Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்பெனும் அடைக்கும் தாழ்!

2. ஒளிவதற்கு இடமில்லை!

3. குழந்தைக்குப் பாலூட்டினால் அம்மாவுக்குத் தங்க வளையல்?!

4. சட்டசபையில் ‘ருசிகர’ சம்பவம்?!

5. சில கேள்விகள்!

6. மனைவி, துணைவி - என்ன வித்தியாசம்?

7. சிக்கன் குனியாவுக்கு யார் பொறுப்பு?

8. திரைப்படம்... திட்டம்... தீர்ப்பு..!

***********

ராத்திரி பஸ்ல வந்தியா?: பாஸ்கர் சக்தி

மாற்றப்படும் பெயர்களும் மாறும் முகங்களும்:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

வள்ளுவனைத் தேடி:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஜூன் இதழ்

ஜூலை இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
அ.ராமசாமி

மாற்றப்படும் பெயர்களும் மாறும் முகங்களும்

ரவி என்ற இளம் நடிகர் நடித்த முதல் படத்தின் பெயர் ஜெயம் . இச்சொல் வெற்றி என்ற பொருள் தரும் ஒரு வடமொழிச் சொல்.அப்படம் வியாபார ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததால் தனது பெயருடன் அதைச் சேர்த்துக் கொண்டுவிட்டார் ரவி. இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படத்தின் பெயர் something something எனக்கும் உனக்கும் . இத்தலைப்பில் இருந்த ஆங்கில எழுத்துக்களைப் பின்னர் சம்திங் சம்திங் எனத் தமிழ் எழுத்துக்களாக மாற்றி அச்சிட்டனர். இப்பொழுது ஆங்கிலத்தில் இருந்த something something என்பதும் இல்லை .தமிழில் எழுதப்பட்ட சம்திங் சம்திங் என்ற இரட்டைக் கிளவியும் இல்லை .

முதல் வாரத்தில் பாதி ஆங்கில எழுத்துகள்; பாதி தமிழ் எழுத்துக்கள். அடுத்த வாரம் மொத்தமும் தமிழ் எழுத்துக்கள் ; ஆனால் உச்சரிப்பு ஆங்கிலம். மூன்றாவது வாரத்தில் ஆங்கில எழுத்துக்களும் போய் விட்டன; ஆங்கில உச்சரிப்புச் சொற்களும் போய்விட்டன. இப்பொழுது வெறும் எனக்கும் உனக்கும் மட்டும்தான். முதல் வாரத்திற்குப் பின்னர் நடந்த மாற்றம் படத்தின் பார்வையாளர்களுக்குக் கூடுதலாகப் புரியும் தலைப்பைத் தர வேண்டும் என்ற ஆர்வம் எனச் சொல்லலாம். ஆனால் மூன்றாவது வாரத்தில் ஆங்கிலம் காணாமல் போனதற்குக் காரணம் பார்வையாளர்கள் அல்ல; அரசாங்கம் அறிவித்துள்ள கேளிக்கை வரி ரத்து என்ற சலுகையைப் பெற்றுவிட வேண்டும் என்ற ஆசை தான். அந்தப் படம் கேளிக்கை வரி ரத்து என்ற சலுகையைப் பெற்றதா என்று தெரியவில்லை.

அதைப் போலவே அந்தச் சலுகையைப் பெற்றுவிடும் துடிப்பில் எடுத்து முடித்த படங்களும், எடுத்துக் கொண்டிருக்கும் படங்களும் தமிழ்ப் பெயர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. சூர்யா நடித்து வெளிவரும் நிலையில் உள்ள ஜில்லென்று ஒரு காதல் இப்பொழுது சில்லென்று ஒரு காதல் என ஒரேயொரு எழுத்தை மாற்றிக் கொண்டதால் சுத்தத் தமிழ்ப் படமாக மாறிவிட்டது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் சிவாஜி,என்ற படத்தின் பெயரில் உள்ள கடைசி எழுத்து ஜியை மட்டும் மாற்றிக்கொண்டு விட்டால் போதும். சிவாசி ஆகித் தமிழாக ஆகி விடக் கூடும் போல. ஆர்யா என்ற படம் ஆரியன் என மாற்றிக் கொண்டு¢ கேளிக்கை வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்ளும். கமல்ஹாசன் பத்து வேடங்கள் ஏற்று நடிக்க தசாவதாரம் எனப் பெயர் சூட்டப்பட்ட படம், பத்துப் பிறப்புகள் எனப் பெயர் சூட்டிக் கொண்டு வரிச்சலுகை கேட்கக் கூடும் . வேற்று மொழிச் சொல்லோ வாக்கியமோ தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எழுதப்பட்டால் தமிழ்த் தலைப்பைத் தாங்கிய படமாக ஆகி விடுமா..?¢ இந்தப் படங்களின் உள்ளடக்கத்தில் எந்தவித மாற்றமும் நிகழாமல், கதை சொல்லலில், கதைக்களன்களில், கதை நிகழும் காலத்தைக் காட்டுவதில், காட்சிகளை உருவாக்கி அடுக்குவதில் எனப் பட உருவாக்க முறைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமலேயே -வெறும் தலைப்பு மாற்றத்திலேயே தமிழ்ப் படம் உருவாகிவிடும் என நினைப்பது ஆச்சரியம் தரும் போக்கல்லாமல் வேறல்ல.

ஒரு மொழியின் வளர்ச்சியில் பெயர்களுக்கும் பெயர்ச்சொற்களுக்கும் முக்கியமான இடமுண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் பெயர்கள் வெறும் அடையாளங்கள் போலத் தோன்றலாம். ஆனால் நிதானமாக யோசித்தால் பெயர்களும் பெயர்ச்சொற்களும் வெறும் அடையாளங்கள் மட்டும் அல்ல. அவைதான் அந்தப் படைப்பின் அர்த்தமும் கூட. பெயரிடும்போது வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் சேர்த்துப் பெயரிடுதல் முழுமையான பெயரிடல் முறையாக அமையும். எடுத்துக்காட்டாக கால்குலேட்டரைக் கணிப்பான் எனத் தமிழ்ப் படுத்திய போது அந்தக் கருவி கணக்கிடுதல் என்னும் பணியைச் செய்வதற்கு ஆதாரமான கருவி என்ற அர்த்தத்துடன் பெயரிடப் பட்டது. ஆனால் கம்ப்யூட்டர் வந்தபோது கணக்கிடுதலுடன் கூடுதல் வேலைகளைச் செய்யும் கருவி என்று புரிந்ததால் கணிப்பான் சுருக்கப்பட்டு கணிணி என்ற சொல் அதன் பெயராக ஆகியது. கம்ப்யூட்டர் செய்யும் எல்லாம் பணிகளையும் குறிக்கும் அர்த்தம் இச்சொல்லிற்கு இல்லை என்றாலும் கணக்கு, கணிதம், கணியன் எனப் பழைய தமிழ்ச் சொற்களுக்குள் கணிணியின் சில பணிகளின் அர்த்தம் கிடைக்கும் என்பதால் ஓரளவு பொருத்தமாக கருதப்படுகிறது.

பெயரிடுதலில் மொழியின் வளர்ச்சி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால் சினிமாவின் பெயர் களைத் தமிழில் வைப்பதால் மட்டுமே மொழி வளர்ச்சி அடையப்போவதில்லை. அதுவும் அரசு தரும் வரிச் சலுகைக்காக மட்டும் பெயர்களை மாற்றும் இவர்கள் நோக்கம் உள்ளடக்க மாற்றம் அல்ல; வெறும் பெயர் மாற்றம் மட்டும் தான். அந்தப் படத்தின் கதைப்போக்கும் ,காட்சி அமைப்புக்களும், சொல்லும் நீதியும் , உண்டாக்கும் உணர்ச்சிகளும் எந்த விதத்திலும் இந்தப் பெயர் மாற்றத்தால் மாறிவிடப் போவதில்லை. வழக்கமான ஆறு பாட்டு, நாலு சண்டை, இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள் எனக் கட்டமைக்கப்படும் தமிழ் சினிமா என்னும் பண்டம் உண்டாக்கப் போவது வழக்கமான பிற்போக்குத் தனமான கருத்துக்களைத் தான். அப்பண்டத்தின் பெயர் தமிழில் இருப்பதால் என்ன விளைவு ஏற்படப் போகிறது. இதற்கு ஏன் வரி விலக்கு அளிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு வர வேண்டிய பணத்தை மக்கள் விரோத சினிமாவிற்கு வழங்குவது பொறுப்புள்ள எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்..?

பழந்தமிழ் இலக்கணம் பெயரிடல் பற்றிக் குறிப்பிடும் போது பொதுப் பெயர், சிறப்புப் பெயர் என இரண்டாகப் பிரித்துப் பேசிவிட்டு அவற்றை மேலும் காரணப்பெயர், இடுகுறிப்பெயர் என்றெல்லாம் வகைப்படுத்தி விரித்துப் பேசியுள்ளது. இந்த வகைப்பாடுகளும் விரித்தலும் மனிதர்களுக்கும் பொருட்களுக்கும் பெயரிடும்போது பின்பற்ற வேண்டியன மட்டும் அல்ல. ஒருவன் எழுதிய கவிதைக்கும் எடுக்கும் சினிமாவுக்கும் அரங்கேற்றும் நாடகத்திற்கும் பெயரிடும் போதும் கவனிக்க வேண்டியன தான்; ஆனால் ஒரு சிறிய வேறுபாட்டுடன்.

நுகர்பொருளாகத் தயாரிக்கப்படும் பொருட்களும்¢ கலைப்படைப்பாக உருவாக்கும் படைப்பும் அடிப்படையில் வேறுபாடு கொண்டவை என்பது உணரப்பட வேண்டும். நுகர்வோரைக் குறி வைத்துத் தயாரிக்கப்படும் பண்டங்கள் பெரும்பாலும் கண்ணையும் செவியையும் நோக்கிய பெயர்களைத் தேர்வு செய்கின்றன. சில நேரங்களில் வாயையும் கவனத்தில் கொள்கின்றன.எளிமையாகவும் கவர்ச்சியாகவும் உச்சரிக்கத் தக்க பெயர்களாகவும், திரும்பவும் சொல்லத்தக்க பெயர்களாகவும் பண்டங்களுக்குப் பெயரிடுவதையே வியாபாரக் கம்பெனிகள் நோக்கமாகக் கொள்கின்றன. பெப்சி , கோக் என இரண்டெழுத்துப் பெயர்கள் சூட்டப்படுவதில் உள்ள பின்னணி விரைவாகச் சொல்லத்தக்கதாக அமைய வேண்டும் என்பதுதான். தமிழ் சினிமாவிலும் இரண்டெழுத்து, மூன்றெழுத்துப் பெயர்களே அதிகம் வைக்கப்படுகின்றன . தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குப் பெயர் சூட்டும் தனியார்கள் கூட இரண்டெழுத்து, மூன்றெழுத்துப் பெயர்களையே அதிகம் நாடுகின்றனர். சன், ஜெயா, ராஜ், விஜய் எனச் சுருக்கமாக இருப்பது திரும்பத் திரும்பச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இவையெல்லாம் வியாபாரத்தின் ஒரு கூறு; அவ்வளவு தான்.

ஆனால் படைப்பு அதன் வாசகனை அல்லது பார்வையாளனை வெறும் நுகர்வோனாக மட்டும் கருதுவதில்லை. அவனது செவிக்கும் கண்ணுக்கும் இதழுக்கும் வேலை தருகிறது என்றாலும் அவற்றையெல்லாம் தாண்டி மனத்தோடு உறவு கொள்வதை நோக்கமாகக் கொள்கிறது. மனத்தோடு பேச வெறும் அடையாளம் போதாது ;ஆழமாகச் சென்று தங்கும் உள்ளர்த்தம் வேண்டும்.ஒரு படைப்பாளி தனது படைப்பில் உள்ளர்த்தத்தை உருவாக்கி விட்டு அதைக் கொஞ்சமும் உணர்த்தாமல் போனால் அந்தப் படைப்பின் நோக்கமும் நிறைவேறாது. இந்த நிலையில் உள்ளர்த்தத்தை கோடி காட்டும் விதமான குறியீடும் தர வேண்டும். அந்தக் குறியீடு தான் படைப்பின் பெயர் அல்லது தலைப்பு. ஜெயகாந்தனின் தலைப்புக்களான சில நேரங்களில் சில மனிதர்கள், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன போன்ற தலைப்பும் சொல்ல வருவன பல ஆழமான அர்த்தங்களை; புதுமைப்பித்தனின் பொன்னகரம் அல்லது அகல்யா என்ற பெயர்கள் உணர்த்தியன அக்கதைகளின் ஆழமான உள்ளடக்கத்தின் முரண்களை. ஆனால் நமது சினிமாக்காரர்களின் தலைப்புகளின் நோக்கமோ வேறு. பார்வையாளர்களை அரங்கை நோக்கி இழுக்க வேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கம்.

தங்களின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படைப்பு தனது மொழியின் இயல்புகளோடும், அம்மொழி பேசும் மக்களின் இயல்புகளோடும் பொருந்தி நின்று அவர்களின் வாழ்க்கையை விசாரிக்கிறது எனக் கருதும் ஒரு இயக்குநர் தனது படத்தின் தலைப்பாக அல்லது பெயராக ஒரு தமிழ்ச் சொல்லை வைப்பது இயல்பான ஒரு நடைமுறை. அவ்வாறு வைக்காமல் வேற்று மொழிச் சொல்லைப் பெயராக வைக்கிறான் என்றால் அந்தப் படைப்பைத் தமிழின் இயல்பிலிருந்து உருவாக்கியிருக்க மாட்டான் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். அல்லது அந்தத் திரைப்படம் கலைப்படைப்பாக உருவாக்கப்படாமல் நுகரும் பண்டமாக உருவாக்கப் பட்டிருக்கும் எனக் கூறிவிடலாம். வேற்று மொழிசார்ந்த அல்லது வேறு பண்பாடு சார்ந்த பிரச்சினையைச் சொல்லும் ஒரு படைப்பை அந்த மொழியின் சாயல் கொண்ட தலைப்பால் அல்லது பெயரால் அழைப்பதும் , அறிந்து கொள்வதும் பெரிய தவறு என்றோ, இயல்புக்கு மாறானது என்றோ கருத வேண்டியதில்லை.

உலக அளவில் இடதுசாரிக் கலை இலக்கியம் வலுப்பெற்ற காலத்தில் கலை கலைக்காகவா? கலை வாழ்க்கைக்காகவா ? என்ற மாபெரும் விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தின் தொடர்ச்சியாக ஒரு படைப்பின் வடிவம் மற்றும் உள்ளடக்கம் பற்றியும், புறத்தூண்டல் மற்றும் அகத்தூண்டல் பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன. ஒரு படைப்பு பெயர், கதை கூறும் முறை, மொழி நடை போன்ற வடிவங்களுக்கு முக்கியத்துவம் தருவதை விட உள்ளடக்கத்திற்கும் உணர்த்தும் கருத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்; அத்தகைய படைப்புகளே சமூகப் பொறுப்புள்ள படைப்புகளாக விளங்கக் கூடியன என்றெல்லாம் முடிவுகள் கூறப்பட்டன. தமிழ் நாட்டில் இடதுசாரி இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் அவ்வியக்கத்தைச் சார்ந்த எழுத்தாளர்களும் இத்தகைய முடிவுகளின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். இன்றும் கூட அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடுவது என்பது வடிவமாற்றத்தின் ஒரு கூறு என்பதைக் கூட உணராமல் இருக்கிறார்கள் என்பது தான்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com