Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்பெனும் அடைக்கும் தாழ்!

2. ஒளிவதற்கு இடமில்லை!

3. குழந்தைக்குப் பாலூட்டினால் அம்மாவுக்குத் தங்க வளையல்?!

4. சட்டசபையில் ‘ருசிகர’ சம்பவம்?!

5. சில கேள்விகள்!

6. மனைவி, துணைவி - என்ன வித்தியாசம்?

7. சிக்கன் குனியாவுக்கு யார் பொறுப்பு?

8. திரைப்படம்... திட்டம்... தீர்ப்பு..!

***********

ராத்திரி பஸ்ல வந்தியா?: பாஸ்கர் சக்தி

மாற்றப்படும் பெயர்களும் மாறும் முகங்களும்:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

வள்ளுவனைத் தேடி:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஜூலை இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




ManithanManithan
(மனிதனின் மின்னஞ்சல் முகவரி: [email protected])

வாசகர்கள் கவனத்துக்கு

நடைமுறை சிக்கல்களினால் தீம்தரிகிட இணைய இதழ் ஜூலை 2006க்குப் பிறகுப் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் & செப்டம்பர் 2006 இதழ்கள் தற்போது மொத்தமாக செப்டம்பர் 15 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு மாதமும் 5ந்தேதி இதழ் புதுப்பிக்கப்படும்.

தீம்தரிகிட இதழுக்கு கதை, கவிதை, கட்டுரைகள், கடிதங்கள், மனிதன் பதில்கள் பகுதிக்குக் கேள்விகள் எழுத விரும்புவோர் அவற்றை தமிழில் tam, tsc போன்ற ஏதேனும் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். வெளியிடுவது பற்றிய ஆசிரியரின் முடிவே இறுதியானது. வெளியிடப்படும் கருத்துக்களுக்கும் விளைவுகளுக்கும் தீம்தரிகிட பொறுப்பாகாது. எழுதியவரே பொறுப்பாவார்.

மனிதன் பதில்கள்

தேர்தல் வாக்குறுதி தந்தபடி இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை கலைஞர் கருணாநிதி அரசு வழங்குகிறதே?

இதில் பெருமைப்பட ஏதுமில்லை. கலைஞரின் ஆட்சிக் காலத்தை (1969-1976 , 1988-89, 1996-2001) பரிசீலித்தால், முதல் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் புதிய தலைமுறைகளைக் குடிப் பழக்கத்துக்கு உள்ளாக்கி, அடித்தட்டு பெண்கள் வாழ்க்கையை இன்று வரை சிக்கலாக்கிய களங்கத்தை அவர் வரலாற்றிலிருந்து துடைத்து எறியவே முடியாது. இலவச டி.வி பெட்டி இரண்டாவது களங்கம். குடும்ப வியாபாரத்துக்கு உதவுவது, அசல் பிரச்சினைகளிலிருந்து மக்களை திசை திருப்புவது என்ற இரண்டு அற்ப நோக்கங்களைத் தவிர இதில் வேறு எதுவுமில்லை. தமிழ்நாட்டில் 90 லட்சம் குடும்பங்களுக்குக் கழிப்பறை இல்லை. மனக் கழிவுகளை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கு உடல் கழிப்பறைகளைக் கட்டித் தருவதில் ஆதாயம் இல்லை.

அதே சமயம் கருணாநிதி இப்போது வீசியிருப்பது இரு பக்கமும் வெட்டக் கூடிய கத்தியாகும். டி.வி இப்போது சன் டிவி பிடியில் சிந்திக்கவிடாமல் மூளைச் சலவை செய்யும் பொழுதுபோக்கு சாதனமாக நீடிக்காமல், இதர முயற்சிகளினால் சிந்திக்கத் தூண்டும் சாதனமாக மெல்ல மெல்ல மாற்றப்பட்டால், விழிப்பு பெறக் கூடிய மக்கள் முதலில் நிராகரிக்கப்போவது கருணாநிதி - ஜெயலலிதா பாணி அரசியலைத்தான். அப்படி ஒரு கனவு நனவாகும் காலத்தில் கருணாநிதி இருக்கமாட்டார். குடும்ப வியாபாரத்தில் தொடர்ந்து கொள்ளுப் பேரன்கள் இருக்கக்கூடும்.

ஜயேந்திரர் மீதான கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் கருணாநிதி அரசு ஈடுபட்டிருப்பதாக ஜெயலலிதா கூறுவது உண்மையா?

கூறுவது ஜெயலலிதா என்பதற்காக, இந்த உண்மையை சந்தேகிக்கத் தேவையில்லை. கருணாநிதியின் காஞ்சித் தலைவன் யார் என்பது இப்போது வெளிச்சமாகிவிட்டது. வீரமணி, கொளத்தூர் மணி, சீமான், சுப வீரபாண்டியன் வகையறாக்கள் வேண்டுமானால் கருணாநிதியை பகுத்தறிவாளர் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கலாம். ஜயேந்திரர் கைது சமயத்திலேயே மாலுமியை மாற்றி மடத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றவர் கருணாநிதி. தேர்தலுக்குப் பின் கும்பகோணத்தில் கோ.சி.மணி ஜயேந்திரரை சந்தித்தது பற்றி அதிர்ச்சியடைந்து விளக்கம் கேட்டிருப்பதாகச் சொன்னவர் இன்று வரை அந்த விளக்கம் என்ன, அதில் தான் திருப்தியடைந்து விட்டாரா என்று சொல்ல வில்லை. கருணாநிதி நவீன பார்ப்பனர். அவர் சங்கர மடத்தைக் காப்பாற்றுவதில் எந்த ஆச்சரியமும் நமக்கு இல்லை.

விசாரணை அதிகாரியாக இருந்த பிரேம்குமார் மருத்துவமனையில் இருக்கும் அப்ரூவரை சந்தித்து தப்பித்து ஓடும்படி சொன்னதாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருணாநிதி அரசு அறிவித்திருக்கிறது. அப்ரூவர் ஓடிப் போனால் யாருக்கு லாபம்? குற்றம் சாட்டப்பட்ட ஜயேந்திரருக்குத்தானே? அப்படியானால் பிரேம்குமார் ஜயேந்திரர் சார்பாக இருப்பதாக அரசு சொல்கிறதா? சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்த்து நடந்த காங்கிரஸ் மாணவர் கிளர்ச்சியில் போலீஸ் அராஜகத்தில் இறந்த மாணவர் உதயகுமார் உடலை தன் மகன் உடல் அல்ல என்று அவர் தந்தையையே சொல்லவைத்த ஆட்சி கருணாநிதி ஆட்சி.

இலங்கைப் பிரச்சினையில் மறுபடியும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று விடுதலைப்புலிகள், இலங்கை அரசு இருவருமே அறிவித்திருக்கிறார்களே?

ஆம். பேச்சு வார்த்தை, ஜனநாயக வழி, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதுதான் நிஜம். மீதி எல்லா வழிமுறைகளும் இலங்கையில் இருக்கும் ஈழத்தமிழர்கள், சிங்களவர்கள் இருவருக்குமே துயரத்தை மட்டுமே ஏற்படுத்தும். புலிகள் தலைவரை சந்திக்க அழைத்துச் செல்லப்பட்ட படைப்பாளிகள் மகேந்திரனும் பாரதிராஜாவும், சிங்கள அரசால் கௌரவிக்கப்படும் ஹிந்து ராமும் தங்கள் நண்பர்களுக்கு ஏன் இந்த ஆலோசனையைச் சொல்லத் தவறுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு எல்லா ஊக்கத்தையும் அளிக்க வேண்டும். தமிழர்களின் துயர் துடைக்க அதுவே வழி.

ஜைன சாமியாரின் நிர்வாண யாத்திரையை மேட்டூரில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆட்சேபித்ததைப் பற்றிக் காலச்சுவடு கடுமையாக எழுதியது சரியா?

சாமியாரின் நிர்வாண யாத்திரையை பெரியார் திராவிடர் கழகம் கடுமையாக எதிர்த்திருக்கவும் தேவையில்லை. அதற்காக காலச்சுவடு கடுமையான வாசகங்களைப் பயன்படுத்தியிருக்கவும் தேவையில்லை. நிர்வாணம் பற்றி ஆரோக்கியமான ஒரு விவாதம் மாற்று கலாசார தளத்திலேனும் நடப்பதற்கான வாய்ப்பை இத்தகைய அணுகுமுறைகள் குலைத்து விடுகின்றன. தமிழ் திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் வெகு ஜன இதழ்களிலும் பெண் உடல் அரை நிர்வாணமாகப் பயன்படுத்தப்பட்டு சமூக மனமே புரிதலற்ற வெற்றுக் காமத்தில் தோய்த்தெடுக்கப்படுவதுதான் நமது முதல் கவனத்துக்குரியது. அத்துடன் ஒப்பிடுகையில் ஜைன சாமியாரின் நிர்வாணம் சமூகத்தை எந்த விதத்திலும் சீர்கெடுத்துவிடப் போவதில்லை. உலக அளவில் இன்று ஐரோப்பிய நாடுகளில் நிர்வாண ஓட்டப் போட்டிகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. ஸ்பெயின் நாட்டில் சோப்பெலானா என்ற கிராமத்தில் மூன்றாண்டுகளாக நிர்வாண ஓட்டப் போட்டி (மேரதான் ரேஸ்) நிகழ்த்தப்படுகிறது. தலையில் தொப்பியும் காலில் ஷூவும் தவிர வேறு எதுவும் அணிவதில்லை. இந்தச் சமூகங்கள் நிர்வாணத்தை எப்படிப் பார்க்கின்றன என்பதை அறிந்து கொள்வது நமக்கும் பயன்படும்.

வந்தே மாதரம் பாட்டு ஏன் சர்ச்சையாக்கப்பட்டது?

தாய்நாட்டுக்கு வணக்கம் கூறும் விதமாக ‘வந்தே மாதரம்‘ என்று தொடங்கும் இந்தப் பாடல் அடிப்படையில் மதச் சார்பற்ற பாடல் அல்ல என்பதுதான் எல்லா சர்ச்சைகளுக்கும் காரணம். பாடல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திரர் 1881ல் எழுதிய ‘ஆனந்தமடம்’ தொடர்கதையில் முதலில் இடம் பெற்றது. இந்த நாவலே முஸ்லிம் ஆட்சியிலிருந்து தாய் நாடான வங்கத்தை விடுவிக்கப் போராடும் ஹிந்து சாமியார்களைக் கதாநாயகர்களாகக் கொண்டது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1896ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் இதை முதலில் பாடினார். பாடலின் கடைசி மூன்று கண்ணிகளில் ஹிந்துக் கடவுள்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் தாய் நாடும் ஒரே உருவமாகப் போற்றப்படுகிறார்கள்.

‘ஆலயந்தோறும் அணி பெற விளங்கும் தெய்விகச் சிலையெலாம், தேவி, இங்கு உனதே’ என்று வரும் பாடலை உருவ வழிபாட்டிலும், பல தெய்வ வழிபாட்டிலும் நம்பிக்கையற்ற முஸ்லிம்கள் பாடவேண்டுமென்று எதிர்பார்ப்பதே தவறானதாகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி தாயை எவ்வளவு மதித்தாலும் தொழமுடியாது. தொழுவவ் என்பது உருவமற்ற ஒற்றை இறைவனுக்கு மட்டுமே உரியது.

விடுதலைப் போராட்டத்தின் போது வந்தே மாதரம் எழுச்சி மிக்க கோஷமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அப்போதும் அது ஹிந்து விடுதலை வீரர்களின் கோஷம்தான். முஸ்லிம் விடுதலை வீரர்கள் மத்தியில் இன்குலாப் ஜிந்தாபாத்தும் அல்லாஹூ அக்பரும்தான் முக்கியமாக இருந்தன. நம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் வசதியாக மறந்துவிடும் முக்கிய விஷயம் ஒன்று உண்டு. ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுந்த ஆரம்பப் போராட்டங்கள் எல்லாம் ஹிந்து அல்லது முஸ்லிம் மத உணர்ச்சியின் அடிப்படையில் தொடங்கியவைதான். 1806ன் வேலூர் புரட்சியும் சரி, 1857ன் வட இந்திய சிப்பாய் கிளர்ச்சியும் சரி, முஸ்லிம், ஹிந்து மத நம்பிக்கைகளை அந்நியரும் வேற்று மதத்தினருமான ஆங்கிலேயர்கள் இழிவுபடுத்துவதாக ஏற்பட்ட கோபத்தில்தான் இந்தக் கிளர்ச்சிகள் தொடங்கின. தனித்தனியே ஆங்கிலேயருக்கு எதிராக இருந்த ஹிந்து, முஸ்லிம் உணர்வுகளை இணைப்பதை காந்திஜிதான் சாதித்தார். ஆனால் அவரும் விடுதலைப் போராட்டத்திலிருந்து மத உணர்ச்சிகளை முற்றாக நீக்கவில்லை. மதத்தை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது என்ற பார்வைக்கு உண்மையில் ஓரளவேனும் அடித்தளமாக அமைந்தது காங்கிரசுக்குள் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் நேரு-அம்பேத்கர் ஆகியோரின் அணுகுமுறைகள்தான்.

இன்றைய சூழலில் மத உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைக்ககூடிய புதிய கோஷங்கள உருவாக்கவேண்டுமே தவிர, எந்தப் பழைய கோஷமும் கூடவே பழைய விரோதங்களையும் சேர்த்தேதான் அழைத்துவரும்.

மதக் கலவரங்களைத் தூண்டி விடுவது யார்?

மதத்தை அரசியலுக்காக பயன்படுத்த நினைப்போர் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள்தான் தூண்டி விடுபவர்கள். சூழலைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்.

உதாரணமாக, பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் மலேகாவ்ன் நகர குண்டு வெடிப்புக்குப் பிறகு உடனடியாக சிவசேனையின் சாம்னா இதழில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் போட்ட தலைப்பு என்ன தெரியுமா ? ‘அவர்கள் விதைத்ததை அவர்கள் அறுவடை செய்கிறார்கள்!’ ‘பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது என்பதை இப்போதாவது முஸ்லிம்கள் உணர்ந்து தேசத்துக்கு விஸ்வாசமாக இனி இருக்க வேண்டும்’ என்று அறிக்கை விடுகிறார் உதவ் தாக்கரே. இப்படிப்பட்ட அறிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை.

வன்முறையும் பயங்கரவாதமும் மத அடிப்படையில் நடத்தப்பட்டாலும் மதத்தின் பெயரால் நடத்தப்பட்டாலும், அதை எதிர் கொள்வஅடிப்பட சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். வன்முறையிலும் பயங்கரவாதச் செயலிலும் ஈடுபட்டவர் எந்த மதம் என்பவன்முற முக்கியமல்ல. அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

உண்மையில் எந்த மதக் கலவரமும் மத அடிப்படையில் தூண்டப்பட்டாலும் அசல் நோக்கம் மதத்தின் மேம்பாடோ வளர்ச்சியோ அல்ல. பல உள்ளூர் பொருளாதார, சமூகக் காரணங்கள் கலந்தே இருக்கின்றன. இந்தியா முழுவதும் கடந்த முப்பதாண்டுகளில் மதக் கலவரங்கள் கிராமங்களில் நடக்கவில்லை. வளர்ந்து வரும் நகரங்கள், டவுன்கள், வியாபார நகரங்களில்தான் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை ஆய்வு செய்தவர்கள், உள்ளூர் வணிகர்களிடயே இருக்கும் வர்த்தகப் போட்டியில் மதமும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.

மராட்டியத்தில் மசூதி தொழுகை சமயத்தில் குண்டுகள் வெடித்து பலரை பலி கொண்ட மலேகாவ்ன் நகரில் 80 சதவிகித மக்கள் முஸ்லிம்கள். பெரும்பாலோர் நெசவுத் தொழிலாளர்கள். ஆனால், சொந்தத் தறிகள் இல்லாதவர்கள். தறி உரிமையாளர்கள் பெரும்பாலும் ஹிந்துக்கள். வறுமையும் அடிப்படை வசதிகளும் வேலை வாய்ப்பும் இல்லாத நிலமைகளும் மலேகாவ்ன் போன்ற ஊர்களில் இரு மதத்து இளைஞர்களையும் திசை திருப்புகின்றன. ‘சாலையோரம் வேலையற்றதுகள். வேலையற்றதுகள் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்’ என்று அண்ணா எழுதுவார். அதே நிலைதான். எட்டு லட்சம் பேர் வாழும் ஊரில் இரண்டே பொது மருத்துவமனைகள். ஒவ்வொன்றிலும் வெறும் 30 படுக்கைகள். குண்டு வெடிப்பின்போது பலர் சிகிச்சை உடனடியாகக் கிடைக்காததால் ரத்தம் பெருகி இறந்தார்கள்.

வறுமையில் திசை தெரியாமல் தடுமாறும் மக்களுக்கு இருக்கும் ஒரே வலி நிவாரண மருந்து சினிமாதான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடைய பல சாமான்ய மனிதர்களைக் கொண்டு படு லோ பட்ஜெட்டில் படங்கள் தயாரித்து வெளியிட்ட ஒரே இந்திய நகரம் இப்போது குண்டு வெடித்திருக்கும் மலேகாவ்ன்தான்.

இந்தப் படங்கள உள்ளூரில் இருந்த வீடியோ பார்லர்களில் ரெகுலர் காட்சிகளாகத் திரையிட்டு அவை பெரும் வெற்றியும் அடைந்தன. ரங்கீலா, கரன் அர்ஜுன், லகான், ஷோலே ஆகிய ஹிட் படங்களின் கதையை லேசாக மாற்றி மலேகாவ்ன் கே கரன் அர்ஜுன், மலேகாவ்ன் கா ரங்கீலா என்று பெயர் சூட்டப்பட்டது.

படத் தயாரிப்பாளர் மின்சார வாரியத்தின் லைன்மேன். ஒளிப்பதிவாளர் உள்ளூர் கல்யாண வீடியோ எடுப்பவர். நடிகர்கள்? படத் தயாரிப்புக்கு பணம் தரும் யாரும் நடிக்கலாம். மொத்த பட்ஜெட் 30 ஆயிரம் ரூபாய். ஆளுக்கு ஆயிரம், 2000 என்று கொடுத்து பல தினக்கூலி நெசவுத் தொழிலாளர்கள் கூட அமிதாப், அமீர்கான் பாத்திரங்களில் நடித்தார்கள் மும்பை பாலிவுட்டிலிருந்து வரவழக்கப்பட்ட துணை நடிகைகள் கதாநாயகிகளானார்கள்.

ஒளிப்பதிவாளருக்கு கிரேன், டிராலி போன்ற சாதனங்கள் எதுவும் கிடையாது. உள்ளூர் மாட்டு வண்டி கிரேனாகிவிடும். சைக்கிள்தான் டிராலி. மலேகாவ்ன் கி லகான் படத்தின் கதைப்படி உள்ளூர் சைவ மகாராஜாவை முட்டை சாப்பிடும்படி ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அவர் மறுக்கிறார். கிராமத்துக்கு மின்சாரம் வெட்டப்படுகிறது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் கிரிக்கெட் ஆடி ஜெயித்து மறுபடியும் மின்சாரம் பெறுவதுதான் கதை. ஆங்கிலேயர்களாக நடிக்க, உள்ளூரில் வெள்ளையாக இருந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

வெற்றிகரமாக இரண்டாண்டுகளுக்கு மேல் நடந்த மால்காவ்ன் திரை உலகம் சமீபத்தில் மூடப்பட்டுவிட்டது. காரணம் அரசாங்கம் வீடியோ தியேட்டர்களுக்கு தடை விதித்ததுதான்.

மால்காவ்ன் சினிமாக்களில் மத வேறுபாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஹிந்து முஸ்லிம் என்று இருசாராரும் இந்தப் படங்களில் பங்கேற்றார்கள்!

எப்போதும் காதலிப்பதாக நடித்துக் கொண்டே இருப்பவர்கள் நடிகர்கள். அவர்களுக்கு எப்படி அசல் காதல் வருகிறது?

சிறந்த நடிகர்கள் நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்று தெளிவாக இருப்பார்கள். இல்லாவிட்டால் ஒவ்வொரு பாத்திரத்தின் சுக துக்கத்தையும் தலைக்குள் சுமந்து கொன்டு திரிந்தால் பைத்தியம் பிடித்துவிடும். எனவே நடிப்புக் காதலை அவர்கள் அசல் காதலாகக் கருதுவதில்லை. அதையே அசல் என்று நம்பினால்தான், நிஜக் காதல் வராமல் போய்விடும். கூடவே நடிக்கிறவருடன் நிஜக் காதல் ஏற்படுவது என்பது தற்செயலானதுதான்.

தவிர நடிகருக்குக் காதல் வருமா, அரசியல் தலைவருக்குக் காதல் வருமா, விஞ்ஞானிக்குக் காதல் வருமா என்றெல்லாம் வித்தியாசப்படுத்திப் பார்க்கத் தேவையில்லை. எல்லா மனிதர்களுக்கும் காதல் வரும். வரும்போது சிலர் கவனிக்கத் தவறினால், போய்விடும். காதலுக்கு மிக முக்கியமான தேவைகளில் ஒன்று நேரம். போதுமான நேரம் ஒதுக்காவிட்டால், காதல் கசங்கிவிடும்.

எப்போதும் அதிகார போதையில் இருப்பவர்கள் கூட காதலிலிருந்து தப்பமுடியாது. கொலை பாதகன் என்று உலகமே இன்னமும் பழிக்கும் ஹிட்லர் தற்கொலை செய்யும் வேளையில் காதலியை திருமணம் முடித்துப் பின் அவளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த நிகழ்ச்சி காதலின் சிகரங்களில் ஒன்று. அது மட்டுமல்ல. விடலைப் பையனாக இருந்தபோது ஹிட்லர் காதலித்த தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. ஹிட்லரின் ஒரே பால்ய கால சிநேகிதன் ஆகஸ்ட் க்யூபிசெக் 70 வருடம் முன்பு எழுதிய புத்தகம் இப்போது முழுமையாக வெளியிடப்படுகிறது.

அப்போது ஹிட்லருக்கு 16 வயது. லின்ஸ் நகரத்தில் ஸ்டீஃபேன் இசாக் என்ற பேரழகி ஒருத்தியை தெருவில் பார்த்த நாள் முதல் ஹிட்லர் காதலில் விழுந்தான். தினமும் அவளைப் பார்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தில் ஹிட்லரும் க்யூபிசெக்கும் தெருவில் காத்திருப்பார்கள். எப்போதாவது ஒரு நாள் ஸ்டீஃபேன் ஹிட்லர் பக்கம் திரும்பி புன்னகைப்பாள். அன்று நாள் முழுவதும் ஹிட்லரின் உற்சாகத்தை சொல்லி மாளாது என்கிறார் க்யூபிசெக். ஸ்டீஃபேனைப் பற்றி எல்லா விவரங்களும் திரட்டி ஹிட்லருக்கு தரும் வேலை க்யூபிசெக்குடையது. ஸ்டீஃபேன் மிகப் பெரிய பாடகியாக வருவாள் என்று ஹிட்லர் நினைத்தாராம். ஆனால் ஹிட்லர் அவளுடன் ஒரு வார்த்தை கூடப் பேசியது இல்லை. இப்படியே நான்கு வருடங்கள் ஹிட்லர் ஸ்டீஃபேனை ஒரு தலையாக காதலித்ததாக க்யூபிசெக் சொல்கிறார். ஸ்டீஃபேனைப்பற்றி நிறைய கவிதைகளும் ஹிட்லர் எழுதினாராம்.

ஹிட்லரின் சொல்லாத நிறைவேறாத காதலுக்குரிய ஸ்டீஃபேன் ஒரு யூதப் பெண்!

இந்த வாரப் புதிர்:

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ராஜேந்திரா என்ற ஒரு ஊழியரின் சிகிச்சைக்காக கர்நாடக அரசு இதுவரை 13 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறது.

யார் அந்த ஊழியர்?

1. தலைமை அர்ச்சகர்
2. நாதசுர வித்துவான்
3. கோவில் நந்தவனத் தோட்டக்காரர்.

மூவரும் அல்ல. ராஜேந்திரா ஒரு யானை. மூன்று வருடக் குட்டியாக 21 வருடங்கள் முன்பு கொல்லூர் கோவிலுக்கு வந்த ராஜேந்திரா சில வருடங்களாக மதம் பிடித்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. காட்டு முகாமுக்கு அழைத்துச் சென்று இதுவரை 13 லட்ச ரூபாய் செலவழித்தும் ராஜேந்திராவை குணப்படுத்த முடியவில்லை.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com