Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1.‘பராசக்தி’ கருணாநிதி, டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்கலாமா?

2. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்! தேர்தல் சொல்லும் பாடம்!

3. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்?!

4. ஜான்சி ராணி, கண்ணகி, கொஞ்சம் ஜால்ராக்கள்

5. கண்ணகியைப் பின்பற்றச் சொல்லுகிறதா கலைஞர் அரசு?

6. ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?

***********
புதுப்பேட்டை – சினிமா விமர்சனம்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்


தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்:
அ. ராமசாமி


கனவு நெடுஞ்சாலை:
பாஸ்கர் சக்தி


மனிதன் கேள்வி - பதில்கள்

அவரவர் வாழ்க்கை:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




Ramasamy
திசைகளின் வாசல் - 20
அ. ராமசாமி

தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்

புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், அடிதடிகள் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றும் இல்லை. தினசரிகளில் படித்திருக்கலாம். மிகுந்த பொறுப்போடு எழுப்பப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அதனைச் சட்டமன்றம் எதிர்கொண்ட விதத்தினையும் பற்றிச் சொல்லித் தான் ஆக வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் எழுப்பியவர் காட்டுமன்னார்கோவில் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பதால் அவை கூடுதல் கவனத்துக்குரியதும் கூட. எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது; இன்னொன்றுக்கு வெறும் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்துள்ளது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைப் பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது பற்றியது. படித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடிவிட்ட போதிலும் அரசாங்கம் பொதுமக்கள் படிக்கும் பொது நூலகங்களுக்கு வாங்கும் எண்ணிக்கை 750 - ஐத் தாண்டவில்லை; சில நூல்கள் 500 அல்லது 600 தான் வாங்கப்படுகின்றன. ‘இந்த எண்ணிக்கையை 1500 ஆக உயர்த்த வேண்டும். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்; முதல்வரும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘ என்று கேட்டிருக்கிறார். அப்போதைக்கு உடன்பாட்டுத் தொனியில் தலையசைத்த முதல்வர் தனது பதில் உரையில் கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஓரளவு உயர்த்தி ‘1000 நூல்கள் இனி வாங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். இந்த ஏற்புக்காக எமுத்தாள முதல்வர் மு.கருணாநிதிக்கும் எழுத்தாள உறுப்பினர் ரவிக்குமாருக்கும் நூலாசிரியர்களும் பதிப்பாளர்களும் நன்றி சொல்லலாம். ஆனால் ரவிக்குமாரின் இன்னொரு கோரிக்கை எதிர்கொள்ளப்பட்டவிதம் தான் கவனிக்க வேண்டிய ஒன்று. கலைஞர்களும் எழுத்தாளர்களும் கவலைப்பட வேண்டியதும் கூட.

முந்தைய அரசாங்கத்தால் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணகி சிலை திரும்பவும் மெரினா கடற்கரையில் அதே இடத்தில் வைக்கப்படும் என்று முதல்வர் பேச, அதை ஒட்டிப்் பேசிய ரவிக்குமார்,’ கண்ணகி சிலையைத் திரும்பவும் வைக்கலாம்; அதே நேரத்தில் அதன் அருகிலேயே மாதவிக்கும் சிலையையும் வைக்க வேண்டும்’ என கேட்டிருக்கிறார். இந்தக் கோரிக்கை முதல்வர் உள்பட அனைத்து உறுப்பினர்களாலும் சிரிப்பலை மூலம் மெளனமாக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் நிறைவுப்் பேச்சிலும் அது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

கண்ணகிக்கு கடற்கரையில் ஏன் சிலை வைக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, கண்ணகி தமிழ்ப் பெண்களின் அடையாளம் என்ற பதிலைத் தரலாம். தமிழ் வெகுமக்கள் மனமும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளவும் செய்யும். எந்தக் கண்ணகி தமிழ்ப் பெண்களின் அடையாளம்? தனது கணவன் தன்னை விட்டு விட்டு இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்திய போது எந்தவிதக் கேள்வியும் இன்றிப் பொறுமை காத்து, திரும்பி வந்த போது ‘சிலம்புள கொண்ம் ‘ என்று சொன்னாளே அவளா..? அல்லது தன் கணவனைப் பாண்டிய மன்னன் தவறாகத் தண்டித்துவிட்டான் என்று தெரிந்தவுடன் அவனது தலைநகரையே தீக்கிரையாக்கினாளே அவளா.. ? என்று கேட்டால் கிடைக்கும் பதில் ஒன்றல்ல. கையில் சிலம்புடன் இருக்கும் கண்ணகிதான் தமிழ்ப் பெண்ணின் அடையாளம் என்று அரசும் கற்றவர்களும் சொல்லலாம். ஆனால் வெகுமக்கள் உளவியலோ அப்படிச் சொல்லாது. ‘கற்புக் கடம் பூண்ட இப்பொற் புடைத் தெய்வம் போல வேறு ஒரு பெண்ணை நான் கண்டதில்லை ‘ என்று கவுந்தியடிகள் சொல்லக் காரணமாக இருந்த பொறுமையைத் தான் சொல்லும். இல்லையென்றால் பொறுமையான கண்ணகிக்குப் பாதி வாக்குகளையும் கோபமான கண்ணகிக்கு மீதி வாக்குகளையும் தரக்கூடும்.அதே போல் மாதவியும் தமிழ் அடையாளம் தான் என்று சொல்லவும் இங்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். [பட்டிமன்றத்தின் நடுவர் சாலமன் பாப்பையாவாக இருந்தாலும் அவரது முடிவை அப்படியே ஏற்றுக் கொள்ளவா செய்கிறார்கள் தமிழர்கள்? நிச்சயமாக இல்லை. அந்த முடிவு அப்போதைய சமாதானம். அவ்வளவுதான்.]

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தரும் மாதவியின் அடையாளங்கள் ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. பல பரிமாணங்கள் உண்டு அதற்கு. இளங்கோவடிகள் எடுத்த எடுப்பில் அறிமுகப்படுத்தும் விதம் தாசியாக அல்ல; ஒரு அற்புதமான கலைஞியாக. பதினோராடல்களும், அவற்றிற்கேற்ற பின்னணி இசைகளிலும், பண்களிலும் தேர்ச்சி பெற்ற கலைஞி. அரசன் கொடுத்த தலைக்கோல் அரிவைப் பட்டம் தான் தாசியாக ஆக்கியது.

தாசிகள் நிரம்பிய சமூகம் தான் பண்டைத் தமிழ்ச் சமூகம் . சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் காலம் வரை தாசிகளைப் பொருள் கொடுத்தும், நிலமானியங்கள் அளித்தும் போஷித்த வரலாறு தமிழர்களின் வரலாறு. மரபான பண்பாட்டின் ஒவ்வொரு இழையும், வரலாற்றின் ஒவ்வொரு கண்ணியும் நமது அடையாளங்கள் தான். ஒன்றை ஏற்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் இன்னொன்றை ஏற்பதற்கு இன்னொரு கூட்டம் இருக்கிறது என்பது மறுதலை தானே.?

மங்கலநாண் பூட்டிய கணவனை நினைத்து கட்டுபெட்டியாக வாழ்ந்த கண்ணகியைப் பக்தியோடு ஏற்கும் கூட்டம், மாதவியைப் பற்றிய பேச்சிற்குக் கொல்லென்று சிரிக்கும் என்றால், தாலி கட்டவில்லை என்றாலும் கோவலனோடு மட்டுமே வாழ்ந்ததன் மூலம், கண்ணகியின் கற்புக்கீடாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள் மாதவி என்பதற்காகவும், உலக மக்களின் பசிப்பிணி நீக்கும் தொழிலை முதல் கடமையாகக் கொண்ட மணிமேகலை என்னும் முன்மாதிரிப் பெண்ணை இந்த உலகத்திற்குத் தந்ததிற்காகவும் மாதவியைப் போற்றும் கூட்டம் கண்ணகி பற்றிய பேச்சிற்குச் சிரிக்கத்தான் செய்யும்.

பூம்புகாரில் கண்ணகிக் கோட்டம் அமைத்த போது சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லாம் சிலைகளாக வடிக்கப்பட்டன. மாதவி உள்பட. அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் தான். ஆனால் மெரினா கடற்கரையில் மாதவிக்குச் சிலை என்றால் சிரிப்பலைகள் ஏன் எழ வேண்டும். அப்படி எழும்பிய சிரிப்பலையை அடக்கி மாதவியின் பெருமைகளை விளக்கியிருக்க வேண்டிய பொறுப்பு முத்தமிழ் அறிஞர் எனக் கருதப்படும் மு.கருணாநிதிக்கு உண்டு. வழி நடத்தும் பொறுப்பு அவருக்கு இல்லையென்று யார் சொல்ல முடியும்.? விளக்கிச் சொல்லவும், ஏற்கச் செய்யவும் வல்லவன் தான் தலைமை அமைச்சன் என அறநூல்களும் சட்டவிதிகளும் சொல்லுகின்றன. மாதவிக்காக வாதாடும் அரிய வாய்ப்பைக் கலைஞர்் தவற விட்டுவிட்டார் என்பது ஒருவிதத்தில் வருத்தப்பட வேண்டிய ஒன்று. அதைவிடவும் வருத்தப்பட வேண்டிய இன்னொன்று தி டாவின்சி கோடு படம் பற்றிய வாதமே எழாமல் தடுத்தது தான்.

இந்திய நாட்டின் மைய அரசாங்கம் தனது கவனமான பரிசீலனைக்குப் பின்னால் ரான் §†ாவார்டு இயக்கிய ‘ தி டாவின்சி கோடு’ படத்தைத் திரையிட அனுமதி அளித்துப் பத்து நாட்கள் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 2 - ந்தேதி தமிழ் நாட்டில் அந்தப் படம் ஆங்கிலத்திலும் தமிழ் மொழி மாற்றத்தோடும் வெளியாகத் தயாராக இருந்தது. ஆனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க.அரசு, தமிழ் நாட்டில் அந்தப் படத்தைத் திரையிடத் தடை விதித்துள்ளது.

டான் பிரவுன் நாவலாக எழுதிய கட்டத்திலேயே சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பிய தி டாவின்சி கோடு திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதைவிடக் கூடுதலான சர்ச்சைகளையும் கண்டனங்களையும் எதிர்கொள்ளும் என்பதும் அதன் மூலம் உலகம் முழுவதும் நல்ல வியாபாரமும் நடக்கும் என்பதும் படத்தை இயக்கிய ரான் §†ாவார்டுக்கும் , வெளியிட்ட கொலம்பியா நிறுவனத்திற்கும் தெரிந்த சங்கதிகள் தான். கண்டனங்கள் எழுப்பப்பட்டாலும், அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தடை விதிக்கும் அளவுக்குப் போகா என்பதும் அவர்களுக்குத் தெரிந்ததுதான். கருத்து மற்றும் கலை வெளிப்ப்பாட்டுச் சுதந்திரங்கள் பற்றி அவ்வரசாங்கங்களின் நிலையும், படைப்பாளிகளின் எல்லைகளின் அளவும் ஓரளவு புரிதலின் அடிப்படையிலேயே அங்கு நடக்கின்றன. ஆனால் நமது அரசாங்கங்களின் நிலைப்பாடுகளும் நமது கலைஞர்களின் எல்லைகளும் தான் குழப்பமானவை. காரணம் இங்கு தீர்மானிக்கும் கருவியாக கருத்தியல்களும் அணுகுமுறைகளும் பார்வைக் கோணங்களும் இருப்பதற்குப் பதிலாக வாக்கு வங்கிகள் அந்த இடத்தை பிடித்துக் கொண்டு விடுகின்றன. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியைத் தீர்மானித்த வாக்கு வங்கிகளில் கிறிஸ்தவர்களின் பங்கும் அவர்களை வழி நடத்துவதாகச் சொல்லும் குருமார்களின் பங்கும் இருந்தது என நம்பும் அரசாங்கம், மதகுருமார்களின் கோரிக்கையை ஏற்று படத்தைத் தடை செய்துவிட்டது.

கலையியல் மற்றும் கருத்தியல் சார்ந்த வெளிப்பாடுகளுக்குத் தடை விதிக்கும்படி வேண்டுகோள் விடுக்கும் சமய அடிப்படைவாதிகளும் சரி வேறுவகை அடிப்படைவாதிகளும் சரி முன்வைக்கும் வாதம் புனித நம்பிக்கையைக் கொச்சைப்படுத்திவிட்டது என்பதுதான். புனித நம்பிக்கைகளின் அடிநாதம் என்ன? என்று தேடினால் மிஞ்சுவது ஆண்-பெண் உறவு சார்ந்த காதல் அல்லது காமமாக இருக்கிறது. காதல் அல்லது காமம், சராசரி மனித வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட வேண்டியன என்று எந்தச் சமயங்களின் புனித நூல்களும் சொல்லவில்லை என்பதுதான் சுவையான முரண். சராசரி மனிதர்களும் , மகான்களாகக் கருதப்பட்டு மடிந்து போன மாமனிதர்களும் குடும்ப வாழ்க்கையைக் குற்றமாகக் கருதவில்லை என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறுகளும்் அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப் பட்ட இலக்கியங்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. என்றாலும் நம்பிக்கைகளின் அடிப்படையில் கண்டனங்களும் தடைகளும் எழும்பிக் கொண்டுதான் இருக்கின்றன.

இயேசு கிறிஸ்துவுக்கும் அவரது சீடராக இருந்த மக்தலேனாவிற்கும் இடையே பாலியல் உறவு இருந்தது; அவர்கள் கணவன் மனைவியாகக் குடும்பம் நடத்தினார்கள்; அவர்களின் சந்ததியினரின் நீட்்சி இன்னும் தொடர்கிறது என்று புனையப்பட்ட கதைகூட வெறும் கற்பனை என்று எப்படிச் சொல்ல முடியும்? யாரோ ஒருவரின் நம்பிக்கையின் மேல் எழுந்த கற்பனையாகத் தானே இருக்க முடியும்.? நம்பிக்கை- கற்பனை-புனைவு என்பதையெல்லாம் மிகத்துல்லியமாக வேறுபடுத்திவிட முடியும் என்று தோன்றவில்லை.

வான்மீகி ராமாயணத்திற்கு முந்தியதாகச் சொல்லப்படும் ஜாதகக் கதைகளில் ராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்றும், பாலுறவு கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டார்கள் என்றும் தகவல்கள் உள்ளன.உடன் பிறந்தவர்களிடையே பாலுறவு விலக்கப்படாத ஒரு சமுதாயக் காலகட்டத்துத் தகவல் அது என்று அதைப் புரிந்து கொண்டால் மனச்சிக்கல்கள் எதுவும் இல்லை. அதை விடுத்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டு உருவாக்கத்தின் பின்னணியில் முன்னிறுத்தப்பட்ட ராமனின் பிம்பத்தோடு அதை ஒப்பிட்டு இந்துக்களின் மனம் புண்படும்படியான ஜாதகக் கதைகளை அழித்துவிட்டால் கிடைக்கும் பலன் என்ன.? சகிப்பற்ற மனிதர்களின் கூட்டம் இந்தத் தேசத்தில் வாழ்கிறது என்பது தான். அதையே ஒரு அரசாங்கம் செய்தால் சகிப்பற்ற அரசின் அதிகாரம் செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது என்பது தான்.ஜனநாயக அரசுகள் சகிப்பற்ற அரசுகளாகவோ பழைமையாளர்களிடம் சமரசங்கள் செய்து கொள்ளும் அரசுகளாகவோ இருக்க முடியாது.

தி டாவின்சி கோடு தடை செய்யப்பட்டதில் அரசின் சகிப்பின்மை வெளிப்பட்டுள்ளது என்பதைவிட எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் நல்ல அரசாங்கம் நடக்கிறது என்று காண்பிக்கும் சமரசம் தான் வெளிப்பட்டுள்ளது. தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் குருமார்களின் ஒரு பிரிவினர் முன்வைத்தவுடனேயே ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்தால், அறிதலுக்கும் அதன் தொடர்ச்சியாக வாதங்களுக்கும், அறிவுக்கும், சுதந்திரத்திற்கும் எங்கே செல்வது.?




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com