கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
அழகாக இருப்பது ஆபத்தானதா? குரங்கினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பிறவியான தேவாங்கைப் பொருத்தவரை ஆபத்துதான்.
தெற்காசிய காடுகளில் வாழும் சிறிய பாலூட்டியான தேவாங்கு, காட்டுயிர் கள்ள வர்த்தகத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. நம்மூர் வசைமொழிகளில் ஒன்றாக இந்த காட்டுயிரின் பெயர் பயன்படுத்தப்பட்டாலும், உண்மையில் இது அழகான உயிரினம். ஜப்பானில் இதை செல்லப் பிராணியாக வளர்க்க பணக்காரர்கள் விரும்புகின்றனர். ஒரு தேவாங்குக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1.5 லட்சம் தர அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
சிறிய உடல் கொண்ட, இரவில் நடமாடும் இந்த தேவாங்கு காடுகளில் கண்ணி வைத்து பிடிக்கப்படுகிறது. பிறகு அதன் பற்கள் பிடுங்கப்பட்டு வீட்டு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தப்படுகிறது. அல்லது குட்டியாக இருக்கும்போதே பிடிக்கப்பட்டுவிடுகிறது என்று சைட்ஸ் (CITES) அறிக்கை தெரிவிக்கிறது. உணவுப் பொருளாகவும், பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுவது, மற்றொருபுறம் தென்கிழக்கு ஆசியாவில் கடுமையாக மரம் வெட்டப்படுவதன் காரணமாக, பாரம்பரியமாக வாழும் பகுதிகளில் இருந்து தேவாங்கு மறைந்துவிட்டது.
ஐ.நா.வின் துணை நிறுவனங்களில் ஒன்றான 'அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள் விற்பனையை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு' (UN Convention on International Trade in Endangered Species (CITES)) உலகிலுள்ள காட்டுயிர்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்கான எச்சரிக்கைகளை வழங்கி வருகிறது. உலகிலுள்ள 33,000 தாவர, காட்டுயிர் வகைகளில் முறையின்றி விற்பனை செய்யப்படுபவை எவை என்று இந்த அமைப்பு கண்காணிக்கிறது. இந்த அமைப்பில் 171 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளில் உணவுப் பொருளாக, மருந்துப் பொருளாக, செல்லப்பிராணியாக வளர்க்க சந்தைகளில் விற்கப்படும் காட்டுயிர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை சைட்ஸ் அமைப்பு சமீபத்தில் மறுபரிசீலனை செய்தது. அந்த அமைப்பு சமீபத்தில் எடுத்த முடிவுகளின்படி, கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட வேண்டிய சில காட்டுயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தேவாங்கை கடத்தி விற்பனை செய்வதை இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. கள்ளச்சந்தையில் இந்த காட்டுயிர் மோசமான பாதிப்பை சந்திப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிசய உயிரினங்களில் ஒன்றான ரம்பமீன் (saw fish) மின்சக்தியை பாய்ச்சும் தன்மை கொண்டது. இந்த மீன் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. தனித்தன்மைமிக்க மூக்கு அல்லது முன்பகுதியே இந்த மீன் கடத்தப்பட்டு விற்கப்படுவதற்கு முக்கிய காரணம். முன்பு வாழ்ந்த இடங்களில், தற்போது இந்த மீன்களின் எண்ணிக்கை வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்ளது.
இந்த மீன் வகையின் மற்ற பாகங்களுக்கும் கிராக்கி அதிகம். சுறா துடுப்பு சூப் தயாரிக்கப்படுவதைப் போல, இந்த ரம்பமீன் துடுப்பு சூப்பும் ஆசியாவில் பிரபலம். தென்னமெரிக்காவில் நடத்தப்படும் கோழிச்சண்டையில், கோழிகளின் கால்களில் கட்டப்படும் சிறு கத்திகளுக்கு இவற்றின் பற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆபத்தில் உள்ளவை
அழியும் ஆபத்தில் உள்ள மற்றொரு காட்டுயிர் முள் நாய்மீன் (spiny dogfish). சுறா வகையைச் சேர்ந்த இந்த மீன் பிரிட்டன் உணவுப் பட்டியலில் 'ராக் சால்மன்' என்ற பெயரில் வறுத்து விற்கப்படுகிறது. ஐரோப்பிய, வடஅமெரிக்க கடற்பகுதிகளில் அதிகமாக பிடிக்கப்படுவதாக தகவல்கள் கூறினாலும், சர்வதேச சந்தையில் இதன் விற்பனையை தடை செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.பாப்கேட் என்று தவறாக அடையாளம் காணப்பட்டு பிற காட்டுயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருப்பதால், காமன் பாப்கேட்டை (common bobcat) விற்பனை செய்வதற்கான சர்வதேச தடை தொடருகிறது. இந்த காட்டுப்பூனைகள், அவற்றின் பாகங்களை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. ஆனால், தடையை விலக்கினால் அவற்றைப் போன்ற தோற்றம் கொண்ட இதர அரிய பூனைகள் (எ.கா. லிங்க்ஸ் - சிறுத்தை போன்ற காட்டுயிர்) கொல்லப்பட அதிக வாய்ப்புள்ளதால் அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பாப்கேட்டை கொல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பூனையை விற்கலாம். இப்பொழுதும் சர்வதேச மயிர்ப்போர்வை (Fur coat) சந்தையில் இந்த பூனையின் தோல் விற்கப்படுகிறது.
அழகாக இருப்பது மட்டுமல்ல, அச்சுறுத்தலாக இருந்தாலும்கூட கொல்லப்படுவதில் இருந்து காட்டுயிர்கள் தப்பிக்க முடிவதில்லை. மனிதனைவிட தந்திர உபயம் குறைந்ததாக இருந்தால் அவற்றைக் கொல்வது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. போர்பீகிள் சுறா (porbeagle shark) இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் மாமிசத்துக்கும், துடுப்புகளுக்கும் இந்த இரைகொல்லி டன்டன்னாக பிடிக்கப்படுகிறது.
பாரம்பரிய வாழிடங்களில் போர்பீகிள் சுறாக்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவிகிதம்கூட தற்போது இல்லை. இந்த காட்டுயிரை கொல்வது சர்வதேச அளவில் தடை செய்யப்படவில்லை. இந்த சுறா எண்ணிக்கையை நிர்வகிப்பது மண்டல அளவிலான பிரச்சினை என்று சைட்ஸ் கூறிவிட்டது. சரி, மற்ற காட்டுயிர்கள் இருக்கட்டும், இந்தியாவின் கௌரவங்களில் ஒன்றான புலிகள் அழிந்து வருவது பற்றி சைட்ஸ் கூட்டத்தில் விவாதிக்கவில்லையா? விவாதிக்கப்பட்டது.
புலிகள்
உலகில் இந்தியா, நேபாளம், பூட்டான், கம்போடியா, இந்தோனேசியா, ரஷ்யாவில் புலிகள் உள்ளன. ஆசிய நாடுகளில் மட்டுமே புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் புலிகள் கொல்லப்பட சீனா, திபெத் நாடுகளே முக்கிய காரணம். இந்தியாவில் இருந்து புலிகள், அவற்றின் பாகங்கள் கடத்தப்பட சீனாவில் மேற்கொள்ளப்படும் கள்ள வர்த்தகம் பெரும் ஊக்கமளிக்கிறது. ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா சரணாலயத்தில் ஒட்டுமொத்தமாக புலிகள் அழியவும், ரன்தம்போர் உள்ளிட்ட சரணாலயங்களில் புலிகள் எண்ணிக்கை குறையவும் சீன கள்ளச்சந்தை பெரும் பணம் அளித்ததே முக்கிய காரணம். தற்போது இந்தியாவில் 1,500க்கும் குறைவான புலிகள் மட்டுமே இருப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த கணக்கெடுப்பு வெளிவருவதற்கு முன்பே சைட்ஸ் கூட்டம் நடத்தப்பட்டுவிட்டது.
சீனாவில் ஐந்தாயிரம் புலிகள் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தில் புலிகளின் பாகங்களை விற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டிலுள்ள தொழில்முனைவோர் அரசை வற்புறுத்தி வருகின்றனர். சீனாவுக்கு சைட்ஸ் அமைப்பு முறைப்படி தெரிவித்த கண்டனத்தில், பாரம்பரிய மருத்துவ வர்த்தகத்துக்காக பண்ணைகளில் வளர்த்து விற்கப்படும் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இந்த கண்டனத்தை உலக இயற்கை நிதியம் (WWF) வரவேற்றுள்ளது.
'புலிகளின் எந்த பாகத்தை விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்காமல் இருப்பது வரவேற்கத்தக்க ஒர் அம்சம். காடுகளில் வாழும் புலிகளை பாதுகாக்க வேண்டும்' என்று உலக இயற்கை நிதிகம் கோரிக்கை விடுத்துள்ளது. நமது பாரம்பரியப் பெருமையான புலிகள் பாதுகாக்கப்படுமா, இல்லையா என்பது நெடுங்காலத்தில்தான் தெரியும். சைட்ஸ் அமைப்பின் நடவடிக்கைகள் அதற்கு உதவும் என்று நம்புவோம்.
- ஆதி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்

இந்த நோய்க்கிருமிகளின் தாக்குதலை சமாளிக்க வனவாழ்க்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் என்றும் இந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றம் என்றவுடன், பனிக்கட்டியின் உருகுநிலை, உறைநிலை மாற்றங்களையும், கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி கடற்கரை நகரங்களை பாதிக்கின்றன என்பதை மட்டுமே நாம் பேசி வருகிறோம். இதே காரணத்தால் ஆபத்தான நோய்க் கிருமிகள் எவ்வாறு பரவுகின்றன என்பதைப்பற்றி நாம் கவனத்தில் கொள்வதில்லை.
வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள், அவை வாழும் சுற்றுச்சூழலை சார்ந்தவை. சூழலில் ஏற்படும் சிறுமாற்றங்களினால் கூட வனவிலங்குகள் நோய்களுக்கு ஆளாவது மட்டுமல்லாமல் நோய்களையும் பரப்புகின்றன.
அண்மையில் வெளியான "Global Climate Change and Extreme Weather Events" என்கிற புத்தகத்தில் "Wildlife Health as an Indicator of Climate Change" என்கிற கட்டுரை வெளியாகி உள்ளது. வன உயிரினங்களை தாக்கி நோயை உண்டு பண்ணும் இந்த நோய்க்கிருமிகள் பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. 1990 ல் மறைந்துபோன இன்புளூயென்சா போன்ற நோய்கள் மறுபடியும் பிறவியெடுத்து உலகப் பொருளாதாரத்தில் 100 பில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வனபாதுகாப்பு சங்கத்தின் அறிக்கை அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்த உலக பாதுகாப்பு காங்கிரஸ் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம், புவிவெப்பமாற்றம், உறைநிலை மாற்றம் இவற்றால் வன உயிரினங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில நோயகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் இறுதியானது அல்ல எனவும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
ஏவியான் இன்ஃபுளூயன்சா,
ஃபேபிசியாசிஸ்
காலரா
இபோலா
குடல் ஒட்டுண்ணிகள்
லைம் நோய்
பிளேக்
சிகப்பு அலைகள்
ரிஃப்ட் வேலி சுரம்
உறக்கநோய்
காசநோய்
மஞ்சள் சுரம் ஆகியவை அந்த நோய்களின் பெயர்கள்.
நோய்க்காரணிகள் இடம்பெயருவதை கவனமாக கண்காணிப்பதன் மூலம் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையே இந்த நோய்கள் பரிமாறிக் கொள்வதை தடுக்கமுடியும்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
குமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் நமக்குத் தெரியாது.
யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது. எஸ்தோனியாவில் சி.எஃப்.எல் பல்புகளுக்கு பதிலாக குமிழ் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலப்பது வெகுவாக குறைந்துள்ளதாம். எஸ்தோனியாவைப் போலவே, சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாம்.
குமிழ் பல்புகள் அதிக மின்னாற்றலை செலவிடுவதால், மின் உற்பத்திக்கு அதிக படிம எரிபொருள் செலவாகிறது. அதிகமான படிம எரிபொருளை எரிப்பதால் வளிமண்டலத்தில் சேரும் பசுமைக்குடில் வாயுக்களும் அதிகரிக்கின்றன. இது புவி வெப்பமடைதலை விரைவுபடுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சிஃஎப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இதனால் நிலக்கரி போன்ற படிம எரிபொருளைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் தேவை குறைகிறது. விளைவாக, நாட்டின் படிம எரிபொருளின் இருப்பு கூடுதலாகிறது. மேலும் படிம எரிபொருள் குறைவாக எரிக்கப்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் குறைவாகவே உள்ளது என யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் சி.எஃப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்து விடுகின்றன. மின்கட்டணம் குறைவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்து விடுவதை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஓசூர் 'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.
இவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.
இப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.
அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.
பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை. அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப் பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்.
நன்றி: தினமணி கதிர்/07.09.2008
- மு.குருமூர்த்தி
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை