பாட்டாளிகள் என்ற வர்க்கத்தில் அடங்குவதிலிருந்து பார்ப்பனர்கள் மிகவும் விலகி உள்ளனர். பலனற்ற உழைப்பு, அதாவது தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட விவசாயிகள் என்ற நிலையில் மட்டுமல்ல, அவர்கள் ஒருபோதும் இந்திய சமூக அமைப்பின் ஆகக் கீழ் நிலையில் இருந்ததே இல்லை! பார்ப்பனர்களின் மிகப் பழமையான இலக்கியமும், தெய்வீக எழுத்துகளாகப் போற்றப்படுவதுமான ரிக் வேதத்தின் பாடல்களில் - பார்ப்பனர்கள் முதல் அந்நிய ஊடுருவாளர்களான ஆரிய தேவர்களின் வழி வந்தவர்கள் என்று கோரப்படுகிறது. அந்த வரிகள் “தாய்பா பாய் பிராமிணா, அசுர்யா சூத்ரா'' என்று விளக்குகிறது. ஆரிய தேவர்கள், வரலாற்றின்படி நாடோடிகளாகவும், பொருளாதார அமைப்பின்படி உணவு சேகரிக்கும் மற்றும் வேட்டையாடும் நிலையிலும் இருந்தனர். கால்நடையே அவர்களுடைய முக்கியப் பொருளாதார அடிப்படையாக இருந்தது. கால்நடைகள் புதிய பச்சையைத் தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவை. அதனால்தான் தங்களுடைய உடைமையான கால்நடைகளுடன் மனிதர்களும் நகர்ந்து கொண்டிருந்தனர்.

brahmins_540

புதிய உடைமையான நிலம் மற்றும் விவசாயம் ஆகியவை அறிமுகமாகும் வரை, அவர்கள் நாடோடிகளாகவே இருந்தனர். அவர்களுக்கு விவசாயம் தெரியாததாலும், ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்காததாலும், பார்ப்பன சமூகத்தின் எந்த உறுப்பினரும், தங்களுடைய நிலங்களிலிருந்து விரட்டப்படவோ, பலனற்ற உழைப்பாளிகளாக மாறவோ, வரலாற்றின் எந்த நிலையிலும் வாய்ப்பு ஏற்படவில்லை. வரலாற்றின் பக்கங்களில் எந்த ஒரு கட்டத்திலும் பார்ப்பனர்கள் தாங்கள் வாழ்வதற்காக, தங்களை உழைப்பை விற்றதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. மனித உழைப்பை அவர்கள் தாழ்வானதாக, மரியாதைக் குறைவானதாக எண்ணினர். அதனால் பார்ப்பனர்கள் அந்நிலையை அடைய வாய்ப்பே இல்லை.

தவயோகிகள் என்ற பெயரில், சமூ கத்தை உறிஞ்சி, தெய்வீகப் பிச்சை என்ற பெயரில் பிறருடைய உபரியில் வாழவும் அவர்கள் தயாராக இருந்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாமல், ஆனால் அதே வேளை, சமூகத்தின் வளத்தை அனுபவிக்கும் லட்சக்கணக்கான இந்து சன்யாசிகள், அர்ச்சகர்கள், சாமியார்களில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்களே. போரும் வழிபாடுமே அவர்களுடைய வெற்றிக்கு அடிப்படை. அவர்கள் நுண்ணிய சிறுபான்மையினராக இருந்த போதும், சமூகத்தின் ஆக உயர்நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர். நாட்டின் லட்சாதிபதிகள், கோடீசுவரர்களில் 90 விழுக்காட்டினர் இவர்களாக இருக்கின்றனர். இந்த சூழலில் "பாட்டாளிகள்' என்ற சொல் "பார்ப்பனர்கள்' என்ற சொல்லுடன் எவ்வகையிலும் பொருந்தாது.

நிரந்தரக் குடியமர்வின் தெய்வீகத் தன்மை மூலம், அவர்கள் சாதிய படிநிலை அமைப்பின் உச்சத்தில் இருக்கின்றனர். விடுதலை பெற்ற இந்தியாவில் ஏறத்தாழ 90 விழுக்காடு காலம், பார்ப்பனர்களே பிரதமர்களாக இருந்து வந்திருக்கின்றனர். 1950 தொடங்கி 2000 ஆம் ஆண்டு காலகட்டங்களில் - தலைமை நீதிபதி பொறுப்பில் பார்ப்பனர்கள் 47 விழுக்காடாகவும், துணை நீதிபதி பொறுப்பில் 40 விழுக்காடாகவும் இருந்தனர். 1984 வரை மக்களவையில் பார்ப்பன உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டிற்கும் அதிகமாகவே இருந்தது. “ஒருசில இடங்களைத் தவிர, இன்றளவிலும் அதிகார வர்க்கம் பார்ப்பன மயமாகவே இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணியில் பார்ப்பனர்களே இன்றும் கோலோச்சுகின்றனர். மத்திய அரசாங்கத்தில் உச்சபட்ச அதிகாரி தொடங்கி பிரதமரின் ஆலோசகர்களாக உள்ளவர்கள் வரை, அதிகார வர்க்கத்தில் உள்ள அச்சமூகத்தினர் தாங்கள் பிறந்த வகுப்பின் மரபை தொடர்வதாகவே கூறிக்கொள்கின்றனர்.

“ஒரு விரைவான பார்வையில் தற்போதைய அமைச்சரவை செயலாளர் தொடங்கி, பிற முக்கியப் பொறுப்புகளான "ரா', பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி, விவசாயம் மற்றும் கூட்டுறவு, பொருளாதாரம், வருமானம் மற்றும் சட்டத் துறை ஆகியவற்றின் செயலாளர்களாக பார்ப்பனர்களே முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனர். தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு உயர்நிலை அதிகாரிகளான செயலாளர்கள் மற்றும் அதற்கு ஒத்த பிற அதிகாரிகளில் 37 பேர் பார்ப்பனர்களாவர். பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஆணையம் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, இந்திய அதிகார வர்க்கத்தில் பார்ப்பனர்கள் 37.17 விழுக்காட்டினராக உள்ளனர். பிற முன்னேறிய சாதிகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.'' புகழ் பெற்ற பத்திரிகையாளரான அனுராதா ராமன், அண்மையில் மேற்கொண்ட இந்த ஆய்வு, சாதிய படிநிலை மற்றும் ஆளும் சாதிகளின் நிலை ஆகியவற்றின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நாட்டை அரசாள்பவர்களாக இருக்கக் கூடிய வீர மரபினர் கூட, இவர்களின் தெய்வீகத் தன்மையையோ, தெய்வீக சர்வாதிகாரத்தையோ கேள்வி கேட்க முடியாது.

அரசாளுமை என்பது, இந்து இந்தியாவில் தெய்வீக உரிமைகள் கொண்டதல்ல. இந்த பூமியில் பார்ப்பனர்களே தெய்வீகத் தன்மை கொண்டவர்கள். அதிகாரம் மற்றும் வாழ்நிலையில் அவர்களே உச்சத்தில் உள்ளனர். அவர்களே தங்களை "முதன்மைச் சமூகம்' என்று விருப்பத்துடன் அழைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் பார்ப்பனர்களே உண்மையான ஆள்பவர்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்களே அரசர்கள். சூத்திரர்கள் வியர்வை சிந்தி உழைத்து ஈட்டும் பொருள் அனைத்தும் - பார்ப்பனர்களுக்கு தெய்வீக உரிமையுடையதாகிவிடுகிறது. கொள்ளையடிப்பதும், திருடுவதும், பறிப்பதும் இந்த மண்ணின் தெய்வீக சட்டத்திற்கு உட்பட்டதாகிறது. மக்களே தேசம் என்றால், பார்ப்பனர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல, தேசவிரோதிகளும் கூட.

சோம்நாத், திருப்பதி, காமக்ஷா, அக்ஷார்தம், வைஷ்ணுதேவி, மகாலட்சுமி (வேலூர்), காசி விஸ்வநாத், காளிகட், ஜெகந்நாத் போன்ற ஆயிரக்கணக்கான ஆடம்பரமான மற்றும் மிகப்பெரும் சொத்துடைய கோயில்களில் பார்ப்பனர்கள்தான் கோலோச்சுகின்றனர். இந்தக் கோயில்கள் சொத்து சுரங்கங்கள் மட்டுமல்ல; மக்களை ஒடுக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பயன்படக்கூடிய முதன்மைக் கருவியாகவும் இருக்கின்றன. மதத்தின் மீது அதிகாரமும், கட்டுப்பாடும் கொண்டவர்களே நாட்டின் மீது உண்மையான அதிகாரமும், கட்டுப்பாடும் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது அறியாமல் சொல்லப்பட்டதல்ல. ஒற்றை விற்பனை அதிகாரிகளாக இருக்கக்கூடிய தெய்வீக அங்கீகாரத்தையோ, இந்து மதத்தில் இடைத்தரகர்களாகவும், அர்ச்சகர்களாகவும் இருக்கக்கூடியதையோ - இயற்கையாகவே தங்களுக்குக் கீழாக வைக்கப்பட்டிருக்கக் கூடிய பிற வகுப்பினரோடும், பிற சாதியினரோடும் பார்ப்பனர்கள் ஒருபோதும் பகிர்ந்து கொள்வதில்லை.

மார்க்ஸின் கருத்தியலானது, இதற்கு மாற்றாக ஒரு சுய ஓர்மையுள்ள, சுதந்திரமான பாட்டாளிகளின் இயக்கத்தை ஊக்கப்படுத்துகிறது. அதன் மூலம் அந்த வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதையும், அதிகாரப்பூர்வ (முதன்மை) சிறுபான்மை சமூகத்தை வலுக்கட்டாயமாக தூக்கி எறியவோ, சுக்குநூறாக்கவோ வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறது. "கம்யூனிச புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கம் நடுங்கட்டும்' என்று கம்யூனிஸ்டுகள் அறிவிக்கின்றனர். எனவே, அனைத்து நடைமுறை காரணங்களுக்காகவும் இந்த கொள்கையின் நோக்கம் மற்றும் இலக்காக பார்ப்பனர்கள் இருக்கின்றனர். "கம்யூனிசத்தின் தனித்துவமான கூறு என்பது, பொதுவாக சொத்துகளை ஒழிப்பதல்ல; மாறாக, தனி உடைமை சொத்துகளை ஒழிப்பது'. எனவே பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினராக, மார்க்சிய இயக்கத்தில் எந்த லாபத்தையும் பெற இயலாது.

எந்த ஜாதிய சலுகைகளின் மூலம் அவர்கள் தங்களுடைய தனியுடைமை உரிமையையும், சூழ்ச்சிகரமான கொடூர பண்பாட்டு ஆதிக்கத்தின் வழியாக ஏற்படுத்திய நிரந்தரப் பொருளாதார நிலையையும் தக்கவைத்துக் கொண்டனரோ - அந்த ஜாதிய சலுகைகளை அவர்கள் இழக்க நேரிடும். மாறாக, மார்க்சியத் தின்படி பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஏதுமில்லை; தங்கள் விலங்கினைத் தவிர. ஆனால், வெல்வதற்கு ஒரு முழு உலகமே இருக்கிறது.இந்திய கொடுங்கோன்மை ஆட்சியாளனான மநுவின் சட்டங்களை நிலைப் பெறச் செய்து, அதன் கொடூரப் பிரிவுகளை சமூகத்தின் பிற மக்கள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்தி, அவர்களை நிரந்தர அடிமைகளாக ஆக்கி வைத்திருந்த பார்ப்பனர்கள், வரலாற்றுப் பிழையாக தற்பொழுது புரட்சி செய்ய வருகின்றனர். ஆக, முதலாளிகளே அடிமைகளின் விடுதலைக்குப் பாடுபட முற்பட்டுள்ளனர். இது, நினைப்பதற்கே கொடுமையாகவும், கொடூரமான நகைச்சுவைகளில் அதிகொடூரமானதாகவும் இருக்கிறது.

இதன் விளைவாக, இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தின் வரலாறானது மிகவும் பரிதாபகரமாக அரசியல் துரோகத்தின் வரலாறாக மாறியுள்ளது. மநுவாதிக்கு பலியானவர்கள் தங்களை ஒடுக்குபவர்கள் மீது நம்பிக்கை வைப்பது என்பது, மிகப் பெரும் முட்டாள்தனமாகும். தங்களுடைய நம்பிக்கையை காப்பதிலும் தங்களுடைய "தர்மத்தை' நிலைப்படுத்துவதிலும், இந்து மதத்தை உண்மையாக நம்பி பின்பற்றுபவர்களுக்கு துரோகம் இழைப்பதிலும் கண்டிப்பாக இருக்க பார்ப்பனர்கள் மறப்பதில்லை. பாட்டாளிகள் விவேகமற்று தங்களுடைய தர்மத்திற்கு உண்மையாக இல்லாமல், பார்ப்பனர்களை தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் எம்.என். ராய், சாதி பாகுபாடுகள் கொண்டவர். கம்யூனிசம் அறிவித்த நோக்கங்களும், பார்வைகளும் வெளிப்படையாக இந்தியாவில் பார்ப்பனர்களை குறி வைத்து, அவர்களை அதிகாரம் மற்றும் சலுகைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய வகுப்பினராகக் கருதியது என்பது மிகவும் கவனத்திற்குரியது. ஆனால் ஒருமுறை கூட அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) அதிகார வர்க்கத்திற்கும் பாட்டாளிகளுக்கும் இடையே நிலவிய பாரிய வேறுபாட்டை அங்கீகரித்து, அதை உழைக்கும் வகுப்பினர் மனதில் பதிய வைக்க முயலவே இல்லை. இந்தச் சூழலில் மிகுந்த அதிகாரம் படைத்த பார்ப்பனர்கள், இத்தகைய கருத்தியலில் அர்ப்பணிப்போடு செயல்படுவார்கள் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? "தற்பொழுது நிலவக்கூடிய அனைத்து சமூக சூழல்களையும் வலுக்கட்டாயமாக தூக்கி எறிவதன் மூலமே - தங்கள் இலக்கை அடைய முடியும் என்று வெளிப்படையாக அறிவித்த' ஒரு சாராருடன் எவ்வாறு அவர்கள் அணி திரள முடியும்?

நகைமுரண் என்னவெனில், நிலவும் சூழலுக்கு எதிரான, பார்ப்பனர்களுக்கு எதிரான, மக்களுக்கு சார்பான புரட்சிகரமான ஒரு தத்துவமானது - இந்தியாவில் மிகுந்த சுயஓர்மையுள்ள, சாதிபாகுபாடு நிறைந்த, ஆழ்ந்த பழமைவாத வகுப்பினரான பார்ப்பனர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. எம்.என்.ராய் (உண்மைப் பெயர் நரேந்திரநாத் பட்டாச்சாரியா) வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர். இவர் 17 அக்டோபர் 1920இல் தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். அன்றைய செயற்குழு உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் இருந்தனர் : பொதுச் செயலாளராக எம்.என். ராய், உறுப்பினர்களாக திருமதி எல்வினா ராய், அபானி முகர்ஜி, திருமதி. ரோஸ் எப் முகர்ஜி, போயங்கர் என். பிரத்திவாதி ஆச்சாரியா, முகமது அலி அகமது உசேன், முகமது ஷபீக் சித்திகி.

சாதியப் பாகுபாடும், சார்புத்தன்மையும் கலந்த பார்ப்பனர்களின் மனதை இது மிக வெளிப்படையாக உணர்த்தக்கூடிய சான்றாகும். ஏழு உறுப்பினர்களில் ராய் மற்றும் முகர்ஜி ஆகியோர் வங்காளத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள். பி.என்.பி. ஆச்சார்யா, தெற்கைச் சேர்ந்த பார்ப்பனர். இரண்டு பெண் உறுப்பினர்களும் ராய் மற்றும் முகர்ஜியின் மனைவிமார், இரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் முதல் செயற்குழுவில் இருந்தது என்பது முக்கியமானதாகும். இது, இஸ்லாமின் முற்போக்குத் தன்மையைக் காட்டுகிறது. இந்தக் காலகட்டத்தில் தற்செயல் நிகழ்வாக எஸ்.ஏ.டாங்கே என்ற மராட்டியப் பார்ப்பனர் தோழர் வி.அய். லெனினின் சுயசரிதையை "காந்தி மற்றும் லெனின்' என்ற பெயரில் எழுதினார். அது, 1920 இல் அக்காலகட்டத்தில் காந்திக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான ரஞ்சோடு தாஸ் லோத்வாலா என்பவரால் வெளியிடப்பட்டது.

அதற்கு சிறிது காலத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் காலனிய அதிகாரத்தின் கீழ் பணியாற்றிவிட்டு, இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக, இந்திய அரசியலில் இணைய மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து அப்பொழுதுதான் இந்தியா திரும்பியிருந்தார். அவருக்கு புகழ் தேவைப்பட்ட காரணத்தினால், தனது சுயசரிதையை வெளியிடுவதில் முனைப்புடன் இருந்தார். லோத்வாலா, காந்திக்கு எதிரான தனது மனப்போக்கின் காரணமாக, டாங்கேயின் நூலை வெளியிட முன்வந்தார்.

இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் எந்தப் பின்னணி செயல்பாடுகளோ, உணர்வோ டாங்கேவிற்கு கிடையாது என்றபோதும் - பார்ப்பனரான எம்.என். ராய், பார்ப்பனரான டாங்கேயை இந்திய அதிகார வர்க்கத்தை தூக்கி எறியவும், இந்திய உழைக்கும் பெரும்பான்மை மக்களை அதிகாரத்தில் அமர்த்தவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து தொடங்குமாறு அழைப்பு விடுத்தார். இணைவதற்காக அழைக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் இருந்த ராயிடமிருந்து பணம் பெற்ற நிலையிலும், டாங்கே இறுதியாக எம்.என்.ராயின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

எந்தவித அமைப்பு ரீதியான இணக்கமும் இல்லாத நிலையிலும் கருத்தியல் ரீதியான புரிதல் இல்லாத நிலையிலும் - ஒரு வங்காளி தலைவரையும், மராத்திய தொண்டரையும் ஒன்றிணைப்பதற்கான இணைப்பு சக்தியாக சாதியே இருந்திருக்கிறது. டாங்கே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் இவர்கள் இருவரும் ஒருபோதும் எந்தவித கருத்தியல் கலந்துரையாடலிலும் சந்தித்ததே இல்லை என்பது கவனத்திற்குரியது. பிரிட்டிஷாருக்கு எதிராகவும், ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ராயால் மிக எளிதாக டாங்கேயை நம்ப முடிந்தது.

எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It