கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளைத் தின்று பலரது கண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cow eating plasticஎண்ணெயிலிருந்தும், எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிற பிளாஸ்டிக்களில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவை நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றை, நிலத்தடி நீரை, மண்ணை மாசாக்குவதுடன் மிக விரைவாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். கிட்டத்தட்ட மனிதனின் சராசரி வயது அளவீட்டில் 6லிருந்து 8 மனிதர்களின் ஆயுட்காலம் அல்லவா இது? நாம் அழிவதுடன் வரும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகின்றோம் அல்லவா?

நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு வீதியில் எரிந்துவிடுவதால், பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில், குளங்கள், ஏரிகள் என அனைத்திலும் கலப்பதால், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த பிளாஸ்டிக் பைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது, சாலை ஓரங்களில் இவ்வகைப் பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஒடுகின்றது. அதன்மீது நாம் நடக்கும் போதும், அதிலிருந்து வரும் தூர்காற்றை சுவாசிக்கும் போதும் பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சில வருடங்கள் முன் சென்னையில் கொட்டித்தீர்த்த பெரு மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புதான்.

மக்களே, நம் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பல்வேறு உயிரினங்களுக்கு விஷமாவதுடன், மண்ணின் உயிர்வேதியியல் தன்மையையும் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுவோம்.

பிளாஸ்டிக்கள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்த்திடுவோம். கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப் பை போன்றவற்றை எடுத்துச் செல்வோம்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
நீர் வளம் காப்போம்!

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
மண் வளம் காப்போம்!

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
உயிரினங்களைக் காப்போம்!

பிளாஸ்டிக் ஒழிப்போம்
கேன்சரைத் தடுப்போம்!

பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கி நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என்னும் உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம்.

- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர்

Pin It