KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1.‘பராசக்தி’ கருணாநிதி, டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்கலாமா?

2. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்! தேர்தல் சொல்லும் பாடம்!

3. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்?!

4. ஜான்சி ராணி, கண்ணகி, கொஞ்சம் ஜால்ராக்கள்

5. கண்ணகியைப் பின்பற்றச் சொல்லுகிறதா கலைஞர் அரசு?

6. ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?

***********
புதுப்பேட்டை – சினிமா விமர்சனம்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்


தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்:
அ. ராமசாமி


கனவு நெடுஞ்சாலை:
பாஸ்கர் சக்தி


மனிதன் கேள்வி - பதில்கள்

அவரவர் வாழ்க்கை:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

5. தமிழ்ப் பெண்களைக் கண்ணகியைப் பின்பற்றச் சொல்லுகிறதா கலைஞர் அரசு?

ஏதோ ஒரு அதிவிஸ்வாச அரசு அதிகாரி, ‘மஞ்சள்’ துணியில் போர்த்தி வைத்த ‘மறுபிறவிக்’ கண்ணகி சிலையை, மஞ்சள் சால்வை போர்த்திய கலைஞர் கருணாநிதி பொத்தானை அழுத்தித் திறந்து வைத்து ஆற்றிய ‘பணிவான’ உரையை செய்தித்தாள்களில் படித்தவர்களுக்கு, ‘பணிவே‘ இப்படி இருந்தால் ‘ஆணவம்’ எப்படி இருக்கும் என்ற கவலைதான் ஏற்படும்.

இன மோதல்கள் ஏற்படும், தமிழனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்ப வேண்டாம் என்றெல்லாம், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிற ஒரு முதலமைச்சர், வார்த்தை ஜாலங்களின் மூலம் வன்முறையைத் தூண்டிவிடுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை அவர் ஒன்றும் அறியாதவர் அல்ல. மறு தினமே அவரது கட்சியினர் சிலர் ஆனந்தவிகடன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்ததும் வேறு இடங்களில் இதழைத் தீயிட்டு எரித்ததும் அவருடைய ‘‘பணிவான’ தூண்டுதலை நிரூபிக்கும் நிகழ்ச்சிகளாகும். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல, கட்சியினரைப் போராட்டத்துக்கு தூண்டி விட்டுவிட்டு, ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு ஒற்றை போலீஸ்காரரைப் பாதுகாப்புக்கும் அனுப்பி வைத்தார்கள்.

கண்ணகி சிலையை கரடி பொம்மையுடன் ஒப்பிடுவதா? என்று கேட்டு விகடன் கட்டுரையை தவறாக வியாக்யானம் செய்து கலைஞர் கருணாநிதி ஆவேசமாகப் பேசியிருக்கிறார். ‘சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய ‘டெடி பேர்’ கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி அப்படித்தான்’ என்பதுதான் நான் விகடனில் எழுதிய வாக்கியம். இதற்கு அர்த்தம் என்ன? பொம்மைக்கான வயது கடந்தபிறகும் அதைக் கொஞ்சுகிறவரின் முதிர்ச்சியற்ற (அப்செஷன்) மனநிலையையும் ஆட்சியாளரின் மனநிலையையும்தான் அது ஒப்பிடுகிறதே தவிர பொம்மையையும் சிலையையும் அல்ல. தொல்காப்பியம் முதல் பாசக்கிளிகள் வரை பலதரப்பட்ட இலக்கிய அறிவுடைய கலைஞருக்கு இந்த உவமையின் பொருள் புரியாதா என்ன. ஆனால் வேண்டுமென்றே திரித்து, கரடியும் கண்ணகியும் ஒன்று என்று கண்ணகியை அவதூறு செய்திருப்பது அவர்தான்.

எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதபோது, அசல் பிரச்சினையிலிருந்து திசை திருப்பும் அவருடைய வழக்கமான உத்தி இது. கண்ணகி பற்றி நான் எழுப்பிய முக்கியமான கேள்விகளுக்கு இப்போது கூட அவர் பதில் சொல்லலாம்.

கேள்வி 1: வேறு பெண்ணை நாடிப் போய்விட்டு, தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக்கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக்கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்றால், அது, கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒருதலைக் கற்பு. இது உண்மையா, இல்லையா ?

2. அரசனுக்கெதிராக கண்ணகி போராடிய விஷயம், தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனமா இல்லையா? கணவனிடம் நீதிக்காகப் போராட முடியாதவள் அரசுக்கெதிராகப் போராடிய கற்பனை, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டிய கதையில்லையா ?

3. கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்பந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயல், எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமையா இல்லையா? இதையே இன்று ஒருவர் செய்தால் அதை பயங்கரவாதம் என்று சொல்லமாட்டோமா?

மேற்கண்ட கேள்விகளுடன் இன்னொரு கேள்வியையும் கலைஞரின் உரைக்குப் பின் இப்போது எழுப்ப வேண்டியிருக்கிறது. தமிழர் பண்பாட்டின் அடையாளம் கண்ணகி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, கண்ணகி வாயிலாக உணர்த்தப்படும் தமிழர் பண்பாடுதான் என்ன ?

கணவன் வேறு பெண்ணை நாடிச் சென்றாலும், தான் மட்டும் கற்புடன் அவன் திரும்ப வருவதற்காக காலம் காலமாகக் காத்திருப்பதுதான் தமிழ்ப் பண்பாடா? தன்னை மோசமாக நடத்திய கணவனுக்காக அரசாங்கத்துடன் போராடி ஊரைக் கொளுத்துவதுதான் தமிழ்ப் பண்பாடா?

கற்பு, வீரம் இரண்டிலும் கண்ணகியின் நடத்தை (தனக்கே எதிராகவும்) கோவலனுக்கே சார்பாக இருந்ததால் அவளைக் கோவலன்கள் வேண்டுமானால் கொண்டாடலாம். கலைஞர் தலைமையிலான தமிழக அரசு எதற்காக இன்றைய தமிழ்ப் பெண்கள் கண்ணகியை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்தவேன்டும்.

தனிப்பட்ட முறையில் கலைஞரோ அவரது குடும்பமோ, கட்சியோ கண்ணகிக்கு பத்தாயிரம் சிலைகள் வைத்துக் கொள்ளலாம். முன்னோர் நினைவிடங்களுக்கு மட்டுமல்ல, கண்ணகி சிலைக்கும் விரும்பினால் குடும்பம் கற்பூர ஆரத்தி காட்டிட, அவர் மலர் தூவலாம். அதற்கு முழு உரிமை அவருக்கு உண்டு. இதற்கெல்லாம் எவ்வளவு செலவை சொந்தப் பணத்தில் அவரோ கண்ணகி ரசிகர் மன்றத்தினரோ செய்தாலும் அது குறித்து எங்களுக்கு அக்கறையில்லை. ஆனால் முதலமைச்சராக கண்ணகி சிலை திறப்பையொட்டி தமிழ் நாட்டில் பல்வேறு பத்திரிகைகளில் லட்சக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை செலவழித்து விளம்பரம் கொடுத்திருக்கிறார். கண்ணகியை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று தமிழக மக்கள் மீது திணிக்கப்படுகிறது. எனவே இதை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கும் பதில் சொல்லும் கடமை அவருக்கும் இருக்கிறது.

‘சிலைதானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார் கலைஞர். அவருக்கு சிலைகள் மீதுள்ள பாசம் நாடறிந்தது. சுனாமியால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் அகதிகளானபோது, மருத்துவமனையில் இருந்த கலைஞர் கருணாநிதி குணமாகி வந்தபின் வெளியிட்ட அறிக்கையொன்றில், மரணத்துடன் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்தபோதும் தன் மனதில் பதைபதைப்பை ஏற்படுத்திய விஷயம் கடலின் சீற்றத்தில் கன்னியாகுமரியில் தான் வைத்த அய்யன் திருவள்ளுவர் சிலை என்ன ஆயிற்று என்ற கவலைதான் என்று தெரிவித்திருந்தார்.

எங்களுக்கு சிலைகளை விட மனிதர்கள்தான் முக்கியம். அதனால்தான் பண்பாட்டின் அடையாளம் என்ற பெயரால் தவறான முன்மாதிரிகளை தமிழர்களிடம் பரப்புவதை விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

உலகத்திலேயே இன்று இந்தியாவில்தான் எய்ட்ஸ் தாக்கப்பட்ட நோயாளிகள் அதிகம். இந்தியாவிலேயே இதில் முதலிடம் தமிழ்நாட்டுக்குத்தான். எய்ட்ஸ் தாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் எல்லாரும் பாலியல் தொழிலாளிகள் அல்ல. ஏராளமானவர்கள் ‘குடும்பப் பெண்கள்’.

எப்படி அவர்களுக்கு எய்ட்ஸ் வந்தது? அவர்களுக்கு நோயை அளித்தது கோவலனை முன்மாதிரியாகக் கொண்ட தமிழ்க் கணவன்கள்தான். கண்ணகி போல வாயில்லாப் பூச்சியாய் அந்தக் கணவர்களை சகித்துக் கொண்டு வாழ்ந்ததற்கு அந்தப் பெண்களுக்குக் கிடைத்த பரிசு எய்ட்ஸ்.

ஒரு சிலை மீது கலைஞருக்கு இருக்கும் கண்மூடித்தனமான பாசம், எந்த விதத்தில் கடவுள் பக்தர்களுக்கு விக்கிரகங்கள் மீது இருக்கும் பக்தியிலிருந்து வேறுபட்ட்டது? சிலைதானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம் என்றுதானே பிள்ளையார் பக்தர்கள், பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தபோது குரலெழுப்பினார்கள்? பெரியாரின் மொழியில் பேச வேன்டிய கலைஞர் ராம கோபாலன் பாஷையில் பேசிக் கொண்டிருப்பது ஏன்? பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்ததாக அவர் அடிக்கடி சொல்லுவார். மெய்தான். ஒரு பல்கலைக்கழகத்தில் எத்தனையோ மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் எல்லாரும் தேர்ச்சி பெறுவதில்லையே.

சாதி ஒழிப்பை முன் நிறுத்திப் போராடிய பெரியாரிடம் அவர் மெய்யாகவே கற்றுத் ‘தேர்ந்திருந்தால்’ தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று அவர் முன்னிறுத்தும் கண்ணகி எந்த சாதியின் பண்பாட்டுக்குரியவள் என்று சிந்தித்திருக்க வேண்டாமா? கண்ணகி பிற்படுத்தப்பட்டவளா, தாழ்த்தப்பட்டவளா, இல்லையே. உயர்சாதி வணிகர் குலப் பெண் என்கிறது சிலப்பதிகாரம். காட்டிலும் கழனியிலும் காலம் காலமாக உழைக்கும் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியா கண்ணகி? அவள் வண்ணச் சீரடியை மண்மகள் கண்டிலள் என்கிறது காப்பியம். அவள் உழைக்கும் பெண்ணல்ல. உழைக்கும் பெண்கள் சார்பாகப் போராடியவளுமல்ல. மதுரையைத் தீக்கிரையாக்கிய போது, பார்ப்பனரையும் பசுவையும் தீண்டாதே என்று தீக்கு உத்தரவிட்ட இந்துத்துவக் குரல் அவளுடையது. இந்தப் பண்பாட்டை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று நாங்கள் ஏன் ஏற்கவேண்டும் ?

ஜெயலலிதா மீது இருக்கும் அரசியல் விரோதத்துக்காக, எல்லா தமிழ்ப் பெண்களுக்கும் எதிரான பண்பாட்டைக் கண்ணகி பெயரால் கலைஞர் திணிக்கக் கூடாது. பெண் விடுதலைக்குப் புரட்சிகரமான வழிகளை முன்வைத்த பெரியார், பெண்ணடிமையின் சின்னமான கண்ணகியை பண்பாட்டின் அடையாளம் என்று காட்டி தமிழகத்தை கலைஞர் ஏய்ப்பதை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்.

இரவு உறங்கச் செல்லும் முன்னால் ஒரு கணம், கலைஞர் பராசக்தியை நினைத்துப் பார்க்க வேண்டும். அம்பாளைச் சொல்லவில்லை. திரைப்படத்தைச் சொல்கிறேன். 28 வயது கருணாநிதியை எங்கே தொலைத்தார் என்று யோசிக்கவேண்டும். கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகக்கூடாது என்று 28ம் வயதில் வசனம் தீட்டிய கருணாநிதி, 82ம் வயதில் அதே கருத்தைக் கொன்ட டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்க சம்மதிப்பது எப்படி நிகழ்ந்தது என்று யோசிக்க வேண்டும். நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று அடிக்கடி சொல்லும் அவர் கம்யூனிஸ்ட்டுகளின் தர்மமமான சுய விமர்சனத்தை முதலில் மேற்கொள்ள வேண்டும். நெஞ்சுக்கு நீதி என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.

கண்ணகி கலைஞரின் கண்ணை மறைக்கிறாள். ‘பராசக்தி’ கண் திறக்கட்டும். காலமும் தமிழகமும், அவருக்குப் பெரியார் போன்ற சிந்தனையாளராக சமூகச் சீர்திருத்த சிற்பியாக உயர்வதற்கான வாய்ப்பைத் திரும்பத் திரும்ப அளிக்கிறது. மறுபடியும் மறுபடியும் குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும் சொந்த விருப்பு வெறுப்பினாலும் அந்த வாய்ப்புகளை வீணடிப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்.

நன்றி: புதிய பார்வை ஜூன் 16, 2006