KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1.‘பராசக்தி’ கருணாநிதி, டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்கலாமா?

2. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்! தேர்தல் சொல்லும் பாடம்!

3. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்?!

4. ஜான்சி ராணி, கண்ணகி, கொஞ்சம் ஜால்ராக்கள்

5. கண்ணகியைப் பின்பற்றச் சொல்லுகிறதா கலைஞர் அரசு?

6. ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?

***********
புதுப்பேட்டை – சினிமா விமர்சனம்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்


தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்:
அ. ராமசாமி


கனவு நெடுஞ்சாலை:
பாஸ்கர் சக்தி


மனிதன் கேள்வி - பதில்கள்

அவரவர் வாழ்க்கை:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
உள்ளே வெளியே: கட்டுரைத் தொடர்
பாஸ்கர் சக்தி

கனவு நெடுஞ்சாலை

எல்லோருமே கனவு காண்கிறோம். நித்திரையின் நடுவே, புகை மூட்டத்திரையினுள் நிகழும் நிஜமான கனவைத்தான் குறிப்பிடுகிறேன். கனவுகள், கற்பனையின் வேறு வடிவங்கள் அல்லது நீட்சி என்று தோன்றுகிறது. விழித்திருக்கையில் நம்மை அலைக்கழிக்கும் சம்பவங்கள், நல்ல மற்றும் மோசமான கற்பனைகள் இவையாவும் சிதறிப்போய், தூக்கத்தின்போது ஒழுங்கற்றதொரு விதத்தில் சேர்ந்து படங்காட்டுகின்றன.

பொதுவாக, கனவுகள் சிறியவை. ஒழுங்கற்றவை. வெளிச்சம் வந்ததும் பனிபோல் நினைவிலிருந்து காணாமல் போகக்கூடியவை. சமயங்களில் அவை வெகு வினோதமாக அமைந்து வெகுவாக வியப்பேற்படுத்துகின்றன. எல்லா நவீனவகை எழுத்தையும் சுலபத்தில் மிஞ்சி விடுகின்றன.

இதனை எழுதுவதற்கு முந்தைய தினம் இரவு நான் கண்ட கனவு வெகு விநோதம். அதில் தர்க்க (லாஜிக்) மீறல்கள் இருந்தபோதிலும், நாளது வரை நான் கண்ட (பகல் கனவுகள் நீங்கலாக) கனவுகளில் நீளமானதும், நிஜத்தின் தொடர்ச்சி போன்றும், மயிர்க்கூச்செறியும் விதத்திலும் அமைந்த கனவு இதுதான்.

அது எனக்குத் தந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பமாயிருக்கிறது. அக்கனவுக்கு முந்தைய சில மணி நேரங்களையும் சேர்த்துச் சொல்கிறேன். அவற்றுக்கும், கனவுக்குமிடையேயான தொடர்பு இழைகள் ஏதேனும் உங்களுக்குப் புலப்படக்கூடும்.

இக்கனவில், மன்னிக்கவும் இக்கனவு பற்றிய எனது இந்த விவரிப்பில் என்னுடைய கற்பனையின் பங்கு சிறிதுமில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

உண்மையில் என்ன நடந்ததென்றால், மாலையில் ‘தீம்தரிகிட' இதழுக்கான ஆலோசனைக் கூட்டம் (நாலுபேர்தான்). ஆசிரியர் ஞாநி, பத்மாவதி, நான் மற்றும் நண்பர் விஜயகுமார் ஆகிய நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அடையாறில் உள்ள ஞாநியின் வீட்டில்தான் சந்திப்பு. பேச்சினிடையே ஞாநிக்கு சில தொலைபேசி அழைப்புகள். அதிலொன்றில் ஜாதகம், கிரகச் சேர்க்கைகள் என்பன பற்றி நண்பரொருவர் பேசினார். (என்று பேசி முடித்த ஞாநி எங்களிடம் சொன்னார்).

சந்திப்பை முடித்துவிட்டு பத்மா தி.நிகர் சென்று, மிதவைப் பேருந்து ஒன்றில் ஏறி, வீடியோத் தூக்கத்தில் நாமக்கல் செல்லவிருக்கிறார். நான் கோடம்பாக்கம் செல்ல வேண்டும். இருவரும் ஆட்டோவில் கிளம்பினோம்.

ஆட்டோவில் பத்மா நாமக்கல்லில் தான் கலந்து கொள்ளப் போகிற கூட்டம் பற்றி, நண்பர்கள் பற்றி எனப் பொதுவாக உரையாடிக்கொண்டு வந்தோம். எங்களது உரையாடலை அந்த ஆட்டோக்காரர் கவனிப்பது போல் தோன்றியது. ஏதோ ஒரு விநாடியில் எங்கள் இருவரது பேச்சுக்கிடையில் கிடைத்த ஒரு இடுக்கில் அந்த ஆட்டோக்காரர் தொழில் நேர்த்தியுடன் புகுந்தார்.

“ஏங்க பூமி சுத்துது இல்லையா?'' என்றார். ‘சரி அவர் ஏதோ முக்கியமாகச் சொல்ல வருகிறார்' என்றெண்ணி, நான் ஒரு தேர்ந்த கேட்பாளனின் பாவனை கொண்டு, “ம்... சொல்லுங்க,'' என்றேன்.

“காத்தடிக்குது, வெயிலடிக்குது, மழை பேயுது இல்லியா? பூமி சுத்துது ... ராஜா என்ன சொல்றார்? ‘ஆகாயம் எனக்கு சிங்காசனம், ஆழ்கடல் என்னோட பாதடி' அப்டிங்கிறார். புரியுதுங்களா? அதைப் பத்திதான் சொல்றேன். பரிசுத்த ஆவியோட ஆசிர்வாதம்...''

அவர் சரமாரியாகப் பேசிக்கொண்டே வந்தார். அவரது பேச்சில் அர்த்தம் உணர்வது மிகவும் சிரமமாய் இருந்தது. “ஆமா..ம்..சொல்லுங்க'' போன்ற உதிரிச் சொற்களை அவஸ்தையுடன் உதிர்த்துக் கொண்டு வந்தேன்.

அவரது பேச்சின் உத்வேகம் அதிகரித்ததால், ஆட்டோ வேகம் குறைந்தது. “கொஞ்சம் வேகமாப் போகணும், பஸ்ஸைப் பிடிக்கணும்'' என்றார் பத்மா. இதனை ஆட்டோக்காரர் செவிமடுத்த இடைவெளியில் கண்ணிமைக்கும் நொடியில், நான் பேச்சை என் வசப்படுத்தினேன். பத்மாவிடம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டு, அவர் பதில் சொல்லி உரையாடல் எங்கள் கைக்கு வர, பேச்சினிடையே இடைவெளி விழாமல் கவனத்துடன் பேசத் துவங்கி விட்டோம். ஆட்டோக்காரர் சந்து கிடைக்காமல் மௌனமாக, ஆங்கில சாகசப் படங்களில், அனைத்து சோதனைகளிலிருந்தும் மீண்ட கதாநாயகன், இறுதியில் மெல்லிசை ஒலிக்க, ஆசுவாசமாக நடந்து வருவானே! அந்த நொடியை நான் உணர்ந்தேன்.

உஸ்மான் ரோட்டையடைந்தும், அந்தக் கதாபாத்திரம் ஆட்டோ ஓட்டுநராக மாறி ஐந்து ரூபாய் அதிகம் வாங்கிக் கொண்டு சென்றார்.

பஸ்ஸுக்காக பத்து நிமிஷம் உஸ்மான் ரோட்டில் நின்றிருந்தோம். பஸ் வரவில்லை. பத்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் ஆட்டோ பிடித்து வீடு வந்து, மர்ம முடிச்சுக்களடங்கிய அண்ணாமலை, கதிரவன் இரண்டு சீரியல்களையும், பிறகு சற்று நேரம் ஸ்டார் நியூஸையும் பார்த்துவிட்டு தூங்கி விட்டேன்.

ஞாநியின் வீடு, மாலையில் நடந்த அதே கூட்டம். நாங்கள் அதே நால்வரும், அதேபோல் அமர்ந்திருக்கிறோம். திடீரென ஞாநி படுத்துக் கொண்டு சோம்பல் முறித்தபடி, “பேசாமல் அவரிடம் கிரகங்கள் பற்றி ஆலோசனை கேட்டுவிட்டு இதழைத் தொடங்கி இருக்கலாம்,'' என்கிறார் சீரியஸாக. எனக்குப் பேரதிர்ச்சி, “என்ன ஞாநி போய் இப்படிப் பேசுகிறார்,'' என்று. அப்போது கதவு தட்டப்படுகிறது. இப்போது நானும், ஞாநியும் மட்டுமிருக்கிறோம். நான் எழுந்து கதவைத் திறக்கிறேன். வெளியில் பத்மா. “என்ன ஊருக்குப் போகலையா?'' என்கிறேன். “பஸ்ஸை "மிஸ்' பண்ணிட்டேன்'' என்று உள்ளே நுழைகிறார்.

நாங்கள் மூவர் மட்டும் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். (விஜயகுமார் சமகால நடப்புகளை நினைவுபடுத்தும் விதமாக காணாமல் போய்விட்டார்). அப்போது ‘நள்ளிரவு' என்று உணர்கிறேன். யாரும் எதுவும் பேசாத மயான அமைதி. அப்போது வாசலில் சலங்கை ஒலியுடன், வினோதமாகக் கூக்குரலிட்டபடி படிகளில் யாரோ ஏறி வருகின்றனர். வாசலில் அந்த ஆள் நின்று குரலிடுகையில், எனக்குத் தோன்றுகிறது “ஆஹா! சாமக்கோடாங்கியல்லவா இவன்! சாமக்கோடாங்கியை நேருக்கு நேர் பார்ப்பது பேராபத்து ஆயிற்றே,'' எனக்குள் பயம் புரள்கையில், அவன் உள்ளே நுழைகிறான். வருவது அவன் மட்டுமல்ல. இன்னும் சிலர். அதில் மூன்று பெண்கள். அவனும், மற்றொரு ஆணும் மிக விநோதமாக உடையணிந்திருக்கின்றனர். அவன் ராஜபார்ட் நாடகக்காரன் உடை. மற்றவன் கோமாளி உடை. ஆனால் பார்க்க பயமாக இருக்கிறது, அவர்களனைவரும் விநோதமாக ஆடிக்கொண்டே வணக்கம் தெரிவிக்கின்றனர். அது தங்களது வழக்கம் என்கின்றனர். ஞாநி அவர்கள் தனது நாடகக்கார நண்பர்கள் என்கிறார்.

“நாடகம் நடத்திவிட்டு ஒப்பனை கலைக்காமல் நடந்தே அடையாறு வருகிறோம்'' என்கிறான் அவன். “போலீஸ் புடிச்சிராதா?'' எனும் என் கேள்விக்கு பதில் இல்லை. வந்தவர்கள் வெகு சகஜமாக அறைகளில் புழங்க நான் பயம் மாறாமல், மாடியிலிருந்து பார்க்கிறேன். கீழே கூடம் தெரிகிறது. (இப்போது அது ப்ளாட் அல்ல, வேறு விதமான வீடு). கூடத்தில் வந்தவர்களிலொரு பெண் கால்நீட்டி அமர்ந்திருக்கிறாள். அவளருகில் ரத்தம் தென்படுகிறது. நான் மிரண்டுபோய் உள்ளே செல்கிறேன். இதற்குள், வந்தவர்களில் ஒருவனும், இளம் பெண்ணொருத்தியும் அங்கிருந்த ஒரேயொரு கட்டிலில் படுக்கத் தயாராக விரிப்புகளை விரித்துக் கொண்டு இருக்கின்றனர். படுக்குமிடங்களை இவர்கள் ஆக்கிரமித்தால் நாம் எங்கே படுப்பது? என்கிற எரிச்சலும், கொசு கடிக்குமே என்ற கவலையும் எழுகிறது. மீண்டும் மாடியிலிருந்து கூடத்தை எட்டிப் பார்க்கிறேன். அந்தப் பெண்னுக்கு, சென்ற நொடியில் பிரசவம் நடந்து குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை அழ, அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்த பார்வை வெருட்டுகிறது.

நானும் உள்நுழைந்த நாடகக்காரனும் வெளியே வருகிறோம். பத்மா, விஜயகுமாருடன் (விஜயகுமார் இப்போது கிடைத்து விட்டார்) பைக்கிலேறிக் கிளம்புகிறார். நானும், அவனும் ஆட்டோவில் ஏறுகிறோம்.

மதுரை பல்கலைக்கழகத்தின் (!) முன்பு இறங்கி, எதிர்ப்புறமாக நானும் அவனும் நிற்கிறோம். (அது ‘நாகமலைப் புதுக்கோட்டை' என்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது), “நேரமாகிறது'' என்று சொல்கிறேன். “இந்நேரம் அடையாறுக்கு ஆட்டோ கிடைக்காது. பஸ் வரும்வரை என்னுடன் வா'' என்கிறான். இருவரும் பல்கலைக்கழகத்தின் எதிர்ப்புறமாக நடக்கிறோம். எனக்குப் பயமாக இருக்கிறது. சிறிது தூரம் நடந்த பின்பு, மண்டபம் போன்றதொரு விடுதியின் முன்பு பல பெண்களும், சில ஆண்களும் நிற்கின்றனர். ‘வா, வா' என்று சில பெண்கள் எங்களை அழைக்கின்றனர். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக உடையணிந்திருக்கிறார்கள். கட்டியணைக்கும் ஒருத்தியைத் தள்ளி விடுகிறேன். சற்றுத்தள்ளி இருக்கும் ஒரு பெண்ணின் அழைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அவள் ஒரு பூங்கொத்தால் தன் முகத்தை மூடி மூடித் திறந்து என்னைப் பார்த்து சிரிக்கிறாள். அவள் முகத்தை மூடும்போது முகம் மறைவதில்லை. மாறாக மூடும்போது, ஒரு வெளிச்சம் முகத்தில் படிய, வெகு பிரகாசமாக அவளது முகம் ‘டால'டிக்கிறது.

அழகி அவள். அவளை எனக்குப் பிடிக்கிறது. அவளை நோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன். முடியவில்லை. மண்டபத்தினுள்ளே நிறையப்பேர் பலமாக ஆடுகின்றனர். என்னுடன் வந்த நாடகக்காரனை இரண்டு ஆண்கள் கைபற்றி வலிமையுடன் இழுக்கின்றனர். அவன் திமிறாமல் என் காதில் குனிந்து சொல்கிறான், “இன்று இவர்கள் என்னைக் கொல்வதாக இருக்கின்றனர். எனக்கு நாலைந்து நாள் முன்பே தெரியும்'' என்கிறான். நான் பீதியடைந்த ‘திடு திடு'வென ஓடுகிறேன். ‘பயந்து ஓடறான் பாரு' என்று நாடகக்காரன் வெகு மகிழ்ச்சியோடு கத்துகிறான்.

ஓட்டம் குறைந்து நடக்கையில், பாதையில் என்ன்னே பெரியதொரு கோலம். விழாக்காலங்களில் போடும் ‘அம்மன் சீரியல் செட்' தரையில் கோலமாக இருக்கிறது. கோல அம்மன் முகம் அணைந்து மறுபடி பிரகாசமாய் எரிகிறது. நான் கோலத்தைத் தாண்ட யோசிக்கையில், கோலத்தின் தலைமாட்டில் இருந்த சாமியார் போன்ற இரண்டுபேர் ‘காலை வெட்டுடா' என்று ஆவேசமாக எழுகின்றனர். நான் மிரண்டு ஓடுகின்றேன். துரத்துகின்றனர்.

சடாரென்று எழுந்தேன். கழுத்தெல்லாம் வியர்த்திருந்தது. தலையணை நனைந்திருந்தது. மங்கலாக இரவு விளக்கு எரிந்தது. ஒருவித சிலிர்ப்பு மேனியெங்கும். மறந்து போவதற்குள் இதனை எழுதிவிட வேண்டும் எனத் தோன்றி, ‘ட்யூப் லைட்'டைப் போடாமல், இரவு விளக்கின் ஒளியிலேயே பேப்பர், பேனா எடுத்து, நான் கண்டவற்றை நினைவுக்குறிப்பாக குறித்துக் கொள்ளத் துவங்குகிறேன்.

அப்போது தோன்றியது, இதுவும்கூட அந்தக் கனவின் ஒரு பகுதிதானோ? என்று... கனவு தொடர்வதாக உணர்ந்து, அதிலிருந்து விடுபடும் உத்தேசத்துடன் எழுந்து, ட்யூப் லைட்டைப் போட்டேன். நல்லவேளை ! ட்யூப்லைட் பற்றிக்கொண்டு வெளிச்சம் பரவியது.

நிஜமாகவே கனவு முடிந்து விட்டிருந்தது.