இந்திய அரசியல் தளத்தில் முக்கியமானதொரு தத்துவப் பிரச்சினையாக இருப்பது அம்பேத்கரியத்தையும் மார்க்சியத்தையும் எப்படி இணைப்பது என்பதே.
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் வர்க்கம், சாதி இவற்றை இணைக்க முடியுமா என்பதும், வர்க்கப் புரட்சி சாதியை ஒழிக்குமா என்பதும் ஆகும்.
இந்த இரு கோட்பாடுகளையும் கைகுலுக்க வைக்க இயலுமா என்பதற்கான ஒரு முயற்சிதான் பேராசிரியர் முத்துமோகனும்,தோழர் ராஜாவும் எழுதியுள்ள 'மார்க்ஸ்-அம்பேத்கர் தொடரும் உரையாடல்' என்னும் நூலாகும்.
மார்க்சின் மைய எழுத்துக்களில் இருந்து விலகி நிற்கும் அவருடைய பல நூறு கையெழுத்துப் பக்கங்களை நோக்கும் அண்மைக்கால ஆய்வுகள், மேற்கு சமூகங்களிலிருந்து வேறுபட்ட சமூகங்களுக்குரிய மார்க்சியத்தைக் காண்கின்றன என்றும் அவை இங்கே ஒரு விளிம்புநிலை மார்க்ஸ் இருப்பதைக் காட்டுகின்றன என்றும் நூலாசிரியர்கள் கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் மாக்சிய உலகக் கண்ணோட்டம் குறித்த புதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன என்பதிலிருந்து இந்திய அரசியல் சூழலுக்குள் மார்க்சியத்தை வலுவாகக் கொண்டுவந்து இணைக்க ஆசிரியர்கள் நூல் முழுவதும் முயற்சிக்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் வாழ்ந்த மார்க்சின் வரலாற்றுச் சூழலுக்கும், இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த அம்பேத்கரின் வரலாற்றுச் சூழலுக்கும் அடிப்படை வேறுபாடுகள் இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அம்பேத்கர் எதார்த்த உடனடி உறவுக்கானவர். மிகுந்த வளர்ச்சியடைந்த உற்பத்தி முறையை விளக்கியது மார்க்சின் கோட்பாடு. வரலாற்றில் மிக முன்னேறிய வர்க்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டது மார்க்சின் கோட்பாடு. மாறாக அதில் வளர்ச்சி பெறாத காலனியச் சூழலில் இருந்த ஒரு சமூகத்தைப் பற்றியது அம்பேத்கரின் ஆய்வு என்கிறார்கள் நூலாசிரியர்கள்.
மிகவும் மோசமான ஒடுக்கப்பட்ட, மனிதத்தன்மை மறுக்கப்பட்ட, மிருகங்களாகவும், தீண்டத்தகாதவராகவும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட, இழிவான நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது அம்பேத்கரின் கோட்பாடுகள் என்ற வேறுபாட்டை குறிப்பிட்டுத் தொடங்கும் இந்நூல் போகப் போக ஒற்றுமைகளையும் ஆழமாகக் காண்கின்றது.
காலனியம் பரவிக் கிடந்த காலம் அது. பெரிய எதிர்ப்பு அலை ஐரோப்பா அல்லாத உலகம் முழுவதும் வீசிக்கொண்டிருந்தது. அப்போது அந்த காலனிய எதிர்ப்பு நீரோட்டத்தில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது. இந்தப் போராட்டங்களை காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய போராட்டங்களாக கம்யூனிஸ்டுகள் பார்த்தார்கள். அம்பேத்கர் இந்தப் பொது போக்கில் இருந்து மாறுபட்ட இந்தியாவின் ஒடுக்கப்பட்ட குழுக்களின் சமூக விடுதலை பற்றிப் பேசினார். அவர்களின் சமூக விடுதலைக்கான போராட்டத்தை நடத்திய முதல் போராளி அவர் தான். இந்தப் போராட்டத்தின் மையத்தில் உழைக்கும் வர்க்கம் இல்லை, விவசாயத் தொழிலாளர்கள் கூட இல்லை, தீண்டத்தகாதவர் என்று சொல்லப்பட்ட சாதி மக்கள் தான் இருந்தார்கள் அவர்களுடைய அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாக அது இருந்தது என்பதே முக்கியமானது. இந்திய தேசியம் பற்றி பேசப்பட்ட சூழலில் இந்தியாவில் நிலவிய ஆணாதிக்க சாதிய அடக்குமுறை தேசிய அடையாளம் போன்ற விஷயங்களை அவர் கவனித்தார். இவற்றை சரி செய்ய விரும்பாத தேசிய வாதத்தை அவர் ஏற்கவில்லை. இந்தியாவில் சோஷலிச சக்திகள் ஒன்று தொடர்வதற்கு சாதி ஒழிப்பு ஒரு முன் நிபந்தனை என்பதை அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்துவதை பேராசிரியர் முத்து மோகனும், ராஜா அவர்களும் விளக்குகின்றனர்.
இங்கு மார்க்சியர்களிடம் இருந்த காலனி ஆதிக்க எதிர்ப்பு சமூக பண்பாட்டு பொருளாதார சிக்கல்களை சேர்த்துக் கொண்டதாகவேதான் இருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிரான விவசாயத் தொழிலாளர் போராட்டமாக இருந்தது. நிலவுடைமை எதிர்ப்பாக இருந்தது. ஆனால் கம்யூனிஸ்டுகள் தீண்டத்தகாதவர்கள் மட்டுமே எதிர் கொண்ட சமூக ஒடுக்குமுறைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்று அம்பேத்கர் மார்க்சிஸ்ட்களை சாடுகிறார் என்பதையும் நூலாசிரியர்கள் பதிவிட்டுள்ளனர்.
மார்க்சியம் வெறும் பொருளாதாரக் காரணிகளைக் கொண்டே வர்க்கப் பிரச்சினைகளை அணுகவில்லை என்பதை நிலைநாட்ட பல விளக்கங்களை ஆசிரியர்கள் முன் வைக்கும் வேளையில் அவர்களுக்கு மிகவும் உதவியாக அமைபவர்கள்தான் புதிய மார்க்சியர்கள். புதிய மார்க்சியத்தை வெஸ்டர்ன் மார்க்சிசம் என்றும் சொல்வார்கள். வர்க்க எதிரிகளைத் தீர்மானிக்கும் ஒற்றை நேர்கோட்டு முரண்பாட்டுக்கு மாற்றாக வர்க்கங்கள், இனக்குழுக்கள், ஒடுக்கப்பட்ட தேசியங்கள் மற்றும் குழுக்கள், பால் இன குழுக்கள் மற்றும் சுற்றுச் சூழலியலாளர்கள் பற்றியும் இவர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக நிற்பது பற்றியும் இவர்களுடைய கூட்டணி பற்றியும் இவர்கள் பேசினார்கள்.
இந்த வகையில் அம்பேத்கரின் கோட்பாட்டுத் தளம் புதிய மார்க்சியத்திற்கு மிக நெருக்கமானது என்ற கருத்தை ஆசிரியர்கள் முன்வைக்கின்றனர். இதைத் தத்துவப் பின்னணியில் விளக்க முற்படும் போது மேற்குலகில் நவீனத்துவத்தின் எதிர்ப்பாக தோன்றிய இருத்தலியம், பின்நவீனத்துவம் குறித்தும் விளக்குகிறார்கள். ஆனால் அவற்றைவிட பின்னைக் காலனிய கோட்பாட்டை ஆசிரியர்கள் அம்பேத்கருக்கு நெருக்கமாக இணைக்கின்றனர்.
ஃபிரான்ஸ் ஃபனான், ஹோமி பாபா, காயத்ரி ஸ்பிவக் போன்றோர் பேசிய பின்னைக் காலனியம் நவீனத்துவ காலனியத்திற்கு எதிரான திட்டங்களைக் கொண்டுள்ளது. காலனி ஆட்சியின் கீழ் வந்த மக்களின் சூழல்களை மறுவாசிப்பதும் இதில் அடங்கும் என்கின்றனர் ஆசிரியர்கள். பின்னைக் காலனியம் மார்க்சியர்கள் தங்களை ஒரு சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று பேசும் ஆசிரியர்கள் மிகவும் வெளிப்படையாக ஒரு விஷயத்தைக் கூறுகின்றனர்.
உலக அளவில் சோஷலிசத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான மைய முரண்பாட்டை முன்னிலைப்படுத்தியபோது அவர்களுடைய நாடுகளில் இருந்த சில உள்நாட்டுச் சிக்கல்களை பின்னுக்குத் தள்ளிவிட்டதைப் பேசவேண்டும். வர்க்க அரசியலை மட்டும் தனித்துப் பார்த்தபோதும், உலக கம்யூனிச அமைப்பு தந்த தேசிய நிலைப்பாடுகளை அப்பாவித்தனமாக பின்பற்றியபோதும் மார்க்சியர்கள் எப்படி சாதி சிக்கல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதையும் பின்னைக் காலனியம் சுட்டிக் காட்டுவதை இவர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது அடித்தள மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய உள்ளூர் சிந்தனைகளுக்கும், மார்க்சியத்திற்கும் இடையிலான உரையாடலை மீட்டெடுக்க மார்க்சிய ஆய்வாளர்களைப் பின்னைக் காலனியம் அழைப்பதாக நூலாசிரியர்கள் கருதுகின்றனர்.
என்னதான் அம்பேத்கர் கம்யூனிஸ்டுகள் பற்றி விமர்சனங்கள் வைத்தபோதும் நூலாசிரியர்கள் தத்துவப் பரப்பிலே அவர்கள் இணையும் புள்ளிகளை அடையாளமிட்டுக் கொண்டே செல்லுகிறார்கள். இந்தப் பணியின் முக்கியப் புள்ளியாக அவர்கள் குறிப்பிடுவது இருவரின் கோட்பாடுகளும் இவ்வுலகம் சார்ந்த சமரசமற்ற பொருள் முதல் வாதக் கோட்பாடு என்பதே. இவர்களின் விவாதங்களில் எங்கேயும் தெய்வீகத் தலையீடு வாதங்களையும், ஆன்மீக வாதங்களையும் அனுமதிக்கவில்லை என்ற குறிப்பு மிக முக்கியமான பதிவாகும். சமூகங்களிலிருந்து சூழல்களிலிருந்து மட்டுமே மார்க்சும், அம்பேத்கரும் தங்களுடைய எடுத்துக்காட்டுகளைக் கொண்டனர், இருவருக்கும் சமூகத்தையும் அதன் வரலாற்றையும் தவிர வேறு உண்மையில்லை என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இருப்பினும் இந்தியச் சமூகம் குறித்த இருவரின் புரிதலிலும், கண்ணோட்டத்திலும் வேறுபாடுகள் இருந்தன என்பதையும் விளக்கமாக பதிவுசெய்துள்ள நூலாசிரியர்கள், மார்க்ஸ் முன்வைத்த வர்க்கப் போராட்டங்களுக்கான தெளிவான ஆதாரங்கள் இந்தியாவின் சமூக வரலாற்றில் உள்ளன என்று அம்பேத்கர் குறிப்பிடுவதையும் தெரிவிக்கின்றனர். ஆன்மீகத் தேடலும் சமயத் தேடல்களும்தான் இந்திய வரலாறு என்று நிலைநிறுத்த பல இந்திய ஆய்வாளர்களும் ஐரோப்பிய ஆய்வாளர்களும் முயற்சிகள் மேற்கொண்டிருந்த நேரத்தில், இவ்வாறு அம்பேத்கர் கூறியதை முக்கியமானதாக பேரா.முத்து மோகனும், டி.ராஜாவும் கருதுகின்றனர்.
பண்டைக்காலம் முதல் சாதி வர்ணம் அல்லது சமயம் என்ற அடையாளங்களை முன்வைத்து நடந்த சமூக மோதல்கள்தான் இந்தியாவின் வரலாறு என்பதை அம்பேத்கர் விளக்கியுள்ளார். வர்க்கத்திற்கு இன்று சமூகம் வைத்த அலகின் பெயர் சாதி அல்லது வர்ணம். பெயரில் மட்டும் தான் வேறுபாடு என்பதை அம்பேத்கர் கூற முற்படுவதாக நூலாசிரிர்கள் சொல்கின்றனர்.
மார்க்சியத்தின் முரண்பாடு என்பது பெரும்பாலும் பொருளாதாரத் தளத்தில் செயல்படும். அம்பேத்கரின் தர்க்கவியல் முரண்பாடு வெறும் பொருளாதாரத் தளத்தில் மட்டுமே செயல்படுவதில்லை.
இக்கட்டத்தில், ஆசிய சமூகங்களின் தனித்தன்மைகளை அவற்றின் புவிஇயல் தன்மைகளைக் கொண்டு மார்க்ஸ் புரிந்து கொள்கின்றார் என்றும், ஆசியாவின் பொருளாதார வரலாற்றுடன் அதன் அரசியல் மற்றும் சமய வரலாற்றையும் புரிந்து கொள்ள அங்கே தனிநபர் சொத்துரிமை இல்லாதது மிகவும் முக்கியமானதொரு சமூகக் காரணி என்றும், சமூகச் சொத்துரிமை நாளடைவில் எவ்வாறு சாதி அமைப்பை உருவாக்கியது என்பதையும் மார்க்ஸ் விளக்குவதை மிகவும் எளிமையாக ஆசிரியர்கள் விவரிக்கின்றனர்.
மறுபுறம், இந்திய வரலாற்றின் வேர்களைப் பார்க்கும் அம்பேத்கர் , அதிலிருக்கும் பிராமணியத்திற்கும், பௌத்தத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு இந்தியாவின் சமூக அமைப்பை இருவேறுபட்ட விவாதங்களில் பார்க்கும் கண்ணோட்டங்களாக அறிந்துகொண்டார். வர்ணப் படிநிலையை முன்னிறுத்துவது பிராமணியம், வர்ணாசிரம தர்மத்துக்கு முந்தைய சமூகத்தை வழி மொழிவது பௌத்தம். பிராமணிய வர்ணாசிரம படிநிலைக்கு மாற்றாக சங்காவை முன் வடிவமாகக் கொண்ட சமத்துவ சமுதாயத்தை பௌத்தம் முன்வைப்பதாக அம்பேத்கர் கூறுகிறார்.
தத்துவத்தில் தனிநபரின் தனித்துவத்தின் சாரமாக ஆத்மா என்ற கருத்தை பிராமணியம் முன்வைக்கின்றது. பௌத்தம் இதற்கு மாறாக அனாத்மா அல்லது ஆத்மா அற்ற நிலையை முன்வைக்கின்றது. சமயம் என்பது மார்க்சியருக்கு ஒரு மேல்கட்டுமானச் சொல். எனவே அதைச் சமூகம் என்ற அடிக்கட்டுமான சொல்லாகப் பயன்படுத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அம்பேத்கர் இவையிரண்டையும் இணைத்துப் பயன்படுத்தியதை ஆசிரியர்கள் விளக்கும் விதம் தெளிவாக உள்ளது.
மார்க்சின் கோட்பாடுகளில் அம்பேத்கர் காணும் பல தத்துவப் புள்ளிகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை விளக்கும் போது முதலில் ஒரு போதாமை ஏற்படுவதாக நான் கருதினேன். ஆனால் பின்னர், மார்க்சியத்தின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டு அரசியல் மற்றும் அதன் அடையாள அரசியலை நூலாசிரியர்கள் இணைக்கும் போது அவர்களால் அம்பேத்கரை மார்க்சியத்திற்கு வெகு நெருக்கமாக கொண்டு வர முடிகிறது என்பது புரிந்தது.
இந்த வகையில் இந்து சமயம் குறித்த விமர்சனத்தை இந்திய மார்க்சியர் தொடங்கும் முன்னரே அம்பேத்கர் இந்து சமயத்தைக் கட்டுடைக்கத் தொடங்கி விட்டார் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்திய சமூகம் குறித்தும் சாதி அமைப்பு குறித்தும் அம்பேத்கருக்கு ஆழமான புரிதல் இருந்தது. சாதிக் கட்டமைப்பை ஒழிப்பதுதான் முக்கியமானது, ஆனால் அது மிகக் கடினமானப் பணி எனக் கருதினார். இங்கு மார்க்சிய விளக்கத்தைத் தருகிறார்கள் ஆசிரியர்கள்.
பாரம்பரியமாக மார்க்சிய மொழியில் சொல்வதானால் இந்தியாவில் சாதி ஒழிப்பு ஒரு ஜனநாயகப் புரட்சியின் பணி. ஆனால் இங்கே சோஷலிசப் புரட்சியை விட ஜனநாயகப் புரட்சி அதிக அடிப்படையானது. இந்தியாவில் வரலாற்று முரண்கள் அதிகம்தான். புரட்சியின் மக்களாட்சி இவற்றைத் தீர்க்கும் என்று மார்க்சின் புரிதலை இங்கு கோடிட்டுள்ளனர்.
பண்டைய இந்தியாவில் சமத்துவ சமூகக் கனவை பௌத்தம் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் கருதினார். மனிதரையும், மனிதத்தையும் மையப்படுத்துகின்ற சாதிகளற்ற சமத்துவ நெறிகளுக்கான வாதம்தான் பௌத்தம் என்பது அவரது புரிதல். ஐரோப்பிய நாகரிகத்தின் பண்பாட்டு நினைவுகளிலிருந்து வர்க்கங்கள் அற்ற சமூகம் என்ற எதிர்கால உலகை மார்க்ஸ் மீட்டு எடுத்தது போல, இந்தியாவின் தொன்மை பண்பாட்டு நினைவுகளிலிருந்து சாதிகளற்ற சமூகம் என்ற உலகை அம்பேத்கர் மீட்டெடுத்து உள்ளார். இக்கட்டத்தில் இன்றைய மார்க்சியத்தில் தோன்றியுள்ள பல மாற்றங்களை விளக்கும் ஆசிரியர்கள், அவை எவ்வாறு அம்பேத்கருக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன என்பதையும் விளக்குகின்றனர். அவரவர் சமூகங்கள் மீது கொண்டிருக்கும் நெருக்கத்தாலும்,ஈடுபாட்டாலும், இவர்களுடைய சமூகங்களை முழுவதும் புரிந்துகொள்ள செவ்வியல் மார்க்சிய கோட்பாடுகள் போதாது என்று புதிய மார்க்சியர்கள் புரிந்து கொண்டதை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் மற்றொரு வடிவமாக அம்பேத்கரின் ஆய்வுகளை இவர்கள் பார்க்கின்றனர். இந்தியச் சூழலில் சாதி அமைப்புக்கு இருந்த செல்வாக்கை இந்திய மார்க்சியர்கள் புறம் தள்ளி விட்டனர் என அம்பேத்கர் வாதிட்டதையும் குறிப்பிடுகின்றனர்.
தேசியவாதிகள் தங்களுடைய அரசியலை அரசியல் சமூகத்திற்குள் குறுக்கிக் கொண்ட போது, இந்தியாவில் தலித் அரசியல் குடிமைச் சமூகத்தை தன்னுடைய அடித்தளமாகக் கொண்டது. இது மார்க்சிய வரையறைக்கு உட்படவில்லை. மேல்சாதியினர் அரசியல் அதிகாரத்தில் மட்டுமே கண்ணாக இருந்தனர். மேலாதிக்கக் கருத்தியல் உருவாக்கத்தில் அறிவுஜீவிகளின் பங்கைக் குறித்த தெளிவானதொரு புரிதல் இருபதாம் நூற்றாண்டின் தலித் அரசியலிடம் இருக்கின்றது. சமயம், இலக்கியம், வரலாறு மற்றும் சமூகவியல் குறித்த விவாதங்களில் தலித் அறிவுஜீவிகள் ஈடுபடுகின்றனர். இந்தப் புள்ளியில் கிராம்சி இங்கு பொருத்தமாக உள்ளார் என்றெல்லாம் விளக்கி, மிகவும் எளிமையாக அம்பேத்கரை பண்பாட்டு மார்க்சியத்திற்கு வெகு அருகாமையில் கொண்டுவந்து சேர்க்கின்றனர் நூலாசிரியர்கள்.
இந்து சமயம் குறித்த அம்பேத்கர் விமர்சனம் எனும் தலைப்பில் ஒரு அத்தியாயம் அம்பேத்கரின் இந்து மதம் குறித்த அடிப்படை விமர்சனங்களை விளக்குகின்றது. இதில் இவர்கள் கூறுவது: ஒரு படிநிலை வர்க்க சமூகத்தின் நெறியாக இந்துமதம் உள்ளது என்கிறார் அம்பேத்கர். இந்தப் படிநிலை மிகவும் இறுக்கமானது. இத்தகைய பிரிவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கியுள்ள இந்து மதத்தில் பெரிய தவறு இருக்கத்தானே வேண்டும். இந்திய வரலாற்றில் சமயமும் சாதியும் பிரிக்க முடியாமல் பிணைந்து இருப்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். சாதித் திருமணங்கள் மூலம் இறுக்கமான கட்டமைப்புக்கள் மேலும் இறுக்கமானதை அவர் புரிந்துகொண்டார். சாதிகள் பற்றி தனித்தனியாக ஆய்வு மேற்கொள்வது தவறு அவற்றை மொத்தமாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கருதினார்.
ஒரு சாதி மட்டுமே சடங்குகளை கட்டாயமாக்குவதை கவனிக்க வேண்டும் என்ற அம்பேத்கர், ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழே உள்ள சாதியை ஒடுக்க முற்படுகிறது, தனக்குக் கீழே ஏதோ ஒரு சாதி இருந்தமையால் பல சாதிகளுக்கு சாதிப்பெருமை இருந்தது எனவும் அதைத் தக்க வைக்கவும் அவை ஆர்வம் காட்டின என்றும் விளக்குவதை நூலில் குறிப்பிட்டுள்ளனர். தீண்டத்தகாதவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் மூட்டிவிட்டதால் அவர்களும் ஒன்றுதிரண்டு சாதி அமைப்பினை எதிர்ப்பது என்பது இயலாமல் போனது. இங்கே பெரிய சமூகப் போராட்டமாக மாற வேண்டிய ஒரு சமூக முரண்பாடு அதன் பிறப்பு நிலையிலேயே நசுக்கப்படுகிறது. சுற்றியுள்ள பிற பெரும்பான்மைச் சாதிகளின் மௌனத்தால் இது சாகடிக்கப்படும். இப்படித்தான் சாதியமைப்பை ஒழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் படிநிலை ஏற்றத்தாழ்வு கட்டமைப்பு கொன்றுவிடும் என்ற ஆசிரியர்களின் விளக்கம் முக்கிய அம்சம் ஆகும்,
பௌத்தம் இந்து சமயம் முரண்பாடு
இந்து சமயத்திற்கும் பௌத்தத்திற்கும் இடை- யிலான மோதல்கள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன. பண்டைய சமத்துவப் பவுத்தத்தை வீழ்த்திய சாதி இந்து சமயமும், அதன் புதிய முறைகளும் அம்பேத்கரால் அடையாளம் காட்டப் படுகின்றன. தொன்மைக் கம்யூனிசத்தை வர்க்கச் சமூகம் தோற்கடித்ததை விளக்கும் மார்க்சிய முறை- யியலை அம்பேத்கரின் ஆய்வு ஒத்து இருக்கிறது என்கிறார்கள் ஆசிரியர்கள். இதை மேலும் விளக்குகையில் சாதிமறுப்புதான் பௌத்தத்துக்கும் இந்து சமயத்திற்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு என்பதை அம்பேத்கர் சரியாக அடையாளம் காண்கிறார் என்றும், சமயத்தின் ஆன்மீகத்தில் புதைந்திருக்கும் சமூகவியலையும், சமூக யதார்த்தத்தையும் ஆய்வு செய்து அவற்றின் பொருளைக் கண்டறியும் பௌத்தம் மற்றும் இந்து சமயம் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளுக்கு மார்க்சிய கண்ணோட்டம் ஆய்வாக செயல்படும் என்றும் கூறுகின்றனர்.
புத்தமும் அவர் தம்மமும்
அம்பேத்கர் தொடங்க எண்ணிய நயானம் அல்லது புதிய பௌத்தத்தின் மைய நூலாக அவருடைய புத்தமும் அவர் தம்மமும் என்ற நூலை எடுத்துக் கொள்ளலாம்.
துன்பத்திலிருந்து மனிதன் தப்பவே முடியாது என்றால் பௌத்தம் எனும் சமயம் எதற்காக? என்று அம்பேத்கர் வினவுவதைப்பதிவிடும் இந்நூல் மேலும் அவரின் நுணுக்கமான அணுகுமுறையை விளக்குகின்றது.
பல இம்மாதிரி அம்சங்கள் இடைக் காலத்தில் செருகப்பட்டதாகவே இருக்கவேண்டும் என்று கருதும் அம்பேத்கர், அனாத்மா கோட்பாட்டின் அடிப்படையில் ஆத்மா என்பது இல்லாமல் போகிறது, எனவே ஆத்மாவே இல்லாத போது மறு பிறவி சாத்தியமில்லை, கர்மவினைக் கோட்பாடும் எடுபடாது என்று வாதிக்கின்றார்.
பௌத்தத்தை குறுகிய கட்டுக்குள்ளிருந்து விடுவிக்க அம்பேத்கர் விரும்பினார்.பௌத்த பிக்குகள் மக்களின் சமூகப் பணியாளர்களாக, நண்பர்களாக, தத்துவ வழிகாட்டியாக, மக்களுக்குரிய அறிவுஜீவிகளாக செயல்பட வேண்டும் என்பது புத்தரின் விருப்பம் என்ற அம்பேத்கரின் பார்வை கவனிக்கத்தக்கது. மனதைப் பன்படுத்துவது தான் தியானம் என்பது அவரது நிலைப்பாடு. முக்தி நிலை அடைந்த பின்னும் புத்தர் தியானித்தார். அனைத்துக்கும் மையமாக மனதைப் பார்ப்பதுதான் அவருடைய நெறிகளில் முதன்மையானது. பொருளை மனம்தான் உருவாக்குகிறது. அதன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது. மனதைப் புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளலாம். மனம் வேறு. ஆன்மா வேறு. ஆன்மாவை புத்தர் நிராகரித்தார். மனம் மனித உணர்வுகளை உள்ளடக்கியது. மனதைச் சுத்தம் செய்வதுதான் சமயத்தின் சாரம். புத்தரின் தம்மத்தைப் போற்றுகிறார் அம்பேத்கர். கர்மா கோட்பாட்டைக் கொண்டு தம்மத்தை விளக்குகிறார். இந்த முழு உலகும் காரண விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறது. நற்செயல்கள் நற்செயல்களையே உருவாக்கும். அனைத்திற்கும் காரணம் மனித செயல்கள்தான். தெளிவாக, கவனமாக, ஒழுக்கநெறி நிலைபாட்டில் எடுக்கப்படும் செயல்கள்தான். இதில்தான் நம் பொறுப்பும் உள்ளது. பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட பௌத்தத்தை மீட்டெடுத்தார் அம்பேத்கர். அதில் மார்க்சியம் இருந்தது என்று நூலாசிரியர்கள் விளக்குவது தத்துவப் பரப்பில் இன்னும் நீண்டதொரு தேடல் தேவை என்பதை வலியுறுத்துவதாகக் கருதலாம்.
சாதி வர்க்க அடையாள அரசியல்
வர்க்கம் என்பது மனிதரின் பொருள் சார்ந்த வாழ்க்கையை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. அது கருத்தியல் தளத்தில் செயல்படும் என்பதை ஜெர்மன் கருத்தியல் என்ற நூலில் மார்க்ஸ் குறிப்பிடுவதை மார்க்சியத்தின் பரந்துபட்ட அணுகுமுறைக்கு அத்தாட்சியாகக் குறிப்பிடுகின்றனர் நூலாசிரியர்கள்.
ஆளும் வர்க்கம் பொருள் உற்பத்தியையும், கருத்து உருவாக்கத்தையும் ஒரே நேரத்தில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்கிறார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிகையின் வரிகள் எதிலும் பொருளாதாரம் ஒரு காரணியாக பார்க்கப்படவில்லை என்றும் மார்க்சியத்தை வெறும் பொருளாதாரம் சார்ந்த வர்க்கப் போராட்டத்திற்கானது என்று சுருக்குவதும் தவறு என்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கே பேராசிரியர் கெயில் ஓம்வெட்டின் அணுகுமுறை மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
சுரண்டலையும், ஒடுக்குதலையும் விளக்க தனிநபர் சொத்துரிமைக் கோட்பாடு மட்டும் போதாது, இங்கே வர்க்கம் என்ற சொல் வழக்கமான வரையறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, ஒவ்வொரு சமூகத்திற்கு உரிய வரலாற்று சூழல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது. சமூகவியலைத் தவிர்த்ததொரு அரசியல் இருக்க முடியாது.
இந்தியாவில் சாதிக் கட்டமைப்புத் தோற்றமும் செயல்பாடும் எனும் தலைப்பில் அம்பேத்கர் தன்னுடைய முதுகலை ஆய்வறிக்கையை எழுதினார் அன்று முதல் அவர் சாதி பற்றி எழுதிய எல்லா எழுத்துக்களிலும் வர்க்கப் பார்வை உண்டு என்கின்றனர் நூலாசிரியர்கள். இங்கு சாதியற்ற, வர்க்கமற்ற சமூகத்தை முன்வைத்த சமயமாக பௌத்தத்தை அடையாளம் காண்கிறார் அம்பேத்கர் என்கின்றனர்.
அவருடைய அணுகுமுறை சமூகவியல் கண்ணோட்டம் கொண்டது மாற்றத்துக்கு பரிந்துரைத்த போது கூட அவரிடம் காணப்பட்டது சமூக கண்ணோட்டம்தான். சமயக் கண்ணோட்டம் அல்ல. இங்குதான் மார்க்சிய கண்ணோட்டத்திற்கு நெருக்கமாகின்றார் அம்பேத்கர். காரல் மார்க்ஸா, புத்தரா? எனும் கட்டுரையில் இருவரையும் படித்துள்ள நான் இருவருடைய கருத்துக்களிலும் ஆர்வம் கொண்டுள்ளேன். எனவே இருவரின் கருத்தியல்களையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகிறது என்கிறார் அம்பேத்கர் என்பதும் குறிபிடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் தன்னுடைய விவாதங்களில் மதித்த ஒரே கருத்தியல் மார்க்சியம் தான் என்பதை அழுத்தமாக இந்நூல் பதிவிடுகின்றது. ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுடைய அரசியல் குறிக்கோள்களை அடைவதற்கு அவர்களை அவர்களுடைய சாதி அடையாளங்களின் கீழ் ஒன்று திரட்டுவது தான் முதன்மை யுக்தி. இதனை அடுத்து, காலனிய காலத்திலும் அதற்குப் பின்னரும் அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்றது. சாதி, சமயம், இடம் அல்லது மொழியைத்தான் அடிப்படையாக இந்த அடையாளஅரசியல் கொண்டிருக்கும் என்றும் ஒரே குழுவின் நலனுக்காக குரல் கொடுப்பது தான் ஒரு அடையாள அரசியலின் பணி, இதற்காக அரசியல் தேவைகளுக்காக ஒரு கருத்தியல் உருவாக்கப்படும் என்றும் ஆசிரியர்கள் விளக்குகின்றனர். அடையாள அரசியல் களத்தில் வரலாறும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படும் என்கின்றனர். எந்த ஒரு அடையாளமும் உருவாக்கப்படும் போது அந்த அடையாளமே மறுவாசிப்புக்கு உட்படுத்தப் படும் இதைச் செய்ய பயன்படுத்துவதுதான் ஹெர்ம்யூனிடிக்ஸ் எனும் விளக்க கோட்பாடு என்று குறிப்பிடுகிறார்கள் ஆசிரியர்கள்.
இந்த நிலையில், தலித் அடையாளத்தின் நோக்கம், கல்வி, அரசுப் பணி நிர்வாக வாய்ப்புகள் ஆகியவற்றைப் பெற்று அதன் மூலம் சமூக விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணி, தங்களுடைய அடையாளத்தின் கீழ் அணி திரண்டனர். இது வரலாற்றிலேயே முதன் முறையாகக் கூட இருக்கும் என்கின்றனர் நூலாசிரியர்கள். தலித்துகளின் அடையாளம் நேரடியான சமூக நோக்கம் கொண்டவை, கீழே இருந்து உருவாக்கப்படுபவை.
இது அடிப்படை மாற்றங்களைத் தேடும் அடையாளம் என்று விளக்கும் ஆசிரியர்கள் பிற வகை அடையாளங்களின் தன்மைகளை விமர்சித்தும் எழுதியுள்ளது அடையாள அரசியல் குறித்தப் புரிதல்களை விரிவாக்குகின்றன.
அடுத்து அயோத்திதாசர் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையும், முன்னோக்கிய பயணம் என்ற தலைப்பிலே மார்க்சிஸ்ட்கள் மற்றும் அம்பேத்கரியவாதிகள் எப்படி இணைந்து பணியாற்றுவது என்பது பற்றிய ஆலோசனைகளும் வேண்டுகோள்களாக விளக்கப்பட்டுள்ளன.
அயோத்திதாசர் பற்றிய கட்டுரை அயோத்திதாசர் இந்த நாட்டின் தொன்மைக்காலத்தில் இருந்தவொரு சாதியற்ற சமூக நிலையை எவ்வாறு வெளியே கொணர்ந்தார் என்பது பற்றியும், அவர் முன்வைத்த விடுதலை தலித்களுக்கு மட்டுமே உரியதல்ல; அனைத்து சோஷலிச இயக்கங்களிலும் உள்ளிருந்து செயல்படுத்தும் உலகளாவிய கண்ணோட்டமும் அறிவியல்வாதமும் அயோத்திதாசரின் கேள்விகளிலும் விவாதங்களிலும் உண்டு என்பதையெல்லாம் நூலாசிரியர்கள் விளக்குகின்றனர்.
இந்நூல் அம்பேத்கரின் அரசியல் தத்துவங்கள் மார்க்சியத்திற்கு எவ்வளவு நெருக்கமானவை என்பதை ஆழமாக விளக்கும் அதே வேளையில் மார்க்சியத்தை இந்தியச் சூழலில் எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பது பற்றியும் தெளிவாக்குகின்றது. அம்பேத்கர்- மார்க்ஸ் பற்றிய உரையாடல் தமிழில் தொடர்வதற்கு அஸ்திவாரமிட்டுள்ளது இந்நூல். இதைத் தமிழில் மொழிபெயர்த்த பேரா. ரகு அந்தோணி எளிமையாக அதே சமயம் நெருடல் இல்லாத நீரோடையாக மொழியை அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
மார்க்ஸ் - அம்பேத்கர் தொடரும் உரையாடல்
D.ராஜா, N.முத்துமோகன்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை - ரூ.290/-
- பேரா. இரா.முரளி