கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளைத் தின்று பலரது கண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெயிலிருந்தும், எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிற பிளாஸ்டிக்களில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவை நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றை, நிலத்தடி நீரை, மண்ணை மாசாக்குவதுடன் மிக விரைவாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். கிட்டத்தட்ட மனிதனின் சராசரி வயது அளவீட்டில் 6லிருந்து 8 மனிதர்களின் ஆயுட்காலம் அல்லவா இது? நாம் அழிவதுடன் வரும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகின்றோம் அல்லவா?
நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு வீதியில் எரிந்துவிடுவதால், பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில், குளங்கள், ஏரிகள் என அனைத்திலும் கலப்பதால், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த பிளாஸ்டிக் பைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது, சாலை ஓரங்களில் இவ்வகைப் பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஒடுகின்றது. அதன்மீது நாம் நடக்கும் போதும், அதிலிருந்து வரும் தூர்காற்றை சுவாசிக்கும் போதும் பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சில வருடங்கள் முன் சென்னையில் கொட்டித்தீர்த்த பெரு மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புதான்.
மக்களே, நம் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பல்வேறு உயிரினங்களுக்கு விஷமாவதுடன், மண்ணின் உயிர்வேதியியல் தன்மையையும் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுவோம்.
பிளாஸ்டிக்கள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்த்திடுவோம். கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப் பை போன்றவற்றை எடுத்துச் செல்வோம்.
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
நீர் வளம் காப்போம்!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
மண் வளம் காப்போம்!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
உயிரினங்களைக் காப்போம்!
பிளாஸ்டிக் ஒழிப்போம்
கேன்சரைத் தடுப்போம்!
பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கி நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என்னும் உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம்.
- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர்
- விவரங்கள்
- நம்பிக்கை ராஜ்
- பிரிவு: சுற்றுச்சூழல்
'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப் போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல, அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.
ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்குத் தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாகப் பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப் போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.
ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டு நிலப்பகுதியைத் தாண்டி, மேட்டூருக்குக் கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி, பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்து வந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்து வந்த நீரை மனிதன் தட்டிப் பறித்துக்கொண்டான்.
இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.
அதைவிட முக்கியமாக கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.
சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும், அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்குப் போகாததால் மஞ்சாளாற்று கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுகூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப் படியுங்கள்.
நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக் கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?
'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் இருந்த 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?
முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்குச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது' என.
காவிரி நீர் என்பது கர்நாடக, தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக் கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்குப் புரிவதில்லை.
மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படப் போவது நாம்தான்.
நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளைப் பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர் வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்தத் தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஓர் அணையைக் கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும், நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.
மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப் பகுதிகள். சமவெளியில் அணைகளைக் கட்ட முடியாது. ஏரி, குளங்களைத்தான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.
சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.
அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பி விடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக் கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.
காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.
நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்குக் கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.
நாம் செய்ய வேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளைப் பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.
இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப் போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.
“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை
மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"
என்கிறது அகநானூறு (126 : 4-5)
- நம்பிக்கை ராஜ்
- விவரங்கள்
- சூறாவளி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தத் தொடரின் கடந்த இரு பகுதிகளில் நெடுவாசலில் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான எதிர்ப்பு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் என்பதையும், அது உலகமயத்தின் குறிப்பாக அமெரிக்க அரசின் எரிபொருள் மற்றும் டாலர் சார்ந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்பதையும், தற்போது மாறிவரும் உலக அரசியலில் இந்திய ஆளும் வர்க்கம், இந்திய விவசாயிகளை அடகு வைத்து தனக்கான ஆதாயத்தை பெற காத்திருப்பதையும், எரிபொருளின் அடிப்படை அறிவியல் குறித்தும் விரிவாக கண்டோம்.
அதிக பாய்வுத்திறன் கொண்ட கடினபாறைகளின் கீழ் தேங்கியிருக்கும் எரிபொருட்களை மரபுசார்ந்த முறையில் எடுப்பதை போன்று அல்லாமல், எண்ணெய் மற்றும் எரிவாயு உருவாக காரணமான மூலப்பாறைகளில் சிக்கியிருக்கும் குறைவான பாய்வுத்திறன் கொண்ட எரிபொருட்களை தூண்டப்பட்ட முறையில், புதிய முறையான நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி அந்த மூலப்பாறைகளை வெடிக்க செய்து எரிவாயு எடுக்கும் திட்டதை இந்த அரசு முனைப்பாக செயல்படுத்த முனைந்துள்ளது. அதன் ஒருபகுதியே சமீபத்திய தமிழக எரிபொருள் திட்டங்கள் ஆகும். விவசாய உற்பத்தி நடைபெறும் பகுதியை சிதைக்கும் எரிபொருள் திட்டங்கள் விவசாய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் என்றால், இந்த நீரியல் விரிசல் முறையை அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் அனைவரையும் அங்கிருந்து விரட்டும். இப்படி பேசினாலே, அறிவியலுக்கு புறம்பாக வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதாக சில அறிவாளிகள் வாதிட்டு வருகிறார்கள். இதனால் அறிவியல் ஆய்வுகள், மற்ற வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப வல்லுனர் குழுக்களை அமைத்து கண்டறிந்த முடிவுகளின் அடிப்படையில், இந்த நீரியல் விரிசல் முறையை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி பெருமளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் அது ஏற்படுத்தி இருக்கும் நேரடி பாதிப்புகளை பற்றி இங்கே விரிவாக முன்வைக்கிறோம். இது அறிவாளிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல், இது மற்றவர்களின் போராட்டம் என கூடங்குளம் போராட்டத்தில் விலகி இருந்ததைப் போன்று நாம் ஒதுங்கி நிற்க கூடாது என்ற உண்மையை நம் அனைவருக்கும் உணர்த்தும் என்று நம்புகிறோம்.
நீரியல் விரிசல் முறை செயல்படுத்தப்படும் இடத்தின் தோற்றம். (geology.com)
இந்த நீரியல் விரிசல் முறை எனப்படும் hydraulic fracturing method அமெரிக்காவில் நிலடுக்கத்தையும் அதிக அளவு நீர் பயன்பாட்டின் காரணமாக கடும் வறட்சியையும் ஏற்படுத்தியதோடு, நிலத்தடிநீர் மாசுபடுதல், பயன்படுத்தப்படும் வேதிபோருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மீத்தேன் எரிவாயு கசிவினால் காற்றுமண்டலம் மாசுபடுதல், 60௦௦ மீட்டர்களுக்கு கீழே துளையிடுவதால் கதிரியக்க தனிமமான ரேடான் வெளியேறுதல், இவை அனைத்தின் காரணமாக மனிதர்களுக்கு கொடிய உடல்நல கேடுகளையும் உருவாக்கி இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த முறையை பயன்படுத்துவதைப்பற்றி ஆய்வு செய்த அறிவியல் வல்லுநர் குழு, இதுவரை வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை தொகுத்து ஆய்வு செய்தது. (இதன் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்பதால் அனைவரும் தவறாமல் இதனை வாசிக்க கோருகிறோம்- http://publications.jrc.ec.europa.eu/repository/bitstream/111111111/26691/1/lbna25498enn.pdf) இதில் குறிப்பிடும் மிக முக்கிய இரு பிரச்சனைகள் 1. மக்கள் அடர்த்தி 2. அதிக அளவிலான நீர் பயன்பாடு.ஆகியவைப்பற்றியதாகும். இந்திய, தமிழக பகுதிகள் உலகிலேயே மிகஅதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகள் (படம் காண்க) என்பதையோ, நீர்தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் என்பதையோ சொல்லி தெரிய வேண்டிய தேவை இல்லை. மேற்சொன்ன பிரச்சனைகளோடு, இதில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்கள் குறித்து நிலவும் மர்மமும், இதுவரை செய்யப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுகள் அனைத்தும், எண்ணெய் நிறுவனங்களின் உதவித்தொகையில் நடைபெற்று உள்ளதால், அதன் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது என்பதையும், அவற்றின் முடிவுகள் அறிவியலுக்கு எதிரானது என்பதையும், அமெரிக்காவின் நியூயார்க் மாகாண அரசு அமைத்த அறிவியல் வல்லுனர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
(உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்தியா (ஐரோப்பிய அறிவியல் ஆய்வு அறிக்கை))
நியூயார்க் மாகாண அரசு அமைத்த வல்லுநர் குழுவும், இந்த நீரியல் விரிசல் முறை சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், இதுவரை இந்த முறையை பயன்படுத்திய பகுதிகளில் கதிரியக்க பொருட்களின் தாக்கத்தால், மக்களுக்கு பெருமளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மாகாணம் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதித்துள்ளது. இதேபோன்று ஸ்காட்லாந்து, பிரான்சு, நெதர்லாந்த், ஜெர்மனி போன்ற நாடுகளும் தனித்தனியாக வல்லுனர் குழுக்களை அமைத்து, அதன் அடிப்படையில் தடை செய்துள்ளன. இனி இந்த நீரியல் விரிசல் முறை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுப்படுத்தியதால் மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை பற்றிய அறிவியல் ஆய்வு முடிவுகளை இனி தொகுத்து பார்ப்போம்.
நீரியல் விரிசல் முறையால் நிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தொகுப்பு
-
பாறையை வெடிக்கச் செய்ய, மிக அதிக அழுத்தத்தில் நீரையும் வேதிக்கரைசல்களையும் பூமிக்கடியில் 3000 மீட்டருக்கு கீழே இந்த முறையில் செலுத்துவதால் நில அமைப்பியலில் மாற்றம் ஏற்பட்டு நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இந்த முறையை பயன்படுத்தி அமெரிக்காவில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்கும் மாகாணங்களில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான, 3.8 ரிக்டர் வரையிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
-
ஒஹியோ மாகாணத்தில் 400 சிறு நிலநடுக்கங்களை நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியதாகவும், அது 3 கிலோமீட்டர்களுக்கு கீழே பாறையை உடைப்பதில் இருந்து 29 மணி நேரத்திற்குள்ளாக பலபத்து நில அதிர்வுகளை ஏற்படுத்தியுருப்பதாகவும் அறிவியல் ஆய்விதழில் (Seismology Research Letters) ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒக்லஹாமா (oklahama) மாகாணத்தில் பாறையை உடைக்க ஆரம்பித்த வருடமான 2008 ஆம் ஆண்டிலிருந்தே நூற்றுக்கும் மேற்பட்ட 3 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் மட்டும் 4 ரிக்டர் அளவுக்கும் அதிகமான 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் (Science Advances) வெளியிடப்பட்டுள்ளது.
Ref: Science Advances 2015.
-
டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு 120 நிலநடுக்கங்களும், 2015 ஆம் ஆண்டு 4 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பிற்கும் பாறையை உடைப்பதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிவியல் துறையில் பெரிதும் மதிக்கப்படும் நேச்சர் குழும ஆய்விதழில் (Nature Communications) ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
அலபாமா (Alabama) மாகாணத்தில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க தொடங்கிய பிறகு 3.8 ரிக்டர் வரையிலான நில நடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
ஒஹியோ, ஒக்லஹாமாவில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்கும் கிணறுகளில் செலுத்தும் திரவங்களின் காரணமாக சமீப வருடங்களில் நூற்றுக்கணக்கான 3 ரிக்டருக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும், அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி அறிவியல் உலகின் உயரிய தரமதிப்பீடு வைத்திருக்கும் சயன்ஸ் (science) ஆய்விதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
-
பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க பாறைகளை உடைப்பதற்கும், கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக அம்மாகாண புவியியல் ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார்.
-
இந்த ஆய்வுகளும், செய்திகளும் இந்த பாறை எரிவாயு- மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கும், தொழில்நுட்பதிற்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பிருப்பதை காட்டுகின்றன. மேலும் திட்டம் ஆரம்பம்பித்த வருடங்களில் குறைவான ரிக்டர் அளவில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம், ஆண்டுகளும், கிணறுகளும் அதிகமாகும் போது, பல நூறு எண்ணிக்கையில் 3 ரிக்டருக்கும் அதிகமான நிலநடுக்கம் ஏற்படுவதை காட்டுகிறது.
-
தமிழகத்தில் காவிரி படுகையில் பாறை எரிவாயு-மீத்தேனை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டிருக்கும் ONGC, மூலப்பாறைகள் இருப்பதையும், அங்கு எரிவாயு எடுப்பது வர்த்தக ரீதியில் பயனளிக்ககூடியது என்பதையும், உறுதி செய்த இடங்களில் உற்பத்தி தொடங்க அனுமதி கோரியுள்ளதோடு, 25 ஆண்டுகளுக்கு எரிவாயு எடுக்க போவதாக மும்பை பங்கு சந்தையில் தனது பங்குகளையும் வெளியிட்டுள்ளது.
-
25 ஆண்டுகளுக்கு எரிவாயு எடுக்கும் போது, அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பதை போன்று தமிழகத்திலும் நீடித்த உற்பத்தியின் காரணமாக, நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியகூறுகள் மிக அதிகம். தமிழக அரசு அமைத்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவும், நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது.
-
அவ்வாறு நிலநடுக்கம் ஏற்படும் போது, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய நான்கு மாவட்ட குடியிருப்புகளின் நிலநடுக்க தாங்குதிறன், அந்த பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவைகளை குறித்து, உற்பத்தியை தொடங்கும் முன்பு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.
-
மிக முக்கியமாக, பாறை எரிவாயு- மீத்தேன் உற்பத்தி செய்ய ONGC அனுமதி கோரியுள்ள புவனகிரி பிளாக், நெய்வேலி நிலக்கரிசுரங்கத்திற்கு மிக அருகில் உள்ளதால், அதன் நிலைத்தன்மை குறித்தும் விரிவான ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும்.
-
ஆனால் இதுவரை ONGC சோதனைக்கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய சுற்றுசூழல் ஆய்வறிக்கையிலும் அல்லது உற்பத்திக்கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஆவணங்களிலும், கிணறுகள் தோண்டுவதற்கு செய்யப்படும் சுற்றுசூழல் ஆய்வையும், அதனால் ஏற்படும் விளைவுகளை தணிக்கும் நடவடிக்கைகளை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
-
அதில் ONGC, பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க பயன்படுத்த போகும் தற்போது உள்ள ஒரே முறையான நீரியல் விரிசல் முறைக்கு, பயன்படுத்த போகும் நீரின் அளவு, வேதிப்பொருட்கள், அதன் விளைவுகள் குறித்த தகவல்கள், அது தமிழகத்தில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இடம்பெறசெய்யாமல் முற்றிலுமாக மூடிமறைக்கப்பட்டுளது.
-
மேலும், மத்திய, மாநில சுற்று சூழல் துறைகள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அது குறித்த எந்த ஆய்வும் இதுவரை செய்யாமல், இது குறித்து மத்திய சுற்றுசூழல், வனத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளிலும் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நீரியல் விரிசல் முறை நீரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு.
-
இந்த நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி மீத்தேனை உற்பத்தி செய்ய, ஒரு கிணறை துளையிடவும், வேதிக்கரைசல்களை கொண்ட நீரைக்கொண்டு அதிக அழுத்தத்தில் பாறையை உடைக்கவும் ~1.1 முதல்1.5 கோடி லிட்டர்கள் வரை (~11,000 முதல் 15,000 கன மீட்டர்கள்) நீர் தேவை.
-
இவ்வாறு துளையிட்டு, உடைத்து உற்பத்தியை ஆரம்பிக்கும் கிணறுகள், மரபான உற்பத்தி கிணறுகளை போலல்லாமல், ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளாக 60% முதல் 70% வரை தனது உற்பத்தி திறனை இழந்துவிடுகின்றன. (மரபான உற்பத்தி கிணறுகள் 2 வருடங்களில் 45-50% உற்பத்தி திறன் வீழ்ச்சி). எனவே, அதிகளவு தொடர்ந்து கிணறுகள் அமைப்பது இன்றியமையாததாகிறது.
-
இந்த அதிக நீர் தேவையின் காரணமாகவும், கிணறுகளின் குறைந்த ஆயுட்காலம் காரணமாகவும், தொடர்ந்த உற்பத்தி பெருக்கத்தின் காரணமாகவும், பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க கிணறுகள் அமைத்த அமெரிக்க மாகாணங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவு பாறை எரிவாயு-மீத்தேன் உற்பத்தி செய்யும் டெக்சாஸ், கலிபோர்னியா மாகாணங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இது அரசு ரேசன் முறையில் நீரை குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பங்கிடும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது.
-
சனவரி 2011 முதல் மே 2013 வரை 36718 கோடி லிட்டர் தண்ணீர் செலவு செய்து 39294 புதிய கிணறுகள் அமைக்கப்பட்டதால், இந்த புதிய கிணறுகள் தோண்டிய 55% அமெரிக்க பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்திருக்கின்றன.
-
சோதனை செய்வதற்கே சில நூறு கிணறுகள் தோண்டியுள்ள ONGC, 25 வருடங்கள் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாறை எரிவாயு-மீத்தேன் கிணறுகளின் குறைந்த ஆயுட்காலம் காரணமாக, பல நூறு முதல் சில ஆயிரம் கிணறுகள் தோண்டப்போவது உறுதி.
-
அவ்வாறு தோண்டும் போது, அங்குள்ள குடும்பங்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயம் செறிவாக நடைபெறும் அந்த பகுதிகளின் விவசாய தேவைக்கும் நீரின்றி வறண்டுவிடும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே, பருவமழை பொய்க்கும் காலங்களிலும், அண்டை மாநிலங்களுடனான நீர்பங்கீட்டு சிக்கல் ஏற்படும் காலங்களிலும் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கபடுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை இந்த அதிக நீர் பயன்பாடு மேலும் மோசமாக்கும்.
-
இந்தளவு உற்பத்திக்கிணறுகளில் பூமிக்கடியில் செலுத்தப்படும் மிக அதிகளவு நீர், மீண்டும் கழிவாக புவிபரப்பிற்கு மேலே கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்டு சேகரிக்கப்படும் பெரும் கழிவுநீர் கிணறுகள், ஒக்லஹாமா மாகாணத்தில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
கலிபோர்னியாவில் இந்த கழிவுநீரை மீண்டும் பூமியில் செலுத்தி நிலத்தடிநீர் மாசுபடுத்தப்பட்டுள்ளது.
-
அதோடு, உற்பத்தி கிணறுகள் புவிபரப்பிற்கு மிக அருகிலுள்ள நிலத்தடி நீர் வழியாகவே அதிக ஆழத்திற்கு தோண்டப்படுகிறது. அப்போது, நிலத்தடிநீர் மீத்தேன் மற்றும் கழிவுநீர் கலந்து மாசுபடாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள் (cement casing) அமைக்கபடுகிறது. ஆனால், அது உடைந்து விபத்து ஏற்படும் போது மொத்த நிலத்தடி நீரும் மாசுபட்டு பயன்படுத்த தகுதியற்றதாகிப்போகிறது.
-
டெக்சாஸ், பென்சில்வேனியாவில் அவ்வாறான விபத்து ஏற்பட்டு மீத்தேன் நிலத்தடிநீரில் கலந்து, வீட்டு கிணறுகளில் எடுக்கும் நீர் தீப்பிடித்து எரியும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
-
அது மட்டுமல்லாமல், இந்த கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் மிக அதிகளவு கழிவுநீர் திறந்தவெளியில் தேக்கி வைக்கப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இந்த உற்பத்தி கிணறுகள் அமைய போவதால், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில், அது நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளையும், நிலப்பரப்பையும் நிச்சயம் மாசுபடுத்தும்.
-
டெக்சாஸில் இவ்வாறு தேக்கி வைத்த கழிவுநீர் வீடுகளை சூழ்ந்ததால் அந்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே இங்கிலாந்தில் இந்த கழிவுநீரை மூடிய கழிவுநீர் தேக்க தொட்டிகளில் வைக்க வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மீத்தேனை உற்பத்தி செய்ய இருக்கின்ற நீர் அனைத்தையும் உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் இந்த தொழில்நுட்பம், நிலத்தடிநீர், நீர்நிலைகள், நிலப்பரப்பு என அனைத்தையும் மாசுபடுத்தும் ஆபத்தை இந்த திட்டம் கொண்டுள்ளது. அவ்வாறன சூழலில், அங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்வதை தவிர வேறு வழியேதும் இல்லை.
-
ஆனால், ONGC இதுவரை சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அமெரிக்காவை போன்று கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டம் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை. (அமெரிக்கவிலேயே இந்த சுத்திகரிப்பு, முறையாக நடைபெறவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன)
-
அதோடு மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் செய்தியாக, இந்த கழிவுநீரில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களும், கதிரியக்க பொருட்களும் இருப்பதாக சுற்றுசூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க தொடங்கிய ஆண்டிற்கு பிறகு கதிரியக்க தனிமமான ரேடானின் (Radon) அளவு அதிகரித்துள்ளதாக அறிவியல் ஆய்விதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
-
இதுவரை நிறுவனங்கள் வெளியிட்ட பாறை உடைப்பிற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை ஆய்வு செய்த வேதியியல் அறிஞர்கள், அதில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இருப்பதாகவும், அவை குறித்த வெளிப்படைத் தன்மை வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
-
ஜெர்மனியில் இந்த திட்டத்தை செயல்படுத்தவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும், இதுவரை இந்த தொழில்நுட்பம் மற்றும் திட்டம் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், நிறுவனங்களின் நிதியிலேயே அனைத்து ஆய்வுகளும் நடைபெறுவதால், சார்புநிலையற்ற சுதந்திரமான ஆய்வுகள் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளது.
நீரியல் விரிசல் முறை காற்று மண்டலத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் தொகுப்பு.
-
இந்த திட்டம் சுற்றுசூழலை மாசுபடுத்தாத தூய்மையான புவிக்குகந்த திட்டம் என கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மீத்தேன் கசிவை கண்காணித்த அமெரிக்காவின் சுற்றுசூழல் கட்டுபாட்டு நிறுவனம் (Environmental Protection Agency) குறைவான மீத்தேன் கசிவே இருப்பதாக பதிவு செய்திருந்தது. ஆனால், ஒரு கிலோமீட்டருக்கு மேலே பறந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கிணற்றுப் பகுதிகளில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பதிவு செய்த மீத்தேன் அளவை விட, மிக மிக அதிகளவு இருப்பதை கண்டறிந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
-
பசுமைக்குடில் வாயுவான இந்த மீத்தேன், புவி வெப்பத்தை அதிகரிக்க செய்யும். உலகமெங்கும் தற்போது பெரும் அளவு எங்கும் காணப்படும் கார்பன் டைஆக்சைடு வாயுவை விட நீண்ட கால நோக்கில் மிக அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் நீரியல் விரிசல் முறையை கையாளும் நிறுவனங்கள் கடும் விமர்சனதிற்குள்ளாகி வருகின்றன.
-
இந்த திட்டமும், தொழில்நுட்பமும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதோடு, பல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்களையும் பயன்படுத்துகிறது. அதோடு, இந்த கிணறுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் கதிரியக்க தனிமங்களும் இருப்பதால், இந்த திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசகுழல் கோளாறு, புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கபடுகின்றனர்.
இப்போது சொல்லுங்கள், நீரியல் விரிசல் முறையில் பயன்படுத்தி எடுக்கப்போகும் எரிபொருள் நம்மை வாழவைக்கவா, அழிக்கவா என்பதை? தற்போது இரண்டாவது கட்டமாக நெடுவாசலில் தொடங்கியுள்ள போராட்டத்தின் முடிவுதான் நெடுவாசலை, மற்றும் நெடுவாசலை சுற்றியுள்ள மக்களின் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கப்போகிறது என்பது மிகையல்ல.
References
-
http://www.bssaonline.org/content/early/2015/01/01/0120140168.abstract
-
https://www.chemistryworld.com/news/audit-of-fracking-fluids-highlights-data-deficiencies/7648.article
- https://www.ceres.org/resources/reports/hydraulic-fracturing-water-stress-water-demand-by-the-numbers
- https://www.ceres.org/issues/water/shale-energy/investor-guide-to-fracking-water-risk/investor-guide-to-hydraulic-fracturing-water-stress
- http://droughtmonitor.unl.edu/data/png/20160927/20160927_CA_date.png
- http://www.ewg.org/research/toxic-stew
- http://science.sciencemag.org/content/347/6224/830
- https://www.nature.com/articles/ncomms7728
- https://www.biologicaldiversity.org/news/press_releases/2014/fracking-10-06-2014.html
- https://www.bloomberg.com/news/articles/2013-10-10/u-dot-s-dot-shale-oil-boom-may-not-last-as-fracking-wells-lack-staying-power
- http://www.pnas.org/content/111/17/6237.abstract
- http://pubs.acs.org/doi/abs/10.1021/es506095e
- https://www.nature.com/jes/journal/v27/n1/full/jes201581a.html
- http://www.sciencedirect.com/science/article/pii/S0048969716322392
- https://ehp.niehs.nih.gov/EHP281/
- http://www.comingcleaninc.org/assets/media/documents/When%20the%20Wind%20Blows.pdf
- https://ehp.niehs.nih.gov/1307732/
- https://www.health.ny.gov/press/reports/docs/high_volume_hydraulic_fracturing.pdf
- http://www.dec.ny.gov/docs/materials_minerals_pdf/findingstatehvhf62015.pdf
- https://www.bloomberg.com/news/articles/2015-06-29/n-y-officially-bans-fracking-with-release-of-seven-year-study
- https://www.government.nl/documents/reports/2014/10/15/structural-vision-for-shale-gas-extraction
- http://www.reuters.com/article/netherlands-energy-shale-idUSL8N0ZQ2S720150710
- http://www.reuters.com/article/us-germany-fracking-idUSKCN0Z71YY
- https://www.theguardian.com/politics/2016/jun/01/scottish-parliament-votes-narrowly-in-favour-of-ban-on-fracking-snp
- http://www.cedelft.eu/publicatie/support_to_the_identification_of_potential_risks_for_the_environment_and_human_health_arising_from_hydrocarbons_operations_involving_hydraulic_fracturing_in_europe/1274
- https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/296949/LIT_8474_fbb1d4.pdf
- http://www.teriin.org/policybrief/index.php?a=8
- சூறாவளி
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என நம் பொதுப்புத்தியில் பதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கப்படுகிறது.
நதிகள் இணைப்பைப் பற்றி பேசும் முன்னர் நதிகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாகப் பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்குப் பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடைக் காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை.
முதலில் நம் சுய நலத்திற்காக அணைகளைக் கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால்? அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால்? நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள்? ஏரிகள், குளங்கள் எல்லாம் என்ன ஆயின? நம்மிடம் இருந்த இயற்கை வளங்களைத் தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக? நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.
சாதாரண குளங்களையும், குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாதபோது, நதிகளை இணைத்து என்ன செய்யப் போகிறோம்? அண்டை மாநிலங்களைக் குறை சொல்லும் நாம், நம்முடைய நதிகளை என்ன செய்தோம்? காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன? மற்ற மாநிலங்களைக் குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும், காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும்.
- பா.சதீஸ் முத்து கோபால்
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?