 |
ஞாநி
சில கேள்விகள்!
தனிப் பேச்சிலும், கூட்டங்களிலும் நான் அடிக்கடி சந்திக்கும் கேள்விகள் சில பல உள்ளன. ஒரு கட்டுரை எழுதினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்கிற லௌகீகக் கேள்விகள் முதல், நீங்கள் ஏன் சினிமா எடுக்கவில்லை என்கிற தத்துவ(!)க் கேள்விகள் வரை இவற்றில் அடக்கம். பொதுப் பிரச்னைகள், வாழ்வியல் சிக்கல்கள், அரசியல், சமூகம் தொடர்பாக அண்மைக் காலத்தில் என்னிடம் அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளில் சிலவற்றைப் பார்ப்போமா?
‘‘கருணாநிதி, ஜெயலலிதா இருவரில் நீங்கள் யார் பக்கம்?’’
‘‘தமிழ்நாட்டு அரசியலின் சாபங்களில் இது ஒன்று. இருவரில் யாரோ ஒருவரின் பக்கம்தான் இருந்தாக வேண்டும் என்று இரு தரப்பு ஆதரவாளர்களும் நினைக்கிறார்கள். எதிரியின் எதிரி நண்பன் என்கிற சாணக்கிய இலக்கணத்தை மாற்றி, தன்னை விமர்சிப்பவன் எதிரியின் நண்பன் என்றும், எதிரியை விமர்சிப்பவன் தன் நண்பன் என்றும் குழப்பும் அரசியல் சூழல் இங்கு நிலவுகிறது.
நபர் அடிப்படையில் இல்லாமல் பிரச்னையின் அடிப்படையில் விமர்சிப்ப தைப் புரிந்துகொள்ளாத சூழல் இருப்பதற்குக் காரணம், இங்கு அரசியலே நபர்களைச் சுற்றி மட்டுமாக நடத்தப்படுவதுதான். மக்கள் பக்கம் மட்டுமே விமர்சகர்களும் பத்திரி கைகளும் இருக்க முடியும். வேறு யார் பக்கமும் இருக்க முடியாது. சமயங்களில் மக்களே உண்மையின் பக்கம் இல்லாமல் மயக்கத்தில் விலக நேர்ந்தால், அப்போது மக்களை விமர்சிப்பதுகூட நேர்மையான மீடியாவின் கடமை!
‘‘திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு, காதலில் போட்டி, அதனால் கொலை, தற்கொலை எல்லாம் அதி கரித்து வருவதற்குக் காரணம் கால் சென்டர் கலாசாரம் தானே?’’
‘‘மேற்கண்ட சமாசாரங்கள் எல்லாம் காலங்காலமாக இருந்து வருபவை. இப்போது அவை அதிகரித்துவிட்டதாகக் கருத முடியாது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, சம்பவங் களின் எண்ணிக்கையும் அதிகரித் திருக்கிறது. அவ்வளவுதான்! இப்போது தகவல் தொடர்பு மீடியா பிரமாண்டமாகப் பெருகிவிட்டதால், அவை நம் கவனத்துக்கு வருகின்றன.
இன்றைய வாழ்க்கை முறையில் சில பிரத்யேகச் சிக்கல்கள் நம் கவனத் துக்குரியவை. இவற்றை கால் சென்டருக்கு மட்டும் உரிய கலாசாரம் என்று பார்க்க முடியாது. இன்று பல துறைகளில், நிறைய இளைஞர்களுக்கு 20 & 30 வயதுக்குள்ளேயே 20 ஆயிரம் 30 ஆயிரம் என்று மாதச் சம்பளம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டிருப்பது ஒரு சிக்கல். சராசரித் தேவைகளுக்கு இவ்வளவு பணம் தேவையில்லை என்கிறபோது, உபரிப் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், சேமிக்கும் பழக்கமும் இல்லாமல் நுகர்வோர் கலாசாரத்தில் சிக்குகிறார்கள்.
காதலைப் பொறுத்தமட்டில் இன்று ஓர் இளம்பெண்ணிடம் குறைந்தபட்சம் மூன்று பையன்களாவது தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பையனுக்கோ ஒரு பெண் அவனை விரும்பினாலே, அது மிகப் பெரும் வாய்ப்பு என்கிற நிலை. எனவே, அப்படிக் கிடைத்த ஒரு காதலியை இழக்க விரும்பாத ஆண் மிகவும் பொசஸிவ்வாகி, அது கொலை, தற்கொலை வரை போய்விடுகிறது. ஆண்&பெண் உறவை, நட்பை, சிநேகிதத்தை ஆரோக்கியமானதாக ஆக்குவதற்கு நம் குடும்பங்கள் சீக்கிரம் முன்வராவிட்டால், இந்தச் சிக்கல்கள் இன்னும் கடுமையாவதுதான் நடக்கும்!’’
‘‘பள்ளிக்கூடத்தில் செக்ஸ் கல்வி சொல்லிக் கொடுத்தால், அபார்ஷன்கள் குறையுமா, அதிகரிக்குமா?’’
‘‘செக்ஸ் கல்வி என்றால் என்ன என்பதைப் பலரும் தப்பாகப் புரிந்துகொண்டு இருப்பதால்தான், இந்த மாதிரியான கேள்விகள் எழுகின்றன. செக்ஸ் கல்வி என்றால், உடல் உறவுகொள்வது எப்படி, கர்ப்பம் அடைந்துவிடாமல் பாதுகாப்பான உடல் உறவுகொள்வது எப்படி என்றெல்லாம் வகுப்பறையில் சொல்லித் தரப்படும் என்று பலர் கற்பனை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
வளரும் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஒவ்வொரு சிறுவனையும் சிறுமியையும் குழப்புகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்வதும், உடலையும் மனதையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளக் கற்றுத்தருவதும் செக்ஸ் கல்வியின் ஓர் அம்சம். சமூகத்தில் தன்னிடம் எதிர் பாலினத்தவர் வைக்கும் எதிர்பார்ப்புகளின் அடிப்படை என்ன, அதை எப்படி எதிர்கொள்வது என்று ‘ஜெண்டர் ரோல்’ பற்றி புரியச்செய்வது இன்னொரு அம்சம். தன் உடல் தேவைகள், மனத் தேவைகள் இரண்டையும் பூர்த்திசெய்ய முற்படுவதற்கு முன், எப்படிப்பட்ட மன முதிர்ச்சியும் பொறுப்பு உணர்வும் இருக்க வேண்டும் என்று சொல்லித் தருவது, செக்ஸ் கல்வியின் மூன்றாவது முக்கிய அம்சம்.
சில பெரியவர்களின் வக்கிரமான நடவடிக்கைகளிலிருந்து சிறுவர், சிறுமியர் தங்களைக் காத்துக் கொள்வது எப்படி, எது குட் டச், எது பேட் டச் என்று சொல்லித்தருவது செக்ஸ் கல்வியின் மிக முக்கியமான பகுதி. செக்ஸ் என்றாலே கெட்ட வார்த்தையாக மீடியாவும், சினிமாவும் ஆக்கி வைத்திருப்பதால்தான், செக்ஸ் கல்வி என்றால் தேவையற்ற பயங்கள் ஏற்படுகின்றன. இதை ‘வாழ்க்கைக் கல்வி’ என்று சொல்ல வேண்டும்!’’
‘‘சிலைகள் வைப்பது அவசியம்தானா?’’
‘‘வீட்டுக்குள் அப்பா, அம்மா போட்டோவை மாட்டிவைப்பது போல, நாட்டுக்கு உழைத்தவர்களுக்கு சிலை வைப்பதும் அவசியமானதுதான். இது ஒரு நினைவுகூரல். ஆனால், சிலைகளுக்கு மாலை மரியாதையெல்லாம் செய்து, அதை வழிபாடாக மாற்றுவதுதான் தேவையற்றது. முக்கியமான முன்னோடிகளை நினைவுகூர மட்டும் சிலைகள் தேவை என்று இல்லை. மக்களிடம் நல்ல கலை உணர்வை, அழகு உணர்வை ஏற்படுத்த அழகான சிற்பங்கள் எல்லாப் பொது இடங்களிலும் தேவை. தாசில்தார் அலுவலக வராந்தாவில் ரோடினின் சிந்திக்கும் மனிதனின் சிற்பத்தை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஐரோப்பா முழுவதும் தலைவர்களுக்கு மட்டுமல் லாமல், பொதுவான கலைச் சிற்பங்கள் தெருவுக்குத் தெரு வைக்கப்பட்டு இருக்கின்றன. அப்படிப்பட்ட சூழல் இங்கேயும் தேவைப்படுகிறது.
நமக்கு அது போல நல்ல சிலைகள் வைக்கத் தெரியாமல் இருப்பதால்தான், சிலைகள் மீது வெறுப்பு உருவாகிறது!’’
ஒரு விடுகதை. தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு குழந்தை சொன்ன விடுகதை இது.
‘மொத்தம் ஐந்து இனிப்புகள் இருக்கின்றன. ஆறு பேர் இருக்கிறோம். என்ன செய்யலாம்?’
இதற்குப் பதில் சொல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளினிக்குத் தெரியவில்லை. உங்கள் பதில் என்ன?
1. தனக்கு இனிப்பு வேண்டாம் என்று ஒருவர் விட்டுக்கொடுத்து விடலாம்.
2. ஒவ்வொரு இனிப்பிலும் கொஞ்சம் எடுத்து ஆறாவது நபருக்குத் தரலாம்.
3. இன்னொரு இனிப்பு வாங்கி வரலாம்.
ம்ஹ¨ம்! விடுகதை போட்ட குழந்தை சொன்ன பதில், மேலே சொன்ன எதுவும் இல்லை. அது இங்கே தலைகீழாகத் தரப்பட்டிருக்கிறது. காரணம், குழந்தைகள் உலகம் இன்று தலைகீழாகிவிட்டதை அந்த பதில் காட்டுவதுதான்!
விடை: ஆறு பேரில் ஒருவரைக் கொன்றுவிட வேண்டும்!
ஆனந்தவிகடன் – 27/8/2006
|