gujarat dalit

அண்மையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த "உனா எழுச்சி"-யானது தலித் மக்களின் விடுதலைக்கான "வர்க்க அணிசேர்க்கை"-யின் வரலாற்றை நினைவுபடுத்தியிருக்கிறது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் சாதிவெறிக்கு பலியான ரோஹித் வெமுலாவால் உருவாகியிருந்த நெருப்பு; அதை அணைந்துவிடாமல் பாதுகாத்து வந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆகியவை ஒடுக்கப்பட்ட மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை கூர்மைப்படுத்தியுள்ளன.

இந்நிலையில்தான் குஜராத்திலுள்ள கிர்சோம்நாத் மாவட்டத்தின் மோடா சமத்தியாலா கிராமத்தைச் சார்ந்த நான்கு தலித் இளைஞர்கள் ஜூலை 11-ஆம் தேதி இறந்த மாடுகளின் தோலை உரித்தார்கள் என்ற காரணத்துக்காக கட்டிவைத்து தாக்கப்பட்டார்கள். அதில் அவமானமடைந்த ஒரு இளைஞர் விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இதையொட்டி ஏகதேசம் குஜராத் எங்கிலுமுள்ள தலித்துகள் கிளர்ந்தெழுந்தார்கள். இறந்த மாடுகளைக் கொண்டுவந்து சாலைகளில் குவித்தார்கள். தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தலித் அஸ்மிதா (‘அஸ்மிதா’ என்றால் சுயமரியாதை என்று பொருள்) என்ற யாத்திரையை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தொடங்கி, உனா வரை (சுமார் 400 கிலோமீட்டர்) தொடர்ந்தார்கள்.

நடைபயணத்தை ஜிக்னேஷ் மெவானி ஒருங்கிணைத்தார். ஜூலை 5-ஆம் தேதி தொடங்கிய யாத்திரை ஆகஸ்ட் 15-ஆம் தேதி உனா நகரில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து முடிவடைந்திருக்கிறது. ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலாதான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

யாத்திரையின் முடிவில் நடந்த மாநாட்டில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

  • ஒன்று, “தலித்துகளாகிய நாங்கள் இனி இறந்த மாட்டின் தோலை உரிக்க மாட்டோம்!” என்பதாகும்.
  • இரண்டாவது தீர்மானமானது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த “தலித்துகளும், முஸ்லீம்களும் இணைந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான அரசியல் படை ஒன்றை உருவாக்குவது!” என்கிற வர்க்க அணிசேர்க்கையை முவைத்ததாகும்.

கால்நூற்றாண்டு தேக்கத்தை உடைத்திருக்கிறது இரண்டாவது தீர்மானம்.

1990-கள் முதலான கடந்த கால்நூற்றாண்டு தேக்கம் என்பது ‘தலித்துகள் பிரச்சினையை தலித்துக்களால்தான் தீர்க்க முடியும்’ என்ற அடையாள அரசியலால் உருவாக்கப்பட்டிருந்தது. பின்நவீனத்துவவாதிகளால் திணிக்கப்பட்ட இந்த அடையாள அரசியல் என்பது தலித்துகள் மட்டுமில்லாது பெண்கள், பழங்குடிகள், இசுலாமியர்கள் என பெரும்பான்மை மக்கள் அனைவரையும் தனித்தனி தீவுகளாக்கியது.

பின்நவீனத்துவவாதிகளின் அடையாள அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்கிற வர்க்க அரசியலுக்கு எதிராக இருந்ததானால் அரசின் ஆதரவு இயல்பாகவும், இலகுவாகவும் கிடைத்தது. பின்நவீனத்துவ அடையாள அரசியல் கலை, இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம் என அனைத்து தளத்திலும் தீவிரமாக திணிக்கப்பட்டது.

இந்த வகையில்தான் அம்பேத்கர் நூற்றாண்டு அரசின் ஆதரவோடு அமர்க்களமாக முன்னெடுக்கப்பட்டது. தலித் மக்களோடு பிற மக்களும், பிற மக்களோடு தலித்துகளும் இணைந்து போராடிய வரலாறுகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டன. ஆனால், உழைக்கும் மக்களின் வரலாற்றை அரசோ, அவர்களின் கைக்கூலிகளோ தீர்மானிக்க முடியாது; உழைக்கும் மக்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதையே "உனா எழுச்சி" உணர்த்துகிறது.

வரலாற்றில் இசுலாமியர்களும், தலித்துகளும் வீறுகொண்டெழுந்த மாப்ளா கிளர்ச்சி

கேரளாவின் மலபார் பகுதியில் 1921-ஆம் ஆண்டில் நடைபெற்ற விவசாயிகளின் கலகமானது “மாப்ளா கிளர்ச்சி” என அழைக்கப்படுகிறது.

பம்பாய் மாகாணத்திலிருந்த மலபார் பகுதி 1800 ஜுலை மாதத்தில் சென்னை மாகாணத்தோடு இணைக்கப்பட்டதும், அதன் வரிவிதிப்பு முறையும் சேர்ந்து மலபார் விவசாயிகளின் கலகம் தொடங்கியது. 1800-இல் பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிராக தொடங்கிய இந்த கலகம் 1836-க்குள்ளேயே வர்க்கப் போராட்டத் தன்மையை அடைந்துவிட்டது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமின்றி தங்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வைத்திருந்த நிலப்பிரபுக்களும், பெருவிவசாயிகளுமான நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு எதிராகவும் போராட்டம் திரும்பியது.

மலபார் மாவட்டத்தில் நிலப்பிரபுக்களாக இருந்தவர்கள் நாயர் மற்றும் நம்பூதிரி போன்ற உயர்சாதி இந்துக்கள். கூலி, ஏழை விவசாயிகளில் பெரும்பாலானவர் இசுலாமியர்கள். ஆதலால் இது மதக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான இசுலாமியர்களோடு தலித்துகளும் சேர்ந்துதான் கூலி அடிமைகளாகவும், பண்ணையடிமைகளாகவும் இருந்தனர். ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தலித்துகளை மறைத்து, பெரும்பான்மையாக இருந்த இசுலாமியர்களை முன்னிலைப்படுத்துவது ஆளும்வர்க்கத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. சுரண்டல் பிரச்சினையை மத பிரச்சினையாக சித்தரித்து ஒடுக்குவதற்குப் பயன்பட்டது. பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட வெள்ளை அரசாங்கம் முதல் இன்றுவரைக்கும் அரசுக்கு இதுதான் நிலைப்பாடு.

ஆனால், மலபாரில் சாதி, மத பண்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருப்பது பொருளாதார நலனே என்பதை அங்கிருந்த இசுலாமிய மக்களும், தலித் மக்களும் இயல்பாக புரிந்துகொண்டு போராட்டத்தில் இணைந்து நின்றனர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். 1921 ஆகஸ்ட் மாதம் போலீஸ் 144 தடை உத்தரவு போட்டது. அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சாமல் மக்கள் போலீஸ் நிலையங்களைக் கைப்பற்றினர். அரசு கஜானாவை அபகரித்தனர். போராட்டத்தில் மலபார் பிரதேசம் மக்களின் வசம் வந்தது.

அதேநேரத்தில் 1857-க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு நடத்திய மாபெரும் படுகொலைகளும் இங்கேதான் அரங்கேற்றப்பட்டன. நிற்கக்கூட இடமில்லாத வகையில் போராளிகளை சரக்கு ரயில் வண்டியில் அடைத்து, அதிவேகமாக ஓட்டி மூச்சடைக்க வைத்து சாகடித்தது அரசு. கோயம்புத்தூரில் வண்டி நின்றபோது, புழுக்களைப்போல் கொத்து கொத்தாக செத்துவிழுந்த போராளிகளில் இசுலாமியரோடு தலித்துகளும் அடங்குவர்.

ஆக ஒடுக்கப்படுகிறவர்கள் என்கிறவகையில் தலித் – இசுலாமியர் கூட்டு என்கிற வர்க்க அணிசேர்க்கை இயல்பாகவே இருந்தது; இயல்பாகவே நடந்தது. இனியும் அதுதான் நடக்கும் என்பதைத்தான் உனா எழுச்சியின் தீர்மானம் உணர்த்துகிறது.

வெட்டிவேலை மறுப்பில் தொடங்கியவீரத்தெலுங்கானாபோராட்டமும், தலித் மற்றும் பிற மக்கள் ஒற்றுமையும்

1946 – 1951 ஆகிய ஆண்டுகளில் நிஜாம் மன்னன் மற்றும் வெள்ளை ஏகாதிபத்தியம், 1947-க்குப் பிந்தைய இந்திய அரசு ஆகிய மூன்று அரசுகளை எதிர்த்து நடந்த இந்த மக்கள் போரினால்தான்.

  • உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டின்படி 10 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
  • வெட்டி வேலையென்னும் கட்டாய உழைப்புமுறை ஒழிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டது..
  • முதன்முறையாக இலட்சக்கணக்கான விவசாயிகள் தினமும் இரு‍முறை சாப்பிட வழி பிறந்தது.
  • நில உச்சவரம்புச் சட்ட‍ம் இயற்றப்பட்டு, நிலச்சீர்திருத்த சட்டம் அமல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது.

இந்த உரிமைகளைப் பெற்றுத் தந்த மக்கள் போரில்தான்,

  • கம்யூனிஸ்டுகள் மற்றும் உழவர்கள் எனும் தலித்துகளும், பிற மக்களும் 4000 பேர் கொல்லப்பட்டனர்.
  •  10,000-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்தார்கள்.

8 தெலுங்கானா மாவட்டங்களும், 5 மராட்டிய மாவட்டங்களும், 3 கன்னட மாவட்டங்களுமாக 16 மாவட்டங்களைக் கொண்டது நிஜாம் மாநிலம். மூன்று மொழி பேசும் மக்கள் சமூகங்களை உள்ளடக்கியது. ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட அவ்வரசில் தெலுங்கானா மக்களின் தொகை மட்டும் 1 கோடி. ஆனால், ஆட்சி மொழி உருது என்பதால் மக்கள் மொழிகள் நசுக்கப்பட்டன.

பிரித்தானிய அரசுக்கு அடிபணிந்த நிஜாம் மாநிலத்தின் நவாப், தனக்கு சொந்தமான படை, நாணயம், அஞ்சல் மற்றும் சுங்கம் ஆகியவற்றுடன் தனது மாநிலத்தின்மீது முழு அதிகாரமும் கொண்டிருந்தான்.

நிஜாம் மன்னன் மட்டுமில்லாது நிஜாம் அரசுடைய கட்டுப்பாட்டின்கீழ் இருந்த குறுநில மன்னர்கள், பைகாக்கள், ஜாகிர்தார்கள், மாக்தாக்கள், தேஷ்முக்குகள், மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள், அதிகாரிகள் ஆகியோரும் சேர்ந்து தங்களின் செல்வ செழிப்பிற்கும், பகட்டு வாழ்வுக்குமாக மக்களை கூலி இல்லாத வெட்டிவேலை செய்யும் கொத்தடிமைகளாக வைத்து வதைத்தனர்; மக்களை கசக்கிப் பிழிந்தனர்.

உழும் நிலமோ, வசிக்கும் வீடுகளோ மக்களுக்குச் சொந்தமில்லை; மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறும்போது வெறுங்கையுடன்தான் போகவேண்டும். எதுவும் அவர்களுக்கு சொந்தமில்லை.

தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி ஆகியவரோடு சிறுவியாபாரிகளும் கூட கொத்தடிமைகளாகத்தான் இருந்தனர்.

இதற்கும் மேலாக சட்டத்தில் இல்லாத ஏராளமான வரிகளை ஏழை மக்கள் கட்ட வேண்டும். தானியங்கள் மற்றும் உழுபடைக் கருவிகளுக்கு வரி, திருமணங்களுக்கு வரி, தங்கள் பெண்கள் பருவம் அடைந்ததற்கு வரி, பிறப்புக்கும் இறப்புக்கும் வரி என கற்பனைக்கெட்டாத பல சட்ட விரோத வரிகளை ஏழைகள் கட்ட வேண்டும்.

கூடவே மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோர் கொடூரமான கந்துவட்டி முறைகளில் கிராம மக்களைச் சுரண்டி வந்தனர். இதனால் ஏழை, நடுத்தர விவசாயிகள் வரைக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அரசியல் அமைப்புகளோ, அரசியல் நடவடிக்கைகளோ நிஜாம் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை. 1936-க்கு பிறகுதான் மாநில காங்கிரஸ் அமைக்கப்பட்டது. அது நிஜாம் நவாபை அதிகாரத்திலிருந்து விலக்காமல் அவனுடன் சமரசம் கொண்ட பொறுப்பு வாய்ந்த அரசு வேண்டுமென்று கிளர்ச்சியைத் தொடங்கியது.

பின்னர் நிஜாம் ஆதிக்கத்தை முசுலீம் ஆதிக்கமாக காட்டி ஆரிய சமாஜம் தொடங்கப்பட்டது. இந்து மத அடிப்படையில் இந்து இளைஞர்களை அது அமைப்பாகத் திரட்டத் தொடங்கியது.

இந்த காலகட்டத்தில் தெலுங்கானா பகுதியில், தெலுங்கு மக்களின் மொழி, பண்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய குறிக்கோளுடன் ஆந்திர மகாசபை தொடங்கப்பட்டது.

இந்நிலைமைகள் நீடித்த 1939 – 1940-களில்தான் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின. இடதுசாரி கண்ணோட்டமுள்ள எல்லா இளைஞர்களும், மார்க்சிய உணர்வு கொண்டவர்களும் ஆந்திர மகாசபையை ஓரு செயல் தளமாகப் பயன்படுத்திக்கொண்டு மக்களிடையே வேலை செய்தனர்.

ஏழை மற்றும் சுரண்டப்படும் மக்களான தலித்துகளையும், சுரண்டலுக்குள்ளான அனைத்து மக்களையும் வர்க்க ஒற்றுமையோடு, வர்க்கப் போராட்டங்களுக்காக அமைப்பாக அணிதிரட்டும் பணிகள் ஆரம்பித்தன.

“வெட்டிவேலை எனும் கொத்தடிமை முறை ஒழிப்பு” பணிகள் தொடங்கியது.

தாழ்த்தப்பட்டோர், வண்ணார்கள், நாவிதர்கள், கும்மாரி ஆகியவரோடு சிறுவியாபாரிகள், ஏழை, நடுத்தர விவசாயிகள் போன்றவர்களான நாயுடு, ரெட்டி ஆகிய சமூகப்பிரிவினரும் அணிதிரட்டப்பட்டனர்.

பலமான கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. 4000 பேர் உயிரைக் கொடுத்து, 10,000-க்கும் மேற்பட்டவர்கள் பல ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்து, உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டின்படி 10 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வெட்டி வேலை என்னும் கட்டாய உழைப்புமுறை ஒழிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டது. முதன்முறையாக இலட்சக்கணக்கான விவசாயிகள் தினமும் இரு‍முறை சாப்பிட வழிப்பிறந்தது.

வாழ்நிலை தேவையிலிருந்து வர்க்க அணிசேர்க்கை தவிர்க்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய சான்றாகும்.

தமிழ்நாட்டில் சாதியை ஆட்டங்காண செய்த வர்க்க அணிசேர்க்கை

தமிழ்நாட்டில் சாதி கொடுமைக்கு பேர்போன இடம் தஞ்சை. அடிமை முறையை வைத்திருந்த பகுதி.

சாதி ஒழிப்பு போராளியான தனுஷ்கோடியின் தந்தை சாத்தன் அவர்கள் விளாத்தூர் கிராமத்தில் நிலப்பிரபு சுப்பிரமணிய அய்யர் என்பவரிடம் பண்ணை அடிமையாக இருந்தார். அய்யரின் அடி தாங்காமல் மனைவி, குழந்தைகளுடன் ஆடு மாடுகளையும் பிடித்துக் கொண்டும் தனது வீட்டின் நிலைக்கதவுகளைப் பெயர்த்து எடுத்துக் கொண்டும் பக்கத்திலுள்ள பாங்கல் கிராமத்திற்கு போய் அங்குள்ள பிள்ளை இனத்தவரின் பண்ணையில் பண்ணை அடிமையாக சேர்ந்தார். அய்யர் பண்ணையிலிருந்து வரும் ஆட்களை பிள்ளை இனத்தவர் சேர்த்துக் கொள்வதோடு காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது முக்கியமான ஒன்றாகும்.

இவ்வகையில் அன்றைய தஞ்சையின் நிலவரமானது நாம் கற்பனையில் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுமையானதாகும். சாணிப்பால் குடிக்க வைத்தல், சவுக்கால் அடித்தல் என்பதெல்லாம் கொடுமையின் உச்சம். சாணிப்பாலானது உடம்பை இளைத்து சுருங்கச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் கொல்லும் விசமாகும்.

தலித்துகள் டீ கடையில் தரையில்தான் உட்கார வேண்டும். குடித்த பின் தானே டம்ளரை கழுவி தொங்க விட வேண்டும். வாழை மட்டையில்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். கணவன் மனைவி தகராறு என்றால் ஒருவர் சிறுநீரை மற்றவரை குடிக்க வைப்பார்கள். இருவரையும் இரு தூண்களிலும் கட்டி வைத்து சவுக்கால் அடிப்பார்கள்.

பண்ணையார் நிலத்தில் தென்னம்பிள்ளை நடும்போது சேரியிலிருந்து ஒருவரை வரவழைத்து, அவர் எதிர்பார்க்காதபோது மூளை சிதறும் அளவிற்கு ஒரே அடியில் வீழ்த்தி அவரை குழியில் தள்ளி தென்னம்பிள்ளையை நடுவார்கள்.

உழைக்கும் சேரி மக்களுக்கு கெட்டுப்போன சோற்றை போடுவார்கள். பண்ணையாரை எதிர்த்து யாரவது சின்னதாக எதிர்ப்பைக் காட்டினாலும் குடிநீருக்கான கிணற்றில் மலத்தை அள்ளி போடுவார்கள். எதிர்த்தவரை மரத்தில் கட்டிவைத்து உடம்பில் வெல்லத்தைக் கரைத்து ஊற்றி எறும்பு கடிக்கும்படி செய்வார்கள். கட்டை விரலை வெட்டுவார்கள்.

விடுதலையை எண்ணிப் பார்க்க முடியாது. பெற்றோர், பிள்ளையென அனைவரும் வாழையடி வாழையாக அடிமைப்படுத்தும் சாதிய - குடும்ப அடிமை முறை. தலித்துகள் கால்நடைகளைவிட கேவலமாக நடத்தப்பட்டனர்.

இப்படி அசல் மனுதர்ம வழிமுறையில் கொடுமைகள் நிகழ்ந்த பகுதியில்தான் 1943-இல் “அடித்தால் திருப்பி அடி” எனும் முழக்கத்தோடு விவசாய சங்கம் பிறந்தது. தோன்றிய ஒரே ஆண்டுக்குள் சாணிப்பால் சவுக்கடியை ஒழித்தது. சங்கம் 1948-க்குள் எல்லா சேரிகளுக்குள்ளும் கால் ஊன்ற முடிந்தது.

பெண்கள் அரிவாள் சுத்தியலை சின்னமாகக் கொண்ட தாலி செய்து போட்டுக்கொள்ளும் அளவிற்கு எழுச்சி இருந்தது.

இவையனைத்தும் தலித்துகளும், பிறசாதி உழைக்கும் மக்களும் தவிர்க்க இயலாது ஒரே வர்க்கமாக அணிதிரண்டு நின்றதாலேயே சாத்தியப்பட்டது.

வர்க்கம்தான் சாதியைத் தகர்த்து மக்களை ஒன்றுபடுத்துகிறது என்ற அரசியல் அறிவோடுதான் சீனிவாசராவ், ஏ.கே.கோபாலன், நெடுங்காடி ராமசந்திரன், மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, பி.எஸ். தனுஷ்கோடி, கணபதி, ஏ.எம். கோபு, சித்தமல்லி சுப்பையா, தம்பிகோட்டை நாராயணன், ராமு, பாங்கல் தனுஷ்கோடி, அமிர்தலிங்கம் பிள்ளை, வெங்கடேச சோழகர், பட்டுராசு களப்பாடியார், எஸ்.ஜி. முருகையன் போன்ற தோழர்களும், இளமையிலே தங்கள் இன்னுயிரை இழந்த களப்பால் குப்பு, ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், வாட்டாக்குடி இரணியன், சம்பவான் ஓடை சிவராமன் போன்ற தலைவர்களும் முன்னணி வீரர்களும் இதை திட்டமிட்டு நடைமுறைப் படுத்தினார்கள்.

தஞ்சையின் நீட்சியாக வடமாவட்டங்களில் பற்றிப் படர்ந்த வர்க்க நெருப்பு!

எல்லாப் பகுதிகளைப் போலவும் தமிழ்நாட்டின் வடமாவட்டப் பகுதிகளிலும் வர்க்க ஒடுக்குமுறையின் தீவிரத்தன்மை என்பது சாதிய ஒடுக்குமுறையாகவே இருந்தது. சாதிய வன்கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் நிறைந்த பூமி வடமாவட்டங்கள். இங்கு கந்துவட்டிக் கொடுமை சாதி வேறுபாடற்ற வகையில் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் ஈவு இரக்கமற்ற முறையில் வதைத்தது.

இந்த கொடுமைகளுக்கு அஞ்சி மக்கள் கூட்டம் கூட்டமாய் கர்நாடகாவிற்கும், நாட்டின் பிறபகுதிகளுக்கும் அகதிகளாய் குடிபெயர்ந்தார்கள்.

இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி உழைக்கும் மக்கள் அனைவரும் சாதியைத் துறந்து வர்க்கமாக ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலோடே நக்சல்பாரி இயக்கம் இங்கு காலூன்றி பெருநெருப்பாய் பற்றிப் படர்ந்தது. தலித்துகளும், ஆதிக்க சாதியிலிருந்த உழைக்கும் மக்களும் அமைப்பாக்கி ஒன்றாக அணிதிறந்தார்கள்.

சாதியாதிக்க வாதிகளுக்கும், கந்துவட்டி கொடுங்கோலர்களுக்கும் முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. திருந்தாதவர்கள் தண்டிக்கப்பட்டனர். அங்கே நீதியை நிலைநாட்டுகிறவர்களாக, தவறு செய்கிறவர்களுக்கு தண்டனை வழுங்குகிற நீதியரசர்களாக தலித்துகளும், அனைத்து உழைக்கும் மக்களும் இருந்தனர்.

மனித மாண்பை மீட்டெடுப்பது எப்படி என்பதை வர்க்க ஒற்றுமையும், வர்க்கப் போராட்டமும் நிகழ்த்திக் காட்டியது.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாறு இவை மட்டுமேயல்ல. கிராமப்புற நிலவுடமை கொடுமைகளுக்கு எதிராக மட்டுமல்ல நகர்ப்புற தொழிலாளர் பிரச்சினையிலும் தலித்துகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் வர்க்கமாக ஒன்றுபட்டுதான் உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்.

சாதியப் பிரச்சினை குறித்த விவாதத்தில் நம்மோடு முரண்படுகிற சி.பி.ஐ – (எம்.எல்) - லிபரேசன் கட்சியினருக்கு இதைவிட அதிகம் தெரியும். குறிப்பாக பிகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் சாதியாதிக்க நிலவுடமைக் கொடுமைகளுக்கு எதிராக நடந்த பல வீரம்செறிந்த வரலாறுகளுக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.

இவையனைத்தும் கம்யூனிஸ்ட் தலைவர்களைவிட அதிகம் படித்ததாகக் கூறும் அம்பேத்கரின் வாழ்நாளிலேயே நடந்தது. ஆனாலும் அவரால் இந்த படிப்பினைகளிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் உழைக்கும் மக்கள் வர்க்கமாக அணிதிரள்வதை பார்த்துக் கொண்டே “இந்தியாவில் உழைக்கும் மக்கள் வர்க்கமாக அணிதிரள்வது சாத்தியமில்லை” என்று தீவிரமாக பேசினார். அதனால்தான் அம்பேத்கர் சமூக மாற்றத்திற்கான சிந்தனையாளர் என்ற இடத்தை அடைய முடியாமல் போயிற்று.

தொடரும்...

- பாவெல் சக்தி & திருப்பூர் குணா

Pin It