|
ஞாநி
4. ஜான்சி ராணி, கண்ணகி, கொஞ்சம் ஜால்ராக்கள்
ஒரு டாக்டர் மருத்துவமனைக்குச் செல்வதும் ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்குச் செல்வதும் இயல்பானவை. இது போல ஒரு சட்ட மன்ற உறுப்பினர் சட்ட மன்றக் கூட்டத்துக்குச் செல்வதும் இயல்பானதுதானே.
ஆனால் ஒரு எம்.எல்.ஏ சபைக்குச் செல்வதே தமிழ்நாட்டில் பெரும் செய்தியாக ஆகிவிடுகிறது!
ஜெயலலிதாவும் கருணாநிதியும் பதினேழு வருடங்கள் கழித்து சட்டசபையில் ஒரே நேரத்தில் நேருக்கு நேர் (சிரிக்காமல், வனக்கம் சொல்லிக் கொள்ளாத போதும்) சந்தித்தது பரபரப்பான செய்தியாக கருதப்படுகிற அளவுக்கு தமிழக அரசியல் சூழல் இருதரப்பாலும் இதுவரை சீரழிக்கப்பட்டிருக்கிறது.
ஐந்தாண்டு காலம் சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமலே சுமார் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் மட்டும் வாங்கிக் கொண்டவரை அதே தொகுதி மக்கள் மறுபடியும் தேர்ந்தெடுத்து அனுப்பி முதலமைச்சராக்கும் ஜனநாயக விசித்திரமும் தமிழ்நாட்டுக்கே உரியது. கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி, மற்றவர் முதலமைச்சராக இருக்கும்போது தான் சபைக்கு செல்லாமல் இருப்பதற்கு சொல்லி வந்த நியாயம்தான் என்ன? சபைக்குச் சென்றால் தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு இருக்காது என்பதுதான். சேலையைப் பிடித்து இழுப்பார்கள் என்று ஒருவரும் மூக்குக் கண்ணாடியை உடைப்பார்கள் என்று இன்னொருவரும் காரணம் சொல்லி வந்தார்கள்.
கருணாநிதி - எம்.ஜி.ஆர் அரசியல் விரோத காலத்தில் தொடங்கிய இந்த அருவெறுப்புக்குரிய தனி நபர் மோதல், கருணாநிதி - ஜெயலலிதா காலத்தில் உச்சத்தை எட்டியது. தாங்கள் உருவாக்கிய தனி நபர் விரோத அரசியலுக்குத் தாங்களே முற்றுப்புள்ளி வைத்து பரிகாரம் தேடும் அரிய வாய்ப்பு இப்போது இருவருக்கும் கிட்டியிருக்கிறது.
இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்திருப்பதற்காக அவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கு தமிழக மக்கள் நன்றி சொல்ல வேன்டும். அவர் அ.இ.அ.தி.மு.கவின் 60 எம்.எல்.ஏக்களையும் தொடர் முழுவதும் விலக்கி வைத்து உத்தரவிட்டதனால்தான், ஜெயலலிதா சபைக்கு வந்தார். தனியே வரும்போது எந்த அத்துமீறலும் நடக்கவே முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் அவர் தனியாக அவைக்கு வந்திருக்கும்போது என்ன அசம்பாவிதம் நடந்தாலும், அதற்கு தி.மு.கவே முழுப் பொறுப்பாக கருதப்படும்; அ.இ.அதி.மு.க எம்.எல்.ஏக்கள் ரகளை செய்ததால் தி.மு.க பதில் ரகளை செய்தது என்ற சமாதானங்கள் எதுவும் கூற முடியாது என்ற அவர் கணக்கு சரிதான். எனவே மறுபடியும் 60 எம்.எல்.ஏக்கள் சகிதம் அவர் அவைக்கு செல்லும்வரை எந்த அசம்பாவிதமும் ஏற்படாது என்று நம்பலாம்.
வைகோ தனக்கே உரிய மிகையுணர்ச்சியுடன் சட்ட சபையில் ஜெயலலிதா ஆற்றிய வாதங்களை ஜான்சி ராணியின் வீரத்துடன் ஒப்பிட்டதில் இருக்கும் ஜால்ரா ஒலியை நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதாவின் இந்த புதிய பாத்திரம் நிச்சயம் வரவேற்புக்குரியது. அவரும், ஆழ்ந்த சட்டமன்ற அனுபவமும் மொழிப் புலமையும் உடைய கருணாநிதியும், அரசு நடவடிக்கைகள், கொள்கைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் புள்ளி விவரங்களுடன் எதிரெதிர் வாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டால், சட்டமன்றம் சமூகத்துக்குப் பயனுள்ள ஒரு இடம்தான் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்ன ஆனாலும் சரி, வெளி நடப்பு செய்வது இல்லை, சபைக்குள்ளேயே இருந்து விவாதிப்பது என்ற அணுகுமுறையை கட்சிகள் மேற்கொள்வது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
சட்டசபையை மேலும் பயனுள்ள இடமாக மாற்ற இன்னொரு யோசனை : சபை நடவடிக்கைகளை, பொதிகை, சன், ஜெயா, ராஜ், என்று எல்லா தமிழ் டி.வி சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பாக செய்யலாம்.
************
ஆட்சி மாற்றம் நடக்கும்போதெல்லாம், அதிகாரிகளின் இடப்பெயர்ச்சியும் தவறாமல் நடப்பது நம் ஜனநாயகத்தின் இன்னொரு அருவெறுப்பான அம்சம்.
தி.மு.க அரசு பதவி ஏற்ற பதினைந்தே நாட்களில் சுமார் நூறு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வரை இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். எந்த கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும், அரசு வேலையை விதிகளின்படி செய்துவிட்டுப் போவதுதான் அதிகாரிகளின் கடமை. ஆனால் கணிசமான அதிகாரிகள் இப்படி நடப்பதில்லை. பல சந்தர்ப்பங்களில் அரசியல்வாதிகளுக்கு ஊழல், அராஜகம் எல்லாவற்றையும் சட்டப்படி செய்வதற்கு கற்றுக் கொடுப்பதே பல அதிகாரிகள்தான். கோப்புகள், நாற்காலிகள் ஆகியவற்றின் நிறத்தை பச்சை, மஞ்சள், பச்சை என்று இரவோடு இரவாக மாற்றும் இந்த பச்சோந்தி-ஜால்ரா அதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள்.
அதனால்தான் ஒவ்வொரு ஆளும் கட்சியும் தனக்கு வேண்டிய அதிகாரிகள், வேண்டாத அதிகாரிகள் என்று இரண்டு பட்டியல்களை எப்போதும் தயாராக வைத்திருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்கும் வேண்டாத அதிகாரிகள் பட்டியலை யாராவது தயாரித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் பெரும்பாலும் அவர்கள்தான் மக்களுக்கு வேண்டிய அதிகாரிகளாக இருப்பார்கள்.
வேண்டப்பட்ட அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் தருவது போலவே, வேண்டாதவர்களுக்குக் கொடுப்பதற்கென்று அரசில் சில பதவிகள் இட ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கின்றன. நில அளவை, ஆவணக் காப்பகம், புனர் வாழ்வுத்துறை என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்படிப்பட்ட பொறுப்புகள் பனிஷ்மென்ட்டாக கருதப்படுவதற்கு என்ன காரணம் ? ஒன்று அங்கெல்லாம் கணிசமாக லஞ்சம் வாங்க முடியாது. இரண்டாவதாக, தனிக் கார், உதவியாளர், ஆள், அம்பு, சேனை, அதிகாரம் இருக்காது. உண்மையில் அரசின் ஒவ்வொரு துறையும் முக்கியமானதாகவே கருதப்ப்பட வேண்டும். அப்படி முக்கியமானது இல்லையென்றால், அது இருக்கவே தேவையில்லை.
இந்தக் கோளாறான நடைமுறைகள் அரசியலிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். அரசு அதிகாரிகளை இட மாற்றம் செய்ய இன்னும் தெளிவான, கறாரான விதி முறைகள் தேவை.
அதே போல ஒரு ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளை அடுத்த ஆட்சி மாற்றாமல் தடுக்கவும் நெறிமுறைகள் தேவைப்படுகின்றன. லாட்டரி சீட்டு ஒழிப்பு, மது, மணல் விற்பனையை அரசே மேற்கொன்டது, ஆசிரியர் இடமாற்றத்துக்கு கவுன்சிலிங் போன்ற நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டியவை அல்ல.
************
எதை மாற்றினாலும் மாற்றாவிட்டாலும், ஒரு விஷயத்தில் மாற்று நடவடிக்கை எடுத்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் கருணாநிதி. அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மறுபடியும் நிறுவுவதுதான். அது.
ஏன் ஜெயலலிதா கண்ணகி சிலையை அகற்றினார் என்பது, ஏன் கருணாநிதி மஞ்சள் சால்வையை எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அகற்றுவதில்லை என்ற மர்மத்துக்கு நிகரானது. இரன்டுக்கும் காரணம் வாஸ்து, மூட நம்பிக்கை, மருத்துவம் என்றெல்லாம் ஊகிக்கலாமே தவிர, புதிர் முடிச்சை அவிழ்க்கவே முடியாது.
கண்ணகிக்கு சிலை வைத்ததே தவறு. அதை சரியான காரணம் காட்டாமல் எடுத்தது இன்னொரு தவறு. மறுபடியும் வைப்பது பிறிதொரு தவறு. காரணம் கண்ணகியின் சிறப்புகளாக கூறப்படும் இரண்டும் சிறப்புகளே அல்ல என்பது என் உறுதியான கருத்து. கற்புக்கரசி, நீதி கேட்டு அரசனோடே போராடியவள் என்ற இரண்டிலும் பசையில்லை. வேறு பெண்ணை நாடி, தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை. அது கோவலன் போன்ற ஆண்களுக்கு வசதியான ஒருதலைக் கற்பு. கண்ணகியின் நிலையை இன்று நாம் ஏற்பதானால், இன்றைய சட்ட்ப்படி ஏழாண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்த தம்பதியின் திருமணம் ரத்து செய்யப் படக்கூடியது என்ர சட்டப் பிரிவையே நீக்க வேண்டி வரும்!
அரசனுக்கெதிராக கண்ணகி போராடியது எந்த சமூகப் பிரச்சினைக்காகவும் அல்ல. தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி கேட்டுப் போராடிய முட்டாள்தனம்தான் அது. கோவலனை தவறாகக் கொன்றதில் துளியும் சம்பந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயல் வீரம் அல்ல, டெரரிசம்தான். எனவே இன்றைய பெண்களுக்கு கண்ணகி எந்த விதத்திலும் முன்னுதாரணமல்ல. கோவலன்கள் மட்டுமே அவளைக் கொண்டாடலாம்.
சில குழந்தைகள் பெரியவர்களான பிறகும் கூட தூங்கும்போது கட்டிப் பிடித்துக் கொள்ள ஒரு பழைய டெட்டி பேர் கரடி பொம்மையை வைத்திருப்பார்கள். கலைஞரின் டெட்டி பேர் கண்ணகி. முதுமையும் இன்னொரு குழந்தைப் பருவம்தானே!
(இதன் திருத்திய வடிவம் ஆனந்த விகடனில் ஓ பக்கங்களில் வெளியிடப்பட்டது.)
|