கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: தொழில்நுட்பம்
ஆகஸ்ட் 2009: இயற்கை எரிவாயு மற்றும் புதை படிவ எண்ணெய்களான பெட்ரோல், குரூடாயில் போன்றவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கடலுக்குள் மூழ்கி பூமியின் உட்பரப்பிலிருந்து உருவாகிறது என்றுதான் தகவல். இப்போது நாம் நினைத்ததைவிட அதிக ஆழத்திலிருந்து கிடைக்கிறது. என்றும் உயிர்கள் அல்லாத கனிமப் பொருட்களிலிருந்து கூட இவை உருவாகியிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2009: இன்டியானாவின் நோட்ரே டானா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பென்னட் என்ற வானவியலாளர்கள் நம் சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு சிறிய கோளைக் கண்டு பிடித்துள்ளனர்இது தனது எரிபொருள் முழுதும் தீர்ந்துவிட்ட நிலையில் உள்ள பழுப்புகுள்ளான இறந்துவிட்ட சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. என்பது வானவியலில் ஓர் அரிதான அற்புதமான தகவலாகும். இந்த கோள் நம் பூமிபோல 3 மடங்கு நிறையுள்ளது.
டிசம்பர் 23 2009: அலெக்ஸ் ஈவுன்புக் என்ற இரண்டு வானவியலாளர்கள் இரண்டு பழுப்பு குள்ளன் அளவுள்ள பொருட்கள் ஒரு பெரிய அசுர வின்மீனை சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளனர். இவை வியாழனைவிட 21 மடங்கு, 13 மடங்கு பெரியவை. ஒன்று அசுர விண்மீனை 380 நாட்களிலும், மற்றொன்று 622 நாட்களிலும் அசுர விண்மீனை (சூரியனைச்) சுற்றிவருகிறது. (அனைத்து விண் மீன்களும் சூரியனே அனைத்து சூரியன்களும் வீண்மீன்களே)
டிசம்பர் 22 2009: விஷப் பல்லுடைய பழங்கால புதைபடிம உலகின் முதல் பறவை ஒன்றை வடகிழக்கு சீனாவில் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் சீனா பறவை பல்லி என்பதாகும். இதன் எலும்புகள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய வான்கோழி அளவுள்ள பறவை. இதற்கு 4 இறக்கைகள் உண்டு. பயங்கரமாய் வளைந்த நீளமான விஷப்பல் உண்டு. இது சீனாவில் சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
ஜனவரி 6 2009: தாய்ப்பால் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன்தான், தாய் மகவிடையே உருவாகும். பாசப் பிணைப்புக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இந்த ஹார்மோன் மூலமே தன் குடும்பத்திலுள்ளோரின் முகங்களை குழந்தை எளிதில் அறிந்து கொள்கிறது என்ற உண்மை இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 5 2009: புற்று நோய்க்கான வேதி சிகிச்சை மருந்துகள் புதிதான தகவலைத் தருகின்றன. இவை புற்றுநோய் செல்களையும் காப்பாற்றுகின்றனவாம்.
டிசம்பர் 23 2009: தேனீக்கள் எவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததாலும், தரையிரங்கினாலும் அவைக ட்கு அடி படுவது கிடையாது. அதற்கான காரணம் அவைகளின் துல்லியமான பார்வை என்பது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்வைப் பகுதியிலுள்ள சிறப்பு செல்கள் மூலம் இது ரேடார் அல்லது சோனார் போல செயல்படுகின்றது. எனவே, இவை மெதுவாகவே தரையிறங்குகின்றன. தரை உள்ள தூரத்தைச் சரியாக நிர்ணயிக்கின்றன.
சுமார் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு செல் அல்கா ஒன்றை புதைபடிமமாக கண்டு பிடித்துள்ளனர். இது மரப்பிசியில் ஒட்டிக் கொண்டுள்ளது. இப்போது இது பாரிஸின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2009: பூமியின் மேல் தகடுக்குக் கீழே அப்பகுதி டெக்டானிச் தட்டுகளாக உடைந்து கிடைக்கிறது. இந்த தட்டுகள் நகரும் போதுதான் புவியதிர்வு, எரிமலைகள், மலைகள் உண்டாகின்றன. ஆனால், இந்த நகர்வுப் பகுதிகள்தான், மின்சக்தியின் நல்ல கடத்தியாக செயல்படுகிறது. என்றும், இவைதான் நீருள்ள இடங்களை சுட்டிக் காட்டும் குறியீடாகவும் நீருள்ள இடங்களை சுட்டிக்காட்டும் குறியீடாகவும் உள்ளதாகவும் நிலவியலாளர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜனவரி 2009: ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் மற்றும் உறுப்பு மாற்றம் செய்யப்பட்டதனால் நிகழும் மனித உயிர்ப்பலிகள் பல மில்லியன்களாக உள்ளன. இதன் காரணி, கிரிட்டோ காக்கல் என்னும் பூஞ்சையால் ஏற்படும் பாதிப்புகள்தான் இதனால் நெஞ்சுவலி, வறட்டு இருமல் வயிற்றுவலி, தலைவலி பார்வைக்குறைபாடு உண்டாகிறது. இந்தப் பூஞ்சை மனிதனின் தற்காப்புத் துறையைத் தாக்கி இறப்பை உண்டுபண்ணுகிறது. இந்த ஆய்வாளகள் இப்போது, எப்படி கிரிப்டோகார்கஸ், மனிதர்களின் தற்காப்புத்திறனை ஏமாற்றி உள்ளே நுழைகிறது என்றும் அதற்கு அதனுடைய பாதுகாப்பு கவசம்தான் காரணம் என்றும் கண்டு பிடித்துவிட்டனர். அதன் இணைப்பான சர்க்கனா மூலக் கூறுகளையும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இவைகளை புதிய மருந்துகள் மூலம் உடைத்து பூஞ்சைகள் உடலுக்குள் நுழைவதைத் தவிர்த்து மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற புதிய நிலை உருவாகியுள்ளது.
ஆகஸ்ட் 2009: உலகின் குளிரான பகுதியிலும், ஐரோப்பியாவிலும் வாழ்பவர்கள் தங்களுடைய உணவில் பாலை வைட்டமின்ஞி க்காக சேர்த்துக் கொண்டனர். இது 7500 ஆண்டுக்கு முன்பு நிகழ்ந்தது. இவ்வாறுதான் அந்நாடுகளில் பால் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை சீரணம் பண்ண லாக்டேஸ் என்ற நொதி வேண்டும். இதன் உற்பத்தியை நம்மிடம் உள்ள ஒரு ஜீன் கட்டுப்படுத்துகிறது. மத்திய ஐரோப்பியாவில் உள்ளவர்களே முதன்முதலில் பாலைக் குடிக்கத்துவங்கினர் என்றும் அவர்களிடமிருந்தே லாக்டேஸ் உருவாக்கும் ஜீன் பரவியது என்றும் இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அக்டோபர் 2009: மனித உடலுக்குள் ஓர் உயிர்க்கடிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. இது ஆயிரக்கணக்கான ஜீன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. உயிர்க்கடிகாரம் நம்மூளைக்குள் உள்ள பார்வை முடிச்சின் மேல் உள்ளது. இவை ஒளியால் மட்டுமல்ல மற்ற உறுப்புகள் மற்றும் உணவாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறது. என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிவிறிரி என்ற மூலக்கூறுதான், செல்களின் ஆற்றல் தேவையறிந்து உணவு வேண்டும் எனத் தூண்டுகிறதாம். செல்லில் போதுமான உணவிருந்தால், கிவிறிரி ‘ஆன்’செய்யப்பட்டுவிடும் உணவின் உயிர்க்கடிகாரத்துக்கும் வளர்சிதை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஷிப்டில் பணிபுரிபவர்களின் உயிர்க்கடிகாரம் சமனநிலை இழக்கிறது. பருமனகின்றனர், மிகை அழுத்தம் மாரடைப்பு நிகழ்கிறது என கண்டறியப்படுகிறது.
அக்டோபர் 2009: பழதை வெட்டி வைத்தால் அதில் ஈக்கள் மொய்ப்பதை நாம் அறிவோம். ஆனால், அங்குள்ள ஆண் ஈக்களுக்கு கண் தெரியாது. ஆனால் இனப் பெருக்கம் பழத்தின் மேலேயே நிகழும். தன்னுடைய ‘பிரமோன்’ உணர்வால் வரும் இறக்கையுள்ள பெண் ஈ எது எனத் தேடும் ஆண் ஈ ஆனால் தற்போது ஆய்வாளர்கள் புதிய தகவலைக் கண்டு பிடித்துள்ளனர். ஆண் ஈக்களின் வயிற்றுப் பகுதியில் உருவாகும். இன ஈர்ப்பு ஹார்மோனானா புரமோனா மூலம் ஆண் ஈக்கள் மற்ற ஆண் ஈக்களிடம் தயவுசெய்து நீங்கள் நுழையாதீர்கள். பெண்களை மட்டும் நுழையவிடுங்கள் என்று சொல்கிறதாம்.
செப்டம்பர் 2009: ரூத்தியம், ஆஸ்மியம் என்ற இரணடு உலோகங்களையும் இணைத்து, புற்றுநோயை எதிர்க்கும் மருந்துகளை உருவாக்குகின்றன. இது ஆண்களின் டெஸ்டிடுலார் புற்றுக்குப் பயன்படுகிறது.இந்த உலோகங்களின் அணுக்கள்தான் புற்றுநோய் செல்களின் ஞிழிகிவை ஈர்த்து சாகடிக்கிறது என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2009: இதுவரை அல்ஜீமர் வியாதியால்தான் குறைவான தூக்கம் உண்டாகிறது என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், புதிய கண்டுபிடிப்பு வேறொரு உண்மையைத் தெரிவிக்கிறது. நம்மால் உண்டாகும் தூக்கம் குறைவு தூக்கம் இழப்புதான் அல்ஜீமர் வியாதியையும், அது தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது என்பது தெரியவந்துள்ளது.
செப்டம்பர்2009: உருளைக்கிழங்கின் ஜீன் வரிசைகள் முழுமையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் 840 மில்லியன் உள்ளன. மனிதனுக்கு உள்ளதில் 1/4 பகுதிதான் இது..
செம்டம்பர் 2009: சில பாக்டீரியாக்கள் எதிர்உயிர் மருந்தையும் தாக்குபிடித்து அதற்குப்பின்னரும் நோய் உண்டாக்கி மருத்துவத்துறைக்கு தலைவலியாகவும், சவாலாகவும் உள்ளன. அந்த பாக்டீரியாவின் மேல்பரப்புதான் இப்படித்தாக்குப்பிடித்து உயிர்வாழும் வேலையைச் செய்கின்றன. அப்படி பாதுகாப்பு தரும் செல்சுவரை உடைக்க, ஒருபுது வழியைக் கண்டுபிடித்துவிட்டனர். விஞ்ஞானிகள் அந்தவேதிக் கலவையின் பெயர் விகிசி 13243 என்பதே இது பாக்டீரியாவின் மேல்தோலிலுள்ள பாதுகாப்பு கவசத்தை உடைக்கிறது. எனவே, இதன்மூலம் மருத்துவதுறை கொஞ்சம் அமைதி பெறும் எதிர் உயிரிக்கு கட்டுப்படாத பாக்டீரியத்தை இது கட்டுப்படுத்துகிறது.
செப்டம்பர் 2009: ஹைதராபாத்திலுள்ள லால்ஜிசிங் மற்றும் அமெரிக்காவின் டேவிட் ரிச் இருவரும் இணைந்து மனித சமுதாய தோற்றம் பற்றிய புது தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் 12 விதமான தனித்த பழங்குடியினர், மனித இனத்திடையே ஆராய்ந்தால் அந்தமானில் வாழும் பழங்குடியினர் தென்னிந்தியாவிலிருந்து பிரிந்தவர் என்பது தெரியவருகிறது. இவர்கள் நேரடியாக ஆப்பிரிக்காவை விட்டு சுமார் 70000 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துவிட்டனர்.
புதிய தனிமம் 112வது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கோப்பர்நிசியம் என்று பெயரும் சூட்டியாகிவிட்டது. இதுதான் வேதி அட்டனையில் உள்ள மிகக் கனமான தனிமம்.
2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள் 9 பேர் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஐரோப்பாவைச் சேர்ந்த சார்லஸ் கே. கேவோ மற்றும் ஹார்லாவுக்கும் சீன பல்கலைக் கழக வில்யாக்கு பாயல் என்பவருக்கும் ஜார்ஜ்ஸ்மித்தும் இணைந்து பெறுகின்றனர். ஒனித்தகவலுக்காக இணைப்புகள் மூலம் எப்படி ஒளி கடந்து செல்கிறது என்பதைக் கண்டு பிடித்துள்ளனர்.
உயிரியல் மற்றும் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை 3 அமெரிக்கர்கள் இணைந்து வாங்கியுள்ளனர். எலிசபெத்பிளாக்பென், கரோல் கிரிடர், ஜாக்ஸ்சோடார் இவர்கள் செல் பிரிதலின் போது நுனியில் உள்ள குரோமோசோம்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டிபிடித்துள்ளனர்.
வேதியலுக்கான நோபல் பரிசு ஆச்சரியமாக உயிரியல் தொடர்பான வேதிக் கண்டு பிடிப்புக்கு தரப்பட்டிருக்கிறது. செல்களுக்குள் ரிபோசோம்கள் எப்படி பணிபுரிகின்றன என்பதை இந்தியராகப் பிறந்து அமெரிக்காவில் வாழும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும், அமெரிக்காவைக் சேர்ந்த தாமஸ்எ. ஸ்டீட்ஸ¨ம் இஸ்ரேலைச் சேர்ந்த அடா எ. யோனாத்தும் இணைந்து ரிபோசோம் செயல்பாட்டுக்கான நோபல் பரிசினைப் பெறுகின்றனர்.
- பேரா.சோ. மோகனா
(இளைஞர் முழக்கம் பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
நிலத்திலிருந்து கிணறு வெட்டிப் பெறும் டீசல் சீக்கிரமே தீர்ந்து போகப் போகிறது. மாற்றாக சுள்ளி, கட்டை போன்ற மீந்து போன வேளாண் கழிவுகளிலிருந்து சுலபாமாக புதிய ரக டீசலைப் பெறும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மர டீசல் என்றுப் பெயர்.
பெட்ரோல், டீசல் விலையை வைத்துத்தான் நமது மற்ற விலைவாசிகள் அமைகிறது. டீசல் விலை ஏறினால் ஆட்டோ கட்டணம் முதல் காய்கறி, பால் விலைகளும் ஏறிவிடுகிறது. இப்படி உயர்ந்து கொண்டே போனால் இது எங்கே போய் முடியும்? விலைவாசி முடிகிறதோ என்னவோ அரபு நாடுகளில் எண்ணெய் ஊற்றுகள் ஒரு நாள் வற்றத்தான் போகிறது.
எவ்வளவுக் கெவ்வளவு நாம் அடுத்த வீட்டுக்காரனை நம்பி வாழ்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தொல்லைகளும், அடிமைத்தனமும்தான் மிஞ்சும். பக்கத்து வீட்டுக்காரன் வெச்சதுதான் சட்டம் என்றாகிவிடும். உண்மையிலேயே நமக்கு சுதந்திரம் வேண்டுமானால், பெட்ரோல் டீசல் பொருத்தவரை நாம் முதலில் விடுதலை பெற்றாக வேண்டும். நமக்கு வேண்டிய டீசல் எண்ணெயை நாமே உருவாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். அதற்கப்புறம் நாம் வல்லரசாக ஆவோமா மாட்டோமா என்பது தெரியும்.
பயோடீசல் மலிவாகவில்லை
மாற்று டீசல்கள் தயாரிப்பில் நிறைய சோதனைச் சாலைகள் இறங்கியிருக்கின்றன. காட்டாமணக்கு விதை எண்ணெயை டீசலாக மாற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வடைசுட்டு மீந்த எண்ணெய் மட்டுமல்லாமல் புங்க எண்ணெய், வேப்ப எண்ணெய் என்று எந்த எண்ணெயை வேண்டுமானாலும் டீசலாக்கலாம். பன்றி - மாட்டுக் கொழுப்பையும் மாற்றலாம். எண்ணெய் மற்றும் கொழுப்புக்களை டீசலாக மாற்றும் செலவு அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு அரபு டீசல்களே பரவாயில்லை என்றிருக்கிறது.
கேஸால் பரவாயில்லை
மெக்ஸிகோ நாட்டில் கரும்பு, சோயா பருப்பு, சோளமாவு ஆகியவற்றை நொதிக்க வைத்து சாராயம் வடிக்கிறார்கள். ஆல்கஹால் அல்லது எத்தனால் என்று அழைக்கப்படும் சாராயத்தை கேùஸôலீன் எனப்படும் பெட்ரோலுடன் வெளிநாடுகளில் பெட்ரோலை (கேஸ் அல்லது கேஸலீன் என கூப்பிடுவார்) கலந்து வண்டி ஓட்டுகிறார்கள். அதற்கு கேஸால் என்றுப் பெயர். எஞ்சினில்கூட பெரிதாக எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை. கரும்பு அங்கே எக்கச்சக்கமாக வளருவதால் எத்தனால் மலிவாகக் கிடைக்கிறது. சக்கரை ஆலைகளில் விழும் மொலாஸ்ஸஸ் கழிவு, எத்தனாலுக்கு உகந்த கச்சாப்பொருள். முதல் தலைமுறை தொழில்நுட்பம் என்றழைக்கப்படும் இதன் அடிப்படையில் 180 தொழிற்சாலைகள் உலகில் ஏற்கனவே உள்ளன. இது வெறும் 10 சதம்தான்.
அரிசியா எண்ணெயா?
இதை மேலும் 100 சதவிதமாக உயர்த்த முற்பட்டால் உணவுப்பஞ்சம் உலகில் தலைவிரித்தாடும். எப்படி எனில்; எல்லா விளைநிலங்களும் கரும்பு, சோயா, சோளமாக மாறி டீசலாக ஓடும். சாப்பாட்டுக்கு வேண்டிய நெல், கோதுமை ஆகியவற்றைப் பயிரிட ஆளிருக்காது. விவசாயிகள் எதில் அதிக காசு வருமோ அதைத்தான் பயிர் செய்வார்கள். சாப்பிட அரிசியும் இருக்காது, மாமிசம், காய்கறிகளும் விலை ஏறிப்போய் அவற்றிற்குக் கடும் பஞ்சம் ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விளை நிலத்தை எரிபொருளுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதில் நாம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
செல்லுலோஸ் எனும் மரப்பொருள்
இரண்டாம் தலைமுறை மாற்று டீசல் தொழில் நுட்பத்தைப் பற்றித்தான் நான் இங்கே சொல்லவந்தது. இதில் நாம் பயன்படுத்தப்போவது விளை நிலங்களில் உற்பத்தியாகும் கச்சாப் பொருள்களை அல்ல, மரப்பொருள்களை! டெக்னிக்கலாக இதை செல்லுலோஸ் என்பார்கள். கட்டை, மரம், காகிதம், துணி, இலை, தழை, வைக்கோல், கரும்புச் சக்கை, நார், ஓடு, உமி,... அதாவது செடி, கொடி, மரம், பயிர்கள், ஆகியவற்றின் அனைத்துக் கழிவுகளிலிருந்தும் கிடைக்கும் செல்லுலோஸ் அதாவது மரப்பொருள்தான் டீசலுக்கான மூலப்பொருள்.
செல்லுலோசுக்குப் பஞ்சமே கிடையாது
உலகில் சூரியஒளி சக்தி சிறைப்படுத்தப்பட்டு செல்லுலோசாக சேமிக்கப்படுகிறது. பூமியில் உயிரினங்களின் மொத்த எடையில் பாதி செல்லுலோஸ்தான்! உலகில் எதற்கு பஞ்சம் வந்தாலும் செல்லுலோசுக்கு வராது. மரத்தூள், வைக்கோல், பருத்திமாறு, மிளகாமாறு போன்ற காய்ந்த தாவரக் கழிவுகளிலிருந்து வேண்டிய அளவு செல்லுலோஸை பெறலாம், இதற்கு தனியாக எதையும் பயிர் செய்யத் தேவையில்லை. வரண்ட நிலத்தில் வளரும் முட்செடிகள்கூட போதும். எனவே எதிர் காலத்தில் உணவுப் பயிர்களோடு எரிபொருள் பயிர்கள் போட்டியிடும் என்ற அச்சம் வேண்டியதில்லை. மரப்பொருளிலிருந்து டீசல் எடுத்தால் ஒரு பேரல் 1920 ரூபாய் (ஒரு பேரல் 159 லிட்டருக்கு சமம்) தான். அதாவது லிட்டர் 12 ரூபாய். ஆஹா... எவ்வளவு சீப்!
மர டீசல்
இதில் அமெரிக்கா முந்திக் கொண்டுவிட்டது. ஆண்டுக்கு 100 கேல்லன் மரடீசலை உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் மரப்பொருளை எண்ணெயையாக்கிக் கொண்டிருக்கிறது. எந்த முயற்சியும் இல்லாமலே 34 பில்லியன் டன் மரப்பொருள்களை நம்மால் திரட்ட முடியும். அதிலிருந்து 160 பில்லியன் பேரல் மர டீசலைப் பெறலாம். உலகத்தேவை 30 பில்லியன் பேரல்பன்தான். நிச்சயம் உலகத்தேவைக்கு அதிகமாகவே மரடீசல்கள் கிடைக்கும். தீர்ந்துபோகும் என்ற பயமோ, உணவுதானியத் தட்டுப்பாட்டைத் தருமோ என்று அஞ்சவேண்டியதில்லை.
செல்லுலோஸ் – மரப்பொருள்
செடி, கொடி, மரம் ஆகியவை காய்ந்து போகும்போது அதிலுள்ள ஈரமும் சதைப்பகுதியும் வற்றி நீங்கியபின் எஞ்சியிருப்பது காய்ந்த குச்சியும், கட்டையும்தான். அது முழுக்க முழுக்க செல்லுலோஸôல் ஆனது. துணை செல்லுலோஸ் மற்றும் லிக்னின் என்ற பழுப்புப் பொருளும் அதில் சிறிது கலந்திருக்கும். அவைகளும் ஒருவகையில் செல்லுலோஸ்தான். வேர்க்கடலைத் தோல், கரும்புச் சக்கைப்போன்ற எல்லா கழிவுகளும் இதே செல்லுலோஸ்தான்.
கரையான் வயிற்றில் செல்லுலோஸ் கரைகிறது
நாம் கீரை, காய்கறிகளை சாப்பிடும்போது அதிலுள்ள செல்லுலோஸ் ஜீரணமானால் கொஞ்சம் சிதைந்த நிலையில் மலத்துடன் வெளியாகிகிறது. நம்மால் ஜீரணிக்க முடியாது என்பதால் செல்லுலோûஸ ஜீரணம் செய்யவே முடியாது என்று நினைக்க வேண்டாம். கரையான் மரத்தை அரித்துத் தின்று வளரக்கூடியது. ஆடுமாடுகள், புல். தவிடு வைக்கோலைத் தின்று ஜீரணித்து வாழ்கின்றன. ஆதலால் செல்லுலோஸ் ஜீரணமாகக்கூடிய பொருளே. உள்ளபடியே கரையான் வயிற்றிலும், ஆடு மாடுகளின் வயிற்றிலும் இருந்து அவை ஜீரணம் செய்ய உதவியாக இருப்பவை செல்லுலோஸ் செரிக்கும் பேக்டிரியாக்களே. இவற்றின் உதவியுடன் நாமும் உலைகளில் மரப்பொருள்களை டீசலாக்கலாம்.
மர டீசலுக்கு மூன்று வழிகள்
மரப்பொருளை மூன்று வழிகளில் டீசலாக்கலாம். இம்மூன்று வழிகளும் வேறுபடுவது மேற்கொள்ளப்படும் வெப்பத்தைப் பொருத்தது.
முதலாவது வெறும் 200 டிகிரி செ. யில் எத்தனாலாகப் மாற்றுவது. இரண்டாவது 600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் பயோ - குரூடாயிலைப் பெறுவது. மூன்றாவது 700 டிகிரி வெப்பத்தில் செல்லுலோசை நேரடியாக கேஸôக மாற்றுவது. செல்லுலோஸ் எத்தனை வலுவான பொருள் என்பதை தேக்கு மரம் சொல்லிவிடும். அத்தனை அழுத்தமாக ஆற்றல் அதனுள் திணிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஆற்றலை வெளியே எடுக்கவேண்டுமானால் கொஞ்சம் ஆற்றலை நாம் அதனுள் செலுத்த வேண்டும்.
செல்லுலோசானது இழைபோன்ற பொருள். ஒரு இழையில் ஆயிரக்கணக்கான குளுக்கோஸ் மூலக்கூறுகளால் சங்கிலியாகக் கோர்க்கப்பட்டிருக்கும். செல்லுலோஸ் இழையை வெப்பம், கெமிக்கல் அல்லது என்ûஸம் மூலம் உதிர்த்தால் மாலையிலிருந்து பூக்கள் உதிர்வதுபோல அதிலிருந்து குளுக்கோஸ் அல்லது அதனினும் சிறிய எரி மூலக்கூறுகள் கிடைக்கும். எண்ணெய், வாயு அல்லது டீசலாக அது கிடைக்கும்.
1. சீன்கேஸ்
இரண்டாம் உலகப்போரின்போது கார்பன் மோனாக்ஸைடு ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்து சூடாக்கி எரிவாயுவை உருவாக்கினார்கள். ஃபிஷ்ஷர் திராப்ஷ் சிந்தசிஸ் (Fischer Tropsch synthesis FTS) என்பது அதன் பெயர்.
மரத்தூளை 700 டிகிரி வெப்பத்தில் நீராவியில் வேகவைக்கும்போது ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கார்பன் மோனாக்ஸைடும், ஹைட்ரஜன் வாயுவும் உருவாகும். இரண்டு வாயுக்களுடனும் கலந்துவரும் "தார்' போன்ற பொருளை நீக்கிவிட்டு 70 மடங்கு வளிமண்டல அழுத்தம் தந்து ஒரு வினையூக்கி ஃபில்ட்டரின் வழியாகப் பாய்ச்சும்போது விசேஷ நிகழ்ச்சியின் விளைவாக மீத்தேன் போன்ற எரிவாயு கிடைக்கும். இதை சின்கேஸ் என்பார்கள். இப்போதைக்கு இதற்காக ஆகும் செலவு கட்டுப்படியாகமலிருப்பதால் தக்க காலம் வரை பொருத்திருக்க வேண்டும்.
2. அழுத்தி சூடாக்கி மரடீசலாக்குதல்
உலகின் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை கேம்பிரிய காலம் என்பார்கள். அக்காலத்தில் கடலில் வாழ்ந்த பாசிகள் பூமிக்கடியில் படிந்து, அழுத்தத்தாலும், வெப்பத்தாலும் கருகி, நசிந்து எண்ணெய்யாக உருமாறிவிட்டன. இன்று அதை பெட்ரோலியம் என்றழைக்கிறோம். நிலத்தில் கிணறுவெட்டி அவற்றை எடுக்கிறோம். 500 மில்லியன் ஆண்டுகளாக நடந்த அதே நிகழ்ச்சியை செயற்கையாக தாவரங்கள் மீது பயன்படுத்தினால், அவற்றை பெட்ரோலிய எண்ணெயாக மாற்றலாம்.
மரப் பொருள்களை காற்று இல்லாத நிலையில் 300-600 டிகிரி செ. வெப்பத்திற்கு சூடு செய்வதால், அது கரியாகவும், எண்ணெய்யாகவும் கொஞ்சம் எரிவாயுவாகவும் மாறும். இது ஒரு மலிவான தயாரிப்பு முறை.
ஒரு லிட்டர் மரடீசல் தயாரிக்க ஆகும் செலவு வெறும் 6 ரூபாய்தான். இதனுடன் மரப்பொருளின் விலையைக் கூட்டிக் கொண்டால் டீசலின் விலை கிடைக்கும். வெறும் குப்பைக் கூளங்களை பயன்படுத்துவதால் விலை அத்தனை ஒன்றும் பெரிதாக இருக்காது.
வீட்டுக்குப் பக்கத்திலேயே மரடீசல் பாய்லரை உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மர ஆயிலை நேரடியாக எஞ்சினில் ஊற்றிப் பயன்படுத்தமுடியாது. குருட் ஆயிலை சுத்திகரிப்பு செய்வதுபோல் செய்ய வேண்டும் செய்தால் எஞ்சின்கள் நீண்டநாளுக்கு உழைக்கும்.
நிமிட நேரத்தில் பல லிட்டர் மர ஆயிலைத் தயாரிக்கும் முறை ஒன்று இருக்கிறது. மொத்த மரப் பொருளையும் ஒரு வினாடிக்குள் 500 டிகிரி சூட்டிற்கு கொண்டு செல்லவேண்டும். அப்போது செல்லுலோஸ் இற்றுப் போய், மிக மிக சிறு துண்டு மூலக்கூறுகளாக உதிரும். உதிர்ந்த மூலக்கூறுகளை வினையூக்கம் செய்யும் சல்லடையில் நுழைக்கும்போது அது கேஸோலினாகவும், ஆக்டேன் வாயுவாகவும் மாறுகிறது. மொத்தத்திற்கும் 10 செகன்ட் நேரம்தான் ஆகிறது. சோதனைகளைத் தாண்டி 2014 ஆம் ஆண்டில் இது வணிக ரீதியாக வெளிப்படும்.
3. சக்கரை முறை
குளுக்கோஸ் மூலக்கூறுகளை வரிசையாக சங்கிலிப்போல் கோர்த்தால் அது செல்லுலோசாகிவிடும். தக்கமுறையில் சிûத்தால் செல்லுலோஸ் மீண்டும் குளுக்கோஸகக் கொட்டும். செல்லுலோசை குளுக்கோசாக உதிர்க்க கிட்டத்தட்ட 10 முறைகள் உள்ளன. மரப்பொருளை நேரடியாக காம்மாக் கதிர்களால் பொசுக்கலாம், கூழாக அரைத்து வேகவைத்து மாற்றலாம், அமிலம், காரம் அல்லது கரைப்பான் திரவங்களைப் பயன்படுத்திக் கரைத்துப் பெறலாம். இதெல்லாம் சரிப்படவில்லையெனில் ஜெனட்டிக் எஞ்சினிரிங் செய்யப்பட்ட நுண் உயிரிகளைப் பயன்படுத்தி செல்லுலோஸை நைசான குளுகோசாக மாற்றலாம்.
செல்லுலோசை அம்மோனியாவுடன் கலந்து 100 டிகிரியில் வேகவைத்தால்கூட குளுக்கோஸ் கிடைக்கும். அழுத்தத்தை ரிலிஸ் செய்ததும் அம்மோனியா மறுபடியும் ஆவியாகிவிடும். பின்னர் அதை திரவமாக்கி மறுபடியும் உபயோகிக்கலாம். கிடைத்த குளூக்கோûஸ நொதிப்பு முறையில் எரிசாராயமாக மாற்றிக் கொள்ளலாம். பட்ஜெட் போட்டுப் பார்த்தால், லிட்டர் சாராயத்தின் விலை ரூபாய் 12 தான். பெட்ரோல் பங்குகளுக்கு வரும்போது லிட்டர் 24 ரூபாயாக இருக்கும்.
நாளை நிச்சயம்
இப்போதைக்கு பெட்ரோலுடன் போட்டியிட செல்லுலோஸினால் முடியாது என்பது உண்மையே. பெட்ரோலியம் இப்போது சுலபமாகக் கிடைக்கிறது.ஏற்கனவே அதற்கு இடப்பட்ட முதலீடுகளின் பயனைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய தொழில் நுட்பத்திற்கு சான்ஸ் இல்லை. மர டீசலுக்கு முதலீடு செய்ய ஆரம்பித்தால் அதன் பலன் கிடைக்கக் கொஞ்சக் காலம் ஆகும். அதுவரை கேஸோலினுடன் அது போட்டியிட முடியாது.
மரடீசலுக்கு எதிர்காலம் இருக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு எதிர்காலம் தேய்ந்து கொண்டிருக்கிறது. மரடீசலை குடிசைத் தொழில் போல சமானியர்களும் தயாரிக்கலாம். வெளிநாட்டை நம்பியிருக்கத் தேவையில்லை. கச்சா மரப் பொருளை அக்கம்பக்கத்திலுள்ள தோட்டக் கழிவிலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம்!
மறுபடியும் சுள்ளி பொறுக்கும் காலம் வரத்தான் போகிறது. சுள்ளி எண்ணெயாகப் போகிறது.
செல்லுலோசுக்கு எங்கே போவது?
முள் மரங்கள்
செல்லுலோஸ் பெறுவதற்கு உகந்த மரம். கட்டிடம், மர சாமான்கள் போன்றவை செய்வதற்கு உதவாத புதர் மரங்களிலிருந்து செல்லுலோசைப் பெறலாம். தமிழகத்தில் காட்டுத்தனமாக வளரும் வேலிக்காத்தான் முள் மரங்களை இதற்குப் பயன்படுத்தலாம்.
வேளாண் கழிவுகள்
அறுவடை செய்த பிறகு மண்ணில் நிற்கும் கழிவுகள், இலைகள், வைக்கோல், காய்கறி கழிவுகள், தூக்கி வீசும் தண்டுகள் குச்சிகள் எதுவானாலும் அதிலிருந்து செல்லுலோசைப் பெறலாம். கரும்புச் சக்கையை எரித்து வீணாக்குவதை விட அதை செல்லுலோசாக மாற்றிப் பயன்படுத்தவது நல்லது.
செல்லுலோஸ் பயிர்கள்
மாடுகளுக்கு தீவனமாக வளர்க்கும் சோளக் கதிர்கள், கோரைப் புல், காட்டுப் புல் போன்ற புல், பூண்டுகளை பயிர் செய்யலாம். இவை பல்லாண்டுப் பயிர்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெட்டி எடுக்கக் எடுக்க அவை வளர்ந்துகொண்டே இருக்கும். உணவுப் பயிர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை பாதிக்காமல், தரிசல் நிலங்களைப் பயன்படுத்தி இவற்றை வளர்க்கலாம்.
செல்லுலோஸ் என்பது என்ன?
செல்லுலோஸ் என்பது மரப்பொருள். அதனால் மரத்திலிருந்துதான் இதைப் பெறமுடியும் என்று நினைக்க வேண்டாம். எந்த செடி, கொடியிலிருந்தும் இதைப் பெறலாம். மிகவும் மலிவானது வனத்திற்கு எந்த ஊறும் விளைவிக்காத சாதாரண புல், பூண்டுகள்தான். உரம் போட்டு வளர்க்க வேண்டியதில்லை. பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டியதில்லை.
செல்லுக்கு உள்ளே
செல்லின் வெளிச்சுவர் முழுவதும் செல்லுலோஸôசால் ஆனது. செல்லுலோஸ் கற்றை கற்றைகளாக குறுக்கும் நெடுக்குமான வேயப்பட்டிருக்கிறது. இடையே இணை செல்லுலோஸ் என்ற இன்னொரு வகை இழை பசைப்போல செல்லுலோஸ் பின்னலை கெட்டிப் படுத்துகிறது. காய்ந்த செடி, கொடிகளை அமிலம் அல்லது காரத்துடன் வெப்பம் கொடுத்தால் கட்டை குச்சிகளிலிருந்து செல்லுலோஸ் இற்றுப்போய் தனியாகப் பிரிந்து வந்துவிடும்.
ஒரு தனி செல்லுலோஸ் இழைக் கற்றை
செல்லுலோஸ் கற்றைப் படிகம்ப் போன்றது. தொடர்ச்சியாக குளுக்கோஸ் மூலக்கூறுகள் மணிமாலைபோல் இணைந்து இழையை உருவாக்குகின்றன. மிகவும் வலுமிக்க இந்த இழையை சுலபமாக உதிர்க்க முடியாது. உதிர்த்தால் அதிலிருந்து சக்தி மிக்க மூலக்கூறுகள் கிடைக்கும்.
செல்லுலோசின் அடிப்படை
ஆயிரக்கணக்கான குளுக்கோஸ் மூலக்கூறுகள் மணிபோல் கேர்க்கப்பட்ட அமைப்புதான் செல்லுலோஸ். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா நோயர்களே இரத்தத்தில் செலுத்தும் குளுக்கோஸேதான் மரத்திலும் பஞ்சிலும் காகிதத்திலும் இருக்கிறது.
செல்லுலோசை நேரடியாக எண்ணையாக மாற்றும் முறை
செல்லுலோஸ் குளுக்கோசால் ஆனது, குளுக்கோசில் உள்ளவை ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் கார்பன். ஆக்சிஜனை மட்டும் இந்தக் கூட்டத்திலிருந்து அகற்றிவிட்டால் நமக்கு ஆற்றல் செரிவு மிக்க எரிபொருளாக செல்லுலோஸ் மாறிவிடும். இந்த எரிபொருளில் வெறும் கரியும் ஹைட்ரஜனும் மட்டுமே இருக்கும்.
முதலில் செல்லுலோசை ஒரு உலையில்ப் போட்டு ஒரு சில வினாடிகளில் அதன் வெப்பத்தை 500 டிகிரி செல்சியசுக்கு உயர்த்த வேண்டும். ஆக்சிஜன் நிரம்பிய சிறு சிறு மூலக்கூறுகளாக செல்லுலோஸ் உதிரும்.
அடுத்ததாக, மூலக்கூறுகள் மட்டும் புகும் அளவுக்கு துளைகளைக் கொண்ட சல்லடைப் பொருளின் வழியாக உதிர்ந்த மூலக்கூறுகளை புகுத்த வேண்டும். இந்த சல்லடைபோன்ற கிரியாவூக்கியின் வழியாக புகும்போது மூலக்கூறுகளின் ஆக்சிஜன் நீங்கிவிடும். முடிவாக வளையம்போன்ற கார்பன் சங்கிலி மூலக்கூறுகள் கிடைக்கும். உண்மையில் என்னென்ன கெமிக்கல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பது சரியாக இன்னும் தெரியவில்லை.
முடிவாக, பெட்ரோலில் காணப்படும் கேசொலின் மூலக்கூறுகளைப்போன்ற பொருள்விளைகிறது. இத்தனை நிகழ்ச்சிக்கும் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில வினாடிகள் தான்.
-முனைவர் க.மணி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக் கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக் கருவியைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப் பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக் கருவிகள் அவசியம் இல்லையா?
வைரஸ்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக் கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப் பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
கதாநாயகனைப் புரிந்து கொள்ளாமல் இடைவேளை வரை சண்டைப்போட்டுக் கொண்டேயிருந்த கதாநாயகி, அவன் இரத்தானம் செய்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே மனம் கரைந்து அவன்மேல் மையல் கொள்கிறாள். எழுபதுகளில் எடுக்கப்பட்ட பழைய கலர் தமிழ்ப்படத்தில் இப்படி ஒரு காட்சி அமைப்பு. இப்போது பார்த்தபோது எனக்குக் காமெடியாக இருந்தது. இரத்ததானம் செய்வதெல்லாம் இப்போது சர்வசாதாரணம். சிலர் தொழிலாகவே செய்து வருகிறார்கள். சிறுநீரகங்கள் விலைக்கு விற்கப்படும் இந்நாளில் இரத்த தானமெல்லாம் எந்த மூலைக்கு?
விலைக்கு உடலுறுப்புகளை விற்பதை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். விலைமதிப்பில்லாத உடல் உறுப்புகளின் முக்கியத்துவத்தை, அதைப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நோயரைக் கேட்டால்தான் தெரியும். எவ்வளவு விலையானாலும் பராவாயில்லை உறுப்பு கிடைக்காதா? என்று காத்திருப்போரின் வரிசை மிக நீளமாகிக் கொண்டெ வருகிறது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் 200 மில்லியன் பேர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. உறுப்பினை வெட்டி நீக்கிவிட்டு அந்த இடத்தில் தானம் பெற்ற உறுப்பை பொறுத்தும் தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. டயாலிஸிஸ் மூலம் பல உயிர்களை இழுத்துப் பிடித்துக் காப்பாற்றியது ஒரு காலம். அது பூரண சிகிச்சை அல்ல. எந்திரத்தையே நம்பி வாழும் சிறை வாழ்க்கை அது.செயலிழந்த உறுப்புக்கு பதிலாக அவரவர் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து அதை செயற்கையாக வெளியே உறுப்பாக வளர்த்து பின் அவருக்கே பொறுத்துவது இன்றைய டெக்னாலஜி. திசு பொறியியல் மருத்துவத்துறையில் இன்று ராஜ நடைபோடுகிறது. அதிக வேலைவாய்ப்பும், லாபமும் உள்ள தொழில்நுட்பமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது.
திசுப்பொறியியல்
செயற்கையாக மனிதத் தோலை கண்ணாடித் தட்டுகளில் வளர்க்கிறார்கள், கெட்டித் திசுவாகிய கார்ட்டிலேஜ் எனப்படும் குறுத்தெலும்புகளை வளர்க்கிறார்கள். இதெல்லாம் மிகச் சுலபமான காரியங்களாகிவிட்டன. தீக்காயம் பட்டவர்களுக்குத் தேவையான மேல்தோலை உடலின் மறைவான இடத்திலிருந்து உரித்தெடுத்து பயன்படுத்துவதற்கு பதிலாக விரல்கட்டை அளவு தோலை எடுத்து திரவத் தொட்டியில் வளர்த்து, ஏடு ஏடாக எடுத்து காயங்களின் மேல் போர்த்துகிறார்கள். இதுபோலவே சிறுநீர்ப்பை, கண் கருவிழி (கார்னியா) மூச்சுக் குழல், இரத்தக்குழாய் போன்றவைகளை தொட்டிகளில் வளர்க்கும் தொழில் நுட்பம் முடிவடையும் நிலையிலிருக்கிறது. பிளாடர், கார்னியா, தசைநார், குறுத்தெலும்பு ஆகியவை ஒரேமாதிரி திசுத்தொகுப்பால் ஆகிய எளிய உறுப்புகள். உறுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் திசுக்கொத்து என்றுதான் சொல்லவேண்டும்.
கொஞ்சம் திசுக்களை சிறுநீரகத்திலிருந்து அல்லது இதயத்திலிருந்து கிள்ளி எடுத்து, அதை முழு இதயம் அல்லது சிறுநீரகமாக உருவாக்க முடியுமா? என்பது உடனடியாக பதில் சொல்ல முடியாத கேள்வி. ஒரு உறுப்பு முழுக்க முழுக்க ஒரே மாதிரியான திசுவால் ஆக்கப்பட்டது என்றால் அதைப்பிசைந்து, மடக்கி, முறுக்கி; காது, மூக்கு போன்ற உறுப்புகளாக செய்து கொள்ளலாம். கல்லீரல், இதயம், கணையம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் அப்படிப்பட்டவை அல்ல.
கார்ட்டிலேஜ் அல்லது தோல் திசுக்களில் உள்ள செல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக குடிசை மாற்று வாரியம் கட்டித்தந்த தொகுப்பு மனைகள் போல இருக்கின்றன. சிறுநீரகம் அல்லது கல்லீரல் மிகப்பெரிய மாளிகை அல்லது மருத்துவமனையைக் கட்டுவதுபோன்ற காரியமாகும். அமைப்பும் சிக்கல், கட்டுமான பொருள்களும் வெவ்வேறானவை. எதன் பக்கத்தில் எது இருக்கவேண்டும் என்பது மிகவும் துல்லியமாக இருத்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக திசு முழுவதும் இரத்தக் குழாய்களால் இருந்தாக வேண்டும். எந்தத்திசுவானாலும், அது 100 மைக்ரான் தடிமனை தாண்டிவிட்டால் கட்டாயம் அதனுள் இரத்தக்குழாய்கள் விரவியிருக்க வேண்டும். திசுவைத் தயாரித்து பதியன் செய்த பின்னர் அது உயிருடன் வேலை செய்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன், குளுக்கோஸ் முதலியவற்றை டெலிவரி செய்ய இரத்தக் குழாய்கள் அவசியமில்லையா?
நிச்சயம் ஒருநாள், முழு உறுப்பையும் திசுப் பொறியியல் செய்தே தீரும். அதற்கு நெடுங்காலம் இல்லை. அதற்குள் வாழத்துடிக்கும் மில்லியன் கணக்கான நோயர்களுக்கு ஏதாவது இப்போது செய்தாகவேண்டுமே, அதற்காக இடைநிலை திசுப்பொறியியல் தொழில்நுட்பம் தயாராகிக் கொண்டிருக்கிறது. உறுப்புகள் முழுமையான வடிவத்துடன் இல்லாவிட்டாலும், என்ன வேலை செய்தாக வேண்டுமோ அந்த வேலையைச் செய்யத்தக்க ஏதாவது ஒரு வடிவில் அமைக்கப்படுகின்றன. இடையிடையே பிளாஸ்ட்டிக், ஹைட்ரோஜெல், சில்க் இழை போன்ற அந்நிய பொருள்களை ஆதாரப் பொருள்களாக, கட்டட சாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆறிக்கொண்டிருக்கும் புண்ணில்; தோல், எலும்பு, நரம்பு, இரத்தக்குழாய் ஆகியவை தானாக வரிசைக்கிரமமாக தோன்றுகின்றன பார்த்தீர்களா? வளரும் கருவில் இதயம், மூளை, கல்லீரல் முதலானவை அழகாக தாமாக வளருகின்றன என்பதையும் பாருங்கள். இவற்றைக் கூர்ந்து ஆராய்ந்தால் அதனடிப்படையில் செயற்கையாக உடம்புக்கு வெளியே உறுப்புகளை நம்மாலும் செய்ய முடியும்.
கல்லீரலின் கட்டுமானம்
மனித உடலுறுப்புகள் எந்த அளவுக்குச் சிக்கலானவை என்பதை கொஞ்சம் இங்கே கவனியுங்கள். உறுப்புகளின் வேலைகளுக்கு ஏற்ப அவற்றின் திசுவகைகளும், கட்டமைப்பும் மாறுபடுகின்றன. கல்லீரல்தான் உடம்பிலேயே மிகப்பெரிய உறுப்பு. இதன் வேலை இரத்தத்தை வடிகட்டுவது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இரத்தத்திலிருக்கும் நச்சுப்பொருள்களை நீக்குவது, ஜீரணமான உணவிலிருந்து ஊட்டப் பொருள்களை மேலும் சிறியதாக பகுப்பது, சுத்தம் செய்த இரத்தத்தை வெளியேற்ற அனுமதிப்பது. இதற்கேற்ப கல்லீரலின் நுண் அமைப்பு உள்ளது. அதன் முப்பரிமாண அமைப்பை படத்தில் பாருங்கள்.
அறுங்கோணவடிவ கற்றைகள் அடுக்கப்பட்டதுபோல கல்லீரல் திசு உள்ளது. ஒவ்வொரு கற்றையின் மையத்திலும் இரத்தக்குழாய் ஓடுகிறது. இதிலிருந்து அனேக இரத்தக்குழாய்கள் கிளைத்து சக்கர ஆரக்கால்கள் போல கற்றையின் விளிம்பு வரை வருகின்றன. இதன் ஊடே இரத்தம் வடிந்து இதயத்துக்குச் செல்லும் பாதையில் போகிறது. அறுங்கோண கற்றையின் ஒவ்வொரு கோணத்திலும் மூன்று குழாய்கள் ஓடுகின்றன. நடுவில் அகலமான சிரை. இடமும் வலமுமாக பித்தக்குழாயும், தமணியும் ஓடுகின்றன. இத்தகைய திட்டமான முப்பரிமாண அமைப்பில் அர்த்தமிருக்கிறது. கல்லீரலின் செயல்களின் வெற்றி இந்த அழகிய அமைப்பியல் அடங்கியிருக்கிறது. இப்படி ஒரு கட்டுமானத்தை மனிதனால் செயற்கையாக செய்ய முடியுமா?
இதயத்தசை
இதயத்தசை முழுவதும் நார் நாராக உள்ள திசுவால் நிரம்பியுள்ளது. நார்களுக்கு இடையே ஏகமாக கொல்லாஜன் என்ற கெட்டிப் பொருள் நிரம்பியுள்ளது. இதயத்தசை செல்நார்கள் சீராக கற்றை கற்றையாக வேய்ந்துள்ளன. நரம்பு செல்களிலிருந்து வெளிப்படும் தூண்டல்கள் கொல்லாஜன் பிடிமானத்தின் ஊடாகப் பரவி, இதயத் தசை நார்களைச் சுருக்கி விரியச் செய்கின்றது. இரத்தத்திலிருந்து ஊட்டமும் இதன் ஊடாகத்தின் கசிந்து பரவவேண்டும். இப்படி எல்லாம் முப்பரிமாண வடிவம் வழங்கா விட்டால் இதயத்தசை ஓய்வு ஓழிசலில்லாமல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக துடித்துக் கொண்டிருக்க முடியுமா? எல்லா திசுக்களுக்கும் ஓய்வு உண்டு இதயத்துக்கு உண்டா? முப்பரிமான திசுக்கட்டமைப்புகளை ஏற்படுத்தி முழு அங்கங்களை சோதனைச் சாலையில் உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. இதற்கு என்னதான் மாற்று வழி என்று இனிப்பார்ப்போம்.
இரத்தக்குழாய்
கட்டைவிரல் கணத்திலிருந்து, மயிரைவிட 1000 மடங்கு மெல்லிய கனம் வரையில் இரத்தக்குழாய்கள் உடலில் பாய்கின்றன. ஒரு மில்லிமீட்டர் இடைவெளிக்குள் 10 இரத்தக் குழாய் தந்துகிகள் இருந்தால்தான் எந்தத் திசுவாலும் உயிர்பிழைக்கமுடியும். எனவே திசுக்கட்டமைப்பில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை, எப்படி இரத்தக் குழாய்களை உருவாக்குவது என்பதாகும். ஒருவிதத்தில் திசுக்கட்டமைப்பு, கடிகாரம் செய்வதை விட சுலபம் என்று சொல்லலாம். கேமரா, வாட்ச் போன்ற கருவிகளின் உதிரிபாகங்கள் தானாக ஒன்று சேர்ந்து கருவியாக மாறுவதில்லை. ஆனால் உயிருடைய திசுக்களுக்கு தக்க சூழலை உருவாக்கித் தந்தால் போதும் மற்றதை அவைகளே பார்த்துக் கொள்ளும். மேஸ்த்திரி வேலை பார்க்க யாரும் தேவையில்லை. வரிவரியாக மேடும் பள்ளமும் உள்ள பரப்பில் எப்பித்திலீயல் வகை செல்களை வளரவிட்டால் அவை பள்ளங்களின் அணைப்புக் கேற்ப வரிவரியான இரத்தக்குழாய்களாக வளருகின்றன. இப்படி செய்வதை மைக்ரோ ஃபேப்ரிகேஷன் என்கிறார்கள்.
தக்க பரப்புகளையும், ஆதார அமைப்புகளையும் உருவாக்குவதில் மிகுதியான கவனம் செலுத்தப்படுகிறது. உயிருடைய பொருள் போலவேயுள்ள ஹைட்ரோஜெல் என்ற பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹைட்ரோஜெல் குணத்தில் கொல்லாஜன்திசு போலவே இருக்கிறது. சுற்றி வளரும் திசுக்களை பாதிக்காமல் அமைதியாக இருந்து வளர்வதற்கு இடம் தருகிறது. ஒரு ஆய்வகம், எலியின் இதயத்திலுள்ள செல்களை மட்டும் அப்படியே அலுங்காமல் கரைத்து நீக்கிவிட்டு செல்லின் இடையே காணப்படும் திடமான மேட்ரிக்ஸ்ûஸ மட்டும் எஞ்சி நிற்கும்படி செய்தது. எலியின் இதயம் இப்போது சிலந்தி ஒட்டடையால் ஆன கூடு போல மாறிவிட்டிருந்தது. அதன்மீது நோயரின் இதய செல்லை வளர்க்க விட்டதும் அது மேட்ரிக்ஸ் முழுவதும் நிரம்பி வளர்ந்து, "லப் டப்" என்று துடிக்க ஆரம்பித்தது. ஒன்று நிச்சயம், சக்கிதமான மேடரிக்ஸ் ஆதாரம் தயாரித்தவிட்டால் தசைகள் தானாகவே எழும்பிக்கொள்ளும்.
பிரின்ட்டிங் முறை
கம்யூட்டர் பிரின்ட்டரில் ஒரு வகை இங்க் ஜெட் பிரிண்டர் என்பது. அதில் ஊசித்துளை வழியாக இங்க் சிறு சிறு துளிகளாக தூவப்படும். இது தாளில் விழுந்து வடிவங்களாகும். அதே முறையில் திசுக்களுக்கான ஆதார சாரங்களை முப்பரிமானமாக உருவாக்குகிறார்கள். காற்று அல்லது வெளிச்சம் பட்டதும் அவை கெட்டியாகி விடுகின்றன. பின்னர் அதன் மீது செல்களை விதைத்து வளரவிடுகிறார்கள். இப்படி நிறைய உபாயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். திசு இஞ்சினியர்கள் ரொம்பவும் பிசியாக வேலை செய்கின்றனர். வெற்றி பெறும் தொழில் நுட்பம் உலகில் மிகப்பெரிய இலாபகரமான மருத்துவப் புரட்சியை செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.
வேர்செல்கள்
ஒருபக்கம் திசுக்கட்டுமான ஆதாரப் பொருள்களின் கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கையில், வேறு ஆய்வுக்கூடங்கள் வேகமாகப் பல்கிப் பெருகும் வேர் ùச்லகளைப் பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. வேர் செல்களும் மனித உடம்பிலிருந்து எடுக்கப்படும் செல்களே. இவற்றிற்கு ஒரு குணம் உண்டு. தக்க தூண்டுதல் கொடுத்தல் இவை இஷ்டப்பட்ட திசுவாக வளரும். ஒரே வேர் செல்லைப் பெருக்கி அதிலிருந்து எல்லாத் திசுக்களையும் உருவாக்க முடியும்.
வேர் செல்களை வளரும் கருவிலிருந்து பெறுவது சிறப்பு. அதற்கு அசாத்திய "வேர்" நிலை உண்டு. வளர்ந்த உடம்பிலிருந்தும் வேர் செல்களைப் பெறலாம். அவை ஏற்கனவே முற்றிய நிலையில் இருப்பதால் அதிலிருந்து "எல்லா" வகை திசுக்களையும் பெறமுடியாது. முற்றிய வேர்செல் சுலபமாகக் கிடைத்துவிடும். கருவிலிருந்து பெறும் வேர்செல்லுக்கு கருவை சிதைக்க வேண்டும். எனவே கரு வேர் செல்களின் திறமையை உடம்பு வேர்செல்லுக்கு வழங்கும் ஆய்வுகள் இன்னொருபக்கம் நடந்தபடியுள்ளது. பல கோணங்களிலிருந்தும் புதுப்புது திட்டங்களும், தீர்வுகளும் வந்தவண்ண முள்ளன. சீக்கிரத்திலேயே அவை ஒரு நிலையில் குவிந்து, ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகளைத் தயார் செய்து தரும் தொழில் நுட்பமாக மாறும்.
ஏற்கனவே வெற்றிக் கோட்டினை எட்டியவை:
தோல்: நோயரின் தோலிலிருந்தே எடுத்த செல்களைப் பயன்படுத்தி செயற்கையாக எப்பிடெர்மிஸ் என்ற மேல் தோலை "எப்பி செல்" கம்பெனி தயாரித்து விற்கிறது. ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
கார்ட்டிலேஜ்: குறுத்தெலும்பு என்பார்கள். நோயரின் உடம்பிலிருந்து கான்ட்ரோ சைட்டுகளை எடுத்து குப்பிகளில் ஜெல் மாதிரி வளர்த்து, ஊசி மூலம் தேவைப்பட்ட இடத்தில் இஞ்செக்ஷன் செய்கிறார்கள். உணவு-மருந்து-நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கார்ட்டிசெல் என்ற பெயரில் விற்கப்படுகிறது. துண்டுக் குழாய்கள்: வேஸ்க்குஜெல் என்பது சொந்த எப்பித்தீலியத்திலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை ரத்தக்குழாய். நைந்து கொண்டிருக்கும் இரத்தக் குழாய்மீது விரித்து விட்டால், இது தானாக செப்பனிட்டு குழாயை உறுதிபடுத்திவிடும்.
இரத்தக்குழாய் செய்தல்
கொஞ்ச நேரம் ஆக்ஸிஜன் சப்ளை இல்லாவிட்டால் எந்தத் திசுவும் உயிருடன் இருக்காது. இரண்டு அடுக்கு மட்டுமே உடைய திசுவாக இருந்தாலும் அதற்கிடையில் இரத்தக்குழாய்கள் இருந்தாக வேண்டும். எனவே திசுப்பொறியியலில் முதலில் செய்ய வேண்டியது வேண்டிய அளவில், வடிவில் இரத்தக்குழாய்களை திசுக்களுக்கிடையில் உருவாக்குவது.
நேனோ பரப்பு
செல்கள் வளர்ந்து கூட்டமாக இருக்கும்போது அக்கம்பக்கத்திலிருந்து வரும் கெமிக்கல் சிக்னல்களின் தூண்டுதல் மற்றும் பக்கத்து செல்லின் செயல் ஆகியவற்றைப் பொருத்து தம் உருவத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்கின்றன. அவை பரவிக் கொண்டிருக்கும் பரப்பின் பள்ளம் மேடுகளுக்கேற்பவும் வடிவத்தை செய்து கொள்கின்றன. வரிவரியாக மேடு பள்ளங்களை 600 நேனோமீட்டர் ஆழமும் 1200 நேனோமீட்டர் இடைவெளியும் உள்ளபடி செய்து அதன்மீது எப்பித்தீலியல் செல்களை வளரவிட்டால், அவை தானாக குழாய் வடிவில் இணைந்து கொள்கின்றன. ஆறு நாட்களில் இரத்தக்குழாய் வலைபின்னலாக மாறிவிடுகின்றன.
மைக்ரோ ஃ பேப்ரிகேஷன்
இது கல்லீரலுக்குள்ளேயே வைத்து பதியன் செய்யக்கூடிய செயற்கை கல்லீரல் திசுக்கட்டுமானம். முழு கல்லீரலையும் மாற்றுவதற்குபதில் உள்ளேயே புதைத்து வைக்கும் கட்டுமானம்.
1. சிலிக்கான் பரப்பில் தேவைக்கேற்ப இரத்தக்குழாய் பாதையை செதுக்கி அதை அச்சாகப் பயன்படுத்துதல்
2. உடல் நட்புடைய பயோபாலிமரில் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் எப்பித்தீலிய செல்களை விதைத்து வளரவிட்டால் இரத்தக்குழாய் வலை பின்னலாகிவிடுகிறது.
3. இன்னொரு ஆதார பயோபாலிமரில் கல்லீரல் செல்களை வேண்டிய வடிவத்தில் பாத்திக் கட்டி வளர்க்கிறார்கள். முடிவில் குழாய் ஆதாரம், கல்லீரல் ஆதாரம் என மாற்றி மாற்றி ஒன்றன் மீது ஒன்று அடுக்கி செயற்கை கல்லீரல் கட்டமைப்பை செய்து கொள்கிறார்கள்
4. அதை நேரடியாக கல்லீரலில் புதைத்தால் மிக நேர்த்தியாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.
- முனைவர். க. மணி. பேராசிரியர், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
- பளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்
- செயற்கையாக ஓர் உயிரினம்
- உலோக ரப்பர்
- கட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க...
- இரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி
- சிறிய ரோபோ... பெரிய உதவி..
- மனம் என்பது என்ன?
- பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்
- நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
- வண்ண விளக்குகளின் ரகசியம்
- இசை மருத்துவம்
- பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?
- ஒளிரும் கிண்ணம்
- காரோட்டிகள் கண் அயர்ந்தால் என்ன ஆகும்?
- அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ
- செயற்கைக்கால் மம்மி
- தொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு.
- இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
- வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..
- இறந்தவர் உடலை பாதுகாக்க