கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நவாஸ்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஆஸ்திரேலியா! பெயரைக் கேட்டாலே பெரும்பாலான இளசுகளுக்கு கங்காருகளும், இன்னும் சில பெருசுகளுக்கு இந்தியன் படத்தின் 'டெலிபோன் மணி போல்' பாட்டும், வெகு சிலருக்கு ஈழ அகதிகளின் வாழ்விடமும் என அவரவர்களின் நிலைக்கேற்ப நினைவில் வந்து போகும்.
தற்போது, அனைவரும் அங்கே பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீ, அதனால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் குறித்தும், இனி அதன் பக்கவிளைவான சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உலகின் நுரையீரலாக காடுகள் செயல்படுகின்றது. ஆனால் கார்ப்ரேட் முதலாளிகளுக்கோ எண்ணற்ற கனிம வளங்களை எப்படி சூறையாடலாம், எப்படி பணமாக மாற்றலாம் என்றே தெரிகின்றது. சமீபத்திய அமேசான் காடுகளில் ஏற்பட்ட கட்டுக்கடங்கா காட்டுத் தீயினை அரசே முன்னின்று ஏற்படுத்தி, அதற்கு நாட்டின் வளர்ச்சி என்னும் பக்தியினை ஊட்டி அதனை எதிர்த்தவர்களை தேச விரோதிகளாகக் காட்டியதை இன்னும் மறந்திட இயலாது.
ஆஸ்திரேலியாவிலோ கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போதுவரை நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்து வரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. காட்டுத் தீயில் பல உயிரினங்கள் உடல் கருகி இறக்கின்றன.
"பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் தங்களை நோக்கி வரும் தீயைப் பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கும். ஆனால், அதிக தொலைவு செல்ல முடியாத மற்றும் அந்தக் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரினங்கள் நிச்சயம் காட்டுத் தீயில் சிக்கியிருக்கக் கூடும்" என ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் வல்லுநரும், சிட்னி பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியக் காடுகளில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன வாழ்வதாக கிறிஸ் டிக்மேன் கூறுகின்றார். அப்படியிருக்கையில் இப்போது நிகழ்ந்திருக்கும் பேரழிவில் கிட்டத்தட்ட 480 பில்லியன் உயிரினங்கள் இறந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். University of Reading பேராசிரியர் டாம் ஆலிவர், "இந்த காட்டுத் தீயில் உயிரிழந்த பல்வேறு விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தி குறித்த தரவுகள் கிடைக்காததால், ஏற்கனவே அறியப்பட்ட மற்ற விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும்" என்று கூறுகிறார். இதுவே பொருத்தமான கருத்தாக கருதிட வேண்டும்.
Chaos Theory என்று ஆய்வாளர்களால் பேசப்படும் கருத்தியலின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயினால் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை என நாம் ஒவ்வொருவரும் கருதி, கடந்திடுவோமானால் நம்மைவிட முட்டாள்கள் எவரும் இல்லை. 'எல்நினோ' காரணமாக அதிக மழையும், அதிக வறட்சியும் மாறி, மாறி சேதங்களை ஏற்படுத்தும் நமக்கு ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ சாதாரணமான ஒன்றென ஒதுக்கக் கூடியதல்ல.
காட்டுத் தீயினை அனைத்திட 4500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியும், பல்வேறு கட்ட முயற்சிகளை செய்தும்கூட அந்நாட்டு அரசால் கட்டுப்படுத்திட முடியவில்லை. இயற்கையே மழைப் பொழிவினை ஏற்படுத்தினால் ஒழிய இதனைத் தடுத்திட வேறுவழியில்லை என மக்களும் #pray_for_australia என டிவிட்டரில் டிரண்டிங் ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.
நமக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை, இருக்கும் ஒரே வார்த்தை #pray_for_australiaவைத் தவிர...!
- நவாஸ்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
கிரீன்லாந்தில் பனிப்பாறைகளின் (Ice Sheets) நகரும் வேக வளர்ச்சி (Acceleration) 1990 காலகட்டத்திற்குப் பிறகு மிகவும் அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இதன் நகரும் வேக வளர்ச்சி அளவு இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறதாம். 1990 காலகட்டத்தில் கடலுக்குள் சென்ற பனிப் பாறைகளின் அளவு 33 பில்லியன் டன்கள் இருந்ததாகவும், அவை தற்போது 254 பில்லியன் டன்களாக அதிகரித்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இதுவரை கிரீன்லாந்தில் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டன்கள் கணக்கில் பனிப் பாறைகள் உருகி கடலுக்குள் சென்றிருக்கிறது. இது தோராயமாக ஒரு சென்டி மீட்டர் அளவு புவியின் கடல் மட்டம் உயர்வுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு சென்டி மீட்டர் அளவு என்பது குறைவாக இருக்கலாம், ஆனால் மெதுவாக உயர்கிறது என்பது தான் யதார்த்தம்.
நமது கிரகத்தைச் சுற்றி ஒரு சென்டி மீட்டர் கடல் மட்டம் உயர்வு என்பது, கடற்கரையை ஒட்டி வாழும் சுமார் 6 மில்லியன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் ஆன்ட்ரிவ் செப்பர்ட் (Andrew Shepherd). இவர் லீட்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் (Leeds University).
இந்த மாற்றத்தை விஞ்ஞானிகள் Ice Sheet Mass Balance Inter Comparison Exercises IMBIE என்று அழைக்கின்றார்கள். இது Journal Nature-ல் வெளியாகி உள்ளது.
பூமியில் இரண்டாவது பெரிய அமைப்பைக் கொண்ட பனிப் பாறைகள் மாற்றத்திற்கு உள்ளாவது (pace of change) நமக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிப்பதாகவும், இதனால் அடுத்த ஒரு மில்லியன் ஆண்டுக்குள் தோராயமாக 20 அடி வரை கடல் மட்டம் உயரலாம் என்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலைக் குழு கணித்ததை விட, கிரீன்லாந்தில் பனிப் பாறைகளின் உருகும் வேகம் அதிகமாக இருக்கிறது. அடுத்த 2100-க்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிப் பாறைகளால் கடல் மட்டம் உயர்வதின் அளவு 16 சென்டி மீட்டராக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொரு புறம் அண்டார்டிகா பனிப் பாறைகள் நகர்வதன் மூலமும் கடல் மட்டம் உயர்வது அதிகரிக்கும் என்றும், இதற்கு அடிப்படை புவியின் வெப்பம் அதிகரிப்பதே என்றும் கூறுகிறார்கள்.
உலகில் மிகப் பெரிய பனிப் பாறைகள் அடங்கிய தீவுப் பகுதி கிரீன்லாந்து ஆகும். இந்த பனிப் பாறைகள் ஓராயிரம் ஆண்டுகள் பொழிந்த பனியினால் ஆனது. இப் பனிப் பாறைகளின் அளவை அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியின் அளவோடு ஒப்பிடுகிறார்கள். மேலும் இதன் நடுப்பகுதி ஒரு மைல் தொலைவுக்கு தடிமனான கட்டமைப்பு உடையதாக இருக்கிறது.
வெளிப்புற வெப்பம் உயர்வால் இந்தப் பாறைகள் தன்னுள் வெடித்து வெளியேறுவதும் நடக்கிறது. 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடுகையில் கிரீன்லாந்தில் பெரும்பாலான பகுதிகளின் வெப்பநிலை 2℃ (3.6 Fahrenheit) அதிகரித்து இருக்கிறது. மேலும் உலகில் வேகமாக வெப்பநிலை அதிகரித்து வரும் பகுதியாக இதை சுட்டிக் காட்டி "வாசிங்டன் போஸ்ட்" ஆய்வு அறிக்கை வெளியிட்டது.
பனிப் பாறைகள் உருகுவதன் காரணமாக கிரீன்லாந்தின் ஒரு சில பகுதிகளை இழந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் பொழியும் பனியின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் மீதமிருக்கும் பனிப்பாறைகளும் வேகமாக நகர்ந்து கடலில் மூழ்கும் அல்லது இரண்டாக உடைந்து நகரும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
இந்த தொடர் நிகழ்ச்சியால் பனிப்பாறைகளின் கன அளவும் எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைகிறது. மேலும் மேலும் கிரீன்லாந்தின் வடபகுதியில் உள்ள பனிப் பாறைகளின் (glaciers) பனிக்கட்டியை இழக்கிறோம்.
இந்த புதிய ஆய்வானது 26 வெவ்வேறு செயற்கைக் கோள்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததாகவும் ஆராய்ச்சி நடத்திய 89 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- பாண்டி
(நன்றி: 'தி பாஸ்டன் குளோப்', 10.12.2019)
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
வெதண நிலை ('தட்ப வெப்ப நிலை', சூழலியல்) மாற்றங்கள் தொடர்பான ஒன்றிய நாடுகளவையின் 25-ஆவது கருத்தரங்கம் (The UN Climate Change Conference COP 25) இம்மாதம் 2-13 தேதிகளில் ஃச்பெயின் (Spain) நாட்டுத் தலைநகர் மெட்ரிட் (Madrid) நகரில் நடைபெறுகிறது.
உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கானோர் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
புவியின் இயற்கைச் சூழல் அழிவின் விளிம்பில் இருக்கிறது; அதில் இருந்து மீள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவது கருத்தரங்கின் முதன்மை நோக்கம்.
ஆனால், கருத்தரங்கை நடத்துவதற்குத் தேவையான நிதியுதவி யாரிடமிருந்து வருகிறது?
ஃச்பெயின் நாட்டின் பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ளவற்றில் 35 மிகப் பெரிய நிறுவனங்களிடமிருந்து தான்! அவை ஒவ்வொன்றும் இருபது லட்சம் யூரோ நிதியுதவி அளித்தால் 90 விழுக்காடு வரி விலக்குத் தருவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். அந்நிறுவனங்களில் பல பெட்ரோலியம், எரி வளி, கழிவுகள், தண்ணீர் வணிகம் உள்ளிட்ட துறைகளில் உலகளவில் பெரியவை. கருத்தரங்குக்குச் செய்யும் 'நிதியுதவி' அந்த நிறுவனங்கள் வரி விலக்குப் பெறுவதற்கு மட்டுமின்றி, நற்பெயர் ஈட்டித் தம் களங்கங்களை மறைப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.
மேற்படிக் கருத்தரங்கில் ஒன்றிய நாடுகளவையின் செயலகத் தலைவர் (Secretary-General) ஆற்றிய உரையிலிருந்து சில தகவல்களும் கருத்துகளும் வருமாறு:
நம் முன்னர் இரண்டு வழிகள் உள்ளன; அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்: முதல் வழி உலகிலுள்ள அனைவருடைய வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்குவது. நாம் நம் வாழ்முறையை மாற்றிக் கொள்ளாமல், எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த வழியில் பயணிப்போம்.
நிலைத்த, நீடித்த வாழ்க்கைக்கு அடிகோலுவது இரண்டாவது வழி. அதில் சென்றால் பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவளி ஆகிய புதைபடிவ ஆற்றல்களை நிலத்தடியில் விட்டு வைப்போம். அப்படிச் செய்தால் மட்டும் புவி 1.5 பாகை செல்சியசுக்கு மேல் சூடேறுவதைத் தடுக்கும் வாய்ப்புள்ளது. அதைவிட அதிகமாகச் சூடேறினால் அதன் விளைவுகள் மிக, மிக மோசமாக இருக்கும் என்பதைச் சூழலியல் அறிஞர்கள் ஐயத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. வளிமண்டலத்தில் பசுங்குடில் வளிகளின் அளவு மிக அதிகமாகிவிட்டது. (சுமார் முப்பது முதல் ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இருந்தபோது புவி மேற்பரப்பு வெப்ப நிலை இப்போது இருப்பதைவிடச் சுமார் 2-3 பாகை அதிகமிருந்தது; கடல் மட்டம் இப்போது இருப்பதைவிடப் பத்து முதல் இருபது மீட்டர் அதிகமிருந்தது.)
இதன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிறோம். வறட்சி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் கடுமை அதிகரித்து விட்டது. புவியின் வட, தென் முனைப் பகுதிகளில் பனி மிக வேகமாக உருகி வருகிறது. க்ரீன்லாந்துப் பகுதியில் சூலை மாதம் மட்டும் 17,900 கோடி டன் உறைபனி உருகிவிட்டது. ஆர்டிக் பகுதியில் எப்போதும் இருந்த உறைபனி எழுபது ஆண்டுகள் முன்கூட்டியே உருகி வருகிறது. அண்டார்டிகா கண்டத்திலுள்ள உறைபனி பத்தாண்டுகளுக்கு முன்னர் உருகியதைவிட மும்மடங்கு வேகமாக உருகி வருகிறது.
கடல் மட்டங்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக உயர்கின்றன. உலகின் மிகப் பெரிய நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்கள் கடற்கரைகளில் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வளிமண்டலத்தில் சேரும் கரி-ஈருயிரகையில் (CO2) கால் பங்குக்கும் மேற்பட்டதைக் கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன; வளிமண்டலத்திலுள்ள உயிர்வளியில் (oxygen) பாதிக்கு மேற்பட்டதைக் கடல்களே உருவாக்கித் தருகின்றன.
அத்தகைய பெரும்பயன் தரும் கடல்கள் நம் தவறான செயல்பாடுகளால் சூடேறுவது மட்டுமன்றி மாசு நிறைந்து வருகின்றன. அவற்றில் கரையும் கரி-ஈருயிரகையின் அளவு கூடுவதால் கடல் நீர் மேலும் புளித்தமாகிறது. அதன் விளைவாகப் பல்லாயிரங் கோடி நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
ஆனால், உலக நாடுகள் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கு பதில் அதிகரித்து வருகின்றன. ஆற்றல் உற்பத்தியில் மட்டுமன்றி வேளாண்மை, போக்குவரத்து, நகர வடிவமைப்பு, கட்டுமானத் துறை (சிமென்ட், எஃகு, உள்ளிட்ட துறைகள்) போன்ற அனைத்துத் துறைகளிலும் நாம் இப்போது பயணிக்கிற வழி ஆபத்தானது.
நம் தொழில்துறைகளில் உடனடியான அடிப்படை மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நமக்கு எதிர்காலம் உள்ளது.
2100-ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 பாகைக்கு மேல் உயராதிருக்க வேண்டுமானால் 2010-2030 காலக்கட்டத்தில் நாம் வெளியிடும் பசுங்குடில் வளிகளின் அளவை 45 விழுக்காடு குறைக்க வேண்டும்; 2050-க்குள் அவற்றை வெளியிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த முயற்சியை அனைத்து நாடுகளும் தொடங்கியிருந்தால் பசுங்குடில் வளி வெளியீட்டை ஆண்டுக்கு 3.3 விழுக்காடு குறைத்தால் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், இப்போது ஆண்டுக்கு 7.6 விழுக்காடு குறைக்க வேண்டும்!
பாரிசில் சென்ற ஆண்டு ஒப்புக் கொண்டவாறு அரசுகள் நடக்கவில்லை. குறிப்பாக, பொருளாதாரத்தில் உயர்நிலையிலுள்ள (G20) நாடுகள் தம் பொருளாதார முறையில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இப்போதைய நிலை நீடித்தால் 2100 வாக்கில் புவியின் வெப்பநிலை 3.4-3.9 பாகை உயர்ந்துவிடும். அதன் விளைவுகள் கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கும்.
ஆகவே, இயற்கைக்கு எதிரான நம் போரை உடனடியாக நிறுத்துவது இன்றியமையாதது.
1. https://truthout.org/video/police-halt-activist-led-toxic-tour-of-corporate-polluters-sponsoring-cop25/
2. https://www.un.org/sg/en/content/sg/statement/2019-12-02/secretary-generals-remarks-opening-ceremony-of-un-climate-change-conference-cop25-delivered
- பரிதி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிடில் நடைபெற்று வரும் 'உலக நாடுகள் காலநிலை மாநாட்டில்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio gutierrez), புவி வெப்பமடைதலுக்கு எதிராக எடுத்த சபதத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளித்தார்.
உலகத்தில் அறிவியல் பூர்வமாக இருக்கும் ஞானமும், தொழில்நுட்ப அறிவும் புவி வெப்பமடைவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான நடவடிக்கை இல்லை.
2019, டிசம்பர் 2-13 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் 2015-பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறோம், கடல்நீர் உயர்வதால் பாதிக்கப்படும் நாடுகள் நிலை மற்றும் பிற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளார்கள்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன்ஸ் (greenhouse gases) நமது வளிமண்டலத்தில் ஏற்கனவே உள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட இவைகளால் வெப்பநிலை, துருவ பனிப்பாறைகள் உருகுவது, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் உலகத்தில் அதிகமாக இந்த வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் இதற்கு எதிராக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்தாகத் தெரியவில்லை.
தற்போது 70 நாடுகளுக்கு மேல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக, தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். 2050க்குள் கிரீன்ஹவுஸ் கேஸ் வெளியேறுவதை தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி தரக்கூடாது எனவும் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதில் மறைமுகமாக 'பசுமை தொழில்நுட்ப' மின்சாரம் உற்பத்தி செய்து நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சாராம்சம் உள்ளது. அணு உலைகள் சம்பந்தமாக பேசப்படவில்லை. அப்படியென்றால் அணுஉலை மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஏற்பாடா?.
ஜெர்மனி நாடு அவர்களுடைய அனைத்து அணு உலைகளையும் 2022க்குள் மூடிவிடப் போகிறார்களாம். இந்த உலைகளில் இருக்கும் 28,000 (Cubic meters) அணுக் கழிவுகளை எங்கே பாதுகாப்பாக புதைத்து வைக்கலாம் என விஞ்ஞானிகள் இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிபயங்கர ரேடியோஆக்டிவ் கதிர்கள் இந்தக் கழிவுகள் மூலம் வெளியேறலாம். இதன் தாக்கம் அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்திருக்கிறோம்.
காற்றாலை மின்சாரம், கதிரொளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவது (சோலார்) போன்றவற்றை முன்னிலைப் படுத்த வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
விழிப்புணர்வு யாரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் மக்களிடம் இருந்தா... அரசுகளிடமிருந்தா?.
இப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் பருவநிலை மாற்றம் பற்றி விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது நல்ல ஒரு மாற்றம் கூட.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் தேவைகளைக் குறைத்து புதிய வாழ்வியலைத் தொடங்குவதன் மூலம் புவி வெப்பமடைவதைத் தவிர்க்க முடியும். நாம் வளரும் இதே சூழலில் நமது குழந்தைகளுக்கும் சூழலியல் கற்று கொடுக்க வேண்டும்.
மறுசுழற்சியின் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நாம் எல்லோருக்கும் உள்ளது.
- பாண்டி
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...