Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. அன்றே சொன்னார் அண்ணா!

2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...

3. தாதா கண்ணில் காந்தி!

4. சர்ச்சைக்குரிய உறவுகள்!

5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை?

6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்?

8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்!

9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்!

10. சில மத மாற்றங்கள்...

11. நட்சத்திரங்களும் யதார்த்தமும்

12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்

13. கண்ணாலே நான் கண்ட கனவு...

14. சதாம் ஹுசேனும் நாமும்!

மனிதன் கேள்வி - பதில்கள்

***********

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!: ச. தமிழ்ச்செல்வன்

கதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி

வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:
அ. ராமசாமி


பண்பாடு - கலாச்சாரம்:
கு.சித்ரா


‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:
தா.சந்திரன்


ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்:
அ. ராமசாமி


விநாயகர் அகவல்:
கு.சித்ரா


‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:
தா.சந்திரன்


ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

சில மத மாற்றங்கள்...

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நிச்சயம் அவர் பெயரில் மதம் இருக்கிறது. கடவுள் மனிதனைப் படைத்தாரோ இல்லையோ, நிச்சயம் மனிதன்தான் மதத்தைப் படைத்தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. எல்லா பழைய மதங்களும் ஏதாவது ஒரு நூலைச் சார்ந்திருக்கின்றன. கீதை, பைபிள், குரான், கிரந்தம், ஆகமங்கள், ஸ்மிருதிகள்...... மதப் பழக்க வழக்கங்கள் சரியா தப்பா என்று சர்ச்சை வரும்போதெல்லாம் இப்படிப்பட்ட நூல்களிலிருந்துதான் எதிரெதிர் தரப்பினரும் மேற்கோள் எடுத்து வாதாடுகிறார்கள்.

ஆனால் 'எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை' என்றான் நூல் பல கற்று நூல் பல எழுதிய பாரதி. பாரதி இங்கே நூல் என்று குறிப்பிட்டது மத நூல்களைத்தான் என்பது முழுப் பாட்டையும் படித்தால் தெரியும். (உயிர் பெற்ற தமிழர் பாட்டு ). ராமாயணம், மகாபாரதம் எல்லாம் கற்பனைக் கதைகள்தான் என்று இந்தப் பாட்டில் அடித்துச் சொல்கிறான் பாரதி. 'நன்று புராணங்கள் செய்தார் அதில்/நல்ல கவிதை பலபல தந்தார்/கவிதை மிக நல்லதேனும் அக்/கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.'

சரி. அப்படியானால் எதற்காக இந்தக் கதைகள் ? பாரதி சொல்கிறான் : 'புவிதனில் வாழ்நெறி காட்டி நன்மை / போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்.'

அடுத்த அடிகளில் ஸ்மிருதிகள் பற்றி கருத்து சொல்லுகிறான் பாரதி, ' மன்னும் இயல்பின அல்ல. இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும். காலத்திற்கேற்ற வகைகள் அவ்வக் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாம். எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை ! '

காலத்துக்கேற்ப ஒழுக்க விதிகள், நடத்தை விதிகள், நம்பிக்கைகள், மாறித்தான் தீரும் என்பதை சில அண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

நிகழ்ச்சி 1 : திருப்பதி. முடி காணிக்கை செலுத்த வரும் பெண் பகதர்களுக்கு இனி பெண் நாவிதர்களே மொட்டை அடிப்பார்கள். இருபது பெண் நாவிதர்கள் பல எதிர்ப்புகளை மீறி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் இங்கிருக்கும் 400 ஆண் நாவிதர்கள் எதிர்த்தார்கள். அடுத்து ஆகம சாஸ்திர விற்பன்னர்களும், விசாக சாரதா பீடத்து சுவாமிகள் ஸ்வரூபானந்தாவும் எதிர்த்தார்கள்.

எதிர்ப்பை எதிர்த்த மகளிர் நாவிதர் சங்கத் தலைவி ராதா தேவி கேட்டார்: ‘மடாதிபதிகளும் சுவாமிஜிகளும் விமானத்திலும் ஏ.சி காரிலும் செல்லுவதற்கு எந்த சாஸ்திரம் அனுமதி வழங்கியது ?'

எதிர்ப்புகளை நிராகரித்த தேவஸ்தான நிர்வாகம் மொத்தம் 100 பெண் நாவிதர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்றது. இரண்டாயிரம் பெண்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இறுதியில் முதல் கட்டமாக 20 பேருக்கு வேலை தரப்பட்டது. (மாதம் 3 ஆயிரம் சம்பளம். உபரியாக ஒரு மொட்டைக்கு 2 ரூபாய்.)

நிகழ்ச்சி 2 : சென்னை ஐ.டி ஹைவே. அடையாறு மத்திய கைலாஷ் கோவில் முனையிலிருந்து மகாபலிபுரம் வரை உருவாக்கப்படும் ஆறு வழி நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்காக மொத்தம் 19 கோயில்களும் 2 மசூதிகளும் (ஒரு எம்.ஜி.ஆர் சிலை, ஒரு அம்பேதகர் சிலையும் கூட ! ) சம்பந்தப்பட்டவர்களின் சம்மதத்துடன் இடம் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில்தான் கோயிலோ மசூதியோ இருந்தாகவேண்டும் என்று பிடிவாதம் செய்யாமல் மாற்று இடங்கள் ஏற்கப்பட்டன. மத்திய கைலாஷ் கோவில் இருக்கும் இடத்திலும் மேம்பால திட்டம் வரவிருப்பதால், அந்தக் கோயிலையும் வேறு இடம் மாற்ற கோவில் நிர்வாகம் சம்மதித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

நிகழ்ச்சி 3: பஞ்சாப். சீக்கிய மத அடையாளங்களில் ஒன்றான நீண்ட முடிக்கட்டு இளம் தலைமுறையில் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. கடவுள், மத நம்பிக்கைகள் இல்லாதவர்கள் எனக் கருதப்படும் மார்க்சிஸ்ட்டுகளின் முதுபெரும் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இன்னமும் முடிக்கட்டும் தலைப்பாகையும் வைத்திருக்கிறார். ஆனால் பஞ்சாப் கிராமப்புறங்களில் சுமார் 80 சத விகிதம் இளைஞர்கள் தற்போது முடி வெட்டி கிராப் வைத்துக் கொள்வதாக சீக்கியர்களின் மதத் தலைமை அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டித் தலைவரே சொல்லியிருக்கிறார். இப்போது அதிகமான சீக்கிய இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவதால், அங்கே மத அடையாளங்களுடன் செல்ல விரும்பாதது ஒரு முக்கிய காரணம் என்று கருதப்படுகிறது. குஷ்வந்த் சிங்கின் மகன் எழுத்தாளர் ராகுல் சிங், கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சித்து, யுவராஜ் சிங், பாடகர் குருதாஸ்மான் எனப் பல பிரபலங்களும் கிராப் தலையர்கள்தான்.

நிகழ்ச்சி 4: நாகபுரி. சமண மதப் பெண் துறவி ரித்திஸ்ரீ என்கிற சமதா தன் அமராவதி ஆசிரமத்திலிருந்து இம்மாத மத்தியில் திடீரென்று காணாமல் போனார். அவர் அறையில் கொஞ்சம் சாம்பலும் எலும்புத் துண்டுகளும் மட்டும் கிடந்தன. ஏதோ அற்புத லீலை மூலம் ரித்திஸ்ரீ பூத உடலை எலும்பும் சாம்பலுமாக விட்டுவிட்டு முக்தி அடைந்துவிட்டதாக முதலில் சில சமண சாமியார்கள் கருத்து தெரிவித்தார்கள். தன் மதத்தின் நற்பெயர் கெடக்கூடாது என்பதற்காக தான் அப்படி செய்துவிட்டுத் தன் காதலர் ராஜு என்ற சட்டக்கல்லூரி மாணவருடன் வெளியேறியதாக இப்போது கூறும் சமதா, துறவுக்கு துறவு பூண்டு இந்த வாரம் ராஜுவை திருமணம் செய்துகொன்டார். திருமணத்துக்கு சமதாவின் பெற்றோர்கள் உடன்படவில்லை . ஆனால் ராஜுவின் பெற்றோர்கள் ஆசி வழங்கினார்கள்.

சமதா 15 வயதில் துறவியாக்கப்பட்டவர். ஆறு வருடம் கழித்துத் தனக்கு துறவு வாழ்க்கை சரிப்பட்டு வரவில்லை என்று முடிவெடுத்தார். நடு வயதுக்குப் பின்னரோ, முதுமையிலோ துறவியாவதை மட்டுமே இனி ஆதரிக்க வேண்டும்; சிறுவர், சிறுமிகளை துறவு பூணச் செய்யும் ஜைன மத நடைமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சமண மத அறிஞர்களிடையே விவாதம் தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி 6 : இரான் முதல் ஆஸ்திரேலியா வரை எத்தனை இஸ்லாம் மத குருமார்கள் முஸ்லிம் பெண்கள் கட்டாயம் பர்தா அணியவேன்டும் என்று சொல்கிறார்களோ, அதே அளவுக்கு இஸ்லாம் அறிஞர்கள் பர்தா அணியாமல் இருப்பது மத விரோதம் ஆகாது என்று பகிரங்கமாகப் பேச ஆர்மபித்திருக்கிறார்கள். நாடு, பெயர் பட்டியல்கள் எழுதினால் விரிவாகிவிடும். ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையாளனும் ஆன்மிகவாதியுமான பாரதி அழுத்தமாக சொன்னது போல காலத்துக்கேற்ப ஒழுக்க விதிகள் மாறுவதே இயற்கை. இதைத்தான் பழந்தமிழ் நூலான நன்னூல் பாரதிக்கும் முன்னாலேயே சொல்லியிருக்கிறது -'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே.' எப்படி இந்த நூல் மட்டும் எல்லா காலத்துக்கும் பொருந்துகிறது ? புதிராக இருக்கிறதா ? ஒரு சிக்கலும் இல்லை. காரணம் அது மத நூல் அல்ல. இலக்கண நூல்!

இந்த வாரம் ஆங்கிலத்தில் படித்த ஓர் ஆன்மிகக் கதை

(எழுதியவர் என்.என். சச்சிதானந்த்) : கோடீஸ்வர அப்பாவுடைய வியாபாரத்தில் தானும் ஈடுபட விரும்பாத ஒரு இளைஞன், மனிதர்கள் கடவுள் பெயரால், மதத்தின் பெயரால் அடித்துக் கொன்டு சாவதைத் தடுக்க தீர்வு தேடி காட்டில் போய் கடுந்தவம் இருந்தான். தீர்வு தோன்றியது. அதைக் கடவுளிடம் சொல்லச் சென்றான். 'எனக்கும் ஜனங்களுக்கும் நடுவே இடைத்தரகர் யாரும் தேவையில்லை. அவரவர் தன் மனதுக்குள் என்னை வைத்துக் கொன்டால் போதும். அதுவே கோவில். வேறு ஏதும் வேண்டாம். இதுதானே உன் தீர்வு ?' என்றார் கடவுள். 'ஆம். இதைப் பரப்ப உங்கள் அருள் தேவை' என்றான் இளைஞன். 'போய் பரப்புவதற்கு முன் ஒரு நிமிடம் யோசி. பின்னால் என்ன ஆகும் என்பதை' என்றார் கடவுள்.

இளைஞன் மனக் கண்ணில் எதிர்காலம் விரிந்தது. நாடு முழுக்க அவன் அலைந்து திரிந்து பிரசாரம் செய்த தீர்வைப் பின்பற்றியவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். ஆசிரமம் ஆரம்பித்தார்கள். அவன் அவதார புருஷனாக்கப்பட்டான். உள்வட்டம், வெளி வட்டம், ஒழுக்க விதிகள், கட்டுபாடுகள் எல்லாம் வந்தன. அரசியல்வாதிகள் இதன் மக்கள் செல்வாக்கை தங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதைப் பின்பற்றாதவர்களுடன் இவன் சீடர்கள் மோதினார்கள். கற்பனைக்கே 'அய்யோ' என்று அலறினான் இளைஞன். 'உனக்கு முன்னால் வந்த அடிமை, இளவரசன், தச்சன்மகன், ஒட்டகமேய்ப்பன் எல்லாருக்கும் இதேதான் நடந்தது.' என்றார் கடவுள். இளைஞன் வீடு திரும்பினான். 'அப்பா. குளித்துவிட்டு வந்துவிடுகிறேன். உங்கள் ஆபீசுக்குப் போகலாம்' என்றான். சொர்க்கத்தில் கடவுள் தன்னருகே இருந்த தேவதையிடம் பெருமூச்சு விட்டபடி சொன்னார் - 'வரவர மானுடத்தை அதன் காவலர்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரிய பாடாக இருக்கிறது.'

இந்த வாரப் புதிர்

நம் நாட்டு சிறைகளில் இருக்கும் மொத்த கைதிகள் எண்ணிக்கை 3,32,112. இதில் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாமல் விசாரணைக்குக் காத்திருக்கும் கைதிகள் எத்தனை பேர் ?

1. 2,391
2. 23,914
3. 2,39,146

மூன்றாவது விடையில் உள்ளபடி சுமார் 70 சதவிகிதம் கைதிகள் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவர்கள். இவர்களில் கணிசமானவர்கள் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டிருந்தால் எத்தனை காலம் சிறை வாசமோ, அதை விட அதிக காலமாக சிறையில் இருக்கிறார்கள். சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் சதவிகிதம் மக்கள் தொகையில் அவர்களுடைய சதவிகிதத்தை விட மிக அதிகமாக உள்ளது. இந்த முஸ்லிம் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதக் குற்றங்களுக்காக கைது செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் முஸ்லிம் சதவிகிதம் 5.6. சிறைக் கைதிகளில் 9.6. மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் ஆகிய மாநிலங்களில்தான் சதவிகித வித்யாசம் மிக அதிகம். மகாராஷ்டிரம்: மக்கள் தொகையில் முஸ்லிம்கள் - 10.6. சிரையில் : 32.4. கேரளம்: 24.7 ( 37.1) குஜராத்: 9.1 ( 25.1 )

இந்த வார சந்தேகம்

சென்னை ராஜதானி ( திராவிட நாடு ?) என்ற கூட்டுக் குடும்பத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம் எல்லாம் பிரிந்து போய் தனிக் குடித்தனம் அமைத்ததை அவர்கள் கொண்டாடலாம். நாம் கொண்டாடுவது எப்படி நியாயம் ? அப்போது சென்னை ஸ்டேட்டாக ஆக்கப்பட்ட நம் பெயரை 12 வருடங்கள் கழித்து 'தமிழ்நாடு' என்று மாற்றிக் கொண்ட (1968) டிசம்பர் 1ஐக் கொண்டாடுவதுதானே சரியாக இருக்க முடியும் ?

இந்த வாரக் கவலை

இந்தியாவில் நகரங்களில் சிறுமிகள் இப்போதெல்லாம் 11 வயதிலேயே பருவம் எய்துவதாக மகப்பேறு மருத்துவர்களின் கூட்டமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால் உடற்கூறு பற்றியும் பாலுணர்வு பற்றியும் அந்த வயதில் முறையாக ஏதும் அறியமுடியாத, அதே சமயம் தப்புத்தப்பாக நிறையவே அறியக்கூடிய சூழல் சிறுமிகளின் மன உளைச்சலுக்கு வழிவகுப்பதே இ.வா. கவலை. பாலியல் கல்வியை ஒன்பதாம் வகுப்பில் அறிமுகம் செய்யவே இன்னமும் கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் ஆறாம் வகுப்பிலேயே ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வாரப் பூச்செண்டு

யார் எதிர்த்தபோதிலும் மிரட்டியபோதிலும் விடாப்பிடியாக நீதி மன்றம் சென்று போராடி தன்னிடம் முறைகேடாக நடந்த மாமனாருக்கு தண்டனை பெற்றுத் தந்த இம்ரானுக்கு.

தன் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானின் எதிர்ப்பைப் புறக்கணித்துவிட்டு மணியம்மை வேடத்தில் குஷ்புவை நடிக்கவைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கும் பெரியார் பட இயக்குநர் ஞான ராஜசேகரனுக்கு.

இந்த வாரக் குட்டு

நடிகை ஸ்ரீவித்யாவின் இறுதிச் சடங்கில் கேரள அரசு மரியாதை செலுத்தியது போல நடிகை பத்மினிக்கு இங்கே செய்யத் தவறிய தமிழ்நாடு அரசுக்கு.

(ஆனந்தவிகடன் 8-11-2006)Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com