மண்டை ஓட்டுக்குக் கீழே, மூளையின் பரப்பில் பட்டானி அகலத்திற்கு எலெக்ட்ரானிக் சிப்பங்களைப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைகள் பரவலாகிக் கொண்டு வருகிறது. பார்க்கின்ஸன், டிஸ்டோனியா போன்ற மூளை நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த இத்தகைய சிப்பங்கள் மூளையில் பதிக்கப்படுகின்றன. இதன் உதவியால் தக்க அளவு மின்தூண்டலை வேண்டும்போது வழங்குவதன் மூலம் நரம்பு சம்மந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
கட்டுப்பாடில்லாமல் அதனிஷ்டத்திற்கு நரம்புசெல்கள் துடிப்பதால் உடல் அஷ்டக் கோணல்களாக முறுக்கிக் கொள்ளும் நோய்க்கு டிஸ்டோனியா என்று பெயர். இந்நோயை சிப்பத்தைப் பதிப்பதின் மூலம் மிக எளிதில் சமாளித்துவிடலாம். மிதமான மின்தூண்டலை, குறிதவறாமல் நரம்பு செல்களுக்கு வழங்குவதன் மூலம் மனநோய், மையநரம்பு மண்டலப் பிரச்சனைகள் போன்றவற்றைச் சரிப்படுத்தலாம். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நரம்பியல்துறை மூளையின் ஆழத்தில் சிப்பங்களைப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைகளைப் பற்றி ஆய்வு செய்துவருகிறது. இது வெற்றி பெற்றால், நினைவாற்றலை அதிகப்படுத்தலாம், தீய பழக்கங்களை மறக்கடிக்கலாம்.
மூளையில் "இன்ப மையம்' என்றொரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைத் தூண்டினால் மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதைப்பற்றி 2008 இல் " Pleasure center" என்றொரு நூல் வெளிவந்தது. எழுதியவர் அஸிஸ் என்பவர். பணம் பணமென்று அலைந்து வாழ்க்கையின் சுவாரசியமான காலங்களை இழக்கும் வாலிப வயோதிகர்களுக்காக "இன்பம் தூண்டும்" சிப்பங்களை வடிவமைக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை முயன்றுவருகிறது.
ராபர்ட் ஹீத் என்றொரு சைக்கியாட்ரிஸ்ட் 1960 இல் ஒரு வினோத அறுவைச்சிகிச்சை செய்தார். ஓரினச்சேர்க்கைப் பிரியரான "கே' ஆணின் மூளையில் (ஆ19 பரிசோதனை என்று அதற்குப் பெயரிட்டார்) மின் தூண்டலை தேவைப்படும்போது வழங்கியதும் அவரது ஆவல் தணிந்ததாம். அதன்பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இப்போதைய "ஹைடெக்" தொழில் நுட்பம் சிப்பம் பதிக்கும் சிகிச்சையை 95 சதம் வெற்றிக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம்.
தக்க புள்ளியல் மின்தூண்டலை "லேப்" செய்தால் உள்ளத்தில் பேரின்பம் பெருக்கெடுக்கும். செக்ஸ் - சர்க்யூட் - சிப்பங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.
- முனைவர் க.மணி