தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு, காந்தி தெரிவித்த கடுமையான எதிர்ப்பினால் திகைப்படைந்தவர்கள் டாக்டர் அம்பேத்கரிடம் ஓடிச்சென்று, அவருடைய நிலை குறித்த விளக்கத்தைக் கேட்டனர். மிஸ். முரியல் லெஸ்டர் - இவருடன்தான் காந்தி தங்கியிருந்தார் - டாக்டர் அம்பேத்கரை சந்தித்தார்; அவர் தனது நிலையை லெஸ்டரிடம் விளக்கினார். அம்பேத்கருக்கும் காந்திக்கும் பொதுவான நண்பராகிய அவர், இருவரையும் தமது இல்லத்திற்கு தேநீர் விருந்துக்கு அழைத்து, அவர்களிடையில் சமரசம் ஏற்படுத்துவதற்கு முயன்றார். காந்தி, தனது மனிதாபிமான முறையில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியிருக்கிறார் என்பதையும், தீண்டாமையை ஒழிப்பதற்கு முயன்று வருகிறார் என்பதையும் அம்பேத்கர் ஒப்புக் கொண்டார். ஆனால், இந்தப் பிரச்சினையில் அவர்கள் அடிப்படையிலேயே வேறுபட்டிருந்தனர்.

ambedkar_4021931 அக்டோபர் இறுதியில் பிரிட்டனில் தேர்தல்கள் நடைபெற்றன. "டோரி'கள் அதிகாரத்திற்கு வந்தனர். தொழிற்கட்சி அரசின் தோல்வியைப் பொருத்தமட்டிலும், அவர்களுடைய வேலைத்திட்டம் மிகவும் விஞ்ஞான ரீதியாக இருந்ததால், தொழிலாளிகளாலும், சராசரி பிரிட்டிஷ்காரர்களாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். தனது கடிதம் ஒன்றில் டாக்டர் அம்பேத்கர், "காந்தியை ஆதரித்த தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள், காந்தி சிறப்பு வாக்காளர் தொகுதியை எதிர்த்தது மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனிப் பிரதிநிதித்துவத்தையும் எதிர்த்தார் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை' என்றும், "இவ்வாறு இல்லாமலிருந்தால் இந்நிலைமைக்கு நீண்ட காலத்திற்கு முன்பே தீர்வு ஏற்பட்டிருக்கும்' என்றும் கூறினார்.

மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மேன்மை தங்கிய மன்னர் நவம்பர் 5இல் இந்தியப் பிரதிநிதிகளுக்கு ஒரு வரவேற்பு (விருந்து) அளித்தார். ஒரு சில உறுப்பினர்கள் விருந்தில் பேச வேண்டுமென்று ஏற்பாடு செய்யப்பட்டது. காந்தி, தலையில் ஏதும் அணியாமல் வந்திருந்தார். அவர் தன்னுடைய வழக்கமான கதராடையுடன் காலில் செருப்புகளை அணிந்து காட்சியளித்தார். இந்தியாவில் உள்ள தீண்டத்தகாதோரின் நிலைமை குறித்து மன்னர், டாக்டர் அம்பேத்கரைக் கேட்டார். டாக்டர் அம்பேத்கர், உணர்ச்சி பொங்க, கலங்கிய கண்களுடன், தீண்டத்தகாதோரின் கொடுமையான நிலைமை பற்றி எடுத்துக் கூறியதைக் கேட்ட மன்னர் அதிர்ச்சியுற்றார். பிறகு மன்னர், அவருடைய கல்வி நிலை பற்றியும், அவர் கல்வித் துறையில் எவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்தார் என்பது பற்றியும் டாக்டர் அம்பேத்கரிடம் அன்புடன் விசாரித்தார்.

சிறுபான்மையினர் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு இல்லாததைக் கண்ட பிரிட்டிஷ் பிரதமர், வகுப்புவாரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தனக்கு அதிகாரமளிக்கும் ஓர் அறிக்கையில், சிறுபான்மைக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தன்னிடம் அளிக்க வேண்டுமென்றும், தனது முடிவை ஏற்றுக் கொள்வதாக அவர்கள் உறுதி கூறவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். பிற உறுப்பினர்களோடு, காந்தியும் இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்டார்.

டாக்டர் அம்பேத்கர் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை. ஏனெனில், அவர் தனது கோரிக்கைகள் நியாயமானவை என்று நம்பினார். பின்னர், பிரதமர் மாநாட்டை டிசம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதற்கு சிறிது முன்பாக, சர். மீர்ஸா இஸ்மாயிலின் இல்லத்தில் காந்தியை அம்பேத்கர் சந்தித்துப் பேசினார். டாக்டர் அம்பேத்கரின் ஆதரவைப் பெறுவதற்கு, காந்தி ஒரு புதுமையான வழிமுறையை கூறினார். “கூட்டுத்தொகுதிகளின் அடிப்படையில், இடங்கள் ஒதுக்கீடின்றி நடைபெறும் பொதுத் தேர்தலில், தீண்டத்தகாத வேட்பாளர்கள் தோல்வியுற்றால், தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தமது தகுதியை ஒரு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்,'' என்று அவர் கூறினார்.

இரண்டாவது வட்டமேசை மாநாடு ஒத்திவைக்கப்பட்டதற்குப் பின், வெவ்வேறு பிரமுகர்களும் பத்திரிகைகளும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனங்கள் பின்வருமாறு : “இந்தியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான திரு. டி.ஏ. ராமன், இந்தியாவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவருடைய சக பயணிகளில் ஒருவர், "தான் யாரையாவது கொலை செய்வதாயிருந்தால், டாக்டர் அம்பேத்கரைத்தான் செய்வேன்' என்று திரு. ராமனிடம் கூறினார். "சுபோதா பத்திரிகா' என்ற ஒரு வார இதழ், தனது 1931 நவம்பர் 15ஆம் தேதிய பதிப்பில் இவ்வாறு எழுதியது.

- வளரும்

அம்பேத்கரும் ரெட்டமலை சீனிவாசனும் வட்டமேசை மாநாட்டில் அளித்த மனு

வட்டமேசை மாநாட்டின் முதலாவது கூட்டத் தொடரில்சிறுபான்மையினர் துணைக் குழுவிடம் அளித்த கோரிக்கை மனுவோடு, 1931 நவம்பர் 4 இல் ஒரு துணை கோரிக்கை மனுவை - டாக்டர் அம்பேத்கரும், ராவ் பகதூர் ஆர். சீனிவாசனும் கூட்டாக அளித்தனர். துணை கோரிக்கை மனுவில் கீழ்வருமாறு கூறப்பட்டிருந்தது : (சென்ற இதழின் தொடர்ச்சி)

II. பிரதிநிதித்துவத்தின் வழிமுறை

1. தனித் தொகுதிகள் வாயிலாக, மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளுக்கு தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். சமஷ்டி அல்லது மத்திய சட்டப் பேரவையின் மேலவையில் தமது பிரதிநிதித்துவத்திற்கு, இம்மாகாண சட்டப் பேரவைகளின் உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவு செய்யப்படுமேயானால், மேல் சபைக்கு தமது பிரதிநிதித்துவத்தைப் பொருத்தமட்டிலும், தனித்தொகுதிகளுக்கான தமது உரிமையைக் கைவிடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் ஒப்புக்கொள்வர். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை: விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் எந்த முறையிலும், அவர்களுடைய இடங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித்தொகுதிகள், கூட்டுத் தொகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட (ரிசர்வ்) இடங்கள் என்ற முறையினால், பின்வரும் நிபந்தனைகள் செய்யப்பட்டாலன்றி மாற்றப்படக்கூடாது:

(அ) தொடர்பான சட்டப்பேரவைகளில் அவர்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையோரின் கோரிக்கையின் பேரில், வாக்காளர்களிடையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, வாக்குரிமை பெற்ற தாழ்த்தப்பட்ட மக்களுடைய உறுப்பினர்களின் மிகப்பெரும்பான்மையோரின் ஆதரவைப் பெற வேண்டும்.

(ஆ) 25 ஆண்டுகளுக்கு முன்பாகவும், வயது வந்தோர் அனைவருக்கும் வாக் குரிமை நிலைநிறுத்தப்படுவதற்கு முன்பாகவும், அத்தகைய பொது வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படக்கூடாது.

III. எவரெல்லாம் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் என்பதை நிர்ணயித்துக் கூற வேண்டியதன் அவசியம்

கடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதித்துவம், தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக, தாழ்த்தப்பட்டோர் அல்லாத நபர்கள், சட்டப் பேரவைகளில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்களைச் சேராத நபர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக நியமனம் பெற்ற சம்பவங்களும் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான நபர்களை நியமனம் செய்வதற்கான அதிகாரம், ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை, தமது நியமனங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுமாறு அவருக்கு கூறப்படவில்லை. அதனால்தான் இந்த தவறு ஏற்பட்டது. புதிய அரசியல் சாசனத்தின் கீழ் நியமனத்திற்கு பதிலாக தேர்தல் நடைபெறவுள்ளதால், அப்பொழுது இது போன்ற தவறுகளுக்கு இடமிருக்காது. ஆனால், அவர்களுடைய சிறப்புப் பிரதிநிதித்துவத்தின் நோக்கத்தை தோற்கடிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் விட்டுவைக்காதிருப்பதற்காக, நாங்கள் பின்வருவனவற்றைக் கோருகிறோம் :

(டி) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது சொந்த தனித் தொகுதிகளுக்கான உரிமை வேண்டும் என்பது மட்டுமின்றி, தங்களைச் சேர்ந்தவர்களாலேயே பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

(டிடி) ஒவ்வொரு மாகாணத்திலும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள், நிலவி வருகின்ற தீண்டாமை முறையினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், தேர்தல் நோக்கங்களுக்காகப் பட்டியலிடப்பட்டவர்கள் என்பதும் கறாராக விளக்கப்பட வேண்டும்.

IV. பெயர்ப் பிரச்சினை

தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் என தற்பொழுது அழைக்கப்பட்டு வரும் பெயர் குறித்து சிந்தித்த தாழ்த்தப்பட்ட மக்களும், அவர்கள் பற்றி அக்கறை கொண்டுள்ள பிறரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இது, அவர்களை அவமானப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் உள்ளது. எனவே, புதிய அரசியல் சாசனத்தின் முன்வரைவைத் தயாரிக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அதிகாரப் பூர்வமான செயல்களுக்காக தற்பொழுது அழைக்கப்பட்டு வரும் பெயரை மாற்ற வேண்டும். அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் என்பதற்குப் பதிலாக "சாதி இந்துக்கள் அல்லாதவர்கள்', "புராடெஸ்டண்ட் (சீர்திருத்த) இந்துக்கள்' அல்லது "சம்பிரதாய எதிர்ப்பு இந்துக்கள்' அல்லது இதுபோன்ற பெயர்களால் அழைக்கப்பட வேண்டும். எந்தக் குறிப்பிட்ட பெயரையும் வலியுறுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. நாங்கள் ஆலோசனை மட்டுமே கூற முடியும், முறையாக விளக்கப்பட்டõல், தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு, தயங்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியா முழுவதிலுமிருந்து தாழ்த்தப்பட்ட வர்க்கங்களிடமிருந்து, இந்த விண்ணப்ப மனுவில் அடங்கியுள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, எங்களுக்கு ஏராளமான தந்திகள் வந்துள்ளன.

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(1)

Pin It