கீற்று டாட் காம் இணையதளம் தனது அய்ந்தாண்டு நிறைவையொட்டி, சூலை 24, 2010 அன்று, சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு, இரண்டு அமர்வுகளாக நடந்தேறியது. இதில் சுப. வீரபாண்டியன், விடுதலை ராசேந்திரன், புனித பாண்டியன், ஜெயபாஸ்கரன், பாரதி கிருஷ்ண குமார், மாலதி மைத்ரி, பாஸ்கர் சக்தி, புகழேந்தி, "கீற்று' ரமேஷ் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். முதல் அமர்வில், "இஸ்லாமியர்கள் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த அமர்வில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியச் சகோதரர்கள் சிலர், தாங்கள் வாழ்வில் எதிர்கொள்ள நேரிட்ட ஒடுக்குமுறைகளையும், வலிகளையும் நேரடியாகப் பதிவு செய்தனர்.

keetru_meeting_560

கோவையிலிருந்து ஹாரூண் பாஷா :

“நான் கோவையிலிருந்து வருகிறேன். அங்கே, நாங்க நண்பர்களெல்லாம் சேர்ந்து இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு வேணுங்கிற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சின்னு ஒன்று நடத்துவோம். அதுல எல்லா மாற்று மத சகோதரர்களையும் அழைத்து, ஒரு சின்ன கலந்துரையாடல் மாதிரி நடத்துவோம். அங்கே நாங்க இஸ்லாத்தைப் பத்தி ஒரு அறிமுகம் கொடுப்போம். அந்த நிகழ்ச்சிகளுக்கு போலிஸ் கெடுபிடிகளெல்லாம் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும். இதுக்கு என்ன காரணம் என்றால், 2006 சட்டமன்ற தேர்தல்ல பா.ஜ.க. கட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகிச்சு பிரச்சாரம் பண்ணுகிறபோது என்னை கைது செய்தார்கள். எதுக்கு பா.ஜ.க.வுக்கு எதிரா பிரச்சாரம் செஞ்சீங்கன்னு கேட்டாங்க. அந்த கட்சியின் ஊழல் உள்ளிட்ட காரணங்களுக்காக எதிர்க்கிறோம்னு சொன்னாலும், மத துவேஷத்த பரப்புகிற மாதிரி பிரசுரம் விநியோகிச்சதா சொல்லி கேஸ் போட்டாங்க. ஆனா உயர்நீதிமன்றம் வரை போய் வழக்கில் வெற்றி பெற்று நான் விடுவிக்கப்பட்டது, காவல்துறை என் மேலே கடுப்பாகிறதுக்கு காரணம் ஆயிடுச்சு.

2006இல் என் குழந்தைக்கு முதல்பிறந்த நாள் வந்தது. அன்றைக்கு ராத்திரி மணி 12 அல்லது 1 மணி இருக்கும். என் வீட்டுக் கதவைத் தட்டினாங்க. திறந்தா எல்லா போலிசும் உள்ள வந்து பீரோ, கட்டில், சமையல் பாத்திரம் முதற்கொண்டு எல்லாத்தையும் கலைச்சுப் போட்டாங்க. நான் ஒண்ணும் புரியாம என்ன என்னன்னு கேட்டுக்கிட்டே இருந்தேன். இல்ல சும்ம ஒரு விசாரணைக்காக செக் பண்றதுக்காகத்தான் வந்திருக்கோம்னு திரும்பத் திரும்ப சொன்னாங்க. ஒரு பெண் போலிஸ் என் மனைவியிடம் சொல்றாங்க - “இந்த நாள உன்னால மறக்கவே முடியாது'' என்று வீட்டிலிருந்து என்னை கூட்டிட்டு போனவங்க, வேறவேற போலிஸ் ஸ்டேசனுக்கு மாத்தினாங்க. ஆனா பல முறை கேட்டும் எது சம்மந்தமாக விசாரிக்கிறோம்னு சொல்லவேயில்ல. அடுத்த நாள் சாயங்காலம் ஹத்தியகிரமனுக்கு வெடிகுண்டு கொடுத்தியான்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அடுத்த நாள் அவரையும் கூட்டிட்டு வந்தாங்க. நான் அவர்கிட்டேயே கேட்டேன். “நான் உங்களுக்கு வெடிகுண்டு கொடுத்தேன்னு சொன்னீங்களாமே? நான் எப்போ உங்களுக்கு கொடுத்தேன்?'' அவர் சொன்னார், “கொடுத் தேன்னு ஒத்துங்குங்க பாய், என்னால அடி தாங்க முடியல'' என்று. இத போலிஸ் முன்னாலேயே நேரடியாகச் சொல்றார்.

பிறகு சேலம் சிறையில் 72 நாள் வச்சிருந்தாங்களே தவிர, அந்த வெடிகுண்டு பத்தி எந்த ஒரு விசாரணையுமே நடத்தல. வெளியில வந்தப்புறம் இவனால நம்ம குடும்பத்துக்கே கெட்டப்பேர்னு என் கூடப் பொறந்தவங்க ஒதுக்கி வச்சுட்டாங்க. இதற்கு முன்னாடி நான் பிரிண்டிங் பிரஸ் வச்சிருந்தேன். ஆனா ஜெயிலிலிருந்து வந்ததுக்கு பிறகு ஒரு ஆர்டர் கூட யாரும் கொடுக்கல. இனி இந்தப் பக்கமே வராதீங்கன்னு சொல்லிட்டாங்க. சொந்தக்காரங்க வீட்டிலேயும் இதே பதில்தான்னு என் மனைவி ஒரே அழுகை. வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தும் தொழில் தெரிஞ்சிருந்தும் ஆர்டர் இல்லாம, வேற எந்த வேலையும் கிடைக்காம கடைசியா டீக்கடையில் எச்சில் கிளாஸ் கழுவும் வேலைக்குத் தான் சேர முடிஞ்சது. என் மனைவி குழந்தைக்காக அதையும் செஞ்சேன். பிறகு நீதிமன்றம் என்னை நிரபராதின்னு சொன்னபோது, எந்த பத்திரிகையும் பெரிசா போடல. நானாத்தான் எல்லார்க்கிட்டேயும் போய் சொல்லிக்கிட வேண்டியிருக்கு.''

ரஹீம், சேத்துப்பட்டு :

“எனது 17 ஆண்டுகால சிறை வாழ்க்கையை, வேதனைகளை, துயரங்களை இங்கு 10 நிமிடத்திற்குள் பதிவு செய்வதென்பது ஒரு இயலாத காரியம். சிறைக்கு முன் போலிஸ் விசாரணைகள் எ ப்படி இருந்திருக்கும் என்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த நாட்டின் மூன்றாவது தூண் என்று கருதப்படுகின்ற நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அனுப்பப்படும் சிறையில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி இப்போது பேச இருக்கிறேன். நான் 1993 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். அப்போது விடுதலைப் புலிகள், நக்ஸலைட்டுகள், வீரப்பன் தடாக் கைதிகள் என சுமார் 170 தடா கைதிகள் சிறையில் இருந்தோம். அவர்களில் நாங்கள் சுமார் 6 முஸ்லிம் கைதிகள். அப்போது விடுதலைப்புலிகள் 9 பேர் சிறையிலிருந்து தப்பியபோது, அடுத்த நிமிடமே சுமார் 500 காவலர்கள் எங்கள் 6 பேர் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தினார்கள். இத்தனைக்கும் புலிகள் தனி பிளாக்கில் இருந்தார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்தது.

பிறகு ஒரு 6 மாதம் ஜாமீனில் இருந்தேன். அப்போ 1997 ரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைன்னு சொல்லி என்னை கைது செஞ்சாங்க. அதுல கைதானதுக்கு பிறகு எங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், கொடுமைகளும் இந்தியாவில் வேறு எங்கும், ஏன் மோடி அரசினால் கூட நிகழ்த்தப்பட்டிருக்காது. ஆனால் இந்த அரசு, எங்கள் மீது அத்தகைய ஒரு தாக்குதலை நடத்தியது. 1999ஆவது வருடம் சுமார் 100 நாட்கள் எங்கள் உடலில் எந்த ஒரு உடையும் இல்லை. எங்களை நொறுக்குவதற்கென்ற சுமார் 300 காவலர்களை நியமித்திருந்தார்கள். ஒரு அறையில் இருக்கும் ஒரே ஒரு கைதியை தாக்குவதற்கு 20 காவலர்கள் காலையும் மாலையும் வருவார்கள். எங்கள் மீது சுமத்தப்பட்ட சுமார் எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகளி லிருந்து விடுதலையாகி இங்கு உங்கள் முன் இருக்கிறேன் என்றால், அது புகழேந்தி, சங்கர சுப்பு போன்ற சில வழக்கறிஞர்களால்தான்.''

ஆயிஷா :

“என்னை சங்கீதா, ஆயிஷா, ஆயிஷா சித்திகான்னு எல்லாம் சொன்னா யாருக்கும் தெரியாது. கோவை மனிதவெடிகுண்டு ஆயிஷா சித்திகான்னு சொன்னாத்தான் எல்லோருக்கும் தெரியும். ஏன்னா அதுதான் என் பட்டப்பெயர். டிகிரி படிச்சு முடிச்சிருக்கேன். ஆனா அது என் பட்டமில்ல. 19 வயது முடிந்த பிறகு, சுய மரியாதையோடு வாழ்வதற்காக சுயமாக சிந்தித்து, இஸ்லாத்தை என்னுடைய மார்க்கமாக தேர்ந்தெடுத்ததற்காக ஓர் இறை கொள்கையை தேர்வு செய்ததற்காக, எனக்கு தமிழக அரசு வழங்கிய பட்டம்தான் "மனித வெடிகுண்டு'.

என் கணவரை நானே தேர்ந்தெடுத்ததற்கு இருந்த எதிர்ப்பின் காரணமாக, நானும் என் கணவரும் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அங்கு என் கணவரின் நண்பர் ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தோம். பின் வேறொரு வீட்டிற்கு மாறிச் சென்றுவிட்டோம். அந்த நண்பர் பின் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகித்து அவரைத் தேடி வந்தார்கள். அவரின் வீட்டில் குடியிருந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இன்றுவரை வாழ்க்கையில் துரத்தப்படுகிறோம்.

100 கிலோ வெடிகுண்டை தூக்கிக்கொண்டு மனித வெடிகுண்டாக அத்வானியைக் கொல்ல நான் போனேனாம். அதுவும் வெறும் 40 கிலோ எடை கொண்ட நான்! எந்தவித வெளி உலக அறிவுமற்ற ஒரு ஜீரோவாகத்தான் நான் இருந்தேன், என்னை கைது செய்வதற்கு முன். இன்றைக்கு நினைத்தாலும் வயிறு பற்றி எரிகிறது. முஸ்லிம்களென்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு தற்போது மாறிவருகிறது. ஆங்கில ஊடகங்களை கவனித்தால் தெரியும். ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளெல்லாம் எந்த அளவிற்கு திட்டமிட்டு, எங்களை சிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். அவர்களை கைது செய்வதற்கோ, அவர்களை ஒடுக்குவதற்கோ இந்த அரசாங்கத்திடம் எந்த சக்தியும் இல்லை.

ஆயிரம் பீரங்கிகளுக்கு கூட நான் பயப்படமாட்டேன்; ஆனால் ஒரு பத்திரிகையைப் பார்த்தால் பயம் என்று ஹிட்லர் சொன்னான். அந்த பத்திரிகை என்னைப்படுத்திய பாட்டை சொல்லி மாளாது. அன்று உங்கள் கற்பனைக்கெல்லாம் என்னை தீனியாக்கினீர்கள். அதனுடைய விளைவை இன்று வரை நான் சந்தித்து வருகிறேன். நிராதரவாக நிற்கிறேன். ஆனால் நான் தோற்றுப் போக மாட்டேன். நான் வாழ்ந்து காண்பிப்பேன். எந்த நாடு, எந்த சமூகம் என்னை இழிவுபடுத்தியதோ, இன்று எதைக்கொண்டு தோற்கடிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியும். எந்த சட்டம் என்னை ஒடுக்கியதோ, வருங்காலத்தில் என் மகனைக் கொண்டு இந்த சட்டத்தை சீர்தூக்கி, யாருக்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கச் செய்வேன்.

என் கணவரை சென்னையில் சிறையில் அடைத்திருந்தனர். அவரைப் பிரிந்ததோடு, என் குழந்தையையும் சிறையில் வைத்திருந்தேன். சிறையில் குழந்தை இருக்க வேண்டாமென்று என் மாமியாரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால் நாங்கள் வெளியில் வந்தபோது, அக்குழந்தைக்கு தாய் தந்தையே அடையாளம் தெரியவில்லை. இதைவிடக் கொடுமை என்ன இருக்க முடியும்?

ஊடகத்தினால்தான் என் வாழ்க்கையே கெட்டுப் போச்சு. சட்டம் எந்தவித உதவியும் செய்யல. சிறை வாழ்க்கையில் என் அளவிற்கு பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சகோதரி இந்த தமிழ்நாட்டில் இருக்க முடியாது. என்னால பாதிக்கப்பட்டது இந்த முஸ்லிம் சமுதாயம்னு கூட சொல்லலாம். “நீதான் அந்த ஆயிஷாவா? உன்னாலதான் எங்களுக்கு இத்தனை தொல்லையா? வீடெல்லாம் புகுந்து ரெய்ட் பண்ணாங்க. ட்ரெஸ் எல்லாம் கழட்டிப்பாத்தாங்க. மதர்ஷாவில் புகுந்து புர்கால்லாம் கழட்டிப்பாத்தாங்க. தனித்தனியா கூப்பிட்டு அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதெல்லாம் உன்னாலதானா'' என்று கேட்கிறார்கள். நான் என்ன பாவம் பண்ணேன்? எனக்குத் தெரியல.

Pin It