நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கி வைக்கப்பட வேண்டிய ஒன்று என நம் பொதுப்புத்தியில் பதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கப்படுகிறது.

sharavati river

நதிகள் இணைப்பைப் பற்றி பேசும் முன்னர் நதிகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாகப் பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்குப் பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடைக் காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை.

முதலில் நம் சுய நலத்திற்காக அணைகளைக் கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால்? அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால்? நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள்? ஏரிகள், குளங்கள் எல்லாம் என்ன ஆயின? நம்மிடம் இருந்த இயற்கை வளங்களைத் தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக? நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

சாதாரண குளங்களையும், குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாதபோது, நதிகளை இணைத்து என்ன செய்யப் போகிறோம்? அண்டை மாநிலங்களைக் குறை சொல்லும் நாம், நம்முடைய நதிகளை என்ன செய்தோம்? காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன? மற்ற மாநிலங்களைக் குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும், காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும்.

- பா.சதீஸ் முத்து கோபால்

Comments

1 comment

1
soundar
innonorvar meethu kurai chulluvethu manitha illalphu

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.