 |
ஞாநி
மனைவி, துணைவி - என்ன வித்தியாசம்?
தவறாமல் ‘ஓ’ பக்கங்கள் படித்துவிட்டு விமர்சிக்கும் ஒரு நண்பர், சென்ற வார கேள்விகளைப் படித்துவிட்டு, ஒரு சவால் விடுத்தார். ‘‘ஒவ்வொரு வாரமும் பத்து கேள்விகள் தருவேன். அதில் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். ஆனால், எந்தக் கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்லத் தயாரா?’’ என்றார். ‘‘இதுதானே உன் முதல் கேள்வி? இதோ பதில்... ஓ!’’ என்றேன்.
பத்தில் ஐந்தைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தேன்.
1. தி.மு.கவின் நூறு நாள் ஆட்சி எப்படி?
முதல் நூறு நாள் ஆட்சியை விமர்சிக்கத் தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்பு வரும் நூறு நாள் ஆட்சியே நம் கவனத்துக்குரியது. உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு, கவர்ச்சி வாக்குறுதிகளை உடனடியாக ஓரளவேனும் நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயம் தி.மு.க. அரசுக்கு இருந்தது. அதனால் ஏற்படும் நிதி நிலை நெருக்கடிகளை அடுத்த நூறு நாட்களில் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் ஆட்சி பற்றிய உண்மையான உரைகல். லாட்டரியும், கள், சாராயக் கடைகளும் மறுபடியும் வராமல் சமாளித்தால், தி.மு.க. அரசு நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியது. பொருளாதாரம், நிர்வாகம் இவற்றைவிட இப்போதைய தி.மு.க. அரசு, சமூக நீதித் துறையில் அதிக மார்க் வாங்குகிறது.
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?
அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.
எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.
தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.
3. துணைவி, மனைவி - என்ன வித்தியாசம்?
சமீபத்தில் என்னை அதிர வைத்த விஷயம் & ஒரு பிரபல படைப்பாளியின் திருமணப் பொன்விழாவில் அவரது துணைவியும் கலந்துகொண்டு வாழ்த்தியதாகும். பொது வாழ்க் கையில் இருக்கும் பெண்கள் கணவர், துணைவர் சகிதம் பகிரங்க மேடைகளில் தோன்றும் புரட்சிகரமான நாள் அடுத்த 50 ஆண்டுகள் கழித்து வரக்கூடும்!
மனைவி, துணைவி என்பவை சட்டத்திலிருந்து தப்புவதற்காக தமிழர்கள் கண்டுபிடித்த இரண்டு சொற்கள் என்பதைத் தவிர, வேறு வித்தியாசமில்லை. மனைவி என்பவர் நிச்சயம் துணைவியும்கூடத்தான். ஆனால், துணைவிகள் எல்லாம் மனைவிகளாக இருக்கத் தேவையில்லை. ஆங்கிலத்தில் இது போல ஷ்வீயீமீ என்றும், நீஷீனீஜீணீஸீவீஷீஸீ என்றும் னீவீstக்ஷீமீss என்றும் குறிப்பிடும் வழக்கம் இல்லை. அங்கே கம்பானியன், மிஸ்ட்ரஸ் என்ற சொற்கள் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவரைக் குறிக்கின்றன. இரண்டாவது, மூன்றாவது வீடுகளைக் குறிப்பன அல்ல. அதற்குப் பயன்படுத்தும் சொல் நீஷீஸீநீuதீவீஸீமீ. சட்டப்படி பல தார மணம் என்பது சரியல்ல என்பதால், ஒருவரின் இரண்டு துணைவிகளில் ஒருவரை மட்டுமே மனைவி என்று குறிக்கும் பழக்கம் தமிழ் மீடியாவால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மனைவியைக் குறிக்க என்ன செய்வார்கள்? தோழி, சிநேகிதி, சகி? கடைசி சொல் பொருத்தமாக இருக்கும். சகித்துக்கொள்பவள் சகியல்லவா?
4. கல்லூரி படிக்கும் பையன்களும் பெண்களும் எத்தனை மணிக்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்?
முப்பது ஆண்டுகளுக்கு முன், சென்னை கீழ், நடுத்தர வகுப்புக் குடும்பம் ஒன்றில் விதித்திருந்த கட்டுப்பாடு & பையன்கள் 7 மணிக்கு முன்னரும், பெண்கள் 6 மணிக்குள்ளும் திரும்பி விட வேண்டும். இன்று அதே குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் இரு பாலாரும் இரவு 10 மணிக்குதான் திரும்புகிறார்கள். உண்மை என்னவென்றால், அந்தக் காலத்தை விட இந்தக் காலத்தில்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எங்கெங்கே போகிறார்கள், இந்த நிமிடம் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் கவலையுடன், திறமையுடன் கண்டறிந்தபடி இருக்கிறார்கள். தங்கள் தோளுக்கு மிஞ்சிய உயரத்தை பையனும், பெண்ணும் எட்டும்போது, அவர்களைத் தோழர்களாக நடத்தத் தொடங்கி விட்டால், இந்தச் சிக்கல்கள் இல்லை. அம்மாவை யும் அப்பாவையும் இன்னொரு ஆத்மார்த்த சிநேகிதராகக் குழந்தைகளை உணரச் செய்யும் பெற்றோர், நேரக் கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டி யிராது. குழந்தைகள் தாமே சுய கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.
5. குடித்துவிட்டு டியூட்டிக்கு வரும் போலீஸ்காரர் களை என்ன செய்யலாம்?
குடித்துவிட்டு டியூட்டிக்கு வருபவர் நல்லவர் என்று கருதும் நிலையை, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் குடித்துவிட்டுப் பொதுமக்கள் மீது கல் எடுத்து அடித்து ரகளை செய்த செய்தியைப் படித்தபோது, குடித்த பின்னரும் கடமையாற்ற டியூட்டிக்கு வருபவருக்குப் பாராட்டு விழாவே நடத்த லாம்தானே?! போலீஸ் துறையில் நேரடியாக ஐ.பி.எஸ். தேர்வாகி வரும் அதிகாரிகளின் தரம் மேலானதாக இருக்கும் என்ற கருத்தும் கற்பனைதான் என்று ஆக்கியிருக்கிறது நெல்லை மாநகர கமிஷனரான பீகார்காரர் ரவி மீதான குற்றச்சாட்டு. வேற்று மாநிலத்தில் வேலை பார்க்கும்போதே போதையில் இத்தனை ரகளை செய்வார் என்றால், சொந்த ஊரில் போட்டால் என்னவெல்லாம் செய்வாரோ? இப்படிப்பட்ட தவறுகளில் பிடிபடும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே போதாது. பொது இடத்தில் குடித்துவிட்டுத் தகராறிலும், வன்முறையிலும் ஈடுபட்டதற்கு வழக்குப் போட்டுக் கைதும் செய்ய வேண்டும்.
மேற்படி சம்பவத்தில் அதிகாரிக்கு மது விருந்து அளித்தவர் அரசு கான்ட்ராக்டர் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அதிகாரியின் போதை ரகளையைவிட இது இன்னும் ஆபத்தான விஷயம். அரசாங்க இயந்திரத்துக்கும் வியாபாரிகளுக்கும் இருக்கும் ஊழல் உறவின் ஒரு சிறிய அடையாளமே இது. இந்த ஊழல் களையப்பட்டால்தான், அதிகாரிகளின் அதிகார போதை முதல் சாராய போதை வரை தெளியும்.
இந்த வார விடுகதை :
மாதம் சுமார் 20 ஆயிரம் சம்பாதிக்கும் என் உறவினர் ஒருவர் இந்த வாரம் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால், ஒரு த்ரீ ஸ்டார் மருத்துவமனைக்குச் சென்றார். அவரை ஒரு நாள் அப்சர்வேஷனில் மருத்துவமனையில் தங்கச் சொன்னார்கள். டெபாசிட்டாகக் கட்டச் சொன்ன தொகை...
அ. 5 ஆயிரம். ஆ. 15 ஆயிரம் இ. 25 ஆயிரம்.
சரியான விடையை ஊகிப்பவருக்கு, மருத்துவமனை பக்கமே செல்லத் தேவையற்ற உடல் நிலை அமைய வாழ்த்துக்கள்!
விடை: 25 ஆயிரம். சுமார் 12 மணி நேரம் மட்டும் தங்கி, மூன்று சோதனைகளுக்குப் பின்னர், அதில் பில் தொகையாக ரூ. 5 ஆயிரம் கழிக்கப்பட்டு, மீதி 20 ஆயிரம் திரும்பக் கிடைத்தது.
ஆனந்தவிகடன் – 3/9/2006
|