 |
பாஸ்கர் சக்தி
ராத்திரி பஸ்ல வந்தியா?
சென்னை போன்ற பெருநகரத்துக்கு முதன் முதலில் ‘ஏர்பேக்'ஐ தூக்கிக் கொண்டு, அம்மா அழுதபடி வைத்து விட்ட விபூதிக் கீற்றுடன், முயல் குட்டியின் பார்வை கொண்டு, அனுதினமும் பல்வேறு இளைஞர்கள் பல்வேறு ஊர்களில் பஸ் ஏறுகிறார்கள். அவ்வமயம் அவர்கள் அணிந்திருக்கும் உடைகளும், செருப்பும் புதுசாக இருக்கின்றன. ஆனால் புதுசின் மகிழ்ச்சியை நுகர முடியாதபடிக்கு மிரட்சி அவர்களை சூழ்ந்திருக்கிறது. அவர்களில் பலர் மாணவர்கள். மிகப் பலர் வருங்கால இயக்குனர்களும் அல்லது நடிகர்களும் ஆவார்(?)கள்.
மாணவனாக சென்னைக்கு வந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஊரிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு பஸ் பயணமும் அச்சுறுத்தல் நிறைந்தது. அப்போது அரசு விரைவுப் பேருந்துகளின் அதிபதியாக திருவள்ளுவர் இருந்தார். டி.டி.சி கவுண்டரில் டிக்கெட் வாங்குவதில் இருந்தே பயணத்தின் திகில் துவங்கிவிடும். ஒரு ‘மிலிட்டரி ரிட்டர்ன்' ஆள் அங்கே எப்போதும் போருக்கான ஆயத்த நிலையில் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார். ‘மெட்ராஸுக்கு ஒரு டிக்கெட்' என்று காசை நீட்டினால் ‘நீயுமா?' என்பது போல் பார்த்து விட்டுத்தான் டிக்கெட் தருவார். பெரும்பாலும் பஸ்ஸின் பின் சக்கரத்தின் மேலமைந்த ‘சீட்'டுத்தான் கிடைக்கும். சின்ன கல் மீது பஸ் ஏறினாலும் குடல் அதிரும் பயணம்.
‘கற்க கசடற' என்று சென்னைக்கு திருவள்ளுவரேறியதனால் ஒரே சமயத்தில் எனக்கு நகரம் மற்றும் கல்லூரி எனும் இரண்டு மகா அச்சுறுத்தல்கள். வயிறும், நெஞ்சும் கலங்கிப் போய் விடிய விடிய ஒரு விநாடி கூட தூக்கமின்றி விழித்திருந்தேன். ஓரிரவு முழுவதும் நீளும் பஸ் பயணம் அதுவே முதல் முறை. பஸ்ஸுக்குள் இரவு விளக்கெரிய, மங்கலான இருட்குகையின் வாயிலாக வேற்றுக்கிரகம் ஒன்றுக்கு பயணம் செய்யும் உணர்வு. மர்மம், பீதியும் நிறைந்த அன்னிய உலகம். எப்போதாவது கண் சொருகினால், ‘படக்'கென்று ஒரு மோட்டலில் நிறுத்தி... ‘சார் வண்டி அஞ்சு நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்டறவங்க சாப்டுக்கலாம்' என்று பஸ்ஸின் சைடு தகரங்களில் ‘படபட'வென்று அடிப்பார்கள். திடுக்கிட்டு விழிக்க நேரும். இல்லாவிடில் திருச்சி, விழுப்புரம், என்று நிறுத்தி ‘லைட்'டைப் போட்டு டிக்கெட் ஏற்றுவார்கள்.
முதன் முறையாக மோட்டலில் நின்றபோது எல்லாரும் சகஜமாக கீழே இறங்க, எனக்கு இறங்குவது குறித்து ஏகப்பட்ட தயக்கம். சூட்கேஸ் காணாமல் போய்விடுமோ எனும் பயம் ... ஆனால் இயற்கை உபாதை காரணமாக இறங்கித்தான் ஆக வேண்டிய சூழ்நிலை .... மிகவும் ஜாக்கிரதையாக பலமுறை சூட்கேஸைப் பார்த்து விட்டு பஸ் நம்பரை மனப்பாடம் செய்து கொண்டுதான் கீழிறங்கினேன்.
இறங்கிய பயணிகள் அந்நேரத்துக்கும் கசகசவென்று பேசிக் கொண்டு, டீ, சிகரெட், இளநீர், எல்லாம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு ஆள், அநியாயத்துக்கு பிஞ்சான இளநீரை அதன் காம்புப் பக்கமாக ‘பச்சக்' என்று ஒரே வெட்டாக வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இளநீரை முதன்முறையாக அப்படி முறைதவறி வெட்டுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. கேஸட் கடையில் திரு. ‘திண்டுக்கல்' லியோனி உரத்துச் சிரித்து, “பாட்டெழுதியிருக்காங்கேய்,
லவ்வுன்னா லவ்வு, மண்ணெண்ணை ஸ்டவ்வு,
உள்ளத்தைக் கவ்வு, வானத்தில் தவ்வு ன்னு
எப்பிடித்தேன் இவங்களுக்கு அய்டியா வரும்ணு தெரியல'' என்று பேசிக்கொண்டிருந்தார் (கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் எப்போது, எந்த மோட்டலில் பஸ், நின்றாலும், அங்கே லியோனியின் அட்டகாசம்தான். சில சமயம் பஸ்ஸுக்குக்குள்ளும் அவரது கேஸட்)
கட்டணக் கழிப்பறை வாசலில் அச்சுறுத்தும் தோற்றத்தில் (இவரைப் பார்த்தால் ஜெயில் ரிட்டர்ன்) ஒரு நபர் முறைப்பாக ஒண்ணுக்கா? கக்கூஸா? என்று அதட்டினார். ‘இப்படியே எதிர்ப்புற பஸ்ஸிலேறி ஊருக்குப் போய் விடலாமா' என்று தோன்றியது. இருளில் ஊர் எந்தத் திசை என்பது கூடத் தெளிவாய்ப் புலனாகவில்லை. ஆனால் ஊருக்குப் போய் பாதுகாப்பான எனது கூட்டுக்குள் அடைந்து கொள்ள வேண்டுமென்ற எனது அந்த நொடி உத்வேகத்தை அளவிடவே முடியாது.
ஆனால் எப்போதும் விருப்பங்களுக்கு எதிரான திசையில்தானே பயணம் அமைகிறது ... தலைநகரினை நோக்கிய எனது பயணங்கள் கல்லூரி, தேர்வு, விடுமுறை, அரியர்ஸ், அடுத்து வேலை எனத் தொடர்ந்தன.
துவக்ககால பஸ் பயணங்களிலே திகில் போன்று பிறிதொரு அம்சம் இருந்தது. அது இளைஞர்களை வசீகரிக்கக் கூடிய ஒரு புனைவு. தொலைதூர இரவு பஸ் பயணங்களில் உங்களிடம் பெண்கள் வசப்படக்கூடும் என்பதுதான் அது. பல நண்பர்கள் தங்களது பயணங்களைப் பற்றிக் கூறி என்னை வியப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்தினார்கள். பஸ்ஸில் பார்வை, தொடுகை என்று துவங்கி மேலும் கற்பனை செய்ய சிரமமான காரியங்களெல்லாம் அவர்களால் சுலபத்தில் முடிந்தது.
எல்லோரிடத்திலும் கதை சொல்லும் திறமை இருக்கிறது என்பதை அவர்கள் எனக்குப் புரிய வைத்தனர். ஆனால் நானறிந்த நிஜத்தில் கிளம்பி இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே பஸ்ஸுக்குள் கொட்டாவிகள் கிளம்பி காற்று மாசுபடுகிறது. ‘ரொமான்ஸ்' என்கிற சமாச்சாரமெல்லாம் அந்தக் காற்றிலே கரைந்து போய் காலையில் தாம்பரம் வருகையில் எண்ணெய் வழிகிற உப்பிப்போன மூஞ்சியுடன் ஒருவரை ஒருவர் பார்க்க கூசிக்கொண்டு இறங்கி ஓடுகிறோம். இதுதான் சத்தியம்.
நண்பர்கள் சொன்ன தகவல்களெல்லாம், ஏதோ ஒரு ஒற்றை வினாடி நிஜப்புள்ளியில் துவங்கி மேற்கொண்டு சுயமாக விரிந்த கற்பனைக் கோலம் என்கிற அனுமானத்துக்கு வருவதற்கு எனக்கு பல பஸ் பயணங்கள் தேவைப்பட்டன. நண்பர்களை குற்றஞ்சொல்ல முடியாது. ‘தடதட' வென்று தூக்கிப் போடும் பஸ்ஸில் தூக்கம் சுலபத்தில் வருவதில்லை. ஒரு அழகான பெண் பஸ்ஸில் ஏறி அமர்கிறாள். ஒரு வினாடி பார்வைகள் சந்தித்துக் கொள்கின்றன. விளங்காத டிரைவர் ‘சட்'டென விளக்கணைத்து விடுகிறார். கடந்து செல்கிற சாலை விளக்குகள் அவ்வப்போது பஸ்ஸினுள் வீசி எறிகிற வெளிச்சம் பஸ்ஸை ஒரு ‘மாயாலோகம்' போல உணரச் செய்கிறது. தன்னாலே கற்பனைக் குதிரை கிளம்பி விடுகிறது... என்னென்னவெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று தறிகெட்டு ஓடுகிறது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் கிடைக்கிற நண்பனிடம்... “ராத்திரி பஸ்ல...'' என்று துவங்கி கற்பனை வளம் சம்பவமாகப் பதிவு பெறுகிற மாற்றம் நிகழ்கிறது.
சக்கரத்தின் மேல் வயிறு குலுங்க அசௌகரியமாக பிரயாணம் செய்தாலும் பல நேரங்களில் நினைவு வைத்துக் கொள்ளத் தக்க சுவாரசியங்களும் நிறையவே நிகழ்ந்தன. ஒரு முறை கடும் மழையினூடே பஸ்ஸில் பயணம். திண்டிவனம் அருகே டிரைவர் பஸ்ஸை நிறுத்தி விட்டு சற்று முன்னாலிருந்த புளியமரத்தின் பின்னே ஒரு நிமிடம் மறைந்தார். மழை நின்றிருந்தது. பயணிகள் யாவரும் குளிருக்கு ஒடுங்கிப்போய் உறங்கிக் கொண்டிருந்தோம். காரியம் முடிந்ததும் டிரைவர் திரும்பி வந்து பார்த்தால் பஸ்ஸைக் காணோம். பெய்த மழையினால் ரோட்டின் இருபுறம் சகதி சந்தனமரைத்தது போல் ‘வழுவழு' என்றிருந்தது. பஸ் வாழைப்பழம் நழுவுவது போல சைடு வாக்கில் வழுக்கிக் கொண்டே போய் இரண்டு புளிய மரங்களிடையே பத்திரமாக ஒளிந்து கொண்டு விட்டது. முதன் முறையாக தான் இல்லாமலேயே பஸ் இயங்கியது கண்ட டிரைவர் பேரதிர்ச்சியுடன் எங்களை கூச்சலிட்டு எழுப்பினார். ‘எழுந்திங்கய்யா யோவ் ... பஸ்ஸு ரோட்டை விட்டு வந்திச்சு'
இந்த வாக்கியத்தின் தர்க்கம் முதலில் சுத்தமாகப் புரியவில்லை. பஸ்ஸை விட்டு இறங்கியதும்தான் விளங்கியது.
செடிகளினூடே நரிகள் போல் வெளிப்பட்டோம். பஸ்ஸின் வாசல் பக்கத்து தோட்டத்தில் இருந்தது.
"தம் பிடிச்சு தள்ளுங்கப்பா, மேல ஏத்திரலாம்'
பஸ்ஸை சிலர் தள்ளினர். பிறகு யாவரும் தள்ளினர். ஒன்றும் கதையாகவில்லை.
பிறகு பக்கத்து ஊரிலிருந்து டிராக்டர் வந்தது. பஸ்ஸை டிராக்டருடன் பிணைத்தார்கள். எல்லோரும் பஸ்ஸை விட்டு கீழிறங்கி நிற்க, காலி பஸ்ஸைக்கூட இழுக்க முடியாமல் டிராக்டர் திணறியது. ‘இழுய்யா... இழுய்யா' என்று பயணிகள் சத்தம் போட, டிராக்டரின் திறனை டிரைவர் அதிகரித்தார். டிராக்டரின் மகாசக்கரங்கள் நின்ற இடத்திலேயே சுற்ற, நாலாபுறமும் சேறும், சகதியும் சிதறின. பிரயாணிகள் அனைவரும் அம்மன் கோவிலுக்கு ‘சேத்தாண்டிவேசம்' போட்டது போலாகி விட்டோம். கடைசிவரை பஸ் ரோட்டுக்கு வர முடியாது என்று மறுத்து விட்டது. காக்கை, குருவிகள் சத்தமிட்டு பொழுது புலரத் துவங்கியது. என்ன செய்வதென்று தெரியாமல் குறைந்தபட்ச சுகாதார முயற்சியாக அருகிலிருந்த வேப்ப மரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கினோம். பிறகு அந்த வழியே வந்த வேறொரு திருவள்ளுவரில் ஏறி,
“கெடுப்பதூம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை''
என்கிற திருவள்ளுவர் வாய்மொழியை நினைவு கூர்ந்து வந்து சேர்ந்தோம்.
திருவள்ளுவர் போய், பேருந்துகள் பெயரிழந்தபின் சமீபகாலமாக சௌகர்யமான மிதவைப் பேருந்துகளில் பயணிக்கிற பழக்கம் வந்து விட்டது. ஏறி அமர்ந்து பக்கத்திலிருப்பவர் முகத்தைப் பார்ப்பதற்குள் படம் போட்டு விளக்கை அணைத்து விடுகின்றனர். எல்லா உலகத் தொலைக்காட்சிகளுக்கும் முன்னதாக, அன்று வெளிவந்த படம் கூட சமயத்தில் போடுகிறார்கள். பாதிப்படத்திலேயே அலுப்பு வந்து கண் மூடியவாறே ஒலிச்சித்திரம் கேட்டுக் கொண்டு பயணம் தொடர்கிறது. வழியிலுள்ள நகரங்களில் நுழையாமல் ‘பைபாஸ்' பாதைகள் வழியே சென்று, ஏதேனும் ஓரிடத்தில் ஒரு நிமிடம் நிறுத்தி, சில பஸ்களில் அப்படிக் கூட நிறுத்தாமல், அசுரத்தனமான வேகத்தில் வருகின்றனர். சமயங்களில் ‘டேங்கர் லாரி'களை ‘ஓவர் டேக்' செய்வதை ஜன்னல் சீட்டிலிருந்து பார்க்கையில் தோளின் அருகே சொர்க்க வாசல் தெரிகிறது. வாழ்வின் விளிம்பில் பயணிக்கிற பீதி ஏற்படுகிறது. விடியுமுன்னரே சென்னையில் கொண்டு வந்து போட்டு விடுகின்றனர்.
“ராத்திரி பஸ்ல வந்தியா? எப்படி இருந்தது பிரயாணம்?'' என்று எவரேனும் கேட்டால் ‘நேத்து இன்ன படம் போட்டான்' என்கிற ஒரு தகவல்தான் சொல்ல இருக்கிறது. இது எப்படி எனப் புரியவில்லை...
பழகிப் போன விஷயங்களில் சுவாரஸ்யம் குன்றி விடுவது இயல்புதான் போலிருக்கிறது. பீதி, கிளர்ச்சி, வியப்பு போன்ற உணர்வுகளை அனுபவம் மழுங்கடித்து விட்டதா? இது இழப்பா, ஆதாயமா புரியவில்லை.
தூக்கம் வராத பஸ் பயணங்களில் வாய்க்கிற சிந்தனைக் கூர்மை போல ஒன்று வேறு எந்த சந்தர்ப்பங்களிலும் வாய்ப்பதில்லை... அப்படி அபூர்வமாக வாய்க்கின்றதொரு இரவுப் பயணத்தின் போது ஒரு வேளை இக்கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.
|