கொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.
வாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்களுக்கு ஊறு விளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது இது செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. எது இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.
பூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத் தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்து விடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்