Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்றே சொன்னார் அண்ணா!

2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

3. தாதா கண்ணில் காந்தி!

4. சர்ச்சைக்குரிய உறவுகள்!

5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

10. சில மத மாற்றங்கள்...

11. நட்சத்திரங்களும் யதார்த்தமும்

12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

13. கண்ணாலே நான் கண்ட கனவு...

14. சதாம் ஹுசேனும் நாமும்!

மனிதன் கேள்வி - பதில்கள்

***********

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!: ச. தமிழ்ச்செல்வன்

கதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி

வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:
அ. ராமசாமி


பண்பாடு - கலாச்சாரம்:
கு.சித்ரா


‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:
தா.சந்திரன்


ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்:
அ. ராமசாமி


விநாயகர் அகவல்:
கு.சித்ரா


‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:
தா.சந்திரன்


ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




Tamilselvan
ச. தமிழ்ச்செல்வன்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!
தொழிற்சங்க அனுபவங்கள் - 30

ஏதோ தூரத்திலிருந்து மக்கள் என்னை அழைத்துக்கொண்டே இருப்பது போலவும் அதைக் கேட்டும் கேளாததுபோல நான் போஸ்டாபீசில் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டிருப்பதுபோலவும் ஓர் உணர்வு என்னை அலைக்கழிக்கத் துவங்கியது. தொழிற்சங்கப் பணியும் மக்கள் பணிதான் என்று முன்பு போல மனம் சமாதானமடைய மறுத்தது. மத்திய அரசின் கொள்கைகளால் அஞ்சலகங்களில் வேலைப்பளுவுக்கேற்ற ஆட்கள் நியமிக்கப்படாமல் ஒவ்வொரு அலுவலகத்திலும் தோழர்களுக்கு ‘பெண்டு கழண்டது’. நிமிர்ந்து பார்க்க நேரமின்றி வேலைப்பளு கூடியிருந்தது. அம்பாசமுத்திரத்தில் அஞ்சல் தோழர்கள் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது, அறிவியல் பரப்பும் நடவடிக்கைகள், துளிர் போன்ற பத்திரிகைகள் விற்பது, உழைக்கும் மகளிர் கூட்டங்கள் என்பதுபோன்ற முந்தைய (extra curricular activities) செயல்பாடுகள் அத்தனையும் கைவிட்டிருந்தனர். தொழிற்சங்கப் பணி ஒன்றை மட்டுமே செய்துகொண்டிருந்தனர். அது எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

சங்க வேலை ஒன்றை மட்டுமே செய்கிறவன் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியாகவும் நீடிக்க முடியாது என்பதில் எனக்கு ஒருபோதும் சந்தேகம் இருந்ததில்லை. எப்போதும் சமூகப் பிரக்ஞை உள்ள பன்முக (அரசியல் மற்றும் பண்பாட்டு) நடவடிக்கைகளில் தன்னையும் தன் தோழர்களையும் சதா ஈடுபடுத்திக் கொண்டிருப்பவனே ஒரு நல்ல தொழிற்சங்கவாதியாகத் திகழமுடியும். பொருளாதார நெருக்கடிகள் ராமகிருஷ்ணனை சங்கப்பணிகளிலிருந்து ஈரடி பின்னால் தள்ளியிருந்ததைக் கண்டேன். செல்வகிருஷ்ணன் இன்னும் நெருக்கமாகப் பணிகளில் ஈடுபடுவது தெரிந்தது. ஜெயலட்சுமி குடும்பப் பொறுப்புகளிலும் அதிக நேரம் செலவிடுபவராக மாறியிருந்தார். பிள்ளைகளெல்லாம் கல்லூரிகளில் படிக்கும் காலமாக மாறிவிட்டிருந்தது.

நான் அறிவொளிக்குப் போன இடைப்பட்ட ஆண்டுகளில் தோழர் வானுமாமலை இலாக்காப் பரீட்சைகள் பாஸ் பண்ணி போஸ்ட்மேனாகிப் பிறகு கிளார்க்காகவும் எங்களைப்போல ஆகிவிட்டார். ஆனால் அதில் அவருக்கு சந்தோஷமில்லை. போஸ்ட்மேனாக இருக்கத்தான் தனக்குத் தகுதி. தியாகராஜன்-ஜெயலட்சுமி வற்புறுத்தலாலும் செல்வகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் தந்த பயிற்சிகளாலும் தட்ட முடியாமல் எழுத்தராகிவிட்டேன் என்று வருத்தப்பட்டார். படிப்பு கம்மி. நமக்குக் கணக்கு வழக்கெல்லாம் ஓடாது என்ன செய்ய? திரும்ப போஸ்ட்மேனாகவே ரிவர்ட் ஆகிப் போயிடறேன்னு சொல்றேன். தோழர்கள் விடமாட்டேன் என்கிறார்கள். கொஞ்ச நாளில் எல்லாம் பழகிப்போகும் என்கிறார்கள் என்று வருத்தப்பட்டார். அப்போது அவரை ரவணசமுத்திரம் அஞ்சலகத்தில் போஸ்ட்மாஸ்டராக வேறு போட்டுவிட்டார்கள். ரெண்டு பேர் வேலை பார்க்கிற அந்த இடத்தில் ஆள் இல்லாமல் அவர் ஒண்டியாகச் சமாளித்துக் கொண்டிருந்தார்.

அவர் அனுப்பும் கணக்கு வழக்குகளைப் பார்த்து தலைமை அஞ்சலகமே சிரித்துக் கொண்டிருந்தது. தினசரி கணக்கு முடிக்க எல்லாத்தையும் சாக்கில் கட்டி தியாகராஜன் வீட்டுக்கு வந்து ராத்திரி கண்முழித்துக் கணக்கு எழுதிப் பிறகு வீட்டுக்குப் (அது சிங்கம்பட்டியில் இருந்தது. முத்துப்பட்டன் வாழ்ந்து கொல்லப்பட்ட ஊர் அது) போய்ப் படுத்து அதிகாலையில் கல்லிடைக்குறிச்சிக்கு சைக்கிளில் வேகு வேகென்று மிதித்து வந்து ரயிலைப்பிடித்து மீண்டும் ரவணசமுத்திரத்துக்கு ஓடிக் கொண்டிருந்தார். சங்கப்பணிகளில் மிகுந்த அக்கறையோடு உற்ற துணையாக இருந்த அவர் கணக்கு வழக்கு எழுதவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தார். அவரைப் பாக்கவே சங்கடமாக இருந்தது. பேசாமல் அவரைப் போஸ்ட்மேன் ஆக்கிவிட்டால் நிம்மதியாக இருப்பாரே என்று தோன்றியது.

முன்பு என்னோடு நெருக்கமாக இருந்த பல தோழர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர் முகாமுக்குப் போய் பகைமுகத்தைக் காட்டினார்கள். (என்ன பெரிய கொள்கைப் பிரச்னையா? தொழிலாளிக்குத் தொழிலாளி - என்ன தத்துவ மோதல் இருந்துவிடும்? ஏதாவது தனிப்பட்ட மனஸ்தாபங்கள், ஈகோ, ட்ரான்ஸ்பர் கிடைக்காத கோபம் இப்படிக் கவைக்குதவாத பிரச்னைகளாகத்தான் இருக்கும். அதைத் தலையில் திணித்துக்கொண்டு கோபித்துக்கொண்டு திரியும் தோழமை நெஞ்சங்கள்.)

ஒருநாள் காலையில் அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வேலையில் மூழ்கிக் கொண்டிருந்தபோது ரவணசமுத்திரத்திலிருந்து பரபரப்பாக ஒரு தொலைபேசி வந்தது. நானும் செல்வகிருஷ்ணனும் ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு பறந்தோம். ரவணசமுத்திரம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தோம். அந்தச் சின்ன ரயில் நிலையம் ஆள் அரவமற்று அனாதையாகக் கிடந்தது. அதன் பிளாட்பாரத்தின் சிமிண்டுப் பெஞ்சில் தோழர் வானுமாமலை இறந்து கிடந்தார். செல்வகிருஷ்ணன் பதட்டத்துடன் ஓடிச்சென்று அவர் நெஞ்சில் கை வைத்துத் தட்டிக்கொண்டே தோழர் தோழர் என்று எழுப்பினார். என்னால் நடக்கமுடியவில்லை. நா வறண்டு வந்தது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த லீவில் இருந்த ரவணசமுத்திரம் போஸ்ட்மாஸ்டர் அப்பவே முடிஞ்சு போச்சு என்பதாக எனக்குச் சைகை காட்டினார். சங்கத்துக்காகவும் உற்ற நண்பர்களுக்காகவும் காலம் பூராவும் ஓடி ஓடி உழைத்த கால்கள் ரயில்வே ஸ்டேசனின் நீளம் குறைவான சிமிண்டுப் பெஞ்சில் உயிரற்றுத் தொங்கிக் கொண்டிருந்தது.

ஓரத்தில் நேற்றுக் கணக்கு முடித்த ஆபீஸ் ரெக்கார்டுகள் அஞ்சலகச் சாக்குப்பையில் உட்கார்ந்திருந்தது. ஏற்கனவே உள்ளூர் டாக்டரை அங்கிருந்த தோழர்கள் அழைத்து வந்து காட்டியிருக்கிறார்கள். அவர் பிளாட்பாரத்துக்கே வந்து பார்த்து மாஸ்ஸிவ் அட்டாக் என்று வானுவின் மரணத்தை உறுதி செய்துவிட்டுப் போயிருந்தார். ஆனாலும் செல்வகிருஷ்ணன் வீணே அவரை எழுப்பிக் கொண்டிருந்தான். அது தொடர்ந்து பார்க்க முடியாத காட்சியாக இருந்தது. நான் அப்பக்கம் திரும்பிக்கொண்டேன். அப்போது செல்போன் வந்திருக்கவில்லை. ரயில்வே ஸ்டேசனுக்கு சிங்கம்பட்டியிலிருந்து போன் வந்தது. தியாகராஜனும் ஜெயலட்சுமியும் வானுவின் மரணச்செய்தியை பக்குவமாக அவரது மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்வதற்காக சிங்கம்பட்டி போய்விட்டிருந்தார்கள்.

டாக்சியின் பின் சீட்டில் செல்வகிருஷ்ணனின் மடியில் தலைவைத்துப் படுக்க வைத்து சிங்கம்பட்டிக்கு எடுத்துச் சென்றோம். ஒரு தோழனின் மடியில் அவரது இறுதி உறக்கம் - இறுதிப் பயணம். வானுவின் முகத்தில் இன்றைய கணக்கு முடிப்பது பற்றிய கவலையின் நிழல் அப்படியே படிந்திருந்தது. அன்று மாலையே அவரை நல்லடக்கம் செய்தோம். அவரது மரணத்துக்க்கு இலாக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆவேசத்துடன் தோழர்கள் பேசினார்கள். கோவில்பட்டிக்கே போய் தியாகராஜனும் மற்ற தோழர்களும் கோட்ட அதிகாரியைப் பார்த்து தோழர் வானுவின் மரணத்துக்கு பதில் சொல்லுங்கள் என்று ஆத்திரமாகப் பேசிவிட்டு வந்தனர். அவருக்கு அட்டாக் வந்தா அதுக்கு நான் என்ன செய்ய முடியும் என்ற அதிகாரியின் முகத்தில் வீசாத குறையாக ஆள் போடச்சொல்லி மீண்டும் மீண்டும் சங்கம் எழுதிய கடிதங்களை மேசையில் வீசியெறிந்தார்கள். இது இலாக்கா செய்த படுகொலை என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வேதனையுடன் தோழர்கள் திரும்பினார்கள். அவருடைய மனைவி அல்லது மகளுக்கு வேலை வாங்குவதற்கான முயற்சிகளை சங்கம் துவக்கியது. எவ்வளவு சங்கப் பணிகள் இருந்தாலும் சிரித்த முகத்தோடு அவற்றைச் செய்து முடிக்கும் தோழர் வானுவின் முகம் சித்திரமாக என் மனசில் பதிந்து கிடக்கிறது.

அச்சமயத்தில் அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தையும் அதன் கீழ் உள்ள துணை மற்றும் கிளை அஞ்சலகங்களையும் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திலிருந்து பிரித்து திருநெல்வேலிக் கோட்டத்தோடு இணைத்தார்கள். நிர்வாகரீதியாகவும் தொழிற்சங்க அமைப்புரீதியாகவும் கோவில்பட்டியோடு இனி பந்தம் இல்லை என்றானது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக திருநெல்வேலியிலிருந்து பிரிந்ததுதான் கோவில்பட்டிக் கோட்டமும் என்றாலும் நான் ‘பர்த்தி’ ஆனது கோவில்பட்டியில் அல்லவா? ஆகவே ஏதோ தொப்பூள்கொடி உறவே அறுந்துவிட்டதுபோல ஒரு வருத்தம் ஏற்பட்டது. மனசு எதிலெல்லாம் போய் விழுந்து கிடக்கிறது! ஆரோக்கியமற்ற தொழிற்சங்கப் பாதை ஓடிக்கொண்டிருக்கும் நெல்லைச் சீமை எப்போதுமே ஒரு ஒவ்வாமை உணர்வை எனக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

எந்தக்கோட்டத்தோடும் தொடர்பின்றி அஞ்சல் பொருட்கிடங்கு என்றொரு அலுவலகம் நெல்லையில் இயங்குகிறது. அது தனி நிர்வாகம்.தனி சங்கம். அந்த அலுவலகத்துக்கு எனக்கு மாறுதல் கிடைத்தது. நல்லவேளையாப் போச்சு என்று ஓடிப்போய் ஜாயின் பண்ணினேன். நாலுவருடம் அங்கு ஓட்டலாம். அந்த நான்கு வருடங்கள் மேலும் பல திருப்புமுனைகள் கொண்ட ஆண்டுகளாக எனக்கு அமைந்தன. முதலில் அங்கு தொளதொளப்பாக இருந்துகொண்டிருந்த தொழிற்சங்கத்தை கட்டிறுக்கம் செய்வதற்காக ஊழியர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். கோரிக்கை மனு ஒன்றைத் தயார் செய்து அதிகாரியோடு பேச்சுவார்த்தை நடத்திச் சில தீர்வுகள் உண்டாக்கினோம். பொதுக்குழு செயற்குழுக் கூட்டங்கள் எல்லாம் முறைப்படுத்தி நடத்தினோம்.

எட்டு மாவட்டங்களில் இயங்கிய அத்தனை அஞ்சலகங்களுக்கும் தேவையான பொருட்கள் (தபால் பெட்டிகள், பூட்டுகள், காகிதங்கள், அச்சிட்ட படிவங்கள், மணியார்டர் பாரம், ரசீது புத்தகங்கள், பெயிண்டுகள், கல்லாபெட்டிகள் என) எல்லாம் வருவித்து அனுப்புகிற இடமாக அந்த அலுவலகம் இருந்தது. எந்நேரமும் பைகள் கட்டி அனுப்புவதும் லாரிகளில் லோடுகள் வந்து இறங்குவதுமாக இருக்கும். ஒரு சௌகரியம் என்னவென்றால் அந்த அலுவலகம் வாரத்தில் ஐந்துநாள்தான் இயங்கும். சனி,ஞாயிறு லீவு. அது எவ்வளவு பெரிய கொடை!

அந்த அலுவலகம் பாளையங்கோட்டையில் இருந்தது. அடுத்த தெருவில்தான் சேவியர் கல்லூரி இருந்தது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்துக்கு தினசரி போகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கிருந்த தமிழகத்தின் மிக முக்கியமான நூலகத்தில் உறுப்பினராகிக் கொண்டு தவறாமல் படிக்க ஆரம்பித்தேன். பல புதிய உலகங்களை அந்த நூலகம் எனக்குத் திறந்து வைத்தது. அந்த நூலகம் பற்றியும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் இயங்குவது பற்றியும் ஏற்கனவே நான் அறிந்திருந்தபோதும் போர்டு பவுண்டேஷனில் நிதி உதவி பெற்று இயங்கும் ஒரு நிறுவனம் என்பதாலேயே கிட்ட நெருங்காமல் இருந்துவிட்டேன். அது ஒரு கட்டத்தின் மனநிலை. இப்போது உள்ளே போகப்போக எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை இதுகாறும் இழந்திருந்தேன் என்பதை உணரத் துவங்கினேன். அச்சமயம் சி.மோகனும் அங்கே குறுகிய காலத்துக்கு புத்தகத் தயாரிப்புக்காக வந்து தங்கியிருந்தார். கோபி கிருஷ்ணனும் சிலநாள் வந்து வேலை செய்தார். நாங்களும் அப்போதுதான் புதுவிசை காலாண்டிதழைத் துவக்கியிருந்தோம்.

அலுவலகத்துக்கு இந்தப்புறம் ஒரு தெரு தாண்டினால் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறையும் இளைஞர் நலத்துறையும் தொடர்பியல் துறையும் இயங்கிய கட்டிடம் இருந்தது. புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படாததால் அத்துறைகள் இங்கே இயங்கின. தமிழியல் துறையின் தலைவராக தொ.ப. என அன்போடு அழைக்கப்படும் முனைவர் தொ.பரமசிவன் பொறுப்பேற்றிருந்தார். தொடர்பியல்துறையில் அருட்செல்வன், நடராஜன் ஆகிய பேராசிரியர்களும் பல மாணவர்களும் நண்பர்களாக வாய்த்தனர். ஆ.இரா.வேங்கடாசலபதியும் அப்போது பல்கலைக் கழகத்தில்தான் வரலாற்றுத்துறையில் இருந்தார். அவரது அறை எனது அலுவலகத்திலிருந்து நாலுதெரு தள்ளி இருந்தது.

சில மாதங்களில் இளைஞர் நலத்துறை இயக்குநராக பேராசிரியர் ச.மாடசாமி வந்து சேர்ந்தார். போதாதா! இப்படி ஒரு அற்புதமான சூழலுக்கு நடுவே எனது அலுவலகம் அமைந்தது இப்போது நினைத்தாலும் பெருமூச்சு வருகிறது. எல்லோரையும் சந்திக்கவும் பேசவும் விவாதிக்கவும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளைத் திட்டமிடவும் என்னை வளர்த்துக்கொள்ளவும் அந்த நான்கு ஆண்டுகள் பயன்பட்டன. அந்த அலுவலகமே பல படைப்பளிகளும் அறிவாளிகளும் சந்திக்கும் மையமாக இருந்தது என்றே கூறலாம். அண்ணாச்சி விக்கிரமாதித்தனிலிருந்து இலங்கை சி.சிவசேகரம் வரை பலரும் அங்கு வந்து சென்றார்கள்.

அஞ்சல் ஊழியர்களின் துறை சார்ந்த கோரிக்கைகளுக்காக ஒரு வேலைநிறுத்தமும் வந்தது. எட்டு நாள் தொடர்ந்த அவ்வேலைநிறுத்தத்தில் பொருட்கிடங்கின் ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்றனர். முன்பு அம்பாசமுத்திரத்தில் செய்ததுபோல ஆட்களைக் கடத்திக்கொண்டுபோய் கல்யாண மண்டபத்தில் வைக்கிற வேலையெல்லாம் இப்போது தேவைப்படவில்லை. வேலைநிறுத்தத்துக்கு நெல்லைத் தோழர்கள் பழகிவிட்டிருந்தனர். இலாக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின் ஒன்பதாவது நாள் பணிக்குத் திரும்பினோம். இந்த வேலை நிறுத்தம் நடைபெற்ற எட்டு நாளும் தனியார் கூரியர் சர்வீஸ்(!)காரர்கள் அடித்த கொள்ளைக்குக் கணக்கே இல்லை. ஆனாலும் 1998இல் போடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஏட்டளவிலேயே நின்றது.

இடையில் ஐந்தாவது சம்பளக்கமிஷன் அறிக்கையை நீதியரசர் ரத்தினவேல்பாண்டியன் சமர்ப்பித்து அது அமலுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருந்தது. பொதுவாக அரசாங்கம் நியமிக்கும் எந்த ஒரு கமிஷனும் அந்த நீதிபதிகள் போகாமல் விட்டுப்போன கோயில் திருத்தலங்கள் எல்லாம் சுற்றிப்பார்த்து ஒப்பீட்டுக்காக என்ற பேரில் சில வெளிநாடுகளுக்கும் போய் வந்து அறிக்கை தர குறித்த காலத்தை விட அதிக காலம் எடுத்துக்கொண்டுதான் ஒன்றுக்கும் விளங்காத அறிக்கை ஒன்றைத் தருவார்கள். எந்தக் கமிஷனும் ஊழியர்களுக்கு சாதகமாக அறிக்கை தந்ததாக இந்தியாவில் சரித்திரமே கிடையாது.

இந்த முறை என்னாச்சு என்றால் இறுதிக் கட்ட பேச்சு வார்த்தைகளின்போது நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் ஊரில் இல்லை. அப்போது அமைச்சராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர்.இந்திரஜித் குப்தா முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தி ஓரளவு ஊழியர்களுக்கு சாதகமான சம்பள உயர்வு உத்தரவானது. அப்போது திரு.தேவகவுடாதான் பிரதமர் என்று ஞாபகம். திரு.ப.சிதம்பரம் மட்டும் அன்றைக்கு இருந்திருந்தால் தொழிலாளிக்கு பத்துப் பைசா கூடக் கிடைச்சிருக்காது என்று ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ப.சிதம்பரத்துக்கு ஊழியர்கள் மத்தியில் அப்படி ஒரு நல்ல பேர் ரொம்ப காலமாக இருக்கிறது. தொழிலாளருக்கு செய்வதென்றால் அவருக்கு கை கருணைக்கிழங்காக அரிக்கும் என்பார்கள். முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுக்க மட்டும் அவருக்கு எப்போதும் ஆனந்தமாக இருக்கும். எல்லாம் என்ன அவரு அப்பா வீட்டுச் சொத்தா என்பார்கள். என்னைப்பொறுத்தவரை எந்த நிதியமைச்சரும் பேச்சுவார்த்தைகளில் தொழிலாளிக்கு விட்டுக்கொடுத்ததே இல்லை. போராட்டம் ஒன்றுதான் நமக்கு எதையாவது வாங்கித் தந்துள்ளது.

ஈடி ஊழியர்களுக்கு பென்சன் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அப்படியே கிடந்தன. 1998இல் எட்டுநாள் வேலைநிறுத்தத்துக்குப் பிறகு அரசு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டாலும் அதை அமலாக்க முன்வரவில்லை. நீயே ஒப்புக்கொண்டதை ஏன் அமல்படுத்த மறுக்கிறாய் என்று கேட்டு 2000த்தில் மீண்டும் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தோம். 18 நாள் அந்தப் போராட்டம் நீடித்தது. தபால்பைகள் மலை மலையாகக் குவிந்து கிடந்தன - ரயில்வே பிளாட்பாரங்களில். அரசு அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. கூரியர் சர்வீஸ்(!)கள் செழித்து வளரட்டும் என்று அரசு திட்டமிட்டு இழுத்தடிப்பதுபோல் இருந்தது. இப்போது திருமதி.சுஷ்மா சுவராஜ் என்பவர் எங்களுக்கு மந்திரியாக இருந்தார். ஒழுங்கு மரியாதியா போஸ்டல் ஊழியர்கள் வேலைக்குப் போங்க இல்லாட்டி ராணுவத்தை இறக்குவேன் என்று பாராளுமன்றத்தில் அவர் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விட்டார். ஏற்கனவே அரசு ஒப்புக்கொண்டு ஒப்பந்தமும் போட்ட ஒன்றை அமல்படுத்தக் கோரியதற்காக தொழிலாளிகள் மீது அப்படிப் பாய்ந்தார் அம்மையார். நினைத்துப் பார்த்தால் எவ்வளவு வேதனையாக இருக்கிறது?

நியாயத்திலும் நியாயமாக தொழிலாளியும் அநியாயத்திலும் அநியாயமாக அரசாங்கமும் காலம் காலமாக இருந்து வந்தபோதிலும் தொழிலாளி வர்க்கம் இன்னும் இந்தியாவில் விழித்துக்கொள்ளவில்லையே! இந்தக் கேடுகெட்ட கட்சிகள் கேடுகெட்ட அமைச்சர்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகள் பின்னால்தானே போய்க்கொண்டிருக்கிறான்? என்கூட வேலைபார்த்த சுப்பிரமணி என்னும் தோழர் சுஷ்மா சுவராஜ் அறிக்கையை டிவியில் பார்த்துவிட்டு “அந்தானக்கி துப்பாக்கியைத் தூக்கிட்டுப் போயி வரிசைக்கி நிப்பாட்டி ஒவ்வொருத்தனாச் சுட்டுப்பொசுக்கணும்” என்று ஆவேசமடைந்து கத்தினார்.

பதினெட்டுநாள் போராடியபின்னும் ஒரு பேச்சுவார்த்தையும் இன்றி ஒரு தீர்வும் இன்றி நாட்டின் நலன் கருதி நாங்கள் வேலைக்குத் திரும்பினோம். நாட்டில் அநியாயத்தின் ஆட்சி உச்சத்தில் ஏறி நிற்கிற புதிய சகாப்தம் ஒன்று பிரந்துவிட்டதாக எங்கள் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டிருந்தது. ஆம். அதை அடுத்து தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்கள் போராடி ஒன்றுமே இல்லாமல் மீண்டும் வேலைக்குத் திரும்பினார்கள். அதிமுக ஆட்சி தனியார் பஸ்களை வைத்தும் - ஓட்டத்தெரியாத டிரைவர்களை வைத்தெல்லாம் வண்டிகளை ஓட்டி-- பல நூறு தமிழ் மக்களை விபத்தில் காவு கொடுத்து ஊழியர்களின் ஸ்ட்ரைக்கை முறியடித்தது. அது இன்னொரு அத்தியாயம்.

இனிமேல் இந்த உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம், ஸ்ட்ரைக் இதற்கெல்லாம் அர்த்தமே இல்லை என்கிற உணர்வு தொழிலாளர் நெஞ்சங்களில் ஆழமாய் வேர்கொள்ளத் துவங்கியுள்ளது. ஜனநாயக வழிமுறைகளை முதலாளிகளும் முதலாளிகளின் இந்திய அரசும் அடைத்துவிடும்போது மதிக்காதபோது தொழிலாளி மட்டும் இன்னும் சட்டப்படி போலீஸ் அனுமதிபெற்று அனுமதிக்கப்பட்ட ஓரமான, ஒதுக்குப் புறமான ஒரு இடத்தில் நின்று ஜிந்தாபாத் போட்டுக்கொண்டிருந்தால் அவனைப்போல ஒரு கேணையன் எவனும் இருக்கமுடியாது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com