நாம் எவ்வளவு தான் முன்னேறிச் சென்றாலும், அடிப்படைத் தேவைகளில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், உணவு, உடை, இருப்பிடம் என்ற இந்த வரிசையில் சுத்தமான காற்றும், தண்ணீரையும் சேர்த்த சுயநலமிக்க மனிதனின் வாழ்நாள் சாதனை. கட்டுமானத் துறையில் சமீபத்தில் முடிவடைந்த சில திட்டங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் காண்போம்.
போஸ்கோ வெர்டிகல் (Bosco Verticale)
போஸ்கோ என்பது ஒடிசா மாநிலத்தில் இயற்கை வளங்களை சூறையாடத் துடிக்கும் ஒரு நிறுவனம் என்பது தெரியும். அது என்ன போஸ்கோ வெர்டிகல்?
”போஸ்கோ வெர்டிகல்” என்பது இத்தாலி நாட்டின், மிலன் நகரத்தில் இருக்கும் 110 மீ & 76 மீ உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குப் பெயர். பெயரில் என்ன இருக்கிறது என வினவத் தோன்றுகிறதா? கண்டிப்பாகத் தோன்றும். போஸ்கோ வெர்டிகல் என்றால் ”செங்குத்தான காடுகள்” என்று பொருள். ஓர் அடுக்குமாடி கட்டிடத்திற்கு ஏன் செங்குத்தான காடுகள் என பெயர் வைக்க வேண்டும்?
காரணம் இருக்கிறது. வெப்பத்தை தாங்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைக்கவும், உயிர்வாயுவை அதிகரிக்கவும், ஒவ்வொரு தளத்திலும் நிறைய மரங்கள் இக்கட்டிடத்தில் பயிரிடப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள இரண்டு அடுக்கங்களில் 26 & 18 தளங்களில் 90க்கும் மேற்பட்ட, 13,000க்கும் அதிகமான முழுவளர்ச்சிப் பெற்ற மரம் மற்றும் செடிகள் பலகனியில் (façade) பயிரிடப்பட்டுள்ளன. இவற்றுள் 6 சுமார் மீ வரை உயரமுள்ள 700 மரங்களும் அடக்கம். இதனால் தான் இக்கட்டிடம் செங்குத்தான காடுகள் என அழைக்கப்படுகிறது. நாகரிகம் என்ற பெயரில் காடுகளை அழித்துவிட்டு, இப்போது கட்டிடத்திற்குள் காடுகளை வளர்ப்பது விந்தைதான்.
கட்டிடம் முடியும் தருவாயில்
(மரம் பயிரிடப்படுகிறது)
(மரங்களை வைத்த பின்)
கட்டிட மற்றும் காற்று பொறியாளர்கள், மற்றும் தாவரவியல் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளின் படி இக்காடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காற்றினாலோ அல்லது மரத்தின் எடையினாலோ கட்டிடத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்பது சிறப்பம்சம். நம் நாட்டிலும் இயற்கை வளங்களை வளர்ச்சி என்ற பெயரில் அழிப்பதை தொடருவோமே ஆனால், நிறைய போஸ்கோ வெர்டிகல் நம் நாட்டிலும் உருவாக நேரிடும்.
சூரியசக்தி சாலை
உலகில் இருக்கும் எல்ல இடங்களிலும் வீட்டுக் கூரைகள் மீதோ அல்லது வெட்ட வெளியிலோ சோலார் தகடுகளைப் பொருத்தி சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கபடுகிறது. நெதர்லாந்து நாட்டில், இன்னும் ஒரு படி மேலே முன்னேறிச் சென்று, சாலையில் (Cycle Track) இருந்து ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கிறார்கள். ஆச்சரியம் தானே !
நெதர்லாந்து நாட்டில், ஆம்ஸ்டெர்டாம் நகரில், 70 மீ நீளமுள்ள மிதிவண்டிச் சாலையில் சோலர் தகடுகளைப் பொருத்தி உருவாக்கி இருக்கிறார்கள். 2014 நவம்பர் மாதம் முடிக்கப்பட்ட இச்சாலையில், ஆறே மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இம்மின்சாரமானது, ஒருவர் வாழும் ஒரு இல்லத்திற்கு ஒரு வருடத்திற்குத் தேவையான மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும்.
சூரிய சாலையின் தோற்றம்
வருங்காலங்களில், சாலைகளின் மூலமும் வணிக அளவில் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அந்தாள் வெகு தொலைவில் இல்லை. வெட்பம் குறைவாக இருக்கும் நெதர்லாந்தில் முடியும் என்றால், ஆண்டுமுழுக்க வெயிலேயே வாழும் நம் நாட்டில் மட்டும் ஏன் முடியாது?