கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பல லட்சம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் கட்டிக் காத்த இந்த மண்ணை, இந்த நாட்டை, இயற்கையை... சில பத்து ஆண்டுகளில் வளர்ச்சி என அழிக்கும் கூட்டத்திற்கு துணை நிற்கப் போகிறோமா?
அல்லது இடையறாது பல்வேறு உறுதியான செயல்பாடுகளை முன்னெடுத்து, நிலைமையை மாற்ற போகிறோமா என்ற கேள்வி நம் அனைவர் முன் பெருமலையாய் எழுந்து நிற்கிறது.
நாம் சிந்தித்து செயல்படவேண்டிய அவசியமான காலமிது.
திருவள்ளூர் மாவட்டம் : அனல்மின் நிலையம், வடசென்னையில் உள்ள எண்ணற்ற இரசாயன தொழிற்சாலைகள், மீஞ்சூர் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்,
புழல் அருகே உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா குடிநீர்த் திட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம்: கல்பாக்கம் அணு உலைகள், மாமண்டூர் பெப்சி ஆலை, திருபெரும்புதூர் கொக்கோ-கோலா ஆலை, திருபெரும்புதூர் சிப்காட் ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் 4000 மெகாவாட்-செய்யூர் அனல்மின் நிலையம், பாலூர் அருகே தடுப்பணை கட்டி எடுக்கப்பட்டு வரும் இந்திய அரசின் தென்னக ரயில்வேயின் ரயில் குடிநீர், நெமிலி கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்.
வேலூர் மாவட்டம்: தோல் தொழிற்சாலை கழிவுகள், ஆற்று மணல் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டம்: கவுத்தி வேடியப்பன் மலை ஜிண்டால் திட்டம்
கடலூர் மாவட்டம்: இரசாயன தொழிற்சாலைகள் (வாழும் போபால்)
விழுப்புரம் மாவட்டம்: தென்பெண்ணை ஆறு ஆற்று மணல் கொள்ளை
கிழக்கு மாவட்டங்கள்- சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுசேரி(பாகூர் பகுதி) மாவட்டங்கள்: மீத்தேன், கடற்கரையோரம் அமைக்கப்பட்டு உள்ள இறால் பண்ணைகள்
தமிழக காவேரி டெல்டா படுகையை பாலைவனமாக்க, காவேரிக்கு குறுக்காக கர்நாடக அரசால் கட்டப்படும் புதிய அணைகள்(48- டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை உட்பட இரு அணைகள்)
நாகப்பட்டினம் மாவட்டம்: அமைந்து, அமையவிருக்கும் 12 அனல் மின்நிலையங்கள்
ராமநாதபுரம் மாவட்டம்: அமையவிருக்கும் உப்பூர் அனல் மின்நிலையங்கள்
அரியலூர், பெரம்பலூர் : சிமெண்ட் ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள்
திருச்சி: புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல் (TNPL) காகித ஆலை, தினசரி 90,00,000 லட்சம் லிட்டர் எடுக்க அனுமதி பெற்றுள்ள சூரியூர் பெப்சி ஆலை, ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம்: கிரானைட் கொள்ளை
மேற்கு மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி: கெயில் திட்டம்
கோவை மாவட்டம்: எவரெசுடு ஆஸ்பெட்டாசு ஆலை, மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை, பல்வேறு தொழிற்சாலை கழிவுகள்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம்: கிரானைட் கொள்ளை
திருப்பூர் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள்
ஈரோடு மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், தோல் ஆலை கழிவுகள், பெருந்துறை சிப்காட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலை கழிவுகள், பெருந்துறை கொக்கோ-கோலா ஆலை, பவானி சாகர் பகுதியில் உள்ளகாகித ஆலை கழிவுகள்
சேலம் மாவட்டம்: அனல்மின் நிலையம், மால்கோ தொழிற்சாலைகள், விதிமீறி வெட்டப்படும் பாக்சைட்.
நாமக்கல் மாவட்டம்: சாயப்பட்டறை கழிவுகள், காகித ஆலை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,
கரூர் மாவட்டம்: காகித ஆலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை,
மதுரை மாவட்டம்: வடபழஞ்சி அணுக்கழிவு ஆராய்ச்சி, கிரானைட் கொள்ளை, அமையவிருக்கும் சிவரக்கோட்டை சிப்காட்
மதுரை- விருதுநகர்(அருப்புக்கோட்டை)- தூத்துக்குடி மாவட்டம்: இண்டஸ்ரியல் காரிடார் திட்டம்
திண்டுக்கல்: தோல் தொழிற்சாலை கழிவுகள்
தேனி மாவட்டம்: நியூட்ரினோ
நெல்லை மாவட்டம்: கூடங்குளம் அணு உலை, தாமிரபரணி ஓரம் அமைந்துள்ள காகித ஆலை கழிவுகள், புதிதாக அமைக்கப்பட இருக்கும் டிஎன்பிஎல்(TNPL) காகித ஆலை , கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள கொக்கோ-கோலா ஆலை, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் பெப்சி ஆலை.
கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்: தாது மணல் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம்: இந்திய அருமணல் ஆலை (IRE)
தூத்துக்குடி மாவட்டம்: ஸ்டெர்லைட், தாரங்கதாரா (வாழும் போபால்) சிப்காட் வளாக இரசாயன தொழிற்சாலைகள், தமிழ்நாட்டுக்கு ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கொடுக்காமல் தனி கிரீட் (மின்பாதை) அமைத்து அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திரத்திற்க்கும், இலங்கை போன்ற வெளிநாட்டுக்கும் விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ள, அமைக்கப்பட இருக்கும் 14,000 மெகாவாட் திறன் உள்ள 15 அனல்மின் நிலயங்கள்
இது போக
- தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளிலும் வரைமுறையற்ற ஆற்று மணல் கொள்ளை
- 20 மாவட்டங்களில் வரைமுறையற்று மலைகளை வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கொள்ளை
- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டுவரும் தாது மணல் கொள்ளை
- வரைமுறையற்ற முறையில் அள்ளப்பட்டு வரும் பல்வேறு கனிமங்கள்
- நீர்வளக்கொள்ளையாய் அனைத்து இடங்களிலும் நீரை உறிஞ்சி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி தொழிற்சாலைகள், பல்வேறு தனியார், அரசு(அம்மா குடிநீர், ரயில் குடிநீர்) தண்ணீர் தொழிற்சாலைகள்...
- தனிநபர்களின் கொள்ளைக்காகவும், அரசின் பொறுப்பற்ற கொள்கையால் அழிக்கப்பட்டு வரும் பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகள்.
- திட்டமிட்டு தமிழகத்திற்க்கு வரும் ஆறுகள் அண்டையில் உள்ள கேரளா, கர்நாடக, ஆந்திர அரசுகளால் மறிக்கப்படுதல்
-கடல்வளத்தை அழிக்கும் கடலோரங்களில், கடலில் அமைக்கும் எண்ணற்ற மாசுபடுத்தும் ஆலைகள், ஆய்வுகள். கடலில் அனுமதிக்கப்படும் பெரு நிறுவன கப்பல்கள்
- மலைகளில் உள்ள கனிமவளங்களைக் கொள்ளையடிக்க பாரம்பரிய பழங்குடிமக்களை வெளியேற்ற, தேன் தடவிய பெயரில் கொண்டுவரப்படும் இந்திய, தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள்
- தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் திட்டம் என்றாலோ, தொழில்கள் என்றாலோ அது அனைத்தும் உலகில் காலம்கடந்த(காலாவதியான) தொழில்நுட்பங்கள் திணிக்கப்படுவதாகவோ, உலகில் உள்ள கழிவுகளை கொண்டு வந்தோ அல்லது விசக்கழிவுகளை உண்டாக்கும் அழிவு திட்டங்களாகவோ மட்டும் உள்ளன.
நாம் நமது இயற்கையை, கனிமவளங்களை, நீர்வளங்களைக் காக்க ஒன்றுபட்டு செயல்படுவோம்.
பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் இருந்தும், இந்திய முதலாளிகளின் சுரண்டலில் இருந்தும் தமிழகத்தை மீட்போம்... தமிழ்நாட்டின் நிலைமையை மாற்றுவோம்...
- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: சுற்றுச்சூழல்
இவ்வுலகில் 2070ஆம் ஆண்டிற்குள் கரி வளி (கார்பன் டை ஆக்ஸைட் - CO2) உமிழ்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், 2100ஆம் ஆண்டிற்குள் பசுமை வளி (green house gas) உமிழ்வும் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச் சூழல் திட்டங்கள் (United National Environmental Programme) பிரிவு 20.11.2014 அன்று பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில் தெரிவித்து உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் இவ்வுலகில் உயிரினங்கள் அழிந்து போவதைத் தடுக்கவே முடியாமல் போய் விடும் என்றும் அது கூறி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் அவை 19.11.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் பத்து லட்சம் கோடி டன் கரி வளியும், அதே அளவு பசுமை வளிகளும் இப்புவியில் உமிழப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளது. இன்னும் இதே அளவில் இவ்வளிகள் உமிழப்பட்டால், புவி வெப்பம் எல்லை கடந்து விடும் என்றும், பின் அதைத் திருப்பி விடும் ஆற்றல் மனித குலத்திற்கு அப்பாற்பட்டதாகி விடும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த அளவிற்கு இந் நச்சு வளிகள் வருங்காலத்தில் உமிழப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுமா என்பது ஐயமாக உள்ளது என்று இப்பிரிவின் தலைமை அறிவியலாளர் ஜாக்குலின் மெக்கிளேட் (Jacqueline McGlade) அம்மையார் கூறி உள்ளார். இயற்கை வளங்களையும், மனித ஆற்றல்களையும் இயக்கி வழி நடத்தும் அரசியல்வாதிகளின் அக்கறை இன்மை இதற்குக் காரணம் என்றும் அவர் கூறி உள்ளார்.
மேலும் கரி வளி உமிழப்படுவதைக் குறைப்பது; முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவது மட்டும் போதாது. ஏற்கனவே உமிழப்பட்ட கரி வளியை உறிஞ்சி உயிர் வளியாக மாற்றிக் கொடுக்கும் மரங்களைப் போதுமான அளவிற்கு வளர்க்க வேண்டியதும் முக்கியமானது ஆகும்.
ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களுக்கு வளர்ந்த நாடுகளில் எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை என்று ஐரோப்பிய ஆற்றல் ஆணையத்தின் துணைத் தலைவர் (European Commission's vice pesident for energy) மாரோஸ் ஸெஃபெயொவி (Maros Sefeovie) கூறி உள்ளார்.
அறிவியல் அறிஞர்கள் கூறி உள்ள இவ்விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு மிக அதிகமான அறிவுத் திறன் தேவை இல்லை. சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. இருந்தும் இவ்வுலகின் இயற்கை வளங்களையும் மனித ஆற்றல்களையும் இயக்கி ஆளும் அறிவுத் திறன் படைத்த அரசியல்வாதிகளுக்கு எப்படிப் புரியாமல் போகிறது? உண்மை என்னவென்றால் இந்த அரசியல்வாதிகள் முதலாளிகளின் அடிமைகளே.
முதலாளிகளைப் பொருத்த மட்டில் சந்தையின் வழியில் உற்பத்தி முறை இருந்தால் தான் உழைக்கும் மக்களை அடிமை கொண்டு வாழ முடியும். அறிவியல் அறிஞர்கள் கூறுவதைக் கேட்டால் இலாபம் தரும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது என்பது மட்டும் அல்ல; நஷ்டம் தரும் பொருட்களான மரம் வளர்த்தல், விவசாயம் போன்ற தொழில்களைத் தான் மிக அதிகமாக முன்னெடுக்க முடியும். அவ்வாறு செய்ய வேண்டுமானால் சந்தை முறையை அதாவது முதலாளித்துவ முறையைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம (சோஷலிச) முறையைக் கைக்கொள்ள வேண்டும். அப்பொழுது உழைக்கும் மக்களை அடிமை கொள்ள முடியாது; அதாவது பிற மனிதர்களை அடிமை கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியாது.
அடிமை கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியாமல் போவதை விட இவ்வுலகம் அழிந்து போனாலும் போகட்டும் என்று முதலாளிகள் நினைக்கின்றனர். முதலாளிகளின் அடிமைகளான அரசியல்வாதிகளும் தங்கள் எஜமானர்னளுக்கு விசுவாசமாக நடந்து கொண்டு இவ்வுலகை அழிவுப் பாதையில் கொண்டு போகின்றனர்.
உழைக்கும் மக்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் / முதலாளித்துவ அரசியல்வாதிகளின் மயக்கு மொழிப் பேச்சுகளில் மயங்கி உலகை அழிய விடப் போகிறீர்களா? அல்லது மனித இனப் பொறுப்பை உணர்ந்து முதலாளித்துவ முறையைக் காவு கொடுக்கவும், சமதர்ம முறையை ஏற்படுத்தவும் அணியமாகப் போகிறீர்களா?
- இராமியா
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த மாதம் 18ம் தேதி மரபணு மாற்று மதிப்பீட்டுக் குழு – GEAC, உணவுப் பயிர்கள் உள்ளிட்டு, 13 மரபணு மாற்றுப் பயிர்களை, பாதுகாப்பானதா என்பது உறுதி செய்திடாத முன்பே, வயல் வெளிகளில் சோதிக்க அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர்கள் உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும், இந்திய வேளண்மையையும் பல வகைகளில் பாதிக்கும் என்பதால் விவசாயிகளான நாங்கள் இந்த வயல் வெளி சோதனைகளை எதிர்க்கிறோம்.
1. தொலை நோக்குடன் மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், மரபணு மாற்றுப் பண்டங்களுக்கும் தமிழகத்தில் தடை விதித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
2. மரபணு மாற்றுப் பயிர்களை வயல் வெளிகளில் சோதிக்க அனுமதிக்கக் கூடாதென ஒற்றைக் குரலில் மத்திய அரசை வலியுறுத்திய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
3. வயல் வெளி சோதனைகள் என்பது திறந்த வெளியில் செய்யப்படும் சோதனைகள் என்பதால் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத சக்திகளான காற்று, தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவைகள் மூலம் மரபணு மாற்றுப் பயிர்களின் மகரந்தத் தூள்கள் பிற உறவுப் பயிர்கள், செடிகளில் கலப்படம் ஆவதைத் தடுக்க இயலாது.
4. இத்தகு மரபணுக் கலப்படங்கள் திறந்த வெளி வயல் வெளி சோதனைகளின் போது உலகின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது. அமெரிக்காவில் மரபணு மாற்று நெல் மற்றும் கோதுமை சோதனைகள் நடந்து முடிந்து பல ஆண்டுகள் கழித்து மரபணுக் கலப்படும் நடந்துள்ளதைக் கண்டறிந்ததும் அதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பெருத்த அளவில் நட்டப்பட்டதும் உலகு அறிந்த செய்தி.
5. இந்தியாவில் வயல் வெளி சோதனைகளுக்காக தற்போது அனுமதிக்கப்படுள்ள பயிர்களும் இனி வரவுள்ளவைகளும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பில்லாதவை என்பது உறுதி செய்யப்படாதவைகள்.
6. உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கில் தனக்கு ஆலோசனை அளிக்க அமைத்த தொழில் நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையில் இந்தியாவில் மரபணுமாற்றுப் பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லை, அத்தகு ஆய்வுகளை செய்திடும் அறிவியல் வல்லுனர்களும் இல்லை. அத்தகு ஆய்வகங்களும், வல்லுனர்களும் உருவாக்கிய சோதனைகள் நடத்தி பாதுகாப்பானது என்பதை அறிந்த பின்னரே இத்தகு வயல் வெளி சோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
7. கடந்த நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக் குழுவானது ஒருமித்த குரலில் இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையில்லை என்றும் வயல் வெளி சோதனைகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளது
8. மரபணு மாற்றுப் பயிர்களில் திணிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் அந்தந்த நிறுவனங்களின் சொத்து என்று காப்புரிமை பெறப்பட்டவைகள். அத்தகு மரபணுக்கள் விவசாயிகளில் பயிர்களுடன் மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் இந்திய விவசாயிகளின் விதைத் சுதந்திரமும், உரிமையும் அந்த விதை வணிக நிறுவனங்களிடம் சிக்கிவிடும். தார்வாட் விவசாயப் பல்கலைக் கழகம் உருவாக்கிய பி.ட்டி, பிகநேரி பருத்திப் பயிரில் மான்சான்டோவின் மரபணு எப்படியோ கலப்படம் ஆனது. இப்படி தனக்குச் சொந்தமான மரபணு பி.ட்டி பிகநேரில் இருப்பதை எதிர்த்து வழக்கும் தொடுத்தது. அந்தத் திட்டம் இறுதியில் நிறுத்தப்பட்டது.
9. ஏற்கெனவே இந்தியாவின் பருத்தி விவசாயத்தில் உள்ள பருத்தி விதையில் 96% மான்சான்டோவின் காப்புரிமை விதைகளாகவே உள்ளது. விவசாயத்தின் ஆணிவேராக இருக்கும் விதைகள் ஒரிரு விதை நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்வது இந்திய விவசாயத்திற்கு ஆபத்தானதாகும். மேலும் இப்படி இந்திய பருத்தி முழுதும் மான்சான்டோவின் பருத்தியாக மாறியதால், சுதேசியத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடி இன்று மான்சான்டோவின் பருத்திக் கொடியாக மாறிவிட்டது.
10. பி.ஜே.பி கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கைச் சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதை முழுமையான அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்த பின்னரே மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்,’ என்று உறுதியளித்திருந்தது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்தார். அவர் தனது வாக்குறுதியை செயல்படத்திக் காட்டியுள்ளார். பி.ஜே,பி. செய்யுமா?
11. ஆனால் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் மாண்புமிகு.பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் ஆழ்கிணற்று மௌனம் மரபணு மாற்றுப் பயிர்கள் வயல் வெளி சோதனைகள் பிரச்சனை குறித்து முந்தைய சுற்றுச் சூழல் அமைச்சர்களான திரு. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திருமிகு. ஜெயந்தி நடராஜன் அறிவு மற்றும் அறிவியல் பூர்வமாக அனுமதி அளிக்க மறுத்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட்ட கதி அவரது வாயை பூட்டிவிட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
12. இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பல்வேறு வயல் வெளி சோதனைகளின் போது அந்தச் சோதனைகளை நடத்திய விதமும் அதில் ஏற்பட்ட பல விதி மீறல்களையும் சுட்டிக் காட்டிய பின்னரும் மரபணு மாற்று அனுமதிக் குழு எவ்வித நடவடிக்கையும் தவறு செய்யதவர்கள் மீது எடுக்கவில்லை.
இது போன்ற பல காரணங்களால், அறிவியல் உண்மைகள் தெரிவிக்கும் அதிர்ச்சியான உண்மைகளால் இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு வயல் வெளி சோதனைகள் நடத்தவும், மரபணு மாற்றுப் பண்டங்களை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கக் கூடாதென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு.
தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.
பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு
தாளாண்மை உழவர் அமைப்பு,
ஐக்கிய விவசாயகள் சங்கம்,
இந்திய விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி,
தமிழக விவசாய சங்கங்கள்
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு
மற்றும் பல அமைப்புகள்.
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: சுற்றுச்சூழல்
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் விட, புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை தான் அதிகமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது என்றுஅறிவியல் அறிஞர்கள் மட்டும் அல்லாது ஐக்கிய நாட்டு அவைத் தலைவர்களும் தெளிவாகக் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
அண்டார்டிகா பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் உருகிக் கொண்டு இருந்த பனியின் அளவை விட, இவ்வாண்டில் உருகுதல் வேகம் இரு மடங்கு ஆகி இருக்கிறது என்று 2010ஆம் ஆண்டு ஏவப்பட்ட செயற்கைக் கோள் அனுப்பிய தகவல்களை ஆராய்ந்து அறிவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இதைப் பற்றி 20.5.2014 அன்று இலண்டனில் கருத்து கூறிய டேவிட் வாகன் (David Vaughan) என்ற அறிவியல் அறிஞர், இப்பனி உருகுதல் கடல் மட்டத்தை உயர்த்தும் என்றும் இதைத் தடுப்பதற்கு மனித குலம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
நேபாளத்தில் உள்ள பனிப் பாளங்கள் கடந்த 30 ஆண்டுகளில் 24% உருகி மறைந்து போய் உள்ளதாக, அந்நாட்டு பனிமலைப் பாளங்கள் பகுதியைப் பற்றி ஆராயும் அறிவியலாளர் சம்ஜ்வால் ரத்ன பஜ்ராச்சார்யா (Samjwal Ratna Bajracharya) 23.5.2014 அன்று காட்மாண்டுவில் கூறினார்.
புவி வெப்ப உயர்வினால் பனி மலைகளும், பனிப் பாளங்களும் உருகி, கடல் மட்டம் உயர்ந்து இருப்பதால், அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (National Aeronautics and Space Administration - NASA), விண் வெளி ஆராய்ச்சிக்காகக் கட்டிய கட்டிடங்கள் நீரில் அமிழ்ந்து கொண்டு இருப்பதாக 24.5.2014 அன்று அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதனால் கோடிக் கணக்கான அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன் படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.
இமயமலைப் பகுதி, புவி வெப்ப உயர்வினால் பாதிக்கப் படுவதைப் பற்றி ஆராயும் ஆர்த்தூர் லட்ஸ் (Arthur Lutz) எனும் அறிவியல் அறிஞரின் ஆய்வு முடிவுகள் 1.6.2014 அன்று திருவனந்தபுரத்தில் வெளியிடப் பட்டு உள்ளது. இமயமலை உருகுவதால் சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, சல்வீன், மெகாஸ் நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி உள்ளதாக அவ் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டு உள்ள, அறிவியல் ஆய்வுகளினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியக் கூடிய, இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன? இதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களும் தன்னார்வத் தொண்டர்களும் கூறி வருகிறார்கள். அப்படியே ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இது நல்ல பலனையும் அளித்து இருக்கிறது. மக்களிடையே புவி வெப்ப உயர்வு பற்றிய விழிப்புணர்வு பற்றி ஆராய்ந்த ஆற்றல் மற்றும் சாதன நிறுவனம் (The Energy and Resource Institute - TERI) 95%க்கும் அதிகமான மக்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்று இருக்கிறார்கள் என்று 4.6.2014 அன்று புது தில்லியில் தெரிவித்து உள்ளது. அவ்வாறு விழிப்புணர்வு பெற்ற மக்கள் புவி வெப்பத்தினால் உலகம் அழியாமல் பாதுகாப்பதற்கு எடுத்து உள்ள நடவடிக்கைகள் என்ன தெரியுமா?
உலகச் சுற்றுச் சூழல் நாளை 5.6.2014 அன்று கொண்டாடி இருக்கிறார்கள். அன்று சென்னையில் முதலாளியக் குழுமங்களும், அரசு ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்; மரக் கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். (அம்மரக்கன்றுகள் வளர்வதற்கும் நிலைப்பதற்குமான ஏற்பாடுகள் எதுவும் செய்து இருப்பதாக எந்த விமான தகவலும் இல்லை.) அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தில் 12,000 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் பாட்டு பாடி இருக்கிறார்கள். மும்பையில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புவி வெப்பத்தால் சுற்றுச் சூழல் எவ்வளவு கெடுகிறது என்று கணினிமயப் படுத்திக் கணக்கிடும் முறையை வடிவமைத்து இருக்சிறார்கள்.
யாரும் புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பது எப்படி என்றோ, ஏற்கனவே உயர்ந்து உள்ள வெப்பத்தை எப்படிக் குறைப்பது என்றோ விவாதித்ததாக (நினைத்ததாகக் கூட)த் தெரியவில்லை.
இன்று புவி வெப்ப உயர்வுப் பிரச்சினை ஏன் ஏற்பட்டு உள்ளது? கரி வளியை (Carbon di oxide) உமிழ்ந்து, புவி வெப்பத்தை உயர்த்தும் புகையை வெளியிடும் வாகனங்கள், ஆயுதங்கள் போன்ற பண்டங்களை அதிகமாக உற்பத்தி செய்வதாலும், கரி வளியை உள் இழுத்து உயிர் வளியை (Oxigen) வெளியிட்டு, புவி வெப்பத்தைக் குறைக்கும் மரம் வளர்த்தல் வேளாண்மை போன்ற தொழில்கள் நசிந்து வருவதாலும் தான். இந்நிலையை மாற்றி, புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கவும், புவி வெப்பத்தைக் குறைக்கும் பொருட்களின் உற்பத்தியை வெகுவாக அதிகரிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் ஏன் பேச / சிந்திக்க மறுக்கின்றனர்? ஏனெனில் இது அறிவியல் பிரச்சினை அல்ல; அரசியல் பிரச்சினை. அதுவும் ஒரு நாட்டு அரசியல் பிரச்சினை அல்ல. உலக நாடுகள் அனைத்துக்கும் பொதுவான அரசியல் பிரச்சினை.
புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்றால் முதலாளித்துவப் பொருளாதார முறையில் அது முடியவே முடியாது. ஏனெனில் அவை தான் மிகுந்த இலாபத்தை அளிக்கும் பண்டங்களாக உள்ளன. ஏற்கனவே உள்ள பொருளாதார நெருக்கடியால் முதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தும் தொழில்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வாகனங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை உறபத்தி செய்யக் கூடாது என்றால் மூலதனத்தை வைத்துக் கொண்டு முதலாளிகள் என்ன செய்வார்கள்?
அடுத்ததாக மரம் வளர்த்தலிலும் வேளாண்மையிலும் மூலதனத்தை ஈடுபடுத்த முடியுமா? அவற்றில் இலாபம் குறைவு என்பது மட்டும் அல்ல; பல சமயங்களில் அவை இழப்பை அல்லவா ஏற்டுத்தி விடுகிறது? அப்படிப்பட்ட தொழில்களில் மூலதனத்தை ஈடுபடுத்த முடியுமா?
அப்படி என்றால் தீர்வு இல்லவே இல்லையா? நிச்சயமாகத் தீர்வு இருக்கிறது. அது உலக அரசியல் மாற்றத்தில் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பது தீர்வின் முதல் கட்டம். நிகரமை (சோஷலிச) உற்பத்தி முறையை ஏற்பது இரண்டாவது கட்டம்.
முதலாளித்துவ உற்பத்தி முறையைக் காவு கொடுப்பதன் மூலம் புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் (அதாவது மனித குலத்தின் பெரும்பாமையோருக்குப் பயன்படாத, மிக மிகச் சில மனிதர்களின் அயாக்கியத்தனமான திடீர் ஆசைகளுக்குத் தீனி போடும் பொருட்களின்) உற்பத்தியைத் தடுத்து நிறுத்த முடியும். நிகரமை உற்பத்தி முறையை ஏற்பதன் மூலம் புவி வெப்பத்தைக் குறைக்கும் (மனித குலத்தின் பெரும்பான்மையோர் பசி பட்டினி இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான) பொருட்களை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும்.
இதை அறிவியல் அறிஞர்களால் செய்து முடிக்க முடியாது. மக்களால் தான் செய்து முடிக்க முடியும். இன்றைய முதலாளித்துவ அரசியலை ஒழித்து விட்டு சோஷலிச அமைப்பை உருவாக்குவதால் மட்டுமே அது முடியும். உலக மக்கள் அனைவரும் இத்திசையில் ஒன்றிணைய நாம் அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்கு இதைப் பற்றிய புரிதல் ஒன்றே போதுமானது. புவி வெப்பம் உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது; முதலாளித்துவ அமைப்பைக் காவு கொடுப்பதும் சோஷலிச அமைப்பை ஏற்பதும் தான் இப்பிரச்சினைக்குச் சரியான தீர்வு எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அடுத்த பணி ஆகும்.
- இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.6.2014 இதழில் வெளி வந்துள்ளது)
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
- வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
- உலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?