கீற்றில் தேட...

பல்லுயிர்ப் பெருக்கத்தில் உயிர்மச் சமநிலையானது இயற்கையாகப் பாதுகாக்கப்படுகிறது. உயிரிகள் ஒன்றுக்கொன்று உணவாகி இந்தச் சமநிலையானது பாதுகாக்கப்படுகிறது. இதில் ஏகாதிபத்திய முதலாளிகள் லாபநலனுக்கான செயல்திட்டங்களின் குறுக்கீட்டின் காரணமாக இயற்கையான உயிர்மச்சுழற்சியில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இவை இயற்கையின் பண்புகளைச் சிதைத்து, இயற்கையைச் சார்ந்துள்ள உயிரிகளின் வளர்ச்சியை அழிக்கின்றன.

global warming 349

இந்த உயிர்மச்சுழற்சியில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனால் தற்போது புயலில் நிகழும் பாதிப்புகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். அதாவது இந்தியத் துணைக்கண்டம் போன்ற இடங்களில் திடீர் மழைப்பொழிவும், தொடரும் வறட்சியும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக தற்போது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், உயிர்மைச் சுழற்சியில் ஏற்பட உள்ள மிகப்பெரிய மாற்றங்களையும் பற்றி ஜ.நா உறுப்பு நாடுகளின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட 800 அறிவியலாளர்களைக் கொண்ட குழு, பருவநிலை தப்புதல் குறித்து 2012-ல் ஏறத்தாழ 30,000 ஆய்வறிக்கைகளைத் தொகுத்து உருவாக்கிய ஒருங்கிணைந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஜ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் பான்கிமூன் இதை வெளியிட்டார். இது குறித்து விளக்கமளித்த பருவநிலை ஆய்வுக்குழுவின் தலைவர் இராஜேந்திர பச்சௌரி, இதில் சொல்லப்பட்டுள்ளதைத் தவிர நமக்கு வேறு மாற்றுவழிகள் என்பது கிடையாது (no plan B because no planet) என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் 30,000 ஆய்வறிக்கைகளின் தொகுப்போ, முக்கிய பிரச்சினையும், அதனால் ஏற்படவுள்ள விளைவுகள் அனைத்தும் மனிதனின் குறுக்கீட்டினால் ஏற்பட்ட பாதிப்பே என்கிறது. இதில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய நலன் சார்ந்ததாகவே முன்வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து ஜ.நாவின் நடுநிலைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். உண்மையில் புவிவெப்பமாதல் அதிகரிப்பதற்கு யார் காரணம், அப்பாவி மக்களா..?

ஆதாரங்களுடன் சற்று ஆராய்வோம்..!

வளிமண்டலத்தில் கடந்த 1,400 ஆண்டுகளைவிட 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை உயர்வு மிக அதிகமானதாக இருக்கட்டும். 1880இலிருந்து 1012-க்கு இடையில் மட்டும் வெப்பமாதல் காரணமாக புவியின் வெப்பம் 0.850 செல்சியஸ் அளவு உயர்ந்து, துருவப் பனிமலைகள் உருகி 30 ஆண்டுகளில் 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் அளவு குறைந்து, கடல்மட்டம் 32 மில்லி மீட்டர் உயர்ந்து அதன் விளைவாகக் கடலோர கிராமங்கள் (சென்னை போன்ற நகரங்களில் சில பகுதிகள்) கடல்நீரில் மூழ்கி அங்கு வசித்த மக்கள் அனைவரும் சூழியல்அகதிகளாக இடம்பெயர்ந்ததாகட்டும்...

கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரித்தது, கடல்நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தது, மேற்குலக நாடுகளில் பனிப்பொழிவு குறைந்தது, பல நாடுகளில் மிச்சமுள்ள காடுகளில் மட்டுமீறிய காட்டுத்தீ உருவாவது, பல வெப்பமண்டல நாடுகளில் வேளாண்மை செய்யவியலாத நிலை உருவாகியது என அனைத்திற்கும் உண்மையான காரணம், ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன்களை மட்டும் மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஏகாதிபத்திய எடுபிடி அரசுகள்தான் என்றால் மாற்றுக்கருத்து இல்லை.

இத்தகைய சூழலியல் மாற்றத்தின் விளைவாக உண்மையான இழப்பும் பாதிப்பும், அடித்தட்டு மக்களுக்கே! வெள்ளம், புயல், கடல்சீற்றம் என இயற்கையின் எதிர்வினைகள் ஒரு நாளும் எந்த ஏகாதிபத்திய முதலாளிக்கும் எதிராக மாறியது இல்லை.

புவிவெப்பமாதலுக்கு முக்கிய காரணம், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற நச்சு வாயுகள் அதிகம் வெளியேற்றப்படுவதே! கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் தொழில்துறை நடவடிக்கையால் வெளியிடப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடின் அளவு மட்டும் 40 கோடி டன் ஆகும்.

இது இயற்கையை அனைத்து நிலைகளிலும் முதலாளித்துவம் தங்களின் தொழில்துறை நலனுக்காகச் சூறையாடி மாசுபடுத்தத் தயங்கியது இல்லை. மாசுபடுத்தலின் அளவைக் குறைக்க மாற்றுவழிகள் பல இருந்தபோதும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசுகள் ஒருநாளும் சரிவர செயல்படுத்தியது இல்லை. சரியான மாற்று வழிமுறைகளை மேற்கொள்ள மக்கள் போராடினால் ஆட்சியாளரின் நலனுக்காக இன்றுவரை அவர்களை அரசு ஒடுக்குமுறைகளைச் செலுத்தாமல் இருந்ததும் இல்லை.

இத்தகைய நிலையில் மக்களின் நலனைப் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கத் தவறிய இந்திய அரசு போன்றவை, இயற்கைப் பேரழிவு போன்றவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றன. இந்த அரசுகள் ஏகாதிபத்திய முதலாளிகளுடன் கூட்டுச்சேர்ந்து திட்டமிட்டு மக்களைச் சூழல் அகதிகளாக மாற்றிவருகிறது. இத்தகைய கையாளாகாத அரசு தான் திடீர் மழைப்பொழிவு, நீண்டகால தொடர்வறட்சி, கடலரிப்பு, மழைவெள்ளம் ஆகியவற்றுக்கு மக்களே காரணம் என தங்களின் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்புகின்றன.

கடந்த ஆண்டு மழையின்போது ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும், இந்த ஆண்டு கடுமையான சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயலினாலும் ஏற்பட்ட பாதிப்புகளால், சூழல் அகதிகளாக மாற்றப்பட்ட மக்களிடம், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டுவர அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டோமானால், 'ஏகாதிபத்திய முதலாளிகளின் நலனுக்காக சூழல்அகதியாக மாற்றப்படுகிறோமா' என்பதற்கான விடை கிடைக்கும்.

- உமா கார்க்கி