மேகப் பால் தொழில்நுட்பம் (Cloud milking) என்றழைக்கப்படும் சுழிநிலை ஆற்றல் தொழில்நுட்பம் இளம் மரங்களை உயிர் வாழ வைக்கிறது. ஸ்பெயின் கனேரி (Canary) தீவில் கரஜோனே (Garajonay) தேசியப் பூங்காவில் உள்ள காடுகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இலைகள் மூடுபனியில் இருந்து நீர்த்துளிகளை பிடித்தெடுக்கும் அதே முறையில் செயல்படுகிறது.
காட்டுத் தீ, வறட்சியால் அழிந்த காடுகளை இத்திட்டம் புரட்சிகரமான முறையில் மீட்க உதவுகிறது.நீர் வழங்கும் மூடுபனி
கடல் போல உள்ள மேகங்களில் (Sea of clouds) இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சியெடுத்து காட்டை மீட்பதே இதன் நோக்கம். இம்முறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இத்திட்டம் பல நாடுகளில் குடி நீர், வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பெற விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. “கனேரி தீவுகள் சமீப காலத்தில் பெருமளவிலான பாலைவனப் பரவலால் வன அழிவை சந்தித்தது. வேளாண்மைக்காக நடந்த வன அழிப்பு, வழக்கமாக ஈரத் தன்மையுடன் இருக்கும் காடுகளில் காலநிலை மாற்றத்தால் 2007, 2009ல் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டது போன்றவற்றால் இயற்கை வளங்கள் அழிந்தன. இதை சரி செய்ய தொலைதூர, மலைப்பகுதிகளுக்கு புதிய உட்கட்டமைப்பு, புதைபடிவ எரிபொருட்கள் இல்லாமல் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் வழங்கப்பட்டது” ” என்று கனேரி தீவில் உள்ள பொதுமக்கள் நிதியுதவியுடன் செயல்படும் அமைப்பின் தொழில்நுட்ப இயக்குனர் கஸ்ட்டாவோ வியரா (Gustavo Viera) கூறுகிறார்.
ஐரோப்பிய யூனியன் ஆதரிக்கும் இத்திட்டத்திற்கு மூடுபனி என்று ஸ்பானிஷ் மொழியில் பொருட்படும் நீப்லா (Niebla) என்பதை குறிக்கும் வகையில் லைஃப் நீப்லா (Life Niebla) என்று பெயரிடப்பட்டுள்ளது.
புன்னையின் உள்ளூர் இன இலைகள் இயற்கையில் பயன்படுத்தும் அதே முறையில் காற்றடிக்கும் பாதையில் பிளாஸ்டிக் வலைகள் விரிக்கப்பட்டு மூடுபனியில் இருந்து நீர்த்துளிகள் சேகரிக்கப்படுகின்றன.
வலையின் வழியாக சென்று காற்று மூடுபனியைக் கலைக்கும்போது நீர்த்துளிகள் கீழிருக்கும் கலன்களில் விழுகின்றன, சேகரிக்கப்படுகின்றன. இது புதிய இளம் கன்றுகளில் இலைகள் போதுமான அளவுக்கு வளர்ந்து சுயமாக நீரை சேகரிக்கும்வரை விநியோகிக்கப்படுகிறது. இதற்கு காற்று முக்கியமானது. ஆனால் இது போன்ற சிறிய அமைப்புகள் தவிர மற்ற பெரிய அமைப்புகளை இது அழிக்கிறது. இதற்கு தீர்வாக பைன் மர ஊசிகள் நீரை சேகரிக்கும் முறை பயன்படுத்தப்பட்டது.
காற்றை தன் வழியே செல்ல அனுமதிப்பதுடன் இந்த ஊசிகள் நீரையும் சேகரிக்கின்றன. இம்முறை மற்ற இடங்களில் எளிதாகப் பின்பற்றக் கூடியது. தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லக் கூடியது. புதிய மாதிரியில் மெல்லிய உலோக இலைகளில் நீர் சுருங்குகிறது. பின் இது விரிவடைந்து நீராக மாறி சேகரமாகிறது.
ஆற்றல் விநியோகம், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, இயந்திரங்கள் இல்லாமல் இம்முறையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நீர் தானியங்கி முறையில் விநியோகிக்கப்படுகிறது. இதில் எந்த மின்னணு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதில்லை. நீர் நிலைகள், நதிகள் சுரண்டப்படாததால் இம்முறையில் ஏற்படும் கார்பன் கால்தடம் (Carbonfootprint) மிகக் குறைவு. சேகரிக்கும் கலன்களை உரிய இடங்களில் அமைப்பது மட்டுமே இதற்காகும் செலவு.
கார்பன் உமிழ்வற்ற காடு வளர்ப்பு
தெற்கு பார்சலோனாவில் காரஃப் (Garraf) என்ற கரடுமுரடான இடத்தில் உள்ள காடுகளை மீட்க இதே தொழில்நுட்பம் சிறிய மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
“இங்கு தாவர உண்ணிகள் இளம் செடிகளை உண்ணும் முறையில் தனித்தனியான நீர் சேகரிப்பான்கள் பயன்படுகின்றன. கோடை காலத்தில் காலைவேளைகளில் மழை, கடும் மூடுபனியின்போது உருவாகும் நீரை தாவரங்களுக்கு நிழல் தரும் இந்த சேகரிப்பான்கள் ஒன்றுதிரட்டி சேகரித்து வழங்குகின்றன. சில மூடுபனிகள் போதுமான ஈரத்தன்மையுடன் இருப்பதில்லை. இதனால் எல்லா வகை மூடுபனிகளும் இம்முறையில் பயன்படுவதில்லை. பல மத்திய தரைக் கடற்பகுதிகள், வடக்கு போர்ச்சுகல்லில் காணப்படும் ஓரோகிராபிக் (Orographic ) என்ற மலைப் பனியே இதற்கு சிறந்தது” என்று பார்சலோனா தன்னாட்சி பல்கலைக்கழக சூழலியல் மற்றும் வன ஆய்வு அமைப்பின் (Centre for Ecological Research and Forestry Applications (CREAF) திட்ட தலைமை விஞ்ஞானி வைசன்ஸ் கரபாஸா (Vicenç Carabassa) கூறுகிறார்.
கனேரி தீவே இத்தகைய தொழில்நுட்பங்களை உருவாக்க மிகச் சிறந்த ஆய்வுக்கூடம். சிலி மற்றும் மொராக்கோவில் சூழ்நிலை சரியாக இருக்கும் இடங்களில் மூடுபனியில் இருந்து பாரம்பரிய முறைகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. இம்முறை சிலி கக்க்விம்போ (Coquimbo) மாகாணத்தின் (சங்கங்கோ (Chungungo) கடலோர கிராமத்தில் செயல்படுகிறது. கேப் வெர்ட் (Cape Verde) தீவுக்கூட்டத்தில் உள்ளூர் மர சேகரிப்பான்களில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் ஆயிரம் லிட்டர் நீர் பாசனம், கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இது பற்றிய விவரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு திட்ட இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதன் பலன்கள் தெளிவாக உள்ளன. கிராண்ட் கனேரியாவில் (Gran Canaria) உள்ள பாரங்கோ டெல் (Barranco del) மற்றும் யேன் ரவீன் (én ravine)ஆகிய இடங்களில் 15,000 புன்னையின் பல்வேறு இன மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு 35.8 ஹெக்டேர்/96 ஏக்கர் பரப்பில் காடுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டன. பாரம்பரிய காடு வளர்ப்பை விட இம்முறையில் 82% மரங்கள் கூடுதலாக உயிர் பிழைத்தன.
இதனால் ஆண்டுக்கு 175 டன்கள் கார்பன் பிடித்தெடுக்கப்பட்டுள்ளது. இம்முறை மலிவானது. பாரம்பரிய காடு வளர்ப்பை விட குறைவான அளவு நீரை பயன்படுத்துகிறது. “வறட்சியான காலத்திலேயே நாம் வாழ்கிறோம். அதனால் ஒவ்வொரு துளி நீரும் மதிப்புமிக்கது. அதனால் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும். உவர் நீரில் இருந்து நன்னீர் பெறும் முறைக்கு இது ஒரு மாற்று இல்லை. ஆனால் நீர் விநியோகம் செய்ய கடினமாக உள்ள, செலவு அதிகமாக ஆகும் இடங்களில் இம்முறை மிகப் பயனுடையது” என்று கரபாஸா கூறுகிறார்.
பாசனம், கால்நடைத் தேவை, குடி நீர் விநியோகத்திற்கும் மனிதனுக்கு இயற்கை கற்றுத் தரும் இந்த முறை பூமியை வாழ வைக்க பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்