Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்றே சொன்னார் அண்ணா!

2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

3. தாதா கண்ணில் காந்தி!

4. சர்ச்சைக்குரிய உறவுகள்!

5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

10. சில மத மாற்றங்கள்...

11. நட்சத்திரங்களும் யதார்த்தமும்

12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

13. கண்ணாலே நான் கண்ட கனவு...

14. சதாம் ஹுசேனும் நாமும்!

மனிதன் கேள்வி - பதில்கள்

***********

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!: ச. தமிழ்ச்செல்வன்

கதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி

வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:
அ. ராமசாமி


பண்பாடு - கலாச்சாரம்:
கு.சித்ரா


‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:
தா.சந்திரன்


ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்:
அ. ராமசாமி


விநாயகர் அகவல்:
கு.சித்ரா


‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:
தா.சந்திரன்


ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

புரசைவாக்கம் பாபுவும் சதாம் ஹுசேனும் நாமும்!

புரசைவாக்கம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மீதும் இராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீதும் சுமத்தப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் நமது கவனத்துக்குரியவையாக இருக்கின்றன. பாபு மீதான நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை. சதாம் ஹுசேன் மீது ‘விசாரணை’ முடிந்து தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுவிட்டது.

இருவர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பொதுவானது என்ன? உள்ளாட்சித் தேர்தலின்போது பாபு தன் அடியாட்களுடன் வாக்குச் சாவடிகளில் வன்முறை நடத்தி, தேர்தல் ஜனநாயகத்தைச் சீர்குலைத்தார் என்பது குற்றச்சாட்டு. சதாம் ஹுசேன், துஜேய்ல் நகரில் 148 ஷியா முஸ்லிம்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இரண்டுமே ஜனநாயக விரோதச் செயல்கள். ஆனால், இரண்டு வழக்குகளுக்கும் பொருந்தும் பொதுவான ஒரு கேள்வி... வன்முறைக்கு இவர்கள் மட்டுமா பொறுப்பு?

முதலில் உள்ளாட்சித் தேர்தல் விவகாரம். பல்வேறு பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிட்டுள்ளபடி, வன்முறை என்பது திடீர் என்று நடக்கவில்லை. திட்டமிடப்பட்டே நடந்திருக்கிறது. இதன் முக்கிய அடையாளங்கள்: 1.ரௌடிகள் வெள்ளைச் சட்டை - கறுப்பு பேன்ட் சீருடை அணிந்து வந்தனர். 2. அந்தச் சீருடை அணிந்து வந்தவர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கண்டுகொள்ள வேண்டாம் என்பது உத்தரவு.

3. தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினருடன் தி.மு.க-வுக்குப் போட்டியில்லாத இடங்களில், தோழமைக் கட்சி வட்டாரச் செயல் வீரர்களையும் (சொந்தப் பாதுகாப்புக்காக) அதே சீருடையில் வரும்படி ஆங்காங்கே செய்தி தரப்பட்டது.

இந்த முன்கூட்டிய திட்டங்களைச் சிந்தித்துச் செயல்படுத்திய இறுதி மூளையும் புரசைவாக்கம் எம்.எல்.ஏ-தானா? ரௌடிகள் சீருடை முதல் வாகனங்கள் வரை சென்னை முழுவதும் ஏற்பாடு செய்தது யார்? போலீஸாரை ஒதுங்கியிருக்கச் சொன்னது யார்? எம்.எல்.ஏ. பாபுவுக்கு இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தது யார்? இவை எது பற்றியும் விசாரிக்காமல் களத்தில் செயல்பட்ட வன்முறையாளர்களில் ஓரிருவரை மட்டும் கைதுசெய்து விஷயத்தை முடிப்பது எப்படி நியாயமாகும்? சந்தனக் கடத்தல் வீரப்பன் தனி மனிதனாக சந்தன மரங்களையோ, யானைகளையோ வெட்டியிருக்க முடியாது; லாரியில் ஏற்றியிருக்க முடியாது. ஆலை அதிபர்களுடன் தொடர்பு கொண்டு இருக்க முடியாது. காட்டுக்கு வெளியே பலர், வீரப்பனுடன் இவற்றில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்றபோதும் அவர்களெல்லாம் யார் என்று இன்று வரை நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இப்போது தேர்தல் வன்முறைகளுக்கும் அது போல பாபு மட்டும்தான் பொறுப்பா?

அதே போல, இராக்கில் சதாம் ஹுசேன் காலத்தில் நடைபெற்ற கொடூர நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் சதாம் மட்டுமே பொறுப்பா?

ஏனென்றால், எந்த அமெரிக்கா இன்று சதாம் ஹுசேனை மரண தண்டனைக் கைதியாக்கி மகிழ்கிறதோ, அதே அமெரிக்காதான் சதாம் ஹுசேனை ஒரு கட்டத்தில் போஷித்து வளர்த்து ஆதரித்தது. சதாமின் செயல்களுக்கான பொறுப்பாளிகளை விசாரிப்பதென்றால், ரீகன், சீனியர் புஷ் முதல் இன்றைய புஷ் வரை சேர்த்து விசாரிக்க வேண்டும். சதாமை ஆதரித்த அதே அமெரிக்காதான் சதாமுக்கு எதிராக இரானையும் ஒரு கட்டத்தில் பயன்படுத்தியது.

இப்போது சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்ட வழக்கே, சதாமைக் கொல்ல இரானின் கூலிப்படை துஜேய்ல் நகரில் முயற்சித்தபோது நடந்த சம்பவம் தொடர்பானதுதான். சதாமின் கார் ஊர்வலம் மீது கூலிப் படையினர் சுட்டனர். சதாமின் காவலர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். அடுத்தபடியாக அந்த நகரில் சுமார் 148 பேரை கண்மண் தெரியாமல் பிடித்து வந்து கொன்றனர் என்பதுதான் வழக்கு. சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆகின்றன.

சதாமுக்குத் தூக்குத் தண்டனை அறிவிக்கப்படுவதும் இது முதல் தடவையல்ல. அன்றைய இராக் ஆட்சியாளருக்கு எதிராகச் சதி செய்ததாக 1959-லேயே சதாமுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அப்போது போராளியாகவும் விடுதலை வீரராகவும் கருதப்பட்ட சதாம், புரட்சிகர பாத் கட்சித் தலைவராகி இராக் மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியதும் வரலாறு. காலம் சில புரட்சியாளர்களைச் சர்வாதிகாரிகளாகவும், ஜனநாயகவாதிகளை வாக்குச்சாவடி ரௌடிகளாகவும் மாற்றிவிடுகிறது!

சதாம் ஹுசேன் மீது இன்னும் பல வழக்குகள் இராக் சிறப்புநீதி மன்றத்தில் காத்திருக்கின்றன. எண்பதுகளில் சுமார் இரண்டு லட்சம் குர்தியர்களை இனப் படுகொலை செய்தது அடுத்த குற்றச்சாட்டு.

மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காகத் தண்டிப்பது என்ற கருத்தும் நடைமுறையும் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் உருவானவை. (வறுமை ஒழிக்கப்படாமல் இருப்பதும், எல்லாருக்கும் கல்வியும் மருத்துவமும் சம அளவில் கிடைக்காமல் இருப்பதும்கூட மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்தான். அதை ஒப்புக்கொண்டால் எல்லா பிரதமர்களும் ஜனாதிபதிகளும் குற்றவாளிகள் ஆகிவிடுவார்கள்).

யுத்தம் என்பதே தர்மம் அல்ல. ஆனால், யுத்தத்துக்கான ஒரு ‘தர்ம’த்தைக் கடைப்பிடிக்காமல் செய்யப்பட்ட கொடுமைகள் மட்டுமே மானுடத்துக்கு எதிரான குற்றமாகக் கருதப்படுகிறது. அப்படித்தான் ஹிட்லரின் நாஜி ஆட்சிக் காலக் கொடுமைகள் பற்றி விசாரிக்க நூரம்பர்க் விசாரணை ஏற்படுத்தப்பட்டது. பல நாஜி தளபதிகள் தண்டிக்கப் பட்டார்கள்.

இந்த அணுகுமுறைப்படி ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் மக்கள் மீது தெரிந்தே அணுகுண்டுகள் வீசிய அமெரிக்க ராணுவத்தினரும் ஜனாதிபதிகளும் உலக நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், குண்டு வீசுவது யுத்த தர்மமாம். எனவே, விசாரிக்கப்படவில்லை. அடுத்தபடி வியட்நாம் போர்க் குற்றங்கள். இதுவும் யுத்த தர்மத்துக்கு உட்பட்டதாகிவிட்டது.

ஹிட்லரின் நாஜிக்களைத் தவிர, வேறு எந்த வெள்ளை இன ராணுவமோ, அரசியல் தலைவர்களோ மானுடத்துக்கு எதிரான குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டதே இல்லை.

நவம்பர் முதல் வாரத்தில் தன் 90-ம் வயதில் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி போத்தா, தன் வீட்டில் அமைதியாகக் காலமானார். தென் ஆப்ரிக்காவின் நிற வெறிக் கொள்கையைப் பிடிவாதமாக அமலாக்கியவர் போத்தா. பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களின் சித்ரவதை அவர் ஆட்சிக் காலத்தில் தான் நடந்தது. வருடக்கணக்கில் சிறை வைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவைச் சந்தித்துப் பேசிய போதும், விடுதலை செய்ய மறுத்தவர் போத்தா. தென் ஆப்ரிக்காவில் பின்னர் நிறவெறி அரசு ஒழிக்கப்பட்ட பிறகும், தன் கொள்கைக்காக மன்னிப்புக் கேட்க மறுத்தார் போத்தா. உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டிய குற்றவாளிகளில் அவரும் ஒருவர். ஆனால், ஒருபோதும் அந்தக் கதி அவருக்கு ஏற்படவே இல்லை.

நாயைத் தூக்கிலிடுவதாக இருந்தாலும் முறையாக விசாரணை நடத்தித் தூக்கிலிடுபவர்கள் என்று பெருமைப்படும் மரபுடையவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால், சதாம் ஹுசேன் மீதான விசாரணையில் அவரை ஒரு நாயாகக் கருதிக்கூட அவர்கள் நடத்தவில்லை.

‘சதாம் ஹுசேன் ஒரு சர்வாதிகாரியல்ல. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்’ என்று கருத்து தெரிவித்ததற்காக, விசாரணையின் முதல் நீதிபதி நீக்கப்பட்டார். சதாம் ஹுசேனுக்காக வாதாடிய வக்கீல்கள் மூவர் அடுத்தடுத்து மர்மமாகக் கொல்லப்பட்டார்கள். சதாமுக்காக ஆஜரான முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் கிளார்க் என்பவர், ‘இந்த விசாரணை கேலிக்கூத்தாக இருக்கிறது’ என்று சொன்னதற்காக நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சதாம் ஹுசேன் உலக நீதிமன்றத்தின் முன்பு விசாரிக்கப்படவில்லை. யுத்தத்தில் இராக்கைக் கைப்பற்றிய பின் அமெரிக்கா ஏற்படுத்திய இராக் அரசாங்கத்தின் உள்ளூர் நீதிமன்றத்தின் முன்பு நடைபெற்ற விசாரணை இது. இராக்கில் யுத்தம் நடத்த சர்வதேசப் படை அமைத்தது அமெரிக்கா. யுத்தத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலையும் (ஏறத்தாழ மிரட்டித்தான்) வாங்கியது அமெரிக்கா. ஆனால், யுத்த குற்றத்துக்காக விசாரணையை மட்டும் உலக நீதிமன்றத்தின் முன்பு நடத்துவதற்கு ஐ.நா.சபை கோரியும், அமெரிக்கா மறுத்துவிட்டது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தன்னைத் தூய கிறித்துவராகக் கருதுபவர். சதாமைத் தூக்கிலிடக் கூடாது என்றும் மரண தண்டனையே கூடாது என்றும் போப்பாண்டவர் சார்பில் வாடிகன் மத குருக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். போப் சொன்னாலும் புஷ் கேட்பாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், புஷ் மாநில முதலமைச்சராக இருந்த போதுதான், டெக்சாஸ் மாநிலத்தில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

சதாம் தூக்கிலிடப்படுவதற்கு இன்னும் சில கட்டங்கள் பாக்கி இருக்கின்றன. அடுத்த 30 நாட்களுக்குள் மேல் முறையீடு நடத்தப்பட்டு, தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்குள் இந்தியா உள்ளிட்ட முஸ்லிம் அல்லாத நாடுகள், உலகம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தால், சதாமின் ஆயுள் நீடிக்கலாம்.

வன்முறைகளிலேயே மிகக் கொடுமையான வன்முறை எது?

நீதியின் பெயராலும் சட்டத்தின் பெயராலும் நடத்தப்படுவதாகும். சதாமின் வன்முறைகளும் சட்டத்தின் பெயரால் நடத்தப்பட்டவைதான். சதாம் மீதானதும் அப்படியேதான் நடத்தப்படும்.

தேர்தல் வன்முறை என்பதோ சட்டத்தின் பெயரால் வன்முறை நடத்தும் அதிகாரத்தைப் பெறுவதற்காக, நடத்தப்படும் வன்முறை. அதிலிருந்து தீர்வு பெற ஒரு பாபு மீதான வழக்கு போதாது. ஏனென்றால், ஐந்தாண்டுகள் முன்னால் கராத்தே தியாகராஜன் வன்முறை தொடர்பாக வாக்காளர்கள் போட்ட வழக்கே இன்னமும் விசாரிக்கப்படாமல் இருக்கிறது!

இந்த வார அதிர்ச்சி!

கட்டாய உடலுறவு கொள்ள (கற்பழிக்க) முயற்சிப்பது பெரும் குற்றம் அல்ல என்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சின்கா, பண்டாரி ஆகியோர் தீர்ப்பளித்திருப்பது இ.வா.அதிர்ச்சி. இந்தியன் பீனல் கோட் 511-ம் பிரிவின் கீழ் கொலை முயற்சிதான் குற்றம். ஆனால், வன்புணர்ச்சி முயற்சி குற்றமாகாது. கற்பழிப்புக்கான செக்ஷன் 376-ன் கீழும் முயற்சியைக் குற்றம் சாட்ட முடியாது என்றனர் நீதிபதிகள். ஜார்கண்ட் மாநிலத்தில் தாரகேஸ்வர் சாஹே என்பவர் 12 வயது சிறுமியுடன் கட்டாய உறவுகொள்ள முயன்றார். செக்ஷன் 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் (மாடஸ்டி) குலைத்ததாக மட்டுமே தாரகேஸ்வரரைக் குற்றம் சாட்டலாம் என்று தீர்ப்பு தரப்பட்டது!

இந்த வாரப் பூச்செண்டு!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தாரிக் பெர்வெய்ஸ் கான், தன் நீதிமன்றத்தில் ஆஜராகும் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் முகத்தை மறைக்கும் பர்தா அணியக் கூடாது என்று உத்தரவிட்டதற்காக இ.வா.பூச்செண்டைப் பெறுகிறார். வழக்கறிஞர் ரெய்ஸ் அஞ்சும் முகத்திரை அணிந்து வந்ததைக் கண்டித்த நீதிபதி ‘‘நீங்கள் தொழில் முறை வழக்கறிஞர். அதற்குரிய ஆடையைத் தான் அணிந்து இங்கே வர வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்!

இந்த வாரப் புதிர்!

உலகத்திலேயே பார்வையற்றவர்கள் அதிகம் இருக்கும் நாடு எது?

1. இந்தியா

2. சீனா

3. தென் ஆப்ரிக்கா

எந்த நாட்டில் பார்வையற்றவர்கள் அதிகம் என்று பார்ப்பதற்கு முன்னால், எந்த நாடு மிக அதிகமாகக் கண் தானம் செய்கிறது என்று அறிந்துகொள்வோம். ஸ்ரீலங்கா. தன் தேவைக்குப் பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆண்டு தோறும் கண் தானம் செய்கிறார்கள் ஸ்ரீலங்கா மக்கள். இறந்தவர்களின் கண்களை எடுத்துப் பொருத்தினால் பார்வை பெறக்கூடிய நிலையில் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் சுமார் 25 லட்சம் பேர். ஆனால், இங்கே கண் தானம் இன்னும் பெருகவில்லை. உலகத்தில் பார்வையற்றவர்கள் மொத்தம் நான்கு கோடிப் பேர். இந்தியாவில்தான் அதிகமானவர்கள். மொத்தம் ஒரு கோடிப் பேர். வறுமையும் அதனால் உள்ள சத்துக் குறைவும் பார்வையின்மை ஏற்பட முக்கியமான காரணங்களாகும்!

(ஆனந்தவிகடன் 15-11-2006)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com