கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
குரோமியப்பூச்சு பூசப்பட்ட பளபளப்பான வாகனபாகங்களும் குளியலறை சாதனங்களும் மனதை மயக்குபவை. உலோகங்களை பளபளப்பாக்குவதற்கு மட்டுமன்றி, அரிமானத்திலிருந்து பாதுகாப்பளிப்பதற்காகவும் குரோமியப்பூச்சு பூசப்படுவது வழக்கம். உலோகங்களுக்கு குரோமியப்பூச்சு கொடுக்கும் வழக்கம் 1940களில் தொடங்கியது. குரோமியப்பூச்சு மலிவானது; உபயோகிப்பவர்களுக்கு தீமை தராதது. ஆனால் குரோமியப் பூச்சு பூசும் தொழில் ஆபத்தானது; தொழிலாளர்களுக்கு தீமை தரக்கூடியது; சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடியது.
குரோமியப்பூச்சுக்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது. குரோமியப்பூச்சுக்கு மாற்றாக உள்ள பொருள் உறுதித் தன்மையுடையதாகவும், அரிமானத்தை தடுப்பதாகவும், நீண்டகாலம் பளபளப்புத் தன்மையுடையதாகவும் இருத்தல் வேண்டும் என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் நோக்கம். அண்மையில் ஆராய்ச்சியாளர்களின் கனவு நனவாகி உள்ளது. குரோமியப் பூச்சுக்கு மாற்றாக நிக்கல்-டங்ஸ்டன் உலோகக் கலவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கலவை குரோமியப் பூச்சில் உள்ள தீமைகள் இல்லாததாகவும், நீண்ட காலம் பளபளப்புத் தன்மையை பாதுகாப்பதாகவும் உள்ளது.
குரோமிய அயனிகள் நிறைந்த ஒரு தொட்டியில் மின்சாரத்தை செலுத்தி உலோகங்களின் மீது மெல்லிய படலத்தை படிய வைப்பதன்மூலம் குரோமியப்பூச்சு செய்யப்படுகிறது. குரோமியத்தின் இணைதிறன் ஆறு என்பதால் குரோமிய அயனிகள் நிலத்தடி நீரை மாசுபடுத்தக்கூடியது; மேலும் நச்சுத்தன்மையுடையது. எனவே இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குரோமியம் எஃகைக்காட்டிலும் உறுதியானது. குரோமியத்தின் உறுதித் தன்மைக்கு அதனுடைய நானோபடிக வடிவம்தான் காரணம்.
குரோமியப்பூச்சுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள நிக்கல்-டங்ஸ்டன்கலவையை மின்முலாம் பூசுவது எளிதாகவும் சிக்கனமாகவும் உள்ளது. ஒரே சமயத்தில் பல அடுக்குகளாக மின்முலாம் பூசமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. மின்னியல் துறையில் இணைப்புகள் ஏற்படும் இடங்களில் அரிமானத்தைத் தடுப்பதற்காக தங்கமுலாம் பூசுவதுண்டு. நிக்கல்-டங்ஸ்டன் பூச்சுக்கு மேலாக தங்க முலாம் பூசும்போது தங்கத்தின் உபயோகத்தை குறைக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
-தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஓர் உயிரினத்தை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தசை, எலும்பு, நரம்பு இவற்றின் அடிப்படையான புரதத்தை தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தயாரிக்க முடியும் என்று ஹார்வர்டு மருத்துவப்பள்ளியின் மரபியல் பேராசிரியர் ஜார்ஜ் சர்ச் கூறுகிறார். கோடிக்கணக்கான செயற்கை ரிபோசோம்கள் இணைந்து சிக்கலான புரதத்தை உருவாக்குகின்றன. இந்த புரதத்திற்கு firefly luciferase என்று பெயர்.
ரிபோசோம்கள் என்பவை செல்களில் உள்ள ஒரு பகுதிப்பொருள் ஆகும். இவை செல்களில் உள்ள பிற பகுதிப்பொருள்களாகிய டி என் ஏ க்கள் மற்றும் ஜீன்களின் கட்டளைகளை ஏற்று தசைகள், எலும்புகள், நரம்பு இழைகள் இவற்றால் ஆன உடலை உருவாக்குகின்றன. மேலும் என்சைம்களின் உதவியால் வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கி அன்றாட வாழ்க்கை சுழற்சியை ஏற்படுத்துகின்றன. புரோட்டின் சேர்க்கையை உருவாக்கும் சிக்கலான பணியை ரிபோசோம்கள் செய்வதால் உயிரினத்தின் அடிப்படையே இவைகள்தாம்.
செயற்கையான உயிரினத்தை உருவாக்குவது தன்னுடைய நோக்கம் இல்லையென்றும், ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகள் செயற்கையான ஒரு உயிரினத்தை உருவாக்கும் திசையில் செல்லுவதாகவும் பேராசிரியர் சர்ச் கூறுகிறார்.
சர்ச்சும் அவரது சக ஆய்வாளர் மைக்கேல் ஜீவெட்டும் இ கோலி பாக்டீரியாவில் இருந்து இயற்கையான ரிபோசோம்களை பிரித்தெடுத்தனர். இவை மீண்டும் அவற்றின் பகுதிப்பொருட்களாக பிரிக்கப்பட்டன. ribosomal RNA க்கள் நீக்கப்பட்டு மீண்டும் புதிய மூலக்கூறுகளாக இணைக்கப்பட்டன. ஒரு செயற்கையான புதிய உயிரினத்தை இதன்மூலம் உருவாக்க முடியும் என்றாலும், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் சர்ச் கூறுகிறார்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
உலோகம், ரப்பர் இரண்டும் கலந்த கலவையில் உருவான புதிய தயாரிப்புதான் உலோக ரப்பர். இதை ‘ஸ்மார்ட் ஸ்கின்’ என்று அழைக்கிறார்கள். மெல்லிய தோல்போன்று இருக்கும் இந்த உலோக ரப்பர் வெகுஜால வேலைகளை செய்யுமாம்.
ஒரு சிறு மில்லிமீட்டர் தடிமன் அளவிலான இந்த உலோக ரப்பர் பளபளப்பான காகிதம் போன்ற தோற்றம் கொண்டது. இதை சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைத்துக்கொள்ளலாம். சுமார் 200 டிகிரி செண்டிகிரேடு வெப்ப அளவுகொண்ட நெருப்பில் அல்லது கொதிக்கும் நீரில் போடலாம். அதன்மீது பெட்ரோல் தீ வைக்கலாம். தனது இயல்புநிலையை இழக்காது; கருகாது; உருகாது; உடையாது. அதே நேரத்தில் மின்சார கடத்தியாகவும் செயல்படக்கூடியது.
தீயில் கருகும்பொருள் அல்லது பல துண்டுகளாக மடக்கப்படும் பொருள் மின்கடத்தியாக இருக்கமுடியாது. மாறாக இந்த உலோக ரப்பர் மின்சாரத்தைக்கடத்தும் தன்மையைக்கொண்டுள்ளது. அற்புதமான சக்திகள் நிறைந்த இந்த இரப்பர் செயற்கைத்தசைகள், இறக்கை விமானம், ஆடைகள், கம்ப்யூட்டர் பாகங்கள் போன்றவை செய்யும் நவீன தொழில்நுட்பத்தில் பயன்படுகிறது. அபாயகரமான பணிகளில் ஈடுபடும் எந்திர மனிதனை தயாரிக்கமுடியும். கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சிறிய அளவில், குறைந்த எடையில் தயாரிக்கமுடியும்.
ஆனால் உலோக இரப்பர் தயாரிக்கும் பணி மிகவும் கடுமையானது. இந்தப்பணியை பெரும்பாலும் ரோபாட்டுகள்தான் செய்கின்றன. நேர் மின்னூட்டம் செய்யப்பட்ட உலோகத்தின் அயனிகலவை, எதிர் மின்னூட்டம் செய்யப்பட்ட எலாஸ்டிக் பாலிமர் கலவை இவற்றுடன் அச்சாக கண்ணாடி தகட்டினையும் பயன்படுத்துகிறார்கள். தற்போது சோதனை முறையில் உலோக ரப்பர் தயாரிக்கப்பட்டாலும் தொழில் ரீதியாக தயாரிக்கும் காலம் தொலைவில் இல்லை.
நன்றி: கலைக்கதிர்
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பைகளிலும், டப்பாக்களிலும் அடைத்து சீல் செய்து கடைகளில் விற்கிறார்கள். இந்த பொட்டலங்களுக்குள் தீமை செய்யும் Salmonellosis, ஈகோலி பாக்டீரியாக்கள் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிப்பதற்காக பொட்டலங்களை சீல் செய்வதற்கு முன்னால் உள்ளே இருக்கும் வாயுவை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓசோன் வாயுவை அடைக்கும் நடைமுறை இப்போது வழக்கத்தில் இருக்கிறது. ஓசோன் வாயுவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் உண்டு.
பர்டியூ பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கீனர் என்பவர் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். நம்முடைய சுற்றுப்புறத்தில் நிரம்பி இருக்கும் ஆக்சிஜன் வாயுவை எளிய முறையில் அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றும் முறைதான் அது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பொட்டலங்களில் அடைத்து சீல் செய்தபிறகும்கூட உள்ளே இருக்கும் தீமைசெய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் தொழில் நுட்பம் இது. உணவின் மூலம் கடத்தப்படும் நோய்க்கிருமிகள் ஆரம்ப நிலையிலேயே அழிக்கப்பட்டுவிடுவதால் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.
இரண்டு உயர் மின் அழுத்த, குறைந்த வாட் கம்பிச்சுருள்களை சீல் செய்யப்பட்ட பொட்டலங்களுக்கு வெளியே வைக்கும்போது ஒரு காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப்புலம் பொட்டலங்களுக்குள் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றிவிடுகிறது. 30 வினாடிகளில் இருந்து 5 நிமிடநேரத்தில் பாக்டீரியாக்களை அழிக்கும் பணி முடிவடைந்துவிடும். இறுதியில் அயனியாக்கம் செய்யப்பட்ட ஆக்சிஜன் வாயுவும் அதனுடைய பழைய நிலைக்கு திரும்பிவிடும். 30 வாட் முதல் 40 வாட் வரையிலான மின் ஆற்றலில் இந்தக் கருவி செயல்படுவதால் சிக்கனமானது. பொட்டலத்தின் வெளிப்புறம் மிகச்சிறிய அளவிற்கே வெப்பமடைவதால், உள்ளே இருக்கும் உணவுப்பொருளின் சுவை மாறிப் போய்விடுவதில்லை.
கீனரின் கண்டுபிடிப்பில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பொட்டலங்களை பிரிக்காமலேயே பாக்டீரியா நீக்கம் செய்யமுடியும் என்பதுதான் சிறப்பு. “ஒரு பாட்டரியை மின்னேற்றம் செய்வதுபோன்ற எளிய முறை இது” என்கிறார் கீனர். ஆக்சிஜனை அயனியாக்கம் செய்வதற்காக எந்த மின்வாய்களும் பயன்படுத்தப்படுவதில்லை. கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற நெகிழ்வுப்பைகளுக்குள் அடைக்கப்பட்டவற்றைக்கூட இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாக்டீரியா நீக்கம் செய்ய இயலும். இன்னும் சொல்லப்போனால் சீல் செய்யப்பட்ட மருந்துகளில் இருந்துகூட பாக்டீரியா நீக்கம் செய்ய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது.
அதெல்லாம் இருக்கட்டும். நம்முர் சாமானியனுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவுமா?
ஒரு கட்டுச்சோற்று பொட்டலத்தையோ, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தையோ நீண்ட நாட்கள் பாதுகாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி
- இரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி
- சிறிய ரோபோ... பெரிய உதவி..
- மனம் என்பது என்ன?
- பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்
- நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
- வண்ண விளக்குகளின் ரகசியம்
- இசை மருத்துவம்
- பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?
- ஒளிரும் கிண்ணம்
- காரோட்டிகள் கண் அயர்ந்தால் என்ன ஆகும்?
- அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ
- செயற்கைக்கால் மம்மி
- தொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு.
- இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
- வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..
- இறந்தவர் உடலை பாதுகாக்க
- வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
- பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்