|
ஞாநி
2. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்! தேர்தல் சொல்லும் பாடம்!
எப்படியாவது கல்யாணம் நடக்க வேண்டும், ஆயிரம் பொய்கள் சொன்னாலும் சரி. இது இன்னமும் நடைமுறையில் இருந்துவரும் வழக்கம். பையன் கை நிறையச் சம்பாதிக்கிறான். எந்தக்கெட்ட பழக்கமும் கிடையாது. பெண் ரதி மாதிரி அழகி. குணவதி, குடும்பத்தைப் பாச மழையில் மூழ்கடித்துவிடுவாள் என்று இந்தப் பொய்கள் இரு தரப்பும் கேட்க விரும்பும் பொய்களாக நமது சமூகத்தில் வேரூன்றி இருக்கின்றன. நாளைக்கு உண்மை தெரிய வந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ என்ற பயம் கிடையாது. காரணம் இரு தரப்புமே பொய் சொல்வதனால்தான்.
தமிழ் நாட்டு தேர்தல் அரசியலும் நம்முடைய திருமண முறையைப் போலத்தான் இருக்கிறது. கட்சிகள் மாப்பிள்ளைகளாகவும் வாக்காளர்கள் மணப்பெண்ணாகவும் இருக்கின்றனர். ஒரே ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. திருமண பேரம் என்பது இருவழிப் பாதை. ஆனால், அரசியல் பேரம் ஒருவழிப் பாதை. இங்கே ஆயிரம் பொய் சொல்லும் உரிமை முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உரியது. வாக்காளர்கள் மணப்பெண்ணை விட மோசமான நிலையிலேயே இருக்கிறார்கள். தேர்தல் திருமணம் முடிந்து அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியது மக்கள் மட்டும்தான்.
நடந்த தேர்தலில் முதல் பொய்யைப் பார்ப்போம். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே எல்லா கட்சி வேட்பாளர்களும் சட்டமன்றத்துக்குச் செல்ல விரும்புகிறார்களாம். இதுதான் முதல் பொய்.
ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று டிக்கெட் தருவதற்கு முன்னால் சில கட்சித் தலைமைகள் கேட்டன. தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கும் இருபது லட்ச ரூபாயைவிட பல மடங்கு அதிகமான தொகைகளைச் சொன்னவர்களுக்குத் தான் டிக்கெட் கிடைத்தது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஐந்தாண்டுக் காலம் பதவியில் இருந்தால், சபைக்குப் போனாலும் போகாமல் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டாலும், மொத்தமாக பெறக்கூடிய மாதச் சம்பளம், இதரப் படிகள் எல்லாம் சேர்த்து சுமார் எட்டு லட்சம் ரூபாய்தான். ஆனால், தேர்தல் ஆணைய விதியின்படி மட்டுமே அவர் தேர்தல் செலவு செய்திருந்தால்கூட, துண்டு விழும் தொகை 12 லட்சம் ரூபாய். சமூகத் தொண்டாற்றும் வாய்ப்புக்காக இப்படி சொந்தக் காசைச் செலவிட விரும்பிப் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுமார் மூவாயிரம் பேர். பாரி, காரி, ஓரி காலத்தில் எல்லாம் நாட்டுக்கு ஒரு வள்ளல்தான் இருந்தார்கள். இன்றைய தமிழகம் செய்திருக்கும் பேறு இப்படி ஆயிரக்கணக்கானவர்களைப் பெற்றிருக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில், போட்ட பணத்தை எப்படி பல மடங்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ. மாப்பிள்ளையும் திரும்ப எடுப்பார் என்பது ஒவ்வொரு வருங்கால சமூக சேவகரும் கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொள்ளவேண்டிய கலையாகும்.
அடுத்த பொய்...- வேட்பாளர்கள் தெரிவிக்கும் சொத்துக் கணக்கு. தன்னிடம் இருந்த நகைகள் இப்போது கோர்ட் வசம் இருப்பதால் அவற்றின் மதிப்பு என்னவென்று சொல்ல இயலவில்லை என்றார் ஜெயலலிதா. பத்தாண்டுகள் முன்பு கோர்ட் வசம் அவை செல்லும் முன்னால் இவரிடம்தானே இருந்தன. அப்போதைய மதிப்பு என்னவென்றாவது கணக்கு காட்டலாம் இல்லையா?
சன் டி.வியில் தன் குடும்பம் வைத்திருந்த பங்குகளைப் பேரனுக்கே விற்றுவிட்டதாக அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, முந்தைய தேர்தல்களின்போது அளித்த சொத்து விவரங்களில் அந்தப் பங்குக் கணக்கைத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.
இந்த சொத்துக் கணக்கு விவரம் தெரிவிப்பது என்பது நமது தேர்தல்களில் அரங்கேற்றப்படும் இன்னொரு பொய். ஏனென்றால் ஒவ்வொரு முறை போட்டியிடும்போதும் அப்போதைக்கு ஒரு கணக்கு தரப்படுகிறது. கடந்த தேர்தல்களின்போது அளித்த கணக்கையும் இத்துடன் இணைத்து அளிக்க வேண்டும். இரு தேர்தல்களுக்கு இடையில் சேர்ந்த சொத்து எப்படிச் சேர்ந்தது என்றும் விளக்க வேண்டும். அப்படிச் செய்வதில்லை.
பொய்க்குச் சமமாக தேர்தல் கல்யாணத்தில் பயன்படுத்தப்படுவது அரை உண்மை. ஒரு விஷயத்தில் தங்களுக்கு சாதகமான ஒரு பாதி உண்மையை மட்டும் சொல்லிவிட்டு எதிரான மறு பாதியை சொல்லாமல் விடுவது என்பதை அரசியல் கட்சிகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகள்... ஒரே நிகழ்ச்சி தொடர்பாக சன் டி.வியும் ஜெயா டி.வியும் ஒளிபரப்பும் செய்திகள். தேர்தல் ஆணையம் தயாநிதிமாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியதை நாம் ஜெயா டி.வி மூலமும், ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை சன் டி.வி மூலமும்தான் தெரிந்து கொள்ளவேண்டும். இரண்டும் ஒரே நாளில் ஆணையத்தால் அனுப்பப்பட்டிருந்தாலும்.
அரை உண்மைகளுக்கு இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டுகள் வைகோவின் பேச்சுகளும் தயாநிதி மாறனின் பதில்களும். தி.மு.க.வின் ஒரு குடும்ப ஏகாதிபத்தியம் பற்றி பேசிய வைகோ, ஒரு முறைகூட அ.தி.மு.கவின் உடன் பிறவா குடும்ப அரசியல் பற்றி பேசியது இல்லை. தொலைக்காட்சிக்கான அமைச்சர் தயாநிதி இல்லை, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிதான் என்று கூக்குரலிட்ட தினகரன் கட்டுரைகள் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தும் டெலிபோர்ட், ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளுக்கு அமைச்சர் தயாநிதிதான் என்பதைச் சொல்லுவதே இல்லை.
சுனாமி, வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு பற்றி ஜெயலலிதாவும் ப.சிதம்பரமும் பரிமாறிய அறிக்கைகள் அத்தனையையும் படித்த பிறகும் இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. காரணம் இருவரும் முழுப் பொய்களைச் சொல்வதில்லை. அரை உண்மைகளைச் சொல்கிறார்கள் என்பதுதான்.
பொய்கள், அரை உண்மைகள், இவற்றுக்கு அடுத்தபடியாக இந்த தேர்தலில் இரு தரப்பும் அதிகம் பயன்படுத்தியவை அவதூறுகள். நமக்குப் பிடிக்காத இடத்தில் பெண்ணுக்கு சம்பந்தம் செய்துவிடுவதை எப்படியாவது தடுக்க சில சில்லுண்டிப் பேர்வழிகள் மொட்டைக் கடிதாசு போடுவதற்கு நிகரானவை இந்த அவதூறுகள். இன்னாருக்கு இத்தனை கோடி ரூபாய் விலை தரப்பட்டது என்று பக்கத்தில் இருந்து பணம் கைமாறியபோது எண்ணிக் கொடுத்தவர் போல மேடைக்கு மேடை பேசப்பட்டது. பத்திரிகைகள், மீடியாக்கள் எல்லாம் தங்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டபோது, அவற்றுக்கு என்ன விலை என்று அரசியல்வாதிகள் விலை நிர்ணயித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த அவதூறுப் பிரசாரங்களை மேல்மட்ட அரசியல் தலைவர்கள் நாசூக்காகச் செய்தார்கள் என்றால், கீழ் மட்டத் திரைப்பட நட்சத்திரங்கள் சி சென்டர் சினிமா பாணியில் கீழ்த்தரமாகவே செய்தார்கள்.
இரு தரப்பும் பெண்ணுக்கு போட்டி போட்டுக்கொண்டு பரிசம் போட்டது இன்னொரு கேவலம். கலர் டி. வி முதல் தாலித் தங்கம் வரை எல்லாமே பெண்ணை விலைக்கு வாங்கும் வேலையாகவே இருந்தன. பெண்ணிடம் வரதட்சணை கேட்கவில்லை என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். திருமணத்துக்குப் பிறகு வரி வசூல் முழுக்க பெண் வீட்டாரிடமிருந்துதானே.
இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தலைவரும் சொன்ன பொய்கள், அரை உண்மைகள், அவதூறுகள், ஆசை வார்த்தைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால், மக்கள் சேவகர்கள் என்ற முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருப்பது அசல் பகல் கொள்ளைக்காரர்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அதை உணரவிடாமல் நம்மை தடுக்கத்தான், நமக்கு போதை மருந்துகளாக இலவசங்கள் அள்ளி வீசப்படுகின்றன.
பெண் வீட்டாரையும் பெண்ணையும் பசப்பு வார்த்தைகள் பேசி மயக்கி, காலமெல்லாம் கண் கலங்காமல் கவனித்துக் கொள்வோம் என்று பொய் வாக்குறுதிகள் அளித்துக் கல்யாணம் செய்துகொண்டு பிறகு தன் அடிமையாகவே நடத்தி பெண் வீட்டாரைச் சுரண்டும் மாப்பிள்ளைகளாகவே நம் அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன.
மக்களோ -என்ன செய்வது, திருமணமாகிவிட்டால் அட்ஜஸ்ட் செய்துகொண்டு எப்படியும் குடித்தனம் நடத்தித்தானே ஆகவேண்டும் என்று அட்ஜஸ்ட் செய்தாக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
எவ்வளவு சீக்கிரம் நமது திருமணங்களையும் தேர்தலையும் ஆயிரம் பொய் சொல்லி அரங்கேற்றாமல் ஒரே ஒரு உண்மை சொல்லி அதன் அடிப்படையில் செய்கிறோமோ அன்றுதான் நமக்கு விடிவு காலம்! --
(ஆனந்தவிகடன் - 21-5-2006)
|