Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்றே சொன்னார் அண்ணா!

2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

3. தாதா கண்ணில் காந்தி!

4. சர்ச்சைக்குரிய உறவுகள்!

5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

10. சில மத மாற்றங்கள்...

11. நட்சத்திரங்களும் யதார்த்தமும்

12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

13. கண்ணாலே நான் கண்ட கனவு...

14. சதாம் ஹுசேனும் நாமும்!

மனிதன் கேள்வி - பதில்கள்

***********

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!: ச. தமிழ்ச்செல்வன்

கதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி

வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:
அ. ராமசாமி


பண்பாடு - கலாச்சாரம்:
கு.சித்ரா


‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:
தா.சந்திரன்


ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்:
அ. ராமசாமி


விநாயகர் அகவல்:
கு.சித்ரா


‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:
தா.சந்திரன்


ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




உள்ளே வெளியே: கட்டுரைத் தொடர்
பாஸ்கர் சக்தி

கதையல்ல நிஜம்

சமீபத்தில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் ‘சிதம்பர நினைவுகள்' புத்தகத்தை படிக்க வாய்த்தது. மனதின் மெல்லிய பகுதிகளை சுலபத்தில் தூண்டி விடக்கூடிய புத்தகம் அது. வாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நெகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களை உள்ளடக்கியது. கதையாகவோ, கற்பனையாகவோ அல்லாமல் இவையாவும் ஒரு மனிதனுக்கு நிஜத்தில் நிகழ்ந்தவை என்கிற எண்ண ஓட்டம்தான் அப்புத்தகத்தின் மீது ஏற்படுகிற பிரேமைக்கு முக்கிய காரணம். அதனை வாசித்து முடித்ததும் எல்லா சராசரி மனிதனையும் போல எனக்குள்ளும் ஒரு சந்தேகம் தலைதூக்கியது. ‘இதெல்லாம் நிஜமாகவே நடந்ததா? இல்லை எழுத்தாளர் தன்னோட கற்பனையையும் சேத்துப் போட்டு தாக்கி இருக்காரா?’' என்கிற எண்ணம் தோன்றியது. அந்தப் படைப்பு எனக்குள் ஏற்படுத்திய உணர்வு அலைகளை மட்டுப்படுத்துகிற காரியம் இந்த சந்தேகம், என்று மனதில் பட, தேவையற்றது என அதை ஒதுக்கினேன். ஏனெனில் இது போன்ற படைப்புகளில் நிரூபணம் தேடுவது என்பது ஒரு விதத்தில் அபத்தமான காரியம்.

நிஜமாக நடந்த விஷயங்களையும் கூட, மனதில் திரட்டித் தொகுத்து நமது மொழியில் தருகையில் அங்கங்கே புனைவின் சாயல் தோன்றி விடுவதைத் தவிர்க்க முடியாது. காரணம், ஒன்றைத் தொகுத்து அதனை ஒரு வடிவமாக்கித் தருகையில் அனாவசியமானவற்றைத் தவிர்த்துவிட்டே தருகிறோம். ஆனால் வாழ்க்கையோ பெரும்பாலும் அனாவசியங்களால் நிரம்பியது...

பாலச்சந்திரனின் அனுபவங்களில் பல அபூர்வமானவை. சுலபத்தில் மற்றவர்களுக்கு கிடைக்காத அனுபவங்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றன. நமக்கு நிகழவில்லை என்பதாலேயே அவை பிறருக்கு நிகழ்வதை நாம் சந்தேகிக்கமுடியாது.

பாலச்சந்திரனின் அனுபவங்களைப் படித்ததும் நான் இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் எனக்கு வாய்த்திருக்கிறதா என்று இயல்பாகவே தேடத் துவங்கினேன். நான் மட்டுமல்ல ‘சிதம்பர நினைவுகள்' நூலைப் படிக்கும் பெரும்பாலோர் இவ்விதமாக யோசிப்பார்கள் என்றும் என் மனதில் தோன்றியது.

இவ்விதமாகப் பின்னோக்கி யோசித்த எனக்குப் பெரிய ஏமாற்றம், கழிவிரக்கம் தோன்றியது. கணிசமான ஆண்டுகள் வெட்டி அரட்டையில்தான் கழிந்திருக்கின்றன. நினைத்ததும் புல்லரிக்கிற அனுபவங்கள் என்னிடம் குறைவென்று வருத்தம் ஏற்பட்டது.

ஆனால் உடனே இன்னொரு எண்ணம் தோன்றியது. புத்தகங்களில் நாலைந்து பக்கங்களில் ஒரு விஷயத்தை அடக்குகையில், நமக்கு ஏற்படுகிற செறிவான அனுபவச் சிலிர்ப்பு நெடிய வாழ்க்கையில், படிப்படியாக அதே விஷயம் நிகழ்கையில், நமக்கு ஏற்படுவது கிடையாது. விபத்தில் ஒருவர் மரணமடைகிற போது ஏற்படுகிற அதிர்ச்சிக்கும் படுத்த படுக்கையாகக் கிடக்கிற ஒரு நபர் இறந்து போவதன் பாதிப்புக்கும் இடையிலான வித்தியாசம் போன்றதே இது. ஆனால் அனுபவத்தின் உள்ளார்ந்த சரடை எப்போதும் பிரக்ஞையில் வைத்திருக்கிற ஒருவனால், கால நீட்சியின் தொய்வையும் மீறி, விஷயங்களின் பாதிப்பை முழுமையாக உணர முடியும்.

பாலச்சந்திரன் அவ்விதம் உணர்ந்து எழுதியிருக்கிறாரென்று பட்டது.

இது பற்றியே யோசித்துக் கொண்டிருந்த போது எனக்கு தவிர்க்கவியலாமல் பாலுவின் நினைவு வந்தது.

பாலுவை நான் அறிந்தது எனது ஏழாவது அல்லது எட்டாவது வயதில் என நினைக்கிறேன். அப்போது நான் எனது கிராமப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பாலுவும் அதே வகுப்புதான். என்றாலும் எங்களுக்குள் அறிமுகம் நிகழ்ந்திருக்கவில்லை. நாங்கள் பாட்டுக்கு பள்ளிக்கூடம் வந்து சுற்றி நடப்பதை முழுதும் உணராமல் பிள்ளைத்தனமாக தமிழ் உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துகளையும், கற்கத் துவங்கியிருந்தோம். மதிய வகுப்புகளிலே ‘நீதி போதனை' என்றொரு வகுப்புண்டு. பாடங்கள் போதித்த வகுப்புகள் தவிர்த்து ஒரு நாற்பது நிமிடம் தனியே நீதியையும், ஒழுக்கத்தையும் சங்கில் வைத்துப் புகட்டுவதற்கான ஏற்பாடாக அந்த வகுப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வகுப்பில் நிகழ்வது வேறு. நீதி போதிக்க வேண்டுமென்பதால் வேறுபாடங்கள் அந்த நேரத்தில் நடத்தப்படுவதில்லை. மாறாக ஆசிரியர் ஏதேனும் கதை சொல்வார். அடுத்து மாணவ, மாணவிகளை கதை சொல்லும்படியோ, பாடும்படியோ பணித்து விடுவார். பிள்ளைகள் கையைக் கட்டிக் கொண்டு சாமி வந்தது போல் பாடுவோம். கண்ட கண்ட ‘டூயட்'டுகளும் கூட அதில் பாடப்படும். தற்போது பெயர் மறந்துவிட்ட ஒரு பையன், ஒரு முறை வெகு பொருத்தமாக ‘நல்ல பேரை வாங்க வேண்டுm பிள்ளைகளே' என்று பாடி நீதிபோதனை வகுப்பின் பெயரை நிலை நாட்டினான். மற்றபடி அது ஒரு கேளிக்கை வகுப்பாகவே இருந்தது. இந்தக் காரணங்களால் நீதிபோதனை வகுப்பில் நாங்கள் உற்சாகமாகவே இருந்து வந்தோம்.

இவ்வாறான நீதிபோதனையில் ஒரு நாள் ஒவ்வொருவராக எழுந்து திறமையைக் காட்டியபடி இருந்தோம். கதை சொல்வது, பாடப் புத்தகங்களிலிருக்கும் பாட்டைப் பாடுவது என்று அன்றைய பொழுது நகர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் பாலு எழுந்தான். மிகவும் தெளிவாக, தப்பில்லாமல் பாடினான்... அவன் பாடிய விதம் எங்கள் கவனத்தை ஈர்த்தது ... நடுங்காமல் மென்மையான குரலில் அவன் “மாடப்புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து மயங்குது தன்னாலே'' என்கிற பாடலைப் பாடினான். பொதுவாக மற்ற அனைவரும் ஓரு வார்த்தைகளில் தடுமாறி விடுவது வழக்கம். ஆனால் பாலு தெளிவாக முழுப் பாடலையும் பாடிக் கைதட்டல் வாங்கினான். ஆசிரியர் "பரவால்லையே' எனப் பாராட்டினார். எங்களில் ஒரு ‘ஹீரோ' அந்தஸ்து அவனுக்கு கிடைத்து விட்டது.

அடுத்தடுத்த நீதி போதனை வகுப்புகளில் பாலுதான் நட்சத்திரமாக இருந்தான். அந்த வகுப்பு நேரம் வந்ததுமே ஆசிரியர் ‘பாலு' என அழைப்பார். பாலு பாடுவான். ஓரிரு வகுப்புகள் தாண்டியதும் பாலுவின் பரிணாமம் விரிவடைந்தது ... அவன் சிலோன் ரேடியோவில் வரும் விளம்பரங்களைச் சொல்ல ஆரம்பித்தான். “இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி'' என்ற விளம்பரங்களை அட்சரம் பிசகாமல் அப்படியே கூற ஆரம்பித்தான். சினிமா பாடல்களை தெளிவாக, தவறின்றி, முழுமையாக அவன் பாடுவதன் ரகசியம் அவன் இலங்கை வானொலியின் தீவிர நேயராக விளங்கியதுதான் எனப் புரிந்தது. ரேடியோ இருக்கிற கடைவாசலில் எல்லாம் மணிக்கணக்கில் நின்று தவம் போல் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கேட்டு அந்த வயதிலேயே அவன் அப்படியிருந்தான். ஆசிரியர் முதற்கொண்டு அனைவரும் பாலுவின் திறமைகளை வியந்தோம். பாலு மேற்கொண்டும் வளர்ந்தான். இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளராக விளங்கிய கே.எஸ். ராஜாவின் குரலை ‘மிமிக்ரி' செய்து பேசுவான். அப்போது கே.எஸ். ராஜா வாரா வாரம் வானொலியில் பாடல்களை வரிசைப்படுத்தி ஒரு நிகழ்ச்சி தருவார். (இப்போதைய டி.வி.யின் டாப்டென் போல). அதனை தலைகீழ்ப் பாடமாக சொல்லுவான்.

“மீண்டும் சந்திக்கும் வரை நேயர்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது கே.எஸ். ராஜா'' என்று வசீகரமான ஏற்ற இறக்கங்களுடன் கூறுவான் பாலு.

இந்தக் காரியங்கள் தவிர அவன் வெகு அமைதியானவன். அதிர்ந்து பேச மாட்டான். விளையாட மாட்டான். ஓரிரு ஆண்டுகள் என்னுடன் படித்து வந்தவன் பிறகு பெயிலாகி பின் தங்கி விட்டான். அவ்வப்போது பார்ப்பதும் புன்னகை செய்வதும் தவிர எங்களது உறவு வளரவேயில்லை.

நான் எட்டாவது படித்தவுடன் எங்கள் குடும்பம் இடம் பெயர்ந்து ஐந்து ஆண்டுகள் வேறு ஊர்களில் இருந்தோம். ஐந்தாண்டுகள் கழித்து நான் சொந்த ஊருக்கு மீண்டும் குடிவந்தபோது என்னுடன் படித்தவர்கள் யாவரும் ‘ப்ளஸ் டூ' படித்துக் கொண்டிருந்தனர். எனது படிப்பு உடல்நிலை காரணமாக எட்டாவதோடு நின்று போயிருந்தது. நான் நாள் பூராவும் தனியே சும்மா இருந்தேன். மிகவும் வெறுமையாக உணர்ந்தேன். கதைப் புத்தகங்கள் தவிர மீதி நேரம் என்ன செய்வதென்றே புரியாமல் அலைவேன். ஒரு மதிய நேரம் ஆலமர நிழலின் கீழ் கருப்பசாமி கோவில் பாலத்தில் இலக்கின்றி அமர்ந்திருந்தேன். நண்பர்களற்ற தனிமை வெருட்டியது ... அப்போதுதான் பாலு வளைவு திரும்பி வந்து கொண்டிருந்தான். நான் அன்றும் அரை டிராயர்தான் அணிந்திருந்தேன். கைலிக்கு மாறுவது பற்றிய கூச்சம், தயக்கம் அன்று வரை எனக்கிருந்தது.

ஆனால் பாலு இரட்டை மடிப்பு வெள்ளை வேஷ்டி உடுத்தியிருந்தான். தூய வெண்ணிற சட்டை அணிந்திருந்தான். கண்களில் கனவுடன் வேட்டியின் நுனியை கையால் பற்றியபடி வந்தவன், என்னை நிச்சயம் கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த மதிய வேளையில், அந்த இடத்தில் எங்களிருவரைத் தவிர வேறு எவருமில்லை. ஆனால் பாலு எனக்கு நாலு அடி தள்ளி நின்று வினோதமாக வேறு பக்கம் பார்த்தவாறு இருந்தான். எனக்கு என்னடா இவன்? என்று தோன்றியது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து அவனைப் பார்க்கிறேன்!

“என்ன பாலு! என்னை அடையாளம் தெயலையா?'' என்றேன்.

“நல்லாத் தெரியுமே ... பாஸ்கர் ... சின்னப் பிள்ளைல என் க்ளாஸ்மேட்'' என்றான்.

“அப்புறம் இத்தனை வருசம் கழிச்சுப் பாக்கிறோம் பேச மாட்டங்கிற!''

“எப்பவுமே நான் வந்து வலியச் சென்று யாரிடமும் பேச மாட்டேன்'' என்றான் செந்தமிழில்.

“ஏம்ப்பா ... அப்படி?''

“என்னை மதிக்கிறவர்களிடத்திலேதான் நான் பேசுவேன் ... உன்னை எனக்குப் பிடிக்கும். ஆனால் முதலில் என்னிடம் நீ பேசினால்தான் நான் பேசுவேன்'' என்றான்.

“நீயும் படிக்கலையா?'' என்றேன். “இல்லை. நான் இன்பமாக இருக்கிறேன்.''

படிக்கவியலாத கழிவிரக்கத்துடனிருந்த எனக்கு அவனிடத்தில் ஆச்சர்யம் தோன்றியது. மேற்கொண்டு நான் பேச ஆசைப்பட்ட போதும், அவன் என்னிடம் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு கிளம்பிச் சென்று விட்டான்.

நான் அன்றைக்கு அத்துடன் பாலுவை மறந்து விட்டேன். ஆனால் அவனது செந்தமிழ்ப் பேச்சு சற்று வினோதமாக நினைவில் இருந்தது.

பிறகு எனது பால்ய நண்பர்களை மாலை நேரங்களில் சந்தித்துப் பேசியதில், பாலுவைப் பற்றி தகவல்கள் கிடைத்தன. பாலு மேற்கொண்டு படிக்கவில்லை. அவனது பாட்டையும் பேச்சையும் பிறர் பாராட்டப் பாராட்ட நாளடைவில் அவன் அதை மட்டுமே செய்யத் துவங்கி விட்டான். புகழ் மொழியின் புதைகுழி நாளாவட்டத்தில் அவனை விழுங்கி விட்டது. தன்னை ஒரு அறிவிப்பாளனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு முறை திருச்சி வானொலி நிலையத்துக்குள் சென்று வாய்ப்புக் கேட்டிருக்கிறான். அங்கிருந்தவர் இவனிடம் ரொம்ப நேரம் பேசிவிட்டு கையில் பஸ் சார்ஜ் கொடுத்து ‘லெட்டர் போடறோம் போங்க' என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அவர் கருணையுடன் நடந்து கொண்டதை பாலு ‘லெட்டர் வரும்' என்கிற மாதிரி இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறான் அவன் என்னிடம் நடந்து கொண்டது போலத்தான் மற்ற நண்பர்களிடம் நடந்து கொள்கிறான்.

நண்பர்கள் இதனைக் கூறிக் கொண்டு இருக்கையிலேயே அந்த இடத்துக்கு பாலு வந்தான். தனக்குள்ளே மந்தகாசமான புன்னகையுடன் ஓரமாக நின்றான். லேசாக தாடி வளர்ந்திருந்தது.

“எதுக்கு பாலு தாடி வளக்கிறே!''

“சிந்தனை செய்வதற்காக ...''

“என்ன பாலு ஒரு மாதிரியாப் பேசற?''

“தெற்கே செல்லச் செல்ல சிந்தனை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் ... அறிவாளிகள் ...''

பாலுவின் இரண்டு கைகளிலும் இரண்டு ரிஸ்ட் வாட்ச் கட்டி இருந்தான்.

“என்னது பாலு?''

“நம்முடைய வசதி இப்படி ... ரெட்டை மடிப்பு வாயில் வேஷ்டிதான் கட்டுவேன் ... கைக்கு ஒரு வாச்சு கட்டுவேன். வலிய யார்கிட்டயும் பேசமாட்டேன். இலங்கை வானொலியில் என்னை அழைத்து இருக்கிறார்கள். அங்கே சிந்திக்கிறவர்களும், இனிய தமிழில் பேசுபவர்களும் அதிகமிருப்பார்கள்.''

எனது நண்பன் காதருகில் சொன்னான் ... “சின்னப் புள்ளைலருந்து ரேடியோ, ரேடியோன்னு பேசி இப்படியே ஆயிப்போனாண்டா ... இவங்க வீட்ல பொறந்த அண்ணன் குழந்தைக்கு ‘கொக்குவில்'னு பேர் வச்சிருக்கான்.''

நான் பாலுவிடம் கேட்டேன். “என்ன பாலு ... ‘கொக்குவில்'னு யாருக்கோ பேரு வச்சிருக்கியாமே. அப்படின்னா என்ன?''

பாலு, “ஆம். ‘கொக்குவில்' என்பது இலங்கையில் உள்ள ஒரு அழகிய ஊர் ... நான் இலங்கையை விரும்புகிறேன் ... அதான் அந்தப் பெயர் வைத்தேன்.''

“பாலு ... இப்ப என்னா டைம் ...? சொல்லு'' என்றான் ஒருவன்.

“இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். நேரம் சரியாக ஐந்து மணி இருபத்தைந்து நிமிடம் பத்து நொடி...''

“பாலு கோபால் பல்பொடி விளம்பரம் சொல்லு ...''

மூன்றாவது வகுப்புப் படிக்கையில் எப்படிச் சொல்லுவானோ, அதேபோல் இப்போதும் பிசகின்றி சொன்னான் பாலு.

எங்களோடு இப்படி பேசிவிட்டு பாலு கிளம்பிப் போய் இன்றைக்கு கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் இருக்கலாம். நான் அதன்பின் மீண்டும் படிக்கத் துவங்கி கல்லூரி போய், வேலை கிடைத்து, சென்னைக்கு இடம் பெயர்ந்து ... இப்படியான பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போது பாலுவைப் பார்க்க நேர்வது உண்டு.

முகத்தில் அதே அமைதி ... தலையில் வழுக்கை ஏற்பட்டு விட்டது. இரண்டு கைகளிலும் வாட்ச். மற்றும் பாடாத ஒரு டிரான்ஸிஸ்டருடன் வேஷ்டி கட்டிக் கொண்டு, சமயங்களில் காலில் ஷு அணிந்து கொண்டு தன் போக்கில் போய்க் கொண்டிருப்பான். முகத்தில் ஒரு சாந்தம் ... மகிழ்ச்சி. தனக்குள் பேசிக்கொண்டு ... அவனுக்குள் ஏதோ ஒரு அலைவரிசை இயங்குகிறது போலும் ... அங்கே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவனது குரலை விரும்புவார்களாயிருக்கும். அவர்களுக்காக அவன் பேசுகிறான், பாடுகிறான், அறிவிப்பு செய்கிறான். அவர்களது கரவொலிகள், பாராட்டுகள் தினந்தோறும் அவனுக்கு மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அவனது முகத்தில் தோன்றுகிற அபூர்வமான பரவசம் உணர்த்துகிறது. தன்னைச் சுற்றிலும் போய் வருகிற ஜனங்களை அவன் சுத்தமாகப் பொருட்படுத்துவதேயில்லை. அவர்களும் பாலுவைப் பார்த்துப் பார்த்து பழகி விட்டனர்.

இலட்சிய வெறியும், கனவும் பெரிய பெரிய காரியங்களை சாதிக்கும் என்று அடிக்கடி பலரும் சொல்கிறார்கள். ‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய்' என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு விதத்தில் பாலு ‘அதுவாகவே ஆகிவிட்டிருக்கிறான்' என்பது உண்மைதான். ஆனால் கனவு, வேட்கை பற்றிய கணக்குகளை உடைத்து எறிந்து விட்டு தனக்குள் புன்னகை செய்தவாறே பாலு பேசிக் கொண்டிருக்கிறான்.

பாலு இப்போதும் எனது ஊரில் இருக்கிறான். பார்க்கும் போதெல்லாம் இலட்சியக் கனவுகள் பற்றிய சந்தேகங்களை எனக்குள் எழுப்புகிறான்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com