவித்தார்.
நம்முடைய உடலின் எடை, உருவ மாற்றம், உணவு செரித்தல் போன்றவை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துப்பொருட்களைப்பொறுத்தே மாறுபடுவதாகவும், இவற்றின் அடிப்படையிலேயே மருத்துவம் செய்யவேண்டும் என்றும் கூறியவர்தான் சரகர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்துறையின் அடிப்படை நூலாக விளங்கிவரும் “சரச சம்ஹிதை” என்னும் நூலை “அக்னிவேசன்” என்னும் அறிஞர் எழுதினார். சரகன் முழுவதும் படித்து ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பின்னரே இந்த நூல் வெளியிடப்பட்டதாம்.
நன்றி: கலைக்கதிர்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
“அவன் கிடக்கிறான் வெங்காயம்” என்று அலட்சியமாக சொல்லிவிடலாம். ஆனால் கண்ணீர் விடாமல் அந்த வெங்காயத்தை வெட்டுவது முடியாது.
வெங்காயம் Allium குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். வெங்காயத்தை வெட்டும்போது செல்கள் உடைபடுகின்றன. வெங்காயத்தில் உள்ள alliinases என்னும் என்சைம்கள் சிதைவடைந்து amino acid suphoxides களை உற்பத்தி செய்கின்றன. அமினோ ஆசிட் சல்பாக்ஸைடுகள் மேலும் சிதைவடைந்து சல்ஃபீனிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சல்ஃபீனிக் அமிலம் நிலையற்றது. எனவே இவை syn-propanethial-S-oxide என்னும் வாயுவாக மாறி காற்றில் பரவுகிறது. கண்களை அடையும் இந்த வாயு கண்ணில் உள்ள நீர்ப்பசையுடன் சேர்ந்து கந்தக அமிலமாக மாறுவதால் கண்களில் உள்ள நரம்பு முனைகளில் எரிச்சல் உணர்வு தூண்டப்படுகிறது. அமிலத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக கண்ணீர்ச் சுரப்பிகள் இயங்கி கண்ணீரை சுரக்கின்றன. இறுதியில் கண்ணீரின் உதவியால் எரிச்சலை உண்டாக்கும் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.
பெருமளவில் நீரை வெங்காயத்துடன் சேர்ப்பதால் எரிச்சலூட்டும் syn-propanethial-S-oxide வாயுவைத் தவிர்க்கலாம். ஓடும் நீரில் வெங்காயத்தை வெட்டுதல், ஈரப்படுத்தி வெட்டுதல் ஆகிய நுணுக்கங்களாலும் கண்ணீர் விடாமல் வெங்காயம் வெட்டலாம்.
வெங்காயத்தின் வேர்ப்பகுதியில் எரிச்சலை உண்டுபண்ணும் வாயு அடர்த்தியாக இருப்பதால் வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டலாம். மிகவும் கூர்மையான கத்திகொண்டு வெங்காயத்தை வெட்டுவதால் வெங்காயத்தின் செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்படுகிறது. இதனால் எரிச்சலூட்டும் வாயு வெளிப்படுதலும் குறைக்கப்படுகிறது.
சல்ஃபீனிக் அமிலம் வெளிப்படுவது Allium குடும்பத்தைச்சேர்ந்த தாவரங்களுக்குள் வேறுபடுகிறது.
ஜீன்களை செயலிழக்கச் செய்யும் உயிரி தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணீரில்லா வெங்காயம் நியூசிலாந்தில் உள்ள பயிர் மற்றும் உணவு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விந்தை 2008 ஜனவரி 31 ம் தேதியன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- வயதானால் மூளை மழுங்குமா?
- இசை பயின்றால் அறிவுத் திறன் பெருகும்
- சிறிய பயணிகள், பெரிய பயணம்
- தெய்வங்களும், முரட்டு தெய்வங்களும்.
- கால்நடைகளுக்கும் அக்குபங்சர் மருத்துவம்
- விளையும் பயிர் முளையிலே
- நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்
- மிதக்கும் பன்னாட்டு ஆய்வகம்
- கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
- ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?
- ஈறுகெட்ட நாகரிகம்
- பூமிக்கு அடியில் ஆராய்ச்சி
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?