|
கு.சித்ரா
அவரவர் வாழ்க்கை
சென்னை பரங்கிமலையிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரையில் ஒரு சிறு பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. ரயில் நிலையத்திலும் பயணச்சீட்டு வழங்கும் இடத்திலும் தாளமுடியாத நெரிசல். ‘TODAY SATURDAY SERVICE' என்ற அறிவிப்பு பலகை அங்கே மாட்டப்பட்டிருந்தது.
இன்று சனிக்கிழமை ஆகையால் அதிகம் வெளியில் செல்லாதீர்கள் என்று பொது மக்களுக்கு ஆலோசனை கூறுகிறார்களா அல்லது இன்று சனிக்கிழமை தானே பேசாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்களேன் என்று அலுவலகம் செல்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்களா அல்லது இன்று சனிக்கிழ்மை ஆகவே குறைந்த அளவு ரயில்களே இயக்கப்படும், நெரிசலில் சிக்கி சமாளித்து மீள்வது உஙகள் சமர்த்து. நாங்கள் ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம் என்ற 'கடமையுணர்வா? அந்த அறிவுப்பு இதில் எதை உணர்த்துகிறது என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.(மற்ற நாட்களுக்கும் சனிக்கிழமைக்கும் அவர்கள் சேவையில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை என்பது வேறு விஷயம்) 24 மணி நேரமும் விழித்துக் கொண்டிருக்கும் இந்த சென்னை மாநகரத்துக்கு
சனிக்கிழமை சர்வீஸ் போன்ற தள்ளுபடிகளெல்லாம் படு அபத்தம்.
எப்படியோ முட்டி மோதி, நீந்தி அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் வெற்றிகரமாக இரயிலை பிடித்தேன். அது பெண்களுக்கான தனிப்பெட்டி. நேரம் காலை 10.30. உள்ளிருந்த பெண்கள் கைக் கடிகாரத்தை பார்ப்பதும், பதட்டப்படுவதும், இரயில்வே நிர்வாகத்தை சபிப்பதுமாகக் காட்சி அளித்தனர். இது எதைப் பற்றியும் சிறிதும் அலட்டிக் கொள்ளாத அந்த மின் வண்டி மெது மெதுவே எழும்பூர் ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று ஒரே பரபரப்பு, பதட்டம், விசாரணைகள், முட்டி மோதி எட்டிப் பார்த்தல், கூக்குரல்கள் என பெட்டியில் காட்சி மாறியது.
எங்களுக்கு முன் சென்ற ரயிலில் அடிப்பட்டிருந்த ஒரு இளம் பெண், பூங்கா ரயில் நிலையம் அருகிலுள்ள அரசினர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக எங்கள் பெட்டிக்கு பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கொண்டு வரப்பட்டார்.
யார் பெத்த பொண்ணோ, எங்கே போகணுமோ, கல்யாணம் ஆச்சோ இல்லையோ என்று கண்ணீர் சிந்தினார் ஒரு பழக்காரம்மா. எல்லாம் இந்த மொபைல் போன் செய்யும் வேலை. பேசறாஙக, பேசறாங்க, பேசிகிட்டே இருக்காங்க என்றார் மற்றொரு பெண்மணி. பொது மக்களின் அவசரம் புரியாமல் மெத்தனமாக செயல்படும் ரயில்வே நிர்வாகமே இதற்குக் காரணம் என்றார் ஒருவர். ஏன்? ரயில்வே காவல்துறை என்ன செய்யுது? இப்படி ரயிலைப் பிடிக்க ஓடி வருபவர்களை தடுக்காமல்? இது ஒரு பெண்மணியின் ஆவேசம்.
ஆம்பளைப் பசங்க கெட்டாங்க, இந்த காலத்து பொம்பளைப் புள்ளைங்க நடந்துக்குற முறை. வயசுப் பொண்ணுங்களாகவா இருக்குதுங்க. அதுங்களும், அதுங்க துணியும்.. எங்க காலத்திலேயெல்லாம் இப்படியா இருந்தோம். இது ஒரு மூதாட்டியின் ஆற்றாமை. சீக்கிரம் கிளம்பி டிரெயினை பிடிக்கணும் தான் நினைக்கிறோம் ஆனா,வீட்டுல வேலை கொஞ்சமா, நஞ்சமா ஹ¤ம் என்று ஒரு அலுப்புக் குரல். எது எப்படி போனாலும் போக்குவரத்து விதிகளை மதிக்கணும் மேடம். பணம் போனா சம்பாதிக்கலாம் உயிர் போனா வருமா? இது ஒரு பொதுக் குரல்.
இது போக, நேரம், தலையெழுத்து, விதி, வாழும் காலத்தில் நாம் போடும் 'ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்', செல்வத்தின் நிலையாமை, வாழ்க்கையின் நிலையாமை, பாவ, புண்ணிய கணக்குகள் எனப் பல போதி மரங்கள் திடீரென்று அப்பெட்டியில் முளைத்தன. தேவைப்பட்டால் புத்தருக்கே போதனைகள் தள்ளுபடி விலையில் கிடைத்திருக்கும்.
அந்த விபத்திற்கான காரணம் யாருக்கும் தெரியாவிடினும், தங்கள் பிரச்சினைகளை சிறிது நேரம் மறந்திருந்த பெண்கள், ரயில் கடற்கரை நிலையத்தை நோக்கி நுழைந்தபோது, தங்கள் இருக்கையை விட்டு எழுந்து, முட்டி, மோதி இறங்கும் இடத்தை பிடித்துக் கொண்டனர்.
ரயில் சீராக அதே சமயம் மெதுவாக கடற்கரை நிலையத்தில் நுழைந்து கொண்டிருக்கும் போதே, சில பெண்கள், ஓடுகின்ற ரயிலிலிருந்து வெளியே குதித்து, எதிர் திசை நோக்கி நடந்தனர் (ஓடினர்}. அலுவலகத்தை குறித்த நேரத்திற்குள் அடைய வேண்டிய அவசரம் அவர்கள் ஓட்டத்தில் தெரிந்தது.
ஓடும் வண்டியிலிருந்து முதலில் குதித்து என்னை வியப்பிற்குள்ளாக்கியது யார் தெரியுமா? போக்குவரத்து விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த பெண்மணிதான்.
|