கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பெரம்பலூர் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தனது தேவைக்காக உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு நிலக்கரி கொண்டு ரூ. 210 கோடி மதிப்பில், 2x25 50 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் அமைப்பதற்க்கான கருத்துக் கேட்பு கூட்டம், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 20-05-2015 புதன்கிழமை அன்று பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் மதுசூதன ரெட்டி அவர்கள் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. ஆலையில் தினமும் 1100 டன் நிலக்கரியை பயன்படுத்தி 50 மெகாவாட் மின்உற்பத்தியை செய்வது, அதை எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை தனது தேவைக்காக மட்டுமே பயன்படுத்துவது என்பதற்கான மக்களின் கருத்தை அறியும் கருத்துக் கேட்பு கூட்டமாகும்.
முறையாக கூட்டப்படாத கருத்துக்கேட்பு கூட்டம்
* இந்த அனல்மின் நிலையம் அமைப்பது பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி ஆலையை சுற்றி பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் உள்ள நகரம்/ கிராமத்தில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு தெரிவிக்கப்படாததால், யாருக்கும் இந்த கூட்டம் பற்றியே தெரியவில்லை.
* இக் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி 17-04-2015 அன்று தினத்தந்தி, ஆங்கில இந்து பத்திரிக்கையில் செய்தியாக இல்லாமல், டெண்டர் விளம்பரம் போல் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது யாரின் பார்வைக்கும் செல்லவில்லை என்பதுதான் உண்மை நிலை. மேலும் அனல்மின் நிலையம் அமைப்பதற்க்கான சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்க நகல் ஊராட்சி/ பேரூராட்சி/ நகராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்க்கு எங்குமே மாசுக்கட்டுப்பாட்டு துறையால் அனுப்பி வைக்கப்படவில்லை.
* அரசு அதிகாரிகளால் பத்திரிக்கையாளர்களுக்கு கூட கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி யாருக்கும் முன்கூட்டியே தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.
· மேலும் கூட்டத்திற்க்கு வரும் முன்பே நாங்கள் விசாரித்ததில் ஆலைக்கு அருகில் உள்ள எந்த ஊராட்சி தலைவருக்கும் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் கூட்டம் பற்றிய தகவலும், சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்க அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அறிந்து கொண்டோம்.
· கருத்துக்கேட்பு கூட்டத்தை முறையாக கூட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
· இதை நாங்கள் அறிந்து கொண்டவுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் செய்தியை அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடக்கும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டத்தில் (18.05.2015) அன்று, குறைதீர் மனுவாக கருத்துக் கேட்பு கூட்ட செய்தியே மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் ; எனவே கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்து அரசு விதிப்படி முறையாக அறிவித்து பின்பு அதைக் கூட்ட வேண்டும் எனவும்; இப்பகுதியில் அனல்மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுவாக கொடுப்பது எனவும் முடிவு செய்தோம். இப்பணியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் தோழர்.ரமேஷ் கருப்பையா அவர்கள் ஒருங்கிணைப்பது என முடிவு செய்து, அவர் அனைவருக்கும் தகவல் கொடுத்தும், நேரில் சந்தித்தும் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
· 18.05.2015 திங்கட்கிழமை அன்று பல்வேறு சுற்றுசூழல் ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் , எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதி மக்கள், மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் என சுமார் 80 க்கும் மேற்பட்டோர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுவாக கொடுத்தனர்.
· இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இப்படி மனு கொடுத்ததால்தான், பல்வேறு பத்திரிக்கை/காட்சி ஊடக செய்தியாளர்களுக்கு இப்படி ஒரு கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் செய்தியே தெரிய வந்தது.
· இவர்கள் கொடுத்த மனுவால், அதிகாரிகளுக்கு “ திருடனுக்கு தேள் கொட்டியது போல்” ஆகியது. கருத்துக் கேட்பு கூட்டத்தை யாருக்கும் தெரியாமல் நடத்த முயற்சித்தது அம்பலமாகியது. குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தரேசு அகமது விடுப்பில் இருந்ததால் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு, “எங்களுக்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என நீங்கள் பாடம் நடத்த தேவையில்லை” என மனு கொடுத்த மக்களிடம் திமிராக, பொறுப்பற்று பேசினார்.
· ஆனால் சமூக ஆர்வலர்களின்/பொதுமக்களின் மனு கொடுத்தல் நிகழ்வு பல்வேறு நெருக்கடிகளை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியது. மனு கொடுத்த நாளிலேயே அவசர, அவசரமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சுற்றுசூழல் ஆர்வலர்களும், பொதுமக்கள் அனைவரும் பங்கு கொள்ளுமாறு ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டார். பாதிக்கப்படும் பகுதிக்குள் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பத்திரிகையில் வெளிவந்த கருத்துக் கேட்புக் கூட்ட விளம்பரத்தை நகல் எடுத்து ஒட்ட வைத்தனர். கருத்துக் கேட்பு கூட்ட நாளுக்கு முந்தைய நாள் இது பற்றி ஒரு துண்டறிக்கை போட்டு ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒட்ட வைத்தனர்.
· அனைத்து நாளிதழ்களும்/காட்சி ஊடகத்தினரும் சமூக ஆர்வலர்களின்/பொதுமக்களின் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிகழ்வுகளை விரிவான செய்தியாக வெளியிட்டனர்.
· தோழர். ரமேஷ் கருப்பையா உட்பட சுற்றுசூழல் ஆர்வலர்களின்/ சமூக ஆர்வலர்களின் முன்முயற்சியில் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரையும், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க்க அழைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும், பெரம்பலூர் நகர பல்வேறு சங்க (ரோட்டரி/அரிமா போன்ற) பொறுப்பாளர்களுக்கும் அனல்மின் நிலைய பாதிப்பை கூறி கூட்டத்தில் பங்கேற்க அழைத்தனர்.
· 2x25 50 மெகாவாட் திறனுள்ள அனல் மின்நிலையம் அமைப்பதற்க்கான 207 பக்கம் கொண்ட சுற்றுசூழல் அறிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்படவில்லை. எனவே இதை பெறுவதற்க்கு மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் அலுவலகத்திற்க்கு பலமுறை நேரில் சென்றும் கொடுக்காமல் அலைக்கழித்தனர். விடாப்பிடியாக நின்றுதான் அதைப் பெற முடிந்தது.
கருத்துக்கேட்பு கூட்ட வளாகத்தில் :
· பெரம்பலூர் மாவட்டம் எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை அமைந்துள்ள நாரணமங்கல ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. காலை 10.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கருத்துக் கேட்பு கூட்ட அரங்கத்திற்கு காலை 9.20 மணிக்கு நானும் தோழர்.ரமேஷ் கருபையாவும் நுழைந்தோம். அதற்குள் அங்கு 1996-இல் ஈழ தமிழினத்திற்க்காக தன்னையே தற்கொடையாக்கி இங்கு தமிழினஎழுச்சியை தூண்டிய முதல் தமிழகப்போராளி பெரம்பலூர் அப்துல்ரவூப் அவர்களின் தந்தையார் மரியாதைக்குரிய தோழர்.அசன் முகமது அவர்கள் முன்னரே வந்து இம்மண் காக்க காத்திருந்தார். அதன் பின் நரிக்குறவர் சமூக தலைவர்கள் தோழர்.சுப்பிரமணி, தோழர்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள் ஆண்களும், பெண்களுமாக சுமார் 250 பேர் வருகை தந்தனர்.
· பியூசிஎல்(PUCL) அமைப்பின் தமிழக பொருளாளர் தோழர்.சரவணன், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி தோழர். செல்வமணி, இந்திய பொதுவுடமைக் கட்சி மாவட்ட செயலாளர் தோழர். ஞானசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் தோழர்.துரைராஜ் , நதிநீர் பாதுகாப்பு கூட்டமைப்பு தோழர்.தமிழகன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் தோழர். செல்லதுரை, இந்திய ஜனநாயக கட்சி மாநில இளைஞரணி பொறுப்பாளர் ரகுபதி, தமிழ் மாநில காங்கிரசு மாவட்ட தலைவர் பெரம்பலூர் ராஜா, பாஜக மாவட்ட தலைவர் திரு.சந்திரசேகர், கொளத்தூர் ஆவாரை நண்பர்கள் இயக்கம் இளைஞர்கள் உட்பட, மாவட்டம் முழுக்க இருந்து பல்வேறு முற்போக்கு அமைப்பு தோழர்களும், இயற்கை ஆர்வலர்களும்,தகவல் தெரிந்த ஆலையால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராம விவசாயிகளும், பகுதி மக்களும் என சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்க்கு வந்திருந்தனர்.
· உண்மையில் அனல்மின் நிலைய திட்டம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசும், ஆலை நிர்வாகமும் யாருக்கும் தெரியாமல் நடத்தவே விரும்பினார்கள் என்பது அவர்களது நடவடிக்கையில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஆனால், நம்மால் பலருக்கும் முகநூல் உட்பட பல்வேறு வகையில் கூட்ட செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டதால், ஊடகத்தினர், சுற்றுசூழல் & விவசாய செயல்பாட்டாளர்கள், பல்வேறு முற்போக்கு அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பலரும் வந்து விட்டதால் அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்க்கும் கூட்ட தொடக்கத்திலேயே கடும் நெருக்கடி ஏற்பட்டது.
· பொதுவாகவே தமிழகம் முழுக்க பெரும்பாலான கருத்துக் கேட்பு கூட்டங்கள் இப்படித்தான் அதிகாரிகளால் ஆலைக்கு சாதகமாக நடத்துவது என்பது நடைமுறையாக இருக்கிறது.இதன் மூலம் பல அதிகாரிகள் மிகப்பெரும் பணப்பலன் உட்பட பல்வேறு பலன்கள் ஆலை நிர்வாகம் மூலம் அடைக்கின்றனர் என்பதும் அப்பட்டமான உண்மையாகும்.
· மேலும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கும் செய்தி அறிந்து, கூட்ட அரங்குக்கு முன்புறம் நாங்கள் வரும் முன்பே காவல்துறையினரும், உளவுத்துறையினரும் குவித்து வைக்கப்பட்டனர். அவர்கள் நடுவே நீந்தியே ஒவ்வொருவரும் கூட்ட அரங்கிற்கு வர வேண்டியதாகியது. கிராமப் பகுதி மக்கள் இவர்களை மிரட்சியுடன் பார்த்தவாறே கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்தனர்.
· கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வது என முடிவு எடுத்த பின் இணையத்தில் அனல்மின் நிலையத் திட்டம் பற்றி அதன் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு சுருக்க அறிக்கை அச்சு எடுத்து அதில் உள்ள பல்வேறு தவறான விபரங்கள் பற்றி சேகரித்துக் கொண்டேன். கூட்ட அரங்கிற்க்கு நேரில் வந்தவுடன் அங்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு விரிவான அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பெற்று அதில் உள்ள தவறுகளையும், ஆலை அமைவதினால் ஏற்படவிருக்கும் பல்வேறு பாதிப்புகள் பற்றியும் தொகுத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
· எங்களுக்கு ஏற்கனவே 2x800 மெகாவாட் திறனுள்ள இராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையம் பற்றி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அதன் பாதிப்பை தொகுத்து பேசி அத்திட்டதிற்க்கு நெருக்கடியை உருவாக்கியது; எங்கள் பகுதியில் பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை நிர்வாகம் தனது தேவைக்காக 40 மெகாவாட் மின்உற்பத்தியை 55 மெகாவாட் விரிவாக்க அனல்மின் நிலையம் அமைக்க நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக அப்பகுதியில் நேரில் சென்று மக்களிடம் பாதிப்பு விபரங்கள் சேகரித்து கூட்டத்தில் ஆதாரங்களுடன் பேசி முறியடித்தது; நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை சரசுவதி காகிதஆலை அனல்மின் நிலையம் அமைக்க நடத்த இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை எங்களின் பரப்புரையால் மக்களிடம் வலுவான எதிர்ப்பு இருக்கிறது என்பதற்காகவே, கூட்டதிற்க்கு முந்தைய கடைசி நாளில் அனல் மின்நிலையம் அமைக்க கொடுத்த விண்ணப்பத்தையே ஆலை நிர்வாகம் திரும்ப பெற்றது; நாமக்கல் மாவட்ட மாவுரெட்டிபட்டியில் ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க முயற்சித்ததை அப்பகுதி மக்களுடன் சேர்ந்து முறியடித்தது; மேட்டூர் பகுதியில் அனல்மின் நிலைய பாதிப்புக்களை பலநாட்கள் உடன் இருந்து அனுபவித்தது; செய்யூர் அனல்மின் நிலையத்தை எதிர்த்து சுற்றுசூழல் செயல்பாட்டாளர் தோழர்.நித்யானந்த் ஜெயராம் போன்றோரின் தொடர்ந்த செயல்பாடுகள், அது குறித்த அவரிடம் பெற்ற விபரங்கள்; என அனல்மின் நிலையத்தில் நடக்கும் பெரும்பாலான சட்டமீறல் செயல்பாடுகள் குறித்து தொகுத்த விபரங்கள் எங்களிடம் இருந்தது.
தொடங்கியது கருத்துக்கேட்பு கூட்டம்:
· அரசின் அறிவிப்பின்படி காலை 10.00 மணிக்கு அனைவரும் வந்து காத்துக் கொண்டு இருக்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேசு அகமது அவர்கள் கூட்டத்திற்க்கு வரவில்லை. அவர் ஏன் கருத்துக் கேட்புக் கூட்டதிற்க்கு வராமல் இருந்தார் எனத் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருடன் காலை 10.50க்கு கூட்ட மேடைக்கு வந்து அமர்ந்தார்.
· முதலில் கூட்டத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் காலத்தாழ்வாக வந்தது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் எதுவும் கூறவில்லை. மக்கள் தங்கள் பணிகளை எல்லாம் விட்டுவிட்டு வந்து ஒரு மணி நேரம் காத்திருந்தாலும், அது பற்றி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கினாலும், அதிகாரிகளின் அடிமைகள்தான் மக்கள் எனக் கருதும் மனநிலையே பெரும்பாலான அதிகாரிகளின் நிலையாக இருந்து வருகிறது. இதே போல்தான் நாமக்கல் மாவட்ட சேசசாயி காகித ஆலை விரிவாக்க கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் நடந்தது.
· கூட்டத்தில் முதலில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் மேடையில் ஏறிநின்றவுடன் எத்தனை பேருக்கு இந்த கூட்டம் எதற்க்காக நடக்கிறது எனத் தெரியும்? கையை தூக்குங்கள் என்றவுடன், கூட்டத்தில் இருந்தவர்கள் கைகளைத் தூக்காமல் நீங்கள் எங்களுக்கு சொல்லி நாங்கள் வரவில்லை என சத்தம் போட்டனர். உடனே DRO “நீங்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் இங்கு வராது” என சொல்லி மக்களுக்கு சார்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு அமர்ந்து விட்டார்.
· மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அனைவரையும் வரவேற்று அனல்மின் நிலைய திட்டம் பற்றி எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேசுவார் என அறிவித்தார். ஆலையை சார்ந்தோர் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுருக்கத்தை பவர் பாயிண்டு முறையில் காட்டி பேசி அமர்ந்தனர். உடனே பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மதுசூதன ரெட்டி இ.ஆ.ப. அவர்கள் வரிசையாக மக்கள் தனது கருத்துக்களை பதிவு செய்யக் கூறினார்.
உடனே நான்(முகிலன்) எழுந்து மேடைக்கு சென்று முதலில் பேசத் தொடங்கினேன்.
· முதலாவதாக, "சட்ட விரோதமான முறையில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்துகிறது. மாசுகட்டுப்பாட்டு வாரிய விதிப்பட்டி எந்த ஊராட்சியிலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை சுருக்கம் இன்று வரை அனுப்பப்பபட்டு அது அங்கு வைக்கப்படவில்லை. திட்டம் நிறைவேற்றும் பகுதியில், பாதிப்புக்கு உள்ளாகின்ற ஊராட்சி/பேரூராட்சி/நகராட்சி மன்ற தலைவர்களுக்கு கருத்துக் கேட்பு கூட்டம் பற்றிய தகவல் அரசால் அனுப்பப்படவே இல்லை. இதனால் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி ஆலையை சுற்றி பாதிக்கப்பட இருக்கும் 10 கி.மீ தூரத்தில் உள்ள 2 லட்சம் மக்களில் யாருக்கும் தெரியவில்லை.
நேற்று மாவட்ட ஆட்சியரின் பெயரில் வெளியிட்ட அறிக்கையில் கூட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அறிக்கை வைப்பது பற்றி எதுவும் குறிப்பிடவே இல்லை. இது மாசுகட்டுப்பாட்டு விதியை அப்பட்டமாக மீறுவதாகும். கருத்துக் கேட்புக் கூட்டத்திற்க்கு 30 நாட்களுக்கு முன்பே இது விதிப்படி அனைத்து அலுவலகத்திற்க்கும் அனுப்பப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்க வேண்டும். மக்கள் திட்ட அறிக்கை சுருக்கம் பற்றி அறிய பெரம்பலூர் வர முடியுமா? இவ்வாறு முறைப்படி, விதிப்படி எதுவும் செய்யாமல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது என்பது மிகவும் தவறானது ஆகும். இது பொதுமக்களும் , சமூக முன்னணியினரும் ஆலையின் செயல்பாட்டை தெரிந்து அதன் மீது கருத்து தெரிவிக்கும் உரிமையை மக்களிடம் பறிப்பது.
இது போல ஏற்கனவே முறையாக அறிவிப்பு செய்யாமல் கூட்டப்பட்ட திருவாரூர் 20 பெட்ரோலிய எரிகிணறு தோண்டுவதற்கான ஓ.என்.ஜி.சி. கருத்துக் கேட்புக் கூட்டம் (27-06-2014) மக்களின் எதிர்ப்பால் ஆட்சியர் மதிவாணன் அவர்களால் ரத்து செய்யப்பட்டது. உங்களுக்கு முன்மாதிரி இருப்பதால் முறையின்றி கூட்டப்பட்ட இக்கூட்டத்தையும் ரத்து செய்து, விதிப்படி மீண்டும் முறையாக அறிவித்து கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறினேன். உடனே மக்கள் “ கூட்டத்தை நடத்தாதே, ரத்துசெய்! என அனைவரும் முழக்கமிட்டனர். சிறிது நேரம் அங்கு மக்கள் மிகுந்த உணர்வுமயப்பட்டு சத்தம் போட்டனர். உடனே DRO எழுந்து “நான்தான் ஏற்கனவே நீங்கள் விரும்பாவிட்டால் இத்திட்டம் இங்கு வராது என சொல்லியுள்ளேன். அமைதியாக உங்கள் கருத்தை கூறுங்கள்” என கூட்டத்தை பல்வேறு வகையில் கூறி அமைதிப்படுத்தினார்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டமே அரசு விதிப்படி தெரிவிக்காமல், பல்வேறு சமூக ஆர்வலர்களின் முயற்சியால் வெளியே கொண்டு வரப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஏன் அதிகாரிகளின் செயல்பாடு மக்களுக்காக இல்லாமல் ஆலை நிர்வாகத்திற்க்கு சாதகமாக இப்படி தவறாக உள்ளது. தொடக்கமே இவ்வாறு இருந்தால் நாளை செல்ல செல்ல எவ்வாறு இருக்கும். சுற்றுசூழல் தாக்க அறிக்கை பற்றி எதுவும் தெரியாமல், நாளை ஆலை இயங்க தொடங்கினால் என்னஎன்ன பாதிப்புகள் இங்கே வரும், ஆலை நிர்வாகம் இதை எவ்வாறு சரி செய்யும், உண்மையில் இவ்வாறு செய்ய சாத்தியமா? என எதுவும் தெரியாமல்தான் மக்கள் கூடியுள்ளனர். எங்களைப் போன்றவர்களின் முயற்சியால் இங்கே கூடியுள்ள மக்கள் பொதுவாக ஆலை வேண்டாம் அல்லது வேண்டும் எனக் கூறுவார்களே ஒழிய பிரச்சினைகளை உணர்ந்து எதுவும் கூறப் போவதில்லை. மாவட்ட நிர்வாகம் அதற்கான வாய்ப்பை மக்களுக்கு உருவாக்கி தரவில்லை. இது ஒரு மாபெரும் அநீதி?. மக்களின் ரத்தத்தை வேர்வையாகி சிந்தி கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பின்றி இருப்பது எவ்வாறு சரியாகும், நியாயமாகும்?
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக சகாயம் அவர்கள் இருந்த போது, நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 2010களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி, ஆலையால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் பிளக்ஸ் தட்டி, சுவரொட்டி, துண்டறிக்கை ஆகியவை மூலம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது பற்றி அரசு பரப்புரை செய்வது போல் பரப்புரை செய்யப்பட்டது.இராமநாதபுரம் அனல்மின் நிலையக் கூட்டம் அவ்வாறு நடந்தது. இங்கு கூட அரசு ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்திருக்க முடியும். பல மாவட்டத்தில் இப்படி கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்ட முன்மாதிரி இருக்கிறது.
கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கான செலவுக்கு, ஆலை நிர்வாகம் அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை முன்கூட்டியே செலுத்தி விடுகிறது. அப்படியிருக்க அதிகாரிகள் ஏன் மக்களுக்கு கூட்டம் பற்றி தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை? எடுப்பதில்லை? வெறும் 2 பத்திரிக்கையில் ஒரு மாதம் முன்பு டெண்டர் நோட்டீஸ் போல் விளம்பரமாக கொடுக்கப்பட்டதை மட்டும் கூறி அதிகாரிகள் நியாப்படுத்துவது சரியா?. அன்றாடம் செய்திதாள் படிக்கிற, இம்மாவட்ட அதிகாரிகள் எத்தனை பேர் அந்த விளம்பரத்தை பார்த்து இருக்க முடியும்? வரும் காலத்தில் அதிகாரிகள் மக்களுக்கு விரோதமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
10 பக்கம் மட்டும் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு சுருக்க அறிக்கை மட்டுமே தமிழில் & ஆங்கிலத்தில் உள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 207 பக்கம் உள்ளது. இது முழுக்க, முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இது எத்தனை பேருக்கு புரியும். இங்கு வந்துள்ளவர்கள் பெரும்பாலான பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். அதிலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. ஆலை நிர்வாகம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த பணம் கொடுக்கிறது. ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையை தமிழிலும் கொடுக்க வேண்டும் என ஏன் மாசு கட்டுபாடு வாரியம் கேட்பதில்லை. தமிழக அரசு மட்டும் அல்ல, இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து இந்திய அரசு நிறுவனங்களும் தமிழில்தான் அனைத்தையும் கையாள வேண்டும் என இந்திய அரசு ஆணை(1986) பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்களான நீங்களே இதை பின்பற்றாமல் இருப்பது எப்படி சரி?.உண்மை மக்களுக்கு போய் விடக் கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளீர்கள் என நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்.
· இரண்டாவதாக, “திட்டதிற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை நிர்வாகம் எந்த ஒரு நிலையிலாவது ஒரு பகுதி தகவல்கள் பொய்யானதாகவோ, தவறான புள்ளிவிபரங்களோகொடுத்து இருந்தால் ஆலையின் திட்டம் நிராகரிக்கப்படும்” என மாசுகட்டுப்பாடு வாரியம் தனது விதியில் தெளிவாக கூறி உள்ளது.
ஆலையின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எண்ணற்ற தவறான தகவல்களும், புள்ளிவிபரங்களும் உள்ளது.
ஆலை வளாகத்தின் சுற்றுசூழல் நிலவரம் என்பதில் காகித ஆலையின் 10 கி.மீ தூர சுற்றளவு பகுதியில், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சமய முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம்; மலைகள் ஆகிய எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் தொல்பொருள் முக்கியத்துவமும், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாத்தனூர் கல்மரம் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. சமய முக்கியத்துவம் வாய்ந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் 2 கி.மீ தூரத்திலும் உள்ளது. ஆலையை சுற்றி 5 கி.மீ தூரத்தில் ரிசர்வ் ஃபாரஸ்ட் உள்ளது.
மேலும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அபாயகரமான சிகப்பு வகை ஆலை அமைக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டு ஆலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது.
மேலும் ஆலையை சுற்றியுள்ள பல ஊர்கள் காட்டப்படவே இல்லை. குறிப்பாக ஆலையை ஒட்டி உள்ள மலையப்ப நகர், நாரணமங்கலம் உட்பட பல ஊர்கள் இருப்பதும் அங்கு மக்கள் வசிப்பதும் காட்டப்படவில்லை. நாளை இந்த ஊர்கள் இல்லாமல் அழிந்து போய் விடும் என்பதற்க்காகவே குறிப்பிடப்படவில்லையா? ஆலையை சுற்றி எண்ணற்ற கல்லூரிகள் உள்ளன. அதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர், அது பற்றியும் குறிப்பிடப்படவில்லை.
ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களை கொடுத்தும், தகவல்களை மறைத்தும் உள்ளது. எனவே அமைவிடம் பற்றி கொடுத்துள்ள தவறான தகவல்கள் அடிப்படையிலேயே ஆலையின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.
· மூன்றாவதாக, எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையின் அனல் மின் நிலையம் தனது நீர் தேவையான நாளொன்றுக்கு கிட்டத்தட்ட சுமார் 4,00,000 லிட்டர் (நான்கு லட்சம் லிட்டர்- 383 KLD) நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெற்றுக் கொள்ளும் என தெரிவித்துள்ளது.
எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை ஏற்கனவே தனது தேவைக்கு தினமும் பத்து லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க காவிரி - கொள்ளிடம் ஆற்றில் போர் போட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் எடுத்து வருகிறது.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கர்நாடகத்தால் மதிக்கப்படாமல்தமிழகம் பல்வேறு நெருக்கடியில் உள்ளது. தற்போது கூட காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் என இரு இடங்களின் குறுக்கே கர்நாடகம் சட்ட விரோதமாக அணை கட்ட முயற்சிக்கிறது. இந்த அனல்மின் நிலைய திட்டத்துக்கான நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரியில் இருந்து பெற்றுதான் பயன்படுத்த வேண்டியது இருக்கும். காவிரியில் விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. காவிரியில் தண்ணீர் இல்லையென்றால் ஆலைக்கு அருகிலேயே ஆலை தரப்பினர் ராட்சச போர் போட்டு எடுப்பார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கும் எடுப்பார்கள். யார் இதை கண்காணிக்க முடியும். பெரம்பலூரில் ஏற்கனவே வாரம் ஒருமுறை குடிநீர் கிடைப்பது இரு வாரத்திற்கு இருமுறையாக மாறும். ஒரு நாள் கூட அனல் மின்நிலையம் தண்ணீர் இன்றி இயங்காமல் இருக்காது. எப்படியானாலும் இந்த ஆலைக்கு அரசும், அதிகாரிகளும் ஆலைக்கு தண்ணீர் கொடுப்பதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இப்பகுதியில் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும். ஆலையை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த திட்டத்தை இங்கு தொடங்க அரசு அனுமதிக்கக் கூடாது.
· நான்காவதாக அனல்மின் நிலையம் தினமும் 2,80,000 கிலோ லிட்டர் ஆலைக்கழிவு நீரையும், பாய்லர் வீழ்படிவு 1,20,000 கிலோ லிட்டரும் வெளியிடும். ஆலையின் கழிவு நீரை ஆலை நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்பது பற்றி எதுவும் சுற்றுசூழல் தாக்க அறிக்கையில் கூறப்படவில்லை. எனவே தினமும் லட்சக்கணக்கில் செலவு செய்து சுத்திகரிக்க வேண்டிய, இக் கழிவு நீரை எல்லா ஆலைகளையும் போல நிலத்திற்கு அடியிலேயோ, அல்லது ஆலையை சுற்றியுள்ள பகுதியில் ஏதாவது பொய்யை சொல்லி வெளியேற்றும்.
ஆலையின் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையம்,ஆர்.ஓ. பிளாண்ட் மூலமும் சுத்தப்படுத்தி ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் மட்டுமே செய்வதாக சொல்லியிருப்பதால், ஆலை தனது கழிவு நீரை மீண்டும் ஆலையின் மறுபயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவு நீரை இயந்திர ஆவியாக்கல், சூரிய ஆவியாக்கல் மூலம் ஆவியாக்கும் என குறிப்பிட்டு இருப்பதால் தினமும் ஆவியாகும் அளவுக்கு மட்டுமே மீண்டும் ஆலை தண்ணீர் பெற அனுமதிக்க வேண்டும்.
கடந்த ஜனவரி’18-ஆம் தேதி தமிழக சுற்றுசூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் ஈரோட்டில் பேசும் போது காவேரி ஆற்றில் இருந்து இனிமேல் பெருந்துறை சிப்காட்டிற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம். சிப்காட்டில் ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் அளவிற்கு தண்ணீர் சுத்திகரிப்பு நடப்பதால் இனிமேல் காவேரி ஆற்றில் ஆவியாகும் 10 சதவிகித தண்ணீர் மட்டுமே எடுக்கப்படும். சிப்காட் ஆலைகளுக்கு தனது கழிவுநீரை மட்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். எனவே சொந்தமாக சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ள அனல்மின் நிலையமும், ஆவியாகும் நீரை மட்டும்தான் தினமும் பெற அரசு அனுமதிக்க வேண்டும்.
· அய்ந்தாவதாக ஆலையால் 50 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது. இது அப்பட்டமான மோசடியாகும். அனல்மின் நிலையத்தில் வேலை செய்ய தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை. இப்பகுதி மக்களுக்கு உண்மையில் கழிப்பறை சுத்தம் செய்யும் ஒப்பந்தக்காரரிடம் மட்டுமே வேலை கிடைக்கும். ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் இப்பகுதியை சேர்ந்த தகுதி உள்ள, டயர் தொழிற்சாலைக்காக தனது நிலத்தை ஆயிரக்கணக்கான ஏக்கரை இழந்த குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு கூட ஆலையில் நிரந்தர வேலை கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே இப்பகுதியை சேர்ந்த சிலர் உள்ளனர்.
· ஆறாவதாக, அனல்மின் நிலைய பகுதியை சுற்றி மிகவும் குறைவான அடர்த்தியிலே மக்கள் வசித்து வருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது மிகவும் தவறான தகவலாகும்.
· ஏழாவதாக, அனல்மின் நிலையம் தினமும் 1100 டன் நிலக்கரியை எரித்து 88 டன் சாம்பலை மட்டுமே வெளியிடும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது 8% மட்டுமேயாகும்.
உண்மையில் வெளிநாட்டு நிலக்கரியாக இருந்தால் 15%மும், உள்நாட்டு நிலக்கரியாக இருந்தால் 20% - 25%மும் சாம்பலை வெளிபடுத்தும் என்பதுதான் உண்மை நிலை. EIA அறிக்கையில் உள்ளது 8 % சாம்பல் என்பது மிகவும் தவறான தகவலாகும்.
மேலும் தினமும் 1100 டன் நிலக்கரியை எரித்து, அனல்மின் நிலையத்தால் வெளியேற்றும் 88 டன் சாம்பலை (சுமார் 20 லாரி லோடு), திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஓலப்பாலயம் கிராமத்தில் உள்ள பச்சாம்பாளையத்தில்(S.F.No.1468/1) உள்ள ஸ்ரீ ஆண்டாள் அழகர் சிமெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஊரில் இப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை என்பதை அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். எதற்க்காக ஆலை நிர்வாகம் இல்லாத ஒரு தொழிற்சாலையின் பெயரை குறிப்பிட்டு உள்ளது. அனல் மின்நிலைய சாம்பலை இப்பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில், வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒரு பயன்பாடற்ற பாறைக்குழியில், பயன்பாடற்ற கிணற்றில் அல்லது ஏதாவது ஒரு காலி இடத்தில் கொட்டுவார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. பல இடங்களில் இப்படி நடந்து உள்ளது. எனவே தொடக்கத்திலேயே இதுபோல் தவறான தகவலைக் கொடுத்து ஏமாற்றும் இந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கவே கூடாது.
· எட்டாவதாக, ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையால், ஆலையை சுற்றியுள்ள பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. விளையும் பொருள்களின் மீது கரி படிந்து வருகிறது.கையில்செடியில் உள்ள தக்காளி உட்பட எதை தொட்டாலும் கை கரியாகி விடுகிறது. ஆலையை சுற்றியுள்ள பகுதியில் 45 அடி ஆழத்தில் தண்ணீர் தற்போது கிடைக்கிறது. கிணற்று பாசனத்தை வைத்தே நெல் உட்பட பல பல பயிர்கள் பயிரிடப்படுகிறது. அனல்மின் நிலையம் இயங்கத் தொடங்கினால் தினமும் வெளிப்படும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவு நீர், அபாயகரமான காற்று, நிலக்கரி எரிப்பதால் வெளியாகும் அபாயகரமான ரசாயனங்கள், ஆலையின் தேவைக்கு ரகசியமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் இவைகள் அனைத்தும் விவசாயத்தை அழிக்கும். பெரம்பலூர் விவசாய மாவட்டம், இந்த நிலை அழிக்கபட்டு பாலைவனமாகும். இங்கு வரக் கூடிய தொழில்கள் விவசாயப் பொருட்களை வைத்து உற்பத்தி செய்யப்படும் தொழிலாக இருந்தால் பரவாயில்லை. நீரையும், காற்றையும், மண்ணையும் விசமாக்கும் எந்த தொழிலும் இங்கு வர வேண்டாம். வளர்ச்சி என்று சொல்லி எங்கள் வாழ்க்கையை அழிக்காதீர்கள்.·
· ஒன்பதாவதாக, ஏற்கனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலை பாதுகாப்பு சுவரை சுற்றியுள்ள பகுதியில்தான் மலையப்ப நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் விளிம்பு நிலையில் உள்ள மக்களான நரிக்குறவர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மக்கள் நேயம் மிக்க அதிகாரியால் இங்கு குடிஅமர்த்தப்பட்டவர்கள். இங்கு தவிர இவர்கள் எங்கும் சென்று குடியிருக்க முடியாது. யாரும் இவர்களை அருகே வசிக்கவே விட மாட்டார்கள். இதுதான் சமூக எதார்த்தம்.
பழங்குடி மக்களான இவர்கள் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான விசத்தன்மை உள்ள ஆலை அமைப்பது என்பதும், ஆபத்தான கழிவுகளை வெளிவிடுவது என்பதும் 1989 SC/ST தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் வன்கொடுமைதடுப்பு சட்டப்படி குற்றமாகும். இப்படியான சட்டத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமையை அதிகாரிகளான நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன். வனவிலங்குகளுக்கான சரணாலயம் அமைக்க என பல்வேறு முயற்சி செய்யும் நீங்கள், மனிதர்களான இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை பாதுகாக்க உதவ வேண்டும்.
· பத்தாவதாக, அனல்மின் நிலையம் இங்கு அமையுமானால் காற்றின் மூலம் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை நாம் அவசியம் பார்க்க வேண்டும். இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் நிலக்கரியை எரிப்பதால் குறிப்பாக கடும் விசத்தன்மையுள்ள மெர்குரி(பாதரசம்). ஆர்செனிக், காடியம், குரோமியம், ஆண்டிமணி, ஸ்ரோண்டியம், யுரோனியம், ஈயம் என பல்வேறு உலோகங்களான ரசாயனப் பொருட்கள் காற்றின் மூலம் பரவும். இதனால் காற்று, நிலம், நீர், ஆகியவை விசாமாவதுடன் பயிர்கள், நுண்ணுயிர்கள், ஆடு, மாடு, பறவைகள் மற்றும் மனிதர்கள் அனைவருக்கும் கடும் நோய் ஏற்படும்.
இந்த திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் நிலக்கரியில் இருந்து வெளியேறும் பல்வேறு நச்சுப்பொருள்களால் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், எலும்பு நோய், மூளைக் கோளாறு, ரத்த சோகை, இதய ரத்தக் குழாய் நோய், மூக்கில் புண், சுவாசக் கோளாறு(ஆஸ்துமா), தோல்நோய், பிறவிக் கோளாறு&ஊனம், சிறுநீரகம் பாதிப்பு , ஈரல் பாதிப்பு , கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, குழந்தைகளின் நரம்பு-மூளையை தாக்கி குழந்தைகளின் அறிவு, கவனம் நடவடிக்கை கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரம்பலூரில் ஈரோடு, திருப்பூர் போல் திரும்பும் பக்கம் எல்லாம் மருத்துவமனையை பார்க்க நேரிடும். மகப்பேறு இன்மையால் மலடு நீக்கும் மருத்துவமனை பெருகும். சந்ததி இல்லாமல் பல குடும்பம் அழியும்.
இதில் குறிப்பாக, 40 டன் அனல் மின் நிலையத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் நாற்பது கிலோ கிராம் பாதரசம் (மெர்குரி) ஆவியாக வெளியேறும். பாதரசம் அடர்த்தி அதிகம் உள்ள தனிமம். இது உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் போது, அது கனமான உலோகமாக இருப்பதால் காற்றில் அதிக காலம் நீடிக்காமல் அதன் எடையின் காரணமாக நிலத்தில் அப்படியே படியும். 1கிராம் பாதரசம் சுமார் 25 ஏக்கர்பரப்பளவு நிலத்தை கடுமையாக பாதிக்கும். அப்படியே நிலத்தில் படியும் பாதரசம் மழை நீரின் மூலம் நீர் நிலைகளுக்கு சென்று கலந்து விடும். அதை உட்கொள்ளும் அனைவருக்கும் (கோழி உட்பட பறவைகள், நுண்ணுயிர்கள், ஆடு, மாடு உட்பட விலங்குகள், மீன், மனிதன் உட்பட) மெர்குரி உடனிலில் படியும். உயிரினங்களுக்கு உள்ளே செல்லும் மெர்குரி அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பல சிறிய உயிரினங்களை பெரிய உயிரினம் உட்கொள்ளும். அவ்வாறு உட்கொள்ளும் போது பெரிய உயிரினத்தின் உடலுக்குள் படியும் மெர்குரியின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். இது தொடந்தும் கொண்டே செல்லும் போது உணவுசங்கிலி தொடர்பின் உச்சத்தில் இருக்கும் உயிரினத்தின் உடலில், உயிரையே பறிக்கும் அளவு மெர்குரி படிந்து விடும். மேலும் இதனால் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் சிசுவிற்க்கும் அதிக அபாயத்தை விளைவிக்கும்.
· பதினொன்றாவதாக இங்குள்ள உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் புகையில் சல்பர் டையாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டைஆக்சைடு ஆகியவை இருக்கும். நிலக்கரியில் உள்ள கந்தகம் எரிக்கப்பட்டு சல்பர் டையாக்ஸைடு வாயுவாக வெளியேறுவதால் இப்பகுதியில் முழுக்க அமில மழை பெய்ய சாத்தியம் அதிகம் உள்ளது. சல்பர் டையாக்ஸைடு ஒரு பயங்கர நச்சு ரசாயனம். நைட்ரஸ் ஆக்ஸைடு தாவரங்களையும் , அதன் இலைகளையும் கடுமையாக பாதித்து விளைச்சலை கடுமையாக பாதிக்கும். தினமும் இந்த ஆலையில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு 2.60டன்கள் நைட்ரஸ் ஆக்ஸைடு வெளியேறும். மேலும் நைட்ரஸ் ஆக்ஸைடு , சல்பர் டையாக்ஸைடு மற்றும் ஓசோனுடன் கலக்கும் போது இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.
நிலக்கரியை எரிப்பதால் காற்று வளி மண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்க, அதிகரிக்க உலகின் வெப்பமயமாகுதல் அதிகரிக்கும். தமிழக அரசு ஒருபுறம் வெப்பமயமாகுதலைக் குறைக்க தமிழகமெங்கும் 68 லட்சம் மரங்களை நடுவது என தீவிரமாக இயங்கி வருவதாக சொல்லும் நிலையில் இது போன்ற கார்பன்டை ஆக்சைடு அதிகமாக வெளியிடும் ஆலைகளை திறக்க அனுமதி வழங்கக் கூடாது. வெப்பமயமாகுதல் அதிகரித்தால் மழை,புயல்,வறட்சி போன்றவைகளில் அதீத காலநிலைகள் தீவிரமாகும். பருவநிலை மாற்றத்தால் கடல் நீரோட்டம் மாறும். உலக வெப்பநிலை அதிகரிப்பால் பனிமலைகள் உருகத் தொடங்கும். வரும் 2100 ஆம் ஆண்டில் இமயமலையில் உள்ள 70% பனிஉருகி விடும் என்ற செய்திகள் வந்துள்ளன. இதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து பல நாடுகள் அழியவும், எண்ணற்ற பாதிப்புகளும் ஏற்படும்.
வெப்ப காற்றை, ஆலை வான்வெளியில் 85 மீட்டர் (சுமார் 300 அடி) உயரமான புகைபோக்கி(சிம்னி) மூலம் ஆலை வெளியிடும். இதனால் இப்பகுதியில் மேகங்கள் ஒன்றுகூட முடியாமல் மழை பொழிவது என்பது மிகவும் குறையும். ஏற்கனவே மழை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இம்மாவட்டம் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். விவசாய மாவட்டத்தில் விவசாயம் அழிந்தும், மக்கள் அகதியாக தனது நிலங்களை இழந்து வெளியேற வேண்டிய கொடுமை ஏற்படும். .
· பனிரண்டாவதாக, அனல்மின் நிலையத்தை எதிர்ப்பதால் நாங்கள் மின்சாரத்துக்கு எதிரியல்ல உலகம் முழுக்க அனல்மின்சாரம், அணுமின்சாரம் ஆகியன தவிர்த்து சூரிய மின்சாரம், காற்றாலை, கடலலை, இயற்கை கழிவுகளைக் கொண்டு மின்சாரம் என தனது நிலையை பல நாடுகள் மாற்றிக் கொண்டுள்ளது.
எனவே எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையானது தனது மின் உற்பத்தி தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே நிறைவு செய்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, தமிழக அரசு 3000 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய தீவிரமாக பல்வேறு முயற்சி செய்வதாக சொல்லி வருகிறது. மேலும் குஜராத்தை சேர்ந்த அதானி குழுமம் சூரிய மின்சாரம் உற்பத்தி நிலையம் அமைக்க என தமிழகத்தின் சங்கரன் கோவில் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை அரசு விவசாயிகளிடம் பிடுங்கி கொடுக்க முயற்சித்து வருகிறது. மேலும் நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சூரிய மின்சாரம் தயாரிக்க சிப்காட் விரிவாக்கம் என அரசு நிலத்தை எடுக்க முயற்சித்து வருகிறது. எனவே ஆண்டு முழுக்க நன்கு வெயில் கொளுத்தும் எம்.ஆர்.எப். ஆலையின் நிலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் இப்பகுதியில் பயன்பாடு இன்றி சும்மா இருப்பதாக ஆலை நிர்வாகமே கூறியுள்ளது. நாங்களும் நேரில் பார்த்தோம். இப்பகுதியில் சூரியமின்சாரம் வேண்டும் அளவு ஆலை தயாரிக்கட்டும். எனவே ஆலை தனது மின் தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே மின்சாரம் தயாரித்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். எம்.ஆர்.எப். ஆலை இயங்கும் கேரளா கோட்டயம் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்க வேண்டும் என ஆலையால் முதலில் பேச கூட முடியுமா? இளித்தவாயர்கள் தமிழர்கள்தானா?
· பதிமூன்றாவதாவதாக, ஆலையை வைத்து உலகம் முழுக்க 65 நாடுகளுக்கு டயர் ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ருபாயை லாபம் ஈட்டியுள்ள இந்த எம்.ஆர்.எப்.நிறுவனம், ஏற்கனவே 5 ஆண்டுகளாக டயர் ஆலை இயங்கி வரும் இப்பகுதியில் மக்களுக்கு செய்த நன்மை என்ன? எண்ணற்ற அழிவுகள்தான் மிச்சம். மக்களுக்கு எண்ணற்ற புதிய நோய்களை, சூழல் பாதிப்புக்களை, ஏற்படுத்தி உள்ள கடுமையான மாசுபடுத்தலை, இனிமேலாவது ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் மிகுந்த கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை ஊர் வாரியாக ஆய்வு செய்து, தகுந்த சிகிச்சையை ஆலையின் மூலம் அரசு செய்ய வைக்க வேண்டும்.
மேலும் டயர் ஆலையின் இருந்து வெளியேற்றப்படும் 4 லட்சம் லிட்டருக்கு மேலான கழிவு நீர் சுத்திகரிப்பில், வெளியேறும் ஆபத்து விளைவிக்கும் பல்வேறு வாயுக்களை கையாள்வதில், ஆலையில் வெளிவரும் திடக்கழிவுகளை கையாள்வதில் விதிப்படி இல்லாமல் பல்வேறு குளறுபடிகளும், அதனால் பல்வேறு பாதிப்புகளும் மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் ஏற்பட்டு உள்ளது. டயர் ஆலையால் இப்பகுதியில் ஏற்கனவே காற்று, நீர், மண், ஆகியவை பாழ்பட்டு, மாசுபட்டு வருகிறது.
· பதினான்காவதாவதாக, இந்த மக்கள் விரோதமான, சட்ட விரோத அனல்மின் திட்டத்தை இங்கு கொண்டு வந்து, இங்கு அறிக்கையில் கூறி உள்ளது போல் சுற்றுசூழல் பாதிப்பின்றி இந்த ஆலை செயல்படும் என ஆலை நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் கூறுகின்றனர். இங்குள்ள மக்களுக்கு இந்த அனல்மின் திட்ட பாதிப்பு தெரியாது. எங்களுக்கு நன்கு தெரியும். இந்த பகுதி மக்களை தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் இயங்கும் சுமார் 30 இடங்களில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று இதோ பாதிப்பில்லாமல் ஆலை இயங்குகிறது பாருங்கள்... நாங்கள் இப்படிதான் இங்கு செயல்படப் போகிறோம் என சொல்லத் தயாரா? உங்களால் முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. அப்படிக் நீங்கள் காட்டத் தயார் என்றால் நாங்கள் உங்களை ஆதரித்து இப்போதே கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறோம்.
இந்த மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள சாயப்பட்டறையால்தான் காவிரியின் துணை நதி நொய்யல் ஆறு செத்த நதியாக மாறியது. வேலூர் தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாலானது. தமிழகம் முழுக்க ஆலை இருக்கும் பகுதியெல்லாம் மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வரிப் பணத்தில் படித்து, மக்கள் உழைத்துக் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள், மக்களுக்கு நேர்மையாக இல்லாமல் ஆலை நிர்வாகத்திற்க்கு விசுவாசமாக இருப்பது அறமா? “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோவென்று போவான்” என சொல்வார்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகளின், ஆலை நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடு அப்படித்தான் உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இன்று இங்கு கூட்டி நடத்திய கருத்துக் கேட்பு கூட்டம் என்பது முழுக்க, முழுக்க சட்டவிரோதமானதும், ஜனநாயக விரோதமானது ஆகும். ஆலைக்கு ஒரு பக்க சார்பாக செயல்பட எண்ணியே இக்கூட்டம் முறையற்று கூட்டப்பட்டு உள்ளது. இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எங்கள் மூலம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்., இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்து, கூட்டம் குறித்து அனைத்துப் பகுதி மக்களுக்கும் கலந்து கொள்ளும் வகையில் அறிவிப்புக் கொடுத்து மீண்டும் கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்
எக்காரணம் கொண்டும் அனல்மின் நிலைய ஆலைக்கு அனுமதி அளிக்காமல் இந்த திட்டத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். காவிரியை போர் போட்டு சுரண்டாமல் பாதுகாக்க வேண்டும். ஆலைக்கு அனுமதி அளித்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது ஆலையை தடுப்போம்”. எனப் பேசி முடித்தேன்.
கருத்துக்கேட்பு கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பூவுலகு ரமேஷ் கருப்பையா பேசியது:
· இந்தத் திட்டத்தில் தற்போதுதொடங்கப்படும் 50 மெகாவாட் மின்சார உற்பத்தி என்பது படிப்படியாக 500 மெகாவாட் ஆக மாறும். இதனால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டியது இருக்கும். ஆலையின் உற்பத்தியில் ஒரு மெகாவாட் கூட மக்களுக்கு வராது. ஆலைக்கு மட்டுமே பயன்படும்
· இந்த திட்டத்திற்காக இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரப்படவுள்ளது. நாள் ஒன்றுக்கு 1,100 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதனை கொண்டுவருவதற்க்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் இரவு பகலாக வரும். நிலக்கரி லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் போதே அதில் உள்ள நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும். இது பற்றி எதுவும் அறிக்கையில் கூறப்படவில்லை.
· நிலக்கரியை எரிக்கும் போது வெளியாகும் கதிர் வீச்சிற்கு மக்கள் தொடர்ந்து ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது.
· ஆலையை சுற்றி 5 கி.மீ தொலைவில் மூன்று காப்புக்காடுகள் (Reserve Forest) உள்ளது. இது கிழக்கு தொடர்சிமலையை சேர்ந்தது. இதில் உற்பத்தியாகும் நீர்தான் மருதையாற்றுக்கு செல்லும். வரும் காலத்தில் இந்த நீர்வழிப் பாதையை ஆலை நிர்வாகம் அழிக்கும். இதுபற்றி எதுவும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
· ஆலையை சுற்றி எண்ணற்ற ஏரி, குளங்கள் உள்ளது இது எது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இவை அனைத்தும் அழியும்.
· பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்காக 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவது முறையல்ல.
· இந்த திட்டத்தின் மூலம் வெளியாகும் சாம்பலால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
· இந்த திட்டத்திற்காக வழங்கும் தண்ணீரை இந்தப் பகுதியைச் சேர்ந்த 20,000 பேருக்கு வழங்க முடியும். பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் பெரம்பலூரில் வாரம் ஒரு முறை தண்ணீர் கிடைக்கும் நிலையில் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக தண்ணீரை எப்படி வழங்கலாம். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
· ஏற்கனவே டயர் ஆலை அமைக்கும் போது, வரும் காலத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் திட்டம் உள்ளது என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. இப்போது வரை கோடி கோடியாக வருமானம் ஈட்டும் ஆலை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதை நடைமுறைபடுத்தாமலேயே உள்ளது. எனவே ஆலை சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்துகிக் கொள்ளட்டும்.
மேலும் அவர்களின் திட்ட அறிக்கையில் இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் 25 மெகாவாட் மின்சாரத்தை எம்.ஆர்.எப். ஆலையின் பிற யூனிட்டுகளான திருவெற்றியூர், அரக்கோணத்திற்கு கொண்டு செல்வோம் என கூறியுள்ளது. எந்த காரணம் கொண்டும் இந்த பகுதி மக்களின் வாழ்க்கையை அழித்து இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை , அவர்களின் திருவெற்றியூர், அரக்கோணத்தில் உள்ள எம்.ஆர்.எப். ஆலைக்கு தரும் முயற்சியை அனுமதிக்கவே கூடாது.
· இந்த டயர் தொழிற்சாலைக்கு தேவையான நிலங்களை வாங்கிய போது, இங்குள்ள விவசாயிகளின் குடும்ப நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை. ஒரு சிலருக்கு கூலி வேலை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியான மலையப்பன் நகர் நரிக்குறவர் சமூக மக்கள்இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் பேசினார்கள்.எங்களுக்கு ஆலையின் எந்த பாதிப்பும் தெரியாது. ராமேசு கருப்பையா போன்றவர்கள் எங்கள் ஊரில் தெரிவித்ததால்தான் இந்தக் கூட்டத்திற்க்கு வந்தோம். இங்கு வந்து எங்களுக்கு முன்னாள் பேசிய முகிலன் போன்றவர்களின் பேச்சால்தான் ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டோம். நாங்கள் இதுவரை நோய் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து வந்தோம். மருந்து சாப்பிடுவதோ, ஆசுபத்திரிக்கோ போனதில்லை. டயர் கம்பனி வந்ததில் இருந்துதான் எங்களுக்கு நோய் வரத் தொடங்கி விட்டது. பலரும் நோய் வந்து சாகத் தொடங்கி விட்டனர். ஊரூராய் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த நாங்கள் இப்போதுதான் நிலையாக மற்றவர்களைப் போல வாழ்ந்து வருகிறோம். எங்கள் வாழ்க்கையை அழிக்கும் இந்த ஆலை வந்தால் நாங்கள்தான் முதலில் பாதிப்போம். இதை விரட்ட எந்தவகையான போராட்டமும் நடத்துவோம். சாவைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என ஆவேசமாக பேசினர்.
அதன் பின்பு பலரும் பல்வேறு பாதிப்புக்களை முன் வைத்து கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசினார்கள். பேசிய அனைவரும் ஆலை இங்கு வரக்கூடாது என ஆணித்தரமாக முன் வைத்தனர். ஆலையை ஆதரித்து ஒருவர் கூட பேசவில்லை காலை10,50 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் 03.00 மணியளவில் முடிந்தது.
முடிவில் உதவி கலெக்டர் மதுசூதனன் ரெட்டி பேசுகையில், “இந்த அனல்மின் ஆலை திட்டத்தின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்களும் தெரிவித்த கருத்துகள் மத்திய,மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த திட்டம் தொடங்க முடியும். திட்டம் தொடர்பாக மறு கூட்டம் நடத்துவது தொடர்பாக பின்னர் பரிசீலனை செய்யப்படும்” என தெரிவித்து முடித்தார்.
சட்டவிரோதமான முறையில் கருத்து கேட்புக் கூட்டம் ஒன்று நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அனல் மின் நிலைய பாதிப்புகளை விளக்கியும் மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்புரை செய்யவும், சட்டரீதியாக ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டரீதியான வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இயற்கையை பாதுகாப்போம்! மனிதகுலத்தை விடுவிப்போம் !!
- விவரங்கள்
- சு.தளபதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியாவின் குப்பைத் தொட்டி எங்கு உள்ளது என்ற கேள்விக்கு டெல்லிக்காரர்களின் ஆட்சி கை காட்டும் மாநிலம் தமிழ்நாடு என்பதுதான். ஏற்கனவே தமிழகம் முழுக்க பிரச்சனைகளின் உச்சத்தில் இருக்க கூடங்குளம், கெயில், மீத்தேன், ஆற்று மணல் கொள்ளை, தேரிக்காடு கடற்மண் கொள்ளை என இந்த வரிசையில் சமீபத்தில் வர இருப்பதுதான் தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூடம். இது தமிழ்நாடு குப்பைத் தொட்டியாக ஆக்கப்படுவது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் பரிசோதனை எலிகளாகவும் மாற்றப்படவிருக்கிறார்கள் என்பதையே உறுதி செய்கிறது.
உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல்களால் எல்லா இயற்கை வளங்களையும் பறிகொடுத்து நிற்கும் தமிழ்நாடு, இனிமேல் கூடங்குளம் அணு உலை போன்று தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூட ஆபத்துக்களையும் தாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
ஒருபுறம் அறிவாளிகள் இந்த ஆய்வகத்தால் எந்த துன்பமும் ஏற்படாது என்று வீதிவீதியாக, கல்லூரிகள் தோறும் கூவிக்கொண்டிருக்க மறுபுறம் அப்பாவிகளான ஏழை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆய்வகத்தை வரவிடமாட்டோம் என்று கொடி உயர்த்த பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் அரசின் தரப்பிலிருந்து ஒரு சிறிய அசைவுகூட இல்லை. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிபிஎம்மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 12 பேர் மீது அரசை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் போட்டிருக்கிறது காவல் துறை.
என்ன நடக்கிறது தேவாரம் பொட்டிபுரத்தில்? நியூட்ரினோ ஆய்வகம் அமைவதில் என்ன பிரச்சனை?
தேவாரம்… பொட்டிபுரம்.. மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஊர். வனப்பகுதிகள், சுருளியாறு மற்றும் சுருளி அருவி ஆகியவை இவ்வூரைச் சுற்றி உள்ளன. போடி நாயக்கனூர், கம்பம் அருகில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்து வாழும் மலைப்பாங்கான, ஏலம், கிராம்பு, தேயிலை, காப்பி முதலான பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கக் கூடிய பகுதி.
இந்தப் பகுதியில் ஒரு மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் என்று 2010ல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் அறிவியயல் ஆராய்ச்சியாளர்களும் அரசும் முடிவு செய்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்குகிறது. இந்த ஆய்வகம் தேவாரம் பகுதியின் சுற்றுச்சூழலை தலை கீழாகப் புரட்டிப் போட்டுவிடும் என அப்பகுதிவாழ் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்ட, இல்லவே இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகளும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல்
உண்மையில் நியூட்ரினோ என்றால் என்ன?
இதற்கு விளக்கம் சொல்ல அடிப்படையிலிருந்தே வருவோம்.
இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை. ஒரு பொருளை சிறியதாக பகுத்துக் கொண்டே போனால் அதற்கு மேல் (உடைத்து) பகுக்க முடியாததே அணுவாகும். இது 19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் அணுக்கொள்கை. ஆனால் அதற்குப் பின் ரூதர்போர்டு போன்ற அறிவியலாளர்கள் அணுவையும் பகுக்க முடியும் என்றும், அந்த அணு வெளிப்புறம் எலக்ட்ரான்(-) என்ற துகள்களாலும் உட்கருவில் புரோட்டான் (+) மற்றும் நியூட்ரான் என்ற துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர்.
பின்னர் வந்த அறிவியலாளர்கள் அணுக்களைப் பிளப்பதன் மூலமோ அல்லது இணைப்பதின் மூலமோ மாபெரும் சக்தி உண்டாகிறது எனக் கண்டறிந்தனர். அந்த சக்தி எக்ஸ்ரே, புற்றுநோயை குணப்படுத்த உதவும் கதிர்கள். மின் தயாரிப்பு முதலிய ஆக்க வேலைகளுக்கும், அணு குண்டு, நியூட்ரான் குண்டு தயாரிப்பு முதலிய அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.
1930ஆம் ஆண்டு உல்ப் கேங் என்ற அறிவியலாளர், அணுவில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் மட்டுமல்லாது வேறு சில துகள்களும் இருக்கலாம் என ஊகித்தறிந்தார். இத்தகைய துகள்களுக்கு நியூட்ரினோ எனப் பெயரிடப்பட்டது. பெயரிடப்பட்ட 26 ஆண்டுகள் கழித்து 1956ல் நியூட்ரினோ துகள் உண்மையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின் நியூட்ரினோ அறிவியல் குறித்தும் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நியூட்ரினோ துகளின் வேகம் ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாலும் இதன் எடை மிகக் குறைவாகவும், இதன் வினையாற்றல் திறன் மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக ஊடுருவிச் செல்லும் என்று கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பூமியின் ஒருபுறம் ஊடுருவும் இந்த நியூட்ரினோ துகள் எந்தப் பாதிப்புமின்றி மறுபுறம் வெளிவரத்தக்கது என்பதுவும் கண்டறியப்பட்டது.
பூமிக்கடியில் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் மற்ற துகள்களை வடிகட்டி இந்த நியூட்ரினோவை மட்டும் கண்டறிய முடியும்.
இத்தகைய சிறப்புத் தன்மைகள் கொண்ட நியூட்ரினோ துகளை மனித சக்திக்குள் வசப்படுத்த முடியுமா? என்ற நோக்கத்தில் குறைந்தபட்சம் அவற்றைக் கண்டுணர்ந்து, அவற்றின் பண்புகளை ஆராய முடியுமா என்ற ஆய்வுகளே தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவரை மனித குலத்திற்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஒரு ஆய்வுக்கூடம் தான் தேவாரம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருக்கிறது அரசு. அங்கு சூரிய ஒளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் அணுக்களை பிளந்து அவற்றிலிருந்து வரக்கூடிய நியூட்ரினோ துகள்களை பூமிக்கடியில் உள்ள மின்காந்த ஏற்பிகள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு.
சரி அதிலென்ன பிரச்சினை? அறிவியல் வளர்வதிலோ, ஆய்வகம் அமைப்பதிலோ, ஆராய்ச்சிகள் நடப்பதிலோ நமக்கு எதிர்க்கருத்து இல்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக் கூடம் பூமியின் மேற்பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சினை உருவாகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க தேவாரம் பகுதியில் உள்ள மலையைப் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் இதற்கான கருவிகளை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு INO (India based neutrino observatory) (ஆதாரம் : Indian based neutrino observatory, FAQ MINO, www. imsc.ves.in/ino/faq/ino.info.pdf)
இவ்வாறு மலையைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி அதில் ஆய்வுக்கூடம் அமைக்க வடக்கே இமயமலையில் டார்ஜிலிங், மணாலி, ரோத்தால் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டு பின் நீலகிரிக்கு தள்ளப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின் சுருளிக்கு விரட்டப்பட்டு அங்கும் வனத்துறை எதிர்ப்புக்குப் பின் தேவாரம் பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளது.
1965ல் இம்மாதிரியான ஆய்வுகள் கோலார் தங்கவயலில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கத்தில் வைத்து நடத்தப்பட்டன. பின் சுரங்கம் மூடப்பட்ட பின் அப்படியே நின்று போய்விட்டன (project report – www.imsc.ves.in/ino Open report - interim report pdf)
உலகில் இது போன்ற ஆய்வுக்கூடங்கள் இந்தியா தவிர கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி முதலிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் கனடா, அமெரிக்காவில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்தினர். ஜப்பான், இத்தாலியில் பாலை மற்றும் மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளைப் பயன்படுத்தினர்.
இந்த ஆய்வரங்கம் அமைவதில் மக்களுக்கு என்ன இடர்ப்பாடு ஏற்படும் என்பதை அறிய, அதன் கட்டுமானத்திட்டத்தை ஒருமுறை நாம் உற்று நோக்கினால் போதுமானது.
ஆய்வுக்கூட கட்டுமானத்திட்டம்
சுரங்கத்தின் விட்டம் - 20 அடி முதல் 100 அடி வரை
சுரங்கத்தின் நீளம் - 2 கிலோ மீட்டர்.
அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம். (உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும்.)
வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு – 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி
தேவைப்படும் நீர் - ஒரு நாளைக்கு 3,50,000 காலன்கள்
மின்சாரத் தேவை – அறிவிக்கப்படவில்லை.
இக்கட்டுமானத்திற்குத் தேவையான சிமிண்ட், மணல் சுமார் - 37,000 டன்.
இந்த ஆய்வகத்திற்கான நீர்த்தேவை 30 கி.மீ. தள்ளியள்ள சுருளி ஆற்றிலிருந்து (முல்லைப் பெரியாறு) எடுத்து நிறைவு செய்யப்படும்.
இவை போக இந்தக் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தேவாரம் நகருக்குள் வந்து போக வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நீண்ட நாள் அடிப்படையில் இந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்படும். அதுவரை இப்பகுதியிலேயே அவை இருக்கும்.
ஆய்வுக் கூடத்தின் உள்ளே கதிரியக்கம் உருவாக்கக்கூடிய கனிமங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஹீலியம், ஆர்கான் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயமான வளிகள் பயன்படுத்தப்படும்.
பக்கத்துவீட்டில் 6 அங்குல (அரை அடி) விட்ட போர் போடப்படும் போது ஏற்படும் அதிர்வால் நம்மால் தூங்க முடிவதில்லை என்பது நடைமுறை. ஆனால் இத்தகைய பெரிய கட்டுமானத்தால் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபடுதலோ, இடர்ப்பாடுகளோ அப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.
நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்.
கட்டுமானப் பணிகளின் போது:
காரணி 1 : சுற்றுச் சூழல் சீர்கேடு
இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்திற்காக பாறைகள் வெட்டி எடுக்கப்படும் போது ஏற்படும் தூசு, சுற்றுச் சூழல் மாசு. அதனால் ஏற்படும் அதிர்வுகள். இச்சுரங்கம் தோண்டுவதற்கு 1000 டன் ஜெலட்டின் வெடிபொருள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகள்.
வெடி வைக்கப்படும் போது மிக அருகில் உள்ள இடுக்கி அணை மற்றும் பெரியாறு அணையில் ஏற்படும் விளைவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த ஆய்வகத்தை நிறுவ 37000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால் ஏற்படும் சூழல் சீர்கேடு இந்த கட்டுமானப் பொருள்களை ஏற்றி இறக்கச் செல்லும் சுமார் 160 கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் ஒலி மாசு மற்றும் தூசு.
ஏற்கனவே நீலகிரிப் பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்ததின் காரணங்கள் அப்படியே தேவாரம் பகுதிக்கும் பொருந்தும்.
நீலகிரியைப் போலவே தேவாரம் பகுதியும் வனச்செறிவான பகுதியாகும். வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் உயிர்ச்சுழற்சி இதனால் பாதிக்கப்படும்.
காட்டு வளங்கள், மூலிகை வளங்கள், ஏல விவசாயம், அவற்றிற்கான நீராதாரங்கள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகும்.
காரணி-2: நிலநடுக்கப்பகுதி
தேனி மாவட்டம் நிலநடுக்க வட்டத்திற்குள் இருக்கும் பகுதி. பொட்டிபுரம் மலை மேற்குத் தொடர்ச்சிமலையின் பிரிவு. ஏற்கனவே நூற்றுபத்து ஆண்டு பழமையான முல்லைப்பெரியாறு அணை நிலநடுக்கம் வந்து இடியும் என்று கேரளம் வாதாடிக் கொண்டிருக்க இச்சுரங்கம் அமையும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படாது என்று ஐ.என்.ஒ. குழு அடித்துச் சொல்கிறது.
30 கிலோ மீட்டர் தொலைவில் இடுக்கி அணையும், முல்லைப் பெரியாறு அணையும் இருக்க இவ்வளவு பெரிய சுரங்கத் துளை அமைப்பதால் என்னென்ன இடர்கள் ஏற்படும் என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.
காரணி-3: நீரியல் பூகம்பம்
பெரிய பரப்பில் 7,50,000 கன அடி பாறைகள் பெயர்த்தெடுக்கப்படும்போது இப்பகுதியில் உள்ள நீர் அடுக்குப் பகுதிகள் நிலைகுலைந்து நீரியல் பூகம்பம் ஏற்படும் ஆபத்து உள்ளது என பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதற்கு முன் உதாரணமாக இத்தாலியின் இரன்காசோ ஆய்வகம், அப்பகுதியிலுள்ள நீரடுக்குகளை நிலைகுலையச் செய்து அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், நீர் மாசுபடும் நிலையையும் ஏற்படுத்தியது.
கட்டுமானம் முடிவடைந்தபின்
காரணி-4: நீர்ப்பயன்பாடு
இந்த ஆய்வுக்கூடத்திற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. சுருளி மற்றும் முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் சொற்ப தண்ணீரையும் இவர்கள் உறிஞ்சிக் கொண்டால் மக்களுக்கு குடிதண்ணீருக்கும், விவசாயத்திற்கும் எங்கு போக?
காரணி-5: கதிரியக்கம்
எதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்தும், சப்பானிலிருந்தும் செயற்கை நியூட்ரினோ கற்றைகள் இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.
இயற்கையான நியூட்ரினோக்களைவிட பன்மடங்கு அதிகமான ஆற்றலைக் கொண்ட இந்த செயற்கை நியூட்ரினோக்கள் மாபெரும் கதிர்வீச்சு அபாயமுடையவை. இவற்றை தேவாரத்திற்கு அனுப்பி வைக்கும்போது நிகழும் பாதிப்புகளுக்கு தேவாரம் மக்கள்தான் பலிகடாவா?
காரணி-6: அணுக்கழிவு புதைப்பு
இவையெல்லாம் போக இந்திய அணு உலைகளின் அணுக்கழிவுகளை இங்க பெற்று சேகரப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்த ஆய்வகத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரிய போது அணுக்கழிவு மேலாண்மை என்றுதான் அனுமதி கேட்டுள்ளனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.
காரணி-7: மக்கள் வாழ்க்கை முடக்கம்
ஆய்வுக்கூடம் அணு ஆய்வகமாக இருப்பதால் பாதுகாப்பிற்காக என்ற பெயரில், மக்களின் சுதந்திர நடமாட்டம் முடக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை முறை முடமாக்கப்படும். இந்த ஆய்வுப்பணி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் மேலும் 4 முதல் 5 கி.மீ. இந்தச் சுரங்கம் ஆழப்படுத்தப்படலாம். அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை மறுபடியும் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.
இப்படி இவ்வளவு இடர்ப்பாடுகளை தேவாரம் பொட்டிபுரத்து மக்கள் ஏன் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு சில தியாகங்களை மக்கள் செய்யத்தான் வேண்டுமாம். ஆனால் அதுவும் உண்மையில்லை என்று அறிய வரும் போதுதான் வேதனை பலமடங்கு அதிகரிக்கிறது.
உண்மையில் இது இந்தியாவின் சுதேசித்திட்டம் அல்ல. Indian Neutrino Observatory அல்ல. India based Neutrino observatory. அதாவது அமெரிக்காவின் நியூட்ரினோ ஆய்வகமான பெர்மி லேப் (Fermi lab) நிறுவனத்தின் சோதனைகளுக்கு உதவி செய்யும் ஓர் உணர் ஆய்வகம். இங்கு அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளின் ஆய்வுக் கூடங்களிலிருந்து நியூட்ரினோ கற்றைகள் தேவாரத்திற்கு அனுப்பப்படும் இந்த உண்மைகளை மறைக்கும் அறிவாளிகள் தம் சொந்த மக்களை பன்னாட்டு பரிசோதனைகளுக்கு பலி கொடுக்கத் துடிக்கிறார்கள்.
அறிவியல் எல்லாரும் வரவேற்கும் ஒரு துறைதான். யாரும் அறிவியலுக்கு எதிரிகள் அல்ல. ஆனால் அந்த அறிவியலின் பெயரால் நாட்டை அன்னியருக்கு விற்கும், மக்களை பரிசோதனை எலிகளாக மாற்றும் ஒரு திட்டத்தை ஒரு போதும் நாம் ஒப்புக்கொள்ள முடியாது.
சரி, இந்த ஆய்வகம் அந்தப் பகுதியில் அமைவதால் மக்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்விக்கும் அவர்களே பதில் தருகிறார்கள்.
இதனால் மொத்தமே 20 முதல் 200 வரையிலான பேர்கள் அங்கு வேலை செய்வார்கள். அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்காது, வேண்டுமானால் கட்டுமானப் பணிக்கான கூலிகளாக முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிலருக்கு வேலை கிடைக்கலாம்.
மனித குலத்திற்கு இதுவரை எந்தப் பயனும் தராத, இந்த ஆய்வுப்பணி, தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் மத்தியில் சுமார் ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுவதாக அறிகிறோம். 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழே துன்புறும் ஒரு நாட்டில் இத்தகைய தெரியாத ஊருக்குப் போகாத பாதை அவசியமா என்பது சிந்திக்கத்தக்கது.
மேலும் உள்@ர்வாசிகளுக்கு எந்தப்பயனும் அளிக்காத ஒரு திட்டத்திற்காக இவ்வளவு இடர்ப்பாடுகளை மக்கள் ஏன் தாங்க வேண்டும் என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது.
இந்த ஆராய்ச்சியை டாட்டா அடிப்படை ஆய்வகம் (TATA Institue of Fundamental research (TIFR), பாபா அணு ஆராய்ச்சி நிலையம், ஐஐடி சென்னை, ஐ.ஐ.டி. மும்பை, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் கல்பாக்கம் உட்பட 7 முதல்நிலை நிறுவனங்கள் மற்றும் 13 பங்கு நிறுவனங்கள் நடத்த உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் கணிணி முன் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அந்த அறிவாளிகளுக்கு தேவாரம் மலையில் ஆடு, மாடு மேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் வறிய படிக்காத அப்பாவிகளின் வாழ்க்கையின் வலி எப்படிப் புரியும்?
அறிவியலின் எதிர் வினைகளை ஏற்கெனவே இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையிலும், போபாலில் விஷவாயு விபத்திலும் ஜப்பான் இரோசிமா, நாகசாகியிலும், புகுசிமா அணு உலை விபத்திலும் நாம் போதுமான அளவு பார்த்தாகிவிட்டது.
காவிரிப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாத, சேதுசமுத்திரத்திட்டத்தை கிடப்பில் போட்ட, ஈழத்தமிழரை எதிரியாய் நடத்திய, மலட்டுக் கத்தரிக்காயை விவாசாயிகள் தலையில் கட்ட துடிக்கிற, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கத் துணியாத, முல்லைபெரியாற்றில் துரோகத்திற்கு துணை போகிற, மீன் வளத்தை முதலாளிகளுக்கு விற்கத் துடிக்கின்ற, நாட்டையே சுரண்டல் முதலாளகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பங்கு போடத் துடிக்கின்ற, ஓர் அரசு, இந்த நியூட்ரினோ ஆய்வகத்திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மக்களுக்கு துன்பங்களை மட்டுமே திட்டமிடும் ஓர் அரசு எப்படி அல்லது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மக்களின் அரசாக இருக்க முடியும்?
அறிவாளிகள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் துயர்களை வாழ்வில் எதிர் கொள்ளப் போவது அப்பாவிகள் தான்.
நம் கடமை அந்த அறிவாளிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே.
ஏனெனில் அறிவாளிகளுக்கோ இது இன்னுமொரு ஆராய்ச்சி. ஆனால் அப்பாவி மக்களுக்கோ இது தான் வாழ்க்கை. இங்கு தான் வாழ்க்கை.
- மதுரை சு.தளபதி
- விவரங்கள்
- மு.வெற்றிச் செல்வன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கல்பாக்கம், கூடங்குளம் அணுவுலைகள், மீத்தேன் கெய்ல் திட்டம் இவற்றினைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்திருக்கும் புதிய தலைவலி தான் “இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்”. 2011ம் ஆண்டில் இந்த நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை (Environmental Clearance) அப்போதைய காங்கிரஸ் அரசு வழங்கியது. அதற்கு சற்றும் சளைக்காத மோடி அரசு, தற்பொழுது (05.01.2015) இத்திட்டத்திற்கான ஒப்புதலை அளித்ததோடு மட்டுமில்லாது, 1,500 கோடி ரூபாய்களை அள்ளி வழங்கியுள்ளது.
மேலும், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுமார் 6,00,000 டன் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதாக இத்திட்டத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எந்த ஒரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் அந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு உண்டாகும் பாதிப்புகள் ஆராயப்பட வேண்டும் என்பது சட்டம். இப்படி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால் உண்டாகும் சூழலியல் பாதிப்புகள் குறித்தும், அவ்விடத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ள இந்த அரசுகள் விரும்பவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலை தான் பல நீர்நிலைக்கு அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னக நதிகளுக்கும் இதுவே ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் புதிய திட்டங்கள் அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட காட்கில் குழுவும், கஸ்தூரிரங்கன் குழுவும் கூறியுள்ளன. ஆனால், நமது அரசிற்கு பசுமை மிகுந்த அவ்விடம் தான் மிகவும் பிடித்துள்ளது போலும்.
இப்படி விதிமுறைகளை மீறி கொண்டுவரப்படும் இத்திட்டத்திற்கு எதிராக வலுவான குரல் பதியப்பட வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியாக, ”பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சார்பாக பசுமைத்தீர்ப்பாயத்தின் கீழ், ”மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சம்” விதிமுறைகள் மீறி நீயூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியினை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டத்தின் மூலம் நியூட்ரினோவை இயற்கை மற்றும் செயற்கை என இருவழிகளில் ஆரயவுள்ளார்கள். இயற்கையாக நியூட்ரினோவை ஆராய்வதில் பெரும்பாதிப்பு இருப்பதாக கருதப்படவில்லை. ஆனால், செயற்கையாக ஆராய்வது எத்திட்டமாய் இருந்தாலும் சூழலியல் பாதிப்பிற்குரியது. இதில் நியூட்ரினோ என்ன விதிவிலக்கா?
நியூட்ரினோ திட்டத்தில் வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பங்கு பெருமளவில் உள்ளது என்பதை அத்திட்ட ஆய்வறிக்கையே கூறுகிறது. இது எவ்விதத்தில் உள்நாட்டு பாதுகாப்புக்கு உகந்தது எனும் கேள்வி எழுகிறது. மேலும், அமெரிக்காவின் பெர்மி ஆய்வகத்துடன் இந்தியா 2003 ஆம் ஆண்டிலிருந்தே பல ஒப்பந்தகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் நியூட்ரினோ திட்டமும் ஒன்று. மேலும், இத்திட்டத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆய்வுக்கூடங்களிலிருந்து செயற்கை நியூட்ரினோ கதிர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான தேனி மாவட்டத்திற்கு அனுப்பப்போகிறார்கள். 7000 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த செயற்கை நியூட்ரினோ, எவ்விதத்தில் பாதுகாப்பிற்கு உரியது என்னும் கேள்வியும் எழுகின்றது. இப்படி செயற்கை நியூட்ரினோ பயணிப்பது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்னும் ஆய்வினைக் கூட இவர்கள் செய்யவில்லை. செயற்கை நியூட்ரினோ ஆபத்திற்குரிய துகள் எனக் கருதப்படும் நிலையில், இந்த நியூட்ரினோவின் பயணம் இறுதியில் தமிழகத்திற்கு எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்னும் ஆய்வினையாவது குறைந்தபட்சம் இந்திய அரசு மேற்கொண்டிருக்கலாம்.
வழக்கம்போல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர். எப்படி கூடங்குளம் திட்டத்திற்கு முழு ஆதரவை அளித்து, மக்கள் எழுச்சிக்குப் பின், தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டார்களோ, அப்படியே அவர்கள் இந்நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளும் காலமும் வரும்.
நியூட்ரினோ துகள்களைக் கொண்டு அணு உலைகளில் உள்ள ப்ளுட்டோனியத்தின் அளவை கணக்கிட முடியும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க பெரியண்ணனுக்கு இத்தகைய துகள் நிச்சயம் தேவை. இதில் இந்தியாவும் தன் பங்கை செலுத்த நினைக்கிறது. வாழ்க உலக அமைதி.
- விவரங்கள்
- முகிலன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டி கடந்த 30.01.2015 அன்று இரவு உடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இல்லை, இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதே போல் கடந்த 18.03.2014 அன்று ஈரோடை மாவட்டம் பெருந்துறை தொழிற்பேட்டையில், சாய ஆலை கழிவுநீரை தூய்மைப்படுத்தும் ஆலையில் உள்ள தூய்மைப்படுத்தும் தொட்டியில் உள்ள குழாய் வாழ்வில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய முயன்ற ஏழு தொழிலாளர்கள் கழிவுநீர்க் குழாய் மூலம் வெளியேறிய நச்சுவளியால் இறந்துள்ளனர். இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற சாவுகள் (படுகொலைகள்) நடைபெறுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே தமிழகத்தில் இதுபோல் பலமுறை நடந்துள்ளது. ஈரோடை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சாய ஆலை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் 100 பேர் வரை இறந்துள்ளனர்.
ஒருவர் இருவர் என சாவு இருந்தால் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுவதும், இடர்தொகை என்ற பெயரில் ஏதோ சிறிது தொகை கொடுத்து செய்தியே தெரியாமல் மறைத்து வருகின்றனர், இப்படுகொலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.
இறப்புக்கு உள்ளான பலரும் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவும் மற்றும் வெளி மாவட்டம் சார்ந்தவர்களாகவும் இருப்பதாலும், இவர்களுக்கான தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக இல்லாமல் இருப்பதாலும் இப்படுகொலைகள் யாரும் கேட்பாரின்றி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகமெங்கும் தோல் ஆலை, சாய ஆலை உட்பட பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் விசவாயு (நச்சுவளி) தாக்கி 800 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது.
நம் தாய் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
மனிதன் எப்போது விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினானோ, அப்போது முதல் விலங்கின் இறைச்சியினை உணவாக உண்டுவிட்டு, தோலைப் பதப்படுத்தி, தனது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தான்.
ஈரோடையில் இன்று செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், 1990களுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம்பட்டை, கடுக்காய் கொட்டை, பெருநெல்லி கொட்டை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை முதன்மையாக வைத்தே பயன்படுத்தினார்கள். இந்த முறையில் தோலைப் பதப்படுத்த 40 நாட்கள் வரை தேவைப்படும்.
தோலைப் பதப்படுத்திய பிறகு வரக்கூடிய கழிவுகள், வேளாண்மைக்கு எருவாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
'ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு' என்ற உணவு சுழற்சியாக உழவர்கள், தோல் கழிவுகளை எடுத்துச் சென்று தங்களது காட்டில், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி எருவாக போடுவார்கள். தென்னை உட்பட அனைத்து மரங்களிலும் காய்பிடிப்பு (காய்ப்பு) மிக நன்றாக இருக்கும்.
ஆனால் இன்று ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப்புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின், அதன் காசுக்கு விலை போன அதிகாரிகளின் அலட்சியமே உண்மையில் விபத்துக்குக் காரணம்.
கழிவுநீர் சாக்கடையான நொய்யல் ஆறு
சாயத்தொழில், துணிகளுக்கு சாயம் ஏற்றுவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொழில்களாகும். ஆனால் 1990 வரை சாயப்பட்டறை கழிவுகளால், மனிதர்களுக்கு எவ்வித இடரும் ஏற்பட்டது இல்லை. நீர்நிலைகள் நாசமானது இல்லை. விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது இல்லை. ஆறுகள், குளங்கள், ஏரிகள் செத்துப் போனது இல்லை. ஏனெனில் அப்பொழுதெல்லாம் சாயத்தொழிலுக்கு மரபு சார்ந்த பொருட்கள் குறிப்பாக மஞ்சள் போன்றவற்றை வைத்து பயன்படுத்தப்பட்டது. வேதியியல்(ரசாயனம்) வைத்து உருவாக்கப்பட்ட சாயப் பொருட்கள் பயன்பாடு என்பது அறவே இல்லை.
5000 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட, நெடிய நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையை கடவுளாக வணங்கும் தமிழகம் இன்று வெளிநாட்டுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் புதிய பொருளியல் கொள்கை என்ற பெயரால் போடப்பட்ட GATT (காட்) ஒப்பந்தப்படி கட்டற்ற முறையில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக நாடு திறந்து விடப்பட்டது.
இதன் விளைவாக சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாற்றப்பட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது முதன்மையாக மாற்றப்பட்டது. விரைவான உற்பத்திக்காக தோல் தொழிற்சாலைகளிலும், சாயத்தொழிலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக இன்று எண்ணற்ற பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.
திருப்பூர் சாயஆலைக் கழிவுகளால் வரலாற்றுப் புகழ்பெற்ற காவிரியின் துணைஆறான நொய்யல் ஆறு செத்தே போய் விட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992ல் கட்டி முடிக்கப்பட்ட ஒரத்துப் பாளையம் அணையில் சாய ஆலையின் கழிவுநீர் தேங்கியது. இதனால் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீரால் அனைத்து வேளாண் நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து அனைத்து கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. மேலும் நொய்யல் ஆற்றுநீர் செல்லும் வழித்தடத்தில் சாய ஆலை கழிவுநீர் செல்வதால் ஆற்றின் இருகரையிலும் உள்ள கிணறுகளும், ஆற்றில் நீர் செல்லும் போது பலகல் தொலைவு வரை உள்ள அனைத்து கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. இதனால் உழவர்கள் ஆற்றில் தண்ணீரைத் திறந்து விடாதே எனப் போராடி 1996 முதல் நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்படாமலேயே இருந்தது.
அணை திறக்கப்படாததால் ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள எண்ணற்ற சிற்றூர்களும், வேளாண் நிலங்களும் பாழாய்ப் போய்விட்டது. சாயச்சாலை கழிவுநீரால் நொய்யல் ஆறு காவேரி ஆற்றுடன் கலக்கும் கரூர் மாவட்டம் புகளூர் வரை ஆற்றின் இருபக்கம் உள்ள நிலத்தடி நீர் மாசடைதல், குளங்கள் மாசடைதல் என அனைத்து நீராதாரமும் கெட்டு விட்டது. இது எப்போது, எத்தனை ஆண்டுகளில் இயல்பான நிலை அடையும் என்பது தெரியாத நிலையே உள்ளது.
மக்களின் தொடர்ந்த போராட்டத்தால் அரசு தற்போது அறமன்றத் தீர்ப்புப்படி ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றி உள்ள நிலங்களும், இந்த நீரைப் பயன்படுத்தி பாசனம் செய்த நிலங்களுக்கும் வேளாண் செய்ய முடியாததற்காக ஒரு சிறுதொகையை நட்ட ஈடு கொடுத்து வருகின்றது. சாய ஆலை கழிவுநீரால் ஒரு ஆறு செத்துப் போன வரலாற்றுக் கொடுமை இங்குதான் நடந்தது.
மிகப்பெரிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் கூறி சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் உழவர்களிடம் இருந்து 2700 குறுக்கம் (ஏக்கர்) நிலம் பிடுங்கி எடுக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ உலகில் முன்னேறிய நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சிகப்பு வகை ஆலைகளான தோல் தொழிற்சாலை, சாய ஆலை, இரும்பு தொழிற்சாலை, கல்நார் (ஆஸ்பெக்டாஸ்) தொழிற்சாலை, வேதியியல் தொழிற்சாலை போன்ற மிகவும் நாசகரமான தொழிற்சாலைகளே.
பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல், சாயத் தொழிற்சாலைகள் மூலம் சென்னிமலை ஒன்றியத்தின் பெரும்பகுதியும், பெருந்துறை ஒன்றியத்தில் பல ஊர்களின் நீராதாரமும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. சென்னிமலை ஒன்றியத்தில் 400 குறுக்கம் (ஏக்கருக்கு) மேல் நேரடி பாசனம் கொண்ட பாலதொழுவு குளம் முழுக்க நஞ்சாகி விட்டது.
ஓடைக்காடு குளம், சுள்ளிமேடு குளம் உட்பட பல குளங்கள் சாயநீர் தேங்கும் இடமாக மாறிவிட்டன. மக்களுக்குப் புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
பெருந்துறை தொழிற்பேட்டைச் சுற்றி உள்ள நீராதார அழிவால் மக்களுக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட உள்ளூரில் கிடைப்பதில்லை.
கரூர் சாய ஆலைகளால் அமராவதி ஆறும், ஈரோடு - பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாய ஆலைகளால் காவேரி ஆறும் நஞ்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றது. தமிழகத்தின் 17 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் காவேரி ஆறுகளில் சாய ஆலை கழிவுநீர் கலந்து வருகின்றது.
தோல் தொழிற்சாலைகள்...
தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும்.
இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் பெரிய அளவில் தோல் உற்பத்திக் கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு அதிகமான தோல் காலனிகள் (ஸூ) தேவைப்பட்டதால், 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ராபர்ட் கிளைவ், கர்நாடக நவாபான சந்தா சாகிபுடன் இணைந்து வேலூர் மாவட்டத்தில் இதனைத் தொடங்கினார். தோல் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தோலை இப்பகுதி முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்து தோல் வணிகம் பெரிய அளவில் செய்து வந்தனர். அவர்களுக்கு இதற்கான உற்பத்திச் சூத்திரங்களை ஆங்கிலேயர்கள் கற்பித்தும், நவாப் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் இப்பகுதியில் தோல் பதப்படுத்தும் தொழில் வேகமாக வளர்ந்தது.
மேலும், மூலத் தோலை தொட்டிகளில் சுண்ணாம்புடன் நீறவைத்து அதனைப் பதனிடுவதற்காகத் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தண்ணீர் தேவையும் இருந்தது. தனது வாழ்வாதாரத்திற்காக எந்த சொத்தும் (நிலம் உட்பட) ஏதுமற்றவர்களாகவும் இப்பகுதி மக்கள் இருந்ததால் சுகாதாரமற்ற இந்தத் தொழிலில் ஈடுபட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டனர். வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் இதற்கு சாதகமாக அமைந்தது. மற்றவர்கள் தொடத் தயங்கும், அருவறுப்பாக கருதப்படும் மாட்டுத் தோலை இவர்கள் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு, பிரிட்டிஷாருக்குப் பதனிட்டுக் கொடுத்தனர். இந்த நிலை இங்கு இன்று வரை தொடர்கிறது.
1990களுக்குப் பின்பு உள்நாட்டு தோல் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுக்க இருந்தும், இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் தோல் பதப்படுத்த தமிழகம் கொண்டு வரப்படுகிறது.
1990களுக்குப் பின்புதான் தோலைப் பதப்படுத்த வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம் தோலைப் பதப்படுத்த 40 நாள் ஆகும் என்பதிலிருந்து 3 நாட்கள் (72 மணிநேரம்) போதுமானது என மாறியது. கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நஞ்சுத்தன்மையுள்ள குரோமியம் போன்ற பல வேதியியல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஆண்டு முழுவதும் மூன்று பருவமும் சாகுபடி நடக்கும் பவானி ஆற்றின் குறுக்கே 730 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட (வருடம் 300 நாட்கள் பாசனத்திற்கு நீர் செல்லும்) காளிங்கராயன் கால்வாய் முழுக்க நஞ்சாக மாறி விட்டது.
காளிங்கராயன் கால்வாயில் தொடர்ந்து தோல் ஆலைகளின் கழிவுநீர் கலந்து வருவதால் இக்கால்வாயில் 11 வகை மீன்கள் இருந்தது மாறி தற்போது 1 வகை மீன் மட்டும் கிடைக்கின்றது. காளிங்கராயன் கால்வாய் பாசனப்பகுதியில் நெல்நடவு செய்யும் பெண்களின் தோல் கழிவு நீரால் நேரடியாக பாதிக்கப்படுவதால் கைகளில் மண் எண்ணெயைப் பூசிக்கொண்டு நடவு செய்கிறார்கள்.
காளிங்கராயன் கால்வாய் மூலம் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாகக் கலக்கின்றது. இதனால் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ஆற்றில் எடுக்கும் நீரால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரப்பப்படுகின்றது.
ஆம்பூர், வாணியம்பாடி தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாழாகி விட்டது. பாலாற்றில் ஆற்றுமணலே தன்மை மாறிவிட்டதால் வேலூர் மாவட்ட ஆற்றுமணலை எடுத்துக் கட்டிடம் கட்டக் கூடாது என அரசு உத்திரவிட்டு இருந்தது.
பாழாகிய பாலாறு
திண்டுக்கல் தோல் தொழிற்சாலையால் திண்டுக்கல் நகரமே கழிவுநீர் நகரமாகி ஊரே நரகமாகி விட்டது.
தோல், சாய ஆலைகளால் யாருக்கு லாபம்...:
தோல் தொழிற்சாலை, சாய ஆலை மூலம் நாட்டிற்கு அன்னிய செலவாணி அளவற்று கிடைக்கின்றது. தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.
ஆனால் உண்மையில்
1. பாலாறு, நொய்யல் ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு (கரூர் சாயப்பட்டறையால்) காவிரி ஆறு, காளிங்கராயன் கால்வாய் என அனைத்தும் நஞ்சாகி வருகின்றது.
2. நொய்யல் ஆறு செத்த ஆறு என உலகிற்கு அறிவிக்கப்பட்டு விட்டது.
3. பல பாசனக் குளங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அழிந்து வருகின்றன.
4. ஈரோடை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
5. இந்த ஆலை இயங்கும் மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு கேன்சர் நோயாளிகளாக மாற்றப்பட்டு உள்ளனர்.
6. ஈரோடை மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு மலட்டு தன்மை உள்ளவர்களாக மாற்றப்பட்டு ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் மலடு நீக்கும் மய்யங்களாக உள்ள நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது
7. சாயச்சாலை, தோல் தொழிற் சாலைகளில் பணியாற்றும் எண்ணற்ற வெளியூர்த் தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வந்து இனம் புரியாத நோயை வாங்கிச் செல்கின்றனர். இது பற்றி முழு விவரம் இல்லை.
8. ராணிப்பேட்டை தோல் தொழிற் சாலைகளில் 10 பேர் இறந்துவிட்டதாலேயும், பெருந்துரை-சிப்காட் சாய ஆலைகளில் 7 பேர் இறந்துவிட்டதாலேயும், பலர் பாதிக்கப்பட்டதாலும் செய்தி வெளி வந்து உள்ளது. ஆனால் வெளியே வராத சாவுகள் ஏராளமாக உள்ளன.
9. தோல் ஆலை, சாய ஆலை தொழிலாளர்களுக்கு அமைப்பு ஏதும் இல்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அதிகம். எனவே தனி ஆளாக இறக்கும் போது ஏதாவது காரணம் சொல்லி ஆலை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டு விடப்படுகின்றது.
10. இப்பகுதியில் வேளாண்மை முழுக்க அழிக்கப்பட்டு விட்டது.
நமது தமிழ்க் குமுகம் இவ்வளவு விலை கொடுத்து, அழிவைச் சந்தித்து தான் சாயஆலை, தோல்ஆலை மூலம் அயலகச் செலாவணி பெறப்படுகின்றது.
தூய்மைசெய் ஆலைகள்:
சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் E.T.P., C.E.T.P., எனப்படும் தனியார் தூய்மைசெய் ஆலைகள், பொது தூய்மைசெய் நிலையம் அமைத்துக் கழிவுநீரை தூய்மை செய்வதாகக் கூறிக் கொள்கின்றன. ஆனால் இது உண்மையில்லை என்பதே பல்வேறு நடைமுறைகள் காட்டும் உண்மையாகும்.
1. 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் எங்கும் இல்லை என்பதே உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் சாய ஆலைகள் உச்சஅறமன்றத் தீர்ப்பு அடிப்படையில் மூடப்பட்டபோது அனைத்து ஆலைகளும் 0% கடைப்பிடிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தன.
2. தூய்மைசெய் ஆலைகளில் கழிவுநீரின் வாடை போக்குவது, நிறத்தை மாற்றுவது, கழிவுநீரின் உப்பின் தன்மையை குறைப்பது என்பது மட்டுமே நடைபெறுகிறதே ஒழிய, 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும்.
3. தூய்மைசெய் ஆலைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருந்து பணப் பயன் (கையூட்டு) அடைந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். ஈரோடு, திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பல இலக்க உருவாய் கையூட்டு பணம் கைப்பற்றப்பட்டதே இதற்குச் சான்று
4. மாசுபடுத்தும் ஆலைக்கு எதிராக நேர்மையாக செயல்பட்டால் அதிகாரிகள் அரசால் மாற்றத்துக்கு உள்ளாகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆர். ஆனந்தக்குமார் அவர்கள் கழிவுநீரை சுத்தம் செய்யாமல் வெளியேற்றியதற்காக தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்ததால் 2011ஆம் ஆண்டு ஒரே நாளில் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து ஈரோட்டில் பல்வேறு விவசாய அமைப்புகளும், மக்கள் அமைப்புகளும் போராடின.
ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் மலையாண்டி அவர்கள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக தமிழக அரசால் 2011ல் பணிமாற்றப்பட்டார்.
கட்சிகளின் சுற்றுச்சூழல் கொள்கை:
தமிழகத்தில் செயல்படும் ஆண்ட, ஆளும் எந்த கட்சிக்கும் சுற்றுச்சூழல் சிக்கல் பற்றி எந்தக் கொள்கையும் கிடையாது. சிக்கல் வந்தால், மக்கள் போராடினால் ஓடிவந்து உடன் நின்று கொள்வது என்பது மட்டுமே அரசியல் கட்சிகளின் நடைமுறையாக உள்ளது. உண்மையில் இவர்களில் பெரும்பான்மையோர் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதே உண்மை.
தோல் மற்றும் சாய தொழிற்சாலை கழிவுநீரை பற்றியக் கொள்கையில் திருப்பூர், ஈரோடை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டக் கழிவுகளை குழாய் மூலம் கடலில் கொண்டு சென்று விடுவது எனப் பல கட்சியினரும் பேசி வருகின்றனர். கடல் என்ன அனைத்து கழிவுகளையும் கொட்டும் குப்பைத்தொட்டியா என்பதை யாரும் உணரவில்லை.
கடல் மூலம் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டு கிடைத்து வரும் சத்தான குறைந்த விலையில் மீன் உணவும், எண்ணற்ற தேவைகளும் மனித குலத்திற்கு கிடைக்கின்றது என்பதைக் கூட உணராதவர்களாகவே இக்கட்சிகள் அடிப்படையில் உள்ளன.
நிறைவாக...
செவ்வாய் கோளுக்கும், சந்திரனுக்கும் மனிதன் குடியிருக்க முடியுமா என செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கால்நடைகளின் தோலைப் பதப்படுத்தவும், இயல்பாக ஒரு துணிக்கு சாயம் போடவும் தெரியாமல் இருக்கிறார்களா...
அவர்களது மண், அவர்கள் நாட்டின் நீராதாரம், அவர்கள் நாட்டின் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளன வளர்ச்சி பெற்ற நாடுகள்.
இதற்கு நமது நாட்டை பயன்படுத்திக் கொள்கின்றன. மலிவான மனித உழைப்பு, எதற்கும் உறுதி இல்லாத வகையில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது, தொழிலாளிக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்பது போன்றவற்றிற்காகவே இங்கே தொழில் தொடங்குகின்றனர்.
அறுக்கப்படும் ஆட்டிற்கு அகத்திக்கீரையை காட்டுவது போல வாழ்வியலை இழக்கும் மக்களுக்கு 'அயலகச் செலாவணி, வளர்ச்சி” என முழக்கங்கள் மூலம் அரசால் பொய்யான பிம்பம் காட்டப்படுகின்றது.
வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியாய் தமிழகமும், நமது நாடும் மாற்றப்பட்டு வருகின்றது என்பதே முழு உண்மையாகும்.
மேலும் இன்று அரசே 1 லிட்டர் குடிநீர் உருவாய். 10/- என விற்பனை செய்கின்றது. அப்படிக் கணக்கிடும் போது தமிழகத்தில் ஒரு டி.சட்டை(வண்ண பின்னலாடை) உருவாக்க 2700 லிட்டர் தண்ணீரும், ஒரு இணை தோல் மூலம் மூடணி(ஷு) உருவாக்க 8000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நமது நாட்டின் நீர்வளம் (மறைநீர் - Virtuval water) வெளிநாடுகளில் எவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதை உணரலாம். இந்த நாட்டில் ஏழைகளின் உயிர் என்பது கிள்ளுக் கீரையாகவே கருதப்படுகின்றது.
தோல் ஆலைகள், சாய ஆலைகள் ஆகியவற்றின் கழிவுநீரை தூய்மை செய்ய எவ்வகை தொழில்நுட்பமும் இல்லாத இந்த அரசுதான், 48,000 ஆண்டுகள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவை உற்பத்தி செய்யும் அணுஉலையை வைத்துப் பாதுகாக்கும் என சொல்லி வருகிறது.
1984ல் திசம்பர் 2 அன்று போபாலில் யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவளி மூலம் 25,000 பேர் இறந்தும் எண்ணற்றோர் இன்றுவரை பாதிப்புக்கு உள்ளாகியும் வருகின்றனர். ஆனால் போபால் நச்சுஆலைக் கழிவை 30 ஆண்டுகளாகி அரசால் இன்றுவரை அகற்ற முடியவில்லை.
நமது நாட்டின் நீராதாரங்களை, (கிணறு, குளம், ஆழ்குழாய் கிணறு) ஆறுகளை சாகச் செய்த கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திச் செயல்படும் தோல் தொழிற் சாலை, சாயச்சாலைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.
இந்தத் தோல் சுத்திகரிப்பு நிலையங்களை, அபாயகரமான சிகப்புவகை ஆலைகளை அதிகாரிகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி தெளிவாக கூறி உள்ளது. ஆனால் அந்த அதிகாரிகள் முறையாக ஆலையை சோதனை செய்தார்களா என்பதுதான் முதல் கேள்வி. ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாறு நதியில் கலக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்து இருக்கிறார்களே, அது எப்படி நடந்தது? அதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன?
ராணிப்பேட்டையில் சம்பவம் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் (பத்து லட்சம் லிட்டர்) கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அதன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இப்படியொரு தொட்டி கட்டாயம் கட்டப்பட்டிருக்கவே முடியாது. இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் அதிகாரிகளும் உடந்தை என்பதுதான் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுபோல எத்தனை எத்தனையோ கேள்விகளை நமக்கு இருந்தாலும், அதற்கான பதிலும் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல மட்டும் நமது நாட்டில் யாரும் தயாராக இல்லை.
தமிழகத்தில் சாயக் கழிவுகளைவிட பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவை தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளில் பெரும்பாலோனோர் ஆலை நிர்வாகத்தின் கையூட்டு பெறும் தாசர்களாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தலையீடு மட்டும் இன்றி ஆண்ட, ஆளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் இந்த ஆலைக்கு துணைநின்று பணபயன் பெறுவதும், அதன் பங்குதாரராக வலம் வருவதேயாகும்.
இந்தத் தோல் கழிவுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் (சுரண்டல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்) இந்த மரணங்களுக்கு முழுமையான காரணமாகும். ஆனால், அவர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாமலேயே, வெறும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் வெகு வேகமாகப் பாய்கிறது. இவர்களுடன் கூட்டணி அமைத்து இருந்த அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும்.
இப்படி பிரச்சினை வரும் நேரத்தில் அனைவரும் வேகவேகமாகப் பேசுவதும், பின்பு அது பற்றி மறந்து போவதும் என்பதே கடந்த கால வரலாறாக உள்ளது. மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை பற்றி மாதம் ஒரு முறை நடைபெறும் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் விவசாய அமைப்பினர், சுற்க்ச்சூழல் செயல்பாட்டாளர்கள், மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வெறும் அற்ப பதர்கள் போல, இவர்களுக்கு இதே வேலைதான், வேறு வேலையில்லை என்று மாவட்ட ஆட்சியர் உட்பட மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பார்க்கும் பார்வையாக உள்ளது. மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை இப்படிதான் இருக்கும், இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது என்பதும், கேட்கும் கேள்விக்கு சடங்குதனமாக ஒரு பதிலை சொல்லி தட்டிக் கழித்து விடுவது என்பதும்தான் அதிகாரிகளின் தற்போதைய நடைமுறையாக உள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று மக்களுக்கு பொறுப்பின்றி செயல்படும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கும், நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
மக்கள், சமூகத்தின் மீது அக்கறையற்று செயல்படும் நேர்மையற்ற அதிகாரிகள் மீது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என இல்லாமல் உண்மையான நடவடிக்கை வேண்டும்.
இயற்கை வழியில், மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தோல் ஆலை, சாய ஆலைகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்.
நமது புவியும், மண்ணும், நீரும், நாடும், உலகமும் நமக்கு மட்டும் சொந்தமல்ல. நமது வருங்கால தலைமுறைக்கும் சொந்தமானது என உணருவோம், செயல்படுவோம்!
நமது நாட்டை பாதுகாப்போம்.!
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
- அணுத் தீமையற்ற தமிழக நாள் - டிசம்பர் 21, 2013
- மேற்கு மலைத் தொடரின் அடிவயிற்றில்... பிரபஞ்சம் பற்றிய ஆய்வா? அணு ஆயுதத் திட்டமா?
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
- வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
- உலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்