kolathur mani‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (7)

  • பெரியாரை விட்டு விலகிய ஜீவா, இராமாயணத்தின் பெருமைகளைப் பேசத் தொடங்கினார்.
  • ஒரே மாநாட்டில் ஒரே தீர்மானம் போட்டு ‘சமதர்மக் கட்சி’யை கலைத்துவிட்டு காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள்.
  • முதலாளிகளை எதிர்ப்பவர்கள் ‘பிறவி’ முதலாளியான பார்ப்பனர்களையும் கல் முதலாளியான கடவுளையும் ஏன் எதிர்க்க மறுக்கிறார்கள், என்றார்.
  • பெரியார் கம்யூனிசத்தை நேசித்தார்; கோபம் கம்யூனிஸ்டுகள் மீது மட்டுமே.

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி - தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் - பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி - மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

அய்ரோப்பியப் பயணம் முடிந்து பெரியார் திரும்பி வந்த பின்னால், 1933ஆம் ஆண்டு, சுயமரியாதை இயக்கம் தனியாகவும், இன்னொன்று அரசியல் கட்சியாக இருப்பது என்றும், மக்களை பக்குவப்படுத்தி தேர்தலில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கிறார்கள். சுயமரியாதை சமதர்ம கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்குகிறார்கள்.

அந்த அமைப்பில், காப்பாளராக, ஏற்கனவே சுயமரியாதை இயக்கத்தில் பணிபுரிந்த சிலரில் ஒருவரை தான் - ஜீவானந்தம் அவர்களை பொறுப்பாளராக, சாத்தான் குளம் அ.ராகவன், புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துசாமி வல்லத்தரசு போன்றவர்களெல்லாம் அதற்கு நியமிக்கப்படுகிறர்கள்.

அந்த காலகட்டத்தில், அதற்கு பின்னால், அவர்கள் மிகவும் கடும் போக்காளர்களாக நடந்துக் கொண்டதன் காரணமாக, பல சிக்கல்களை உருவாக்குகிறார்கள். தன்னுடைய கட்சி கூட்டத்திற்கு, பெரியாருடைய இயக்கக் கூட்டங்களுக்கு பொது இயக்கம் என்ற அடிப்படையில் எல்லோரையும் அழைப்பது வழக்கம்.

பெரியார் தீண்டாமை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்துகிறார். இந்த மாநாட்டுக்கு சோமசுந்தர பாரதியாரைக் கூப்பிடுகிறார். அவர் காங்கிரஸ்காரர். அங்கிருக்கிற தீண்டாமை ஒழிப்புக் குழுவிற்கு தலைவராக இருக்கிறார். அவரைக் கூப்பிடுகிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஜீவானந்தம் போன்றோர்களெல்லாம் சத்தம் போடுகிறார்கள், அவர் பேசக்கூடாது என்று கூறுகிறார்கள்.

எதற்கு வேறு கட்சி ஆட்களெல்லாம் நம் கூட்டத்தில் பேச வேண்டும் என்று சத்தம் போடுகிறார்கள்; பெரியார் சொல்கிறார், நாம் எடுத்துக் கொண்டிருக்கிற தலைப்பிற்கு பொருத்தமானவரான அவரை அழைத்திருக்கிறோம். எல்லோருடைய கருத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்; அவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை.

அதற்கு பின்னால் பெரியார் மிகக் கடுமையாகப் பேசி விட்டு சொல்லுகிறார், இப்படியெல்லாம் நீங்கள் இருந்தீர்களென்றால், நீங்கள் மட்டும் தனியாக நின்றுக் கொண்டிருக்க வேண்டியது தான். இதற்கு யாரையெல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு, அந்தந்த துறைக்கு மட்டும் அவர்களை சேர்த்துக் கொள்ளுகிறோம். இப்படி சொல்லுகிற காரணத்தால், நீங்களும்கூட இந்த அமைப்பை விட்டு போய் விடலாம்.

போய்விட்டு மற்றவர்களைப் போல எனக்கு எதிர்பிரச்சாரம் எதிர்ச் செயலில் ஈடுபடலாம். அதற்கும் தலை கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கடுமையாக பெரியார் சொல்லுகிறார். அடுத்த நாள் ‘குடிஅரசு’ ஏட்டிலும் எழுதுகிறார். ஆனால், அவர்கள் இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து கட்சியை விட்டு வெளியே போகிறார்கள். இந்த சிக்கல்களெல்லாம் அப்பொழுது நடக்கிறது, அவர் களோடு இருக்கிறபோது. பின்னால் போய்விடு கிறார்கள். அந்த காலகட்டத்தில் அரசாங்கமும் காங்கிரசும் ஒரு உடன்பாட்டுக்கு வருகின்றன. அந்த அரசியலை இப்பொழுது அதிகமாக சொல்ல வேண்டியது இல்லை.

உப்பு சத்தியாகிரகம் என்ற ஒன்றை காந்தி நடத்திக் கொண்டிருந்தார். நாம் கேள்விபட்டிருப் போம். ஒத்துழையாமை இயக்கம், மற்றும் என்னென்னவோ நடத்தினார்கள். அதில் காங்கிரஸ் காரர்களெல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். சிறை வைக்கப்படு கிறார்கள். அதற்கப்புறம் காந்தி அரசோடு சமாதானம் பேசுகிறார்.

என்ன சமாதானம் என்றால், இனிமேல் நாங்கள் போராட்டம் நடத்த மாட்டோம், எங்களை வெளியே விட்டுவிடு, என்று கேட்கிறார். அவர்கள் சொல்லுகிறார்கள். எல்லோரையும்விட முடியாது, வன்முறையில் ஈடுபட்டவர்களை உள்ளே வைத்து விட்டு மீதி ஆட்களைத் தான் வெளியே விடுவோம் என்கிறார்கள். அந்த ஒப்பந்தத்தில் கையெ ழுத்துப் போடுகிறார் காந்தி. அதற்குத் தான் காந்தி இர்வின் ஒப்பந்தம் என்று பெயர்.

அது என்னவோ  வெற்றி ஒப்பந்தம் என்பதைப் போல, பேரெல்லாம் வைத்தான், காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்று. காந்தி - இர்வின் பாலம் என்று ஒரு பாலமும் சென்னையில் உண்டு. ஆனால், அது ஒன்றுமில்லாத ஒப்பந்தம். ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டது என்பது, இனிமேல் போராட்டம் நடத்த மாட்டோம். போரா ட்டம் நடத்தவில்லையென்றால், பிரச்சாரத்திற்கு உன்னை அனுமதிப்போம் என்று அரசு சொல்லுகிறது.

இப்படித் தான் அந்த போராட்டம் நடக்கிறது. காந்தி வட்ட மேஜை மாநாட்டுக்கு போகமாட்டேன் என்கிறார். இந்த மாநாட்டிற்கு ஒழுங்காக போகிறேன் என்று ஒத்துக் கொண்டால்தான் விடுதலை செய்வோம் என்கிறார்கள். அதற்கும் காந்தி ஒத்துக் கொண்டார் . அது முடிவுக்கு வருகிறது.

அதற்குப் பின்னால் பெரியார், இது வரை நம்முடைய இரண்டு பகைவர்களும் அவர்களுக்குள் இருந்த பகைமையால், நம்மை கவனிக்காமல் இருந்து விட்டார்கள்; இனிமேல் அவர்களின் பார்வை நம்மை நோக்கித் திரும்பும் என்று சொல்லுகிறார். அது போலவே பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தின் 170 அலுவலகங்கள் சோதனைக்குள்ளாகின்றன.

பெரியாருக்கு வருகிற கடிதங்கள் எல்லாம் சென்சார் செய்கிறார்கள். சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார். இந்திய பாராளுமன்றத்திற்கு அப்போது மத்திய சட்ட மன்றம் என்று பெயர், அதனுடைய அவைத் தலைவராக, அதாவது சபாநாயகராக இருக்கிறார். அவருக்கு வருகிற கடிதங்களைக்கூட சென்சார் செய்கிறார்கள்.

ஏனென்றால், பெரியாரோடு தொடர்புடையவர், சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர். எனவே அவர் கடிதங்கள் கூட பார்க்கிற அளவிற்கு சென்சார் நடந்தன. அது தீவிரப்படுத்தப் படுகிறது. எப்படியாவது பொதுவுடமை பரப் புரைகள் நிறுத்தப்பட வேண்டுமென்று நினைக்கிறார்கள். அப்பொழுது பெரியார் சொல்கிறார், எச்சரிக்கையாக இருங்கள் தோழர்களே.

நீங்கள் மேடையில் பேசுகிற சொற்கள் ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு என்ற கருத்தில் பேசுங்கள் என்று சொல்லுகிறார். நம் ஆட்கள் தான், தூக்கு மேடைக்கு தயார், கொலை செய்ய தயார், நூறு பேரைக் கொல்லுவேன் என்றெல்லாம் பேசுவார்களே. அந்த மாதிரி எல்லாம் பேச வேண்டாம் என்று பெரியார் அந்த பொருளில் சொல்லுகிறார். அதற்கு பின்னால் ஒரு அறிக்கை விடுகிறார். அதன் பின்னர், பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன் என்றொரு புத்தகத்தை மொழி பெயர்த்து பெரியார் வெளியிடுகிறார். நான் அடிக்கடி சொல்லுவேன்.

பாரதியார் பாட்டுப் பாடுதல் ஒன்று, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று உண்டு. யார் மொழி பெயர்த் தார்களோ இல்லையோ, பெரியார்தான் மொழி பெயர்த்துக் கொண்டே வந்தார். லெனினும் மதமும், ஐந்தாண்டு திட்டம், பொதுவுடமை கோட்பாடுகள், இன்னும் நிறைய புத்தகங்கள் மொழி பெயர்க்கப் பட்டது, பகத் சிங், பெர்ட்ராண்ட் ரசல், ஜீன் மெஸ்லியர் என்கிற கத்தோலிக்க பாதிரியார், ஆயர் ஒருவர் எழுதிய மரண சாசனம் - நான் இறந்த பிறகு வெளியிடுங்கள் என்று கிருஸ்துவ மதத்தைப் பற்றி எழுதியது.

அதை வாங்கி, மூன்று தொகுதியாக பெரியார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். நான் ஏன் கிறிஸ்துவனல்ல என்ற பெர்ட்ரண்ட் ரசல்-இன் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து பெரியார் வெளியிடுகிறார். இங்கர்சாலினுடைய புத்தகங்கள். அம்பேத்கர், லாகூர் மாநாட்டில் பேசிய உரை, இந்திய மொழிகளிலேயே தமிழில் தான் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது.

மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்படவில்லை. ஆங்கில மொழியில் தான் இருந்தது. அதை மாற்றி, முதலில் தமிழில், இங்கு தான் மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள். வந்த இரண்டாவது மாதமே மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஏனென்றால், பெரியாருக்கு ஒரு படியை அனுப்பி வைக்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கருக்கு. பெரியார் ஒரு கடிதம் எழுதுகிறார். நான் அதை தமிழில் வெளிடலாமா என்று. மகிழ்ச்சியாக செய்யுங்கள் என்றார் அம்பேத்கர். உடனடியாக அதை தமிழில் மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிடுகிறார். இது வரைக்கும் 40 பதிப்புகள் வந்துவிட்டன. அந்த அளவு பரப்பினார்கள். நான் ஏன் நாத்திகனானேன், பகத் சிங் புத்தகம். ஒரு பொதுவுடமைப் போராளி, நாத்திகத் தன்மையின் தேவையைப் பற்றி பேசுகிறார்.

அது வெளியே போகவேண்டும் என்பது பெரியார் கருத்து. அதை மொழி பெயர்த்தவர் ஜீவானந்தம். அப்போது, குடிஅரசு ஏட்டின் வெளியீட்டாளராக இருந்தவர் பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. இதற்காக இரண்டு பேரும் கைது செய்யப்படு கிறார்கள். மொழி பெயர்த்து புத்தகம் போட்டதற்கு.

அது ஒன்றும் பொதுவுடமைப் புத்தகம் அல்ல. நாத்திகத்தைப் பற்றிய நூல் தான். ஆனால் எழுதியவர் யார் என்றால் பகத் சிங். அவ்வளவு தான் காரணம். வேறு ஒரு காரணமும் இல்லை. 2009 இறுதி ஈழப் போர் நடந்தபோது, இங்கு ஒரு போராட்டம் நடந்தது கோயமுத்தூரில். இராணுவ வாகன வண்டிகள் இராணுவ தளவாடங்களுடன் போனபோது, அதைத் தடுத்து போராட்டம் நடத்தினார்கள்.

காவல்துறை போராட்ட இடத்தைச் சுற்றி வளைத்துக் கொள் கிறார்கள், எல்லோரின் பெயரையும் கேட்கிறார்கள். ஒருவர் பிரபாகரன் என்கிறார். ஏறு வண்டியில் என்கிறது காவல்துறை. குழந்தைக்கு பால் வாங்க வந்தேன் என்கிறார்.

அதெல்லாம் கிடையாது, பெயர் பிரபாகரன் என்பதால் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அதைப் போல, பகத் சிங் என்று இருக்கிறது. அதற்கு வழக்கு போட்டார்கள். அதில் பெரியார், மன்னிப்பு எழுதித் தரச் சொல்லுகிறார்.

இது தவறென்று உங்களுக்குப் பட்டால் நான் வருந்துகிறேன், என்று எழுதிக் கொடுத்து விட்டு வாருங்கள் என்று அறிக்கை விடுகிறார். அவர்கள் மன்னிப்பு எழுதிக் கொடுத்ததற்கு, நான் காரணமே தவிர அவர்களல்ல. அதற்கு நானே முழு ஜவாப்தாரி ஆவேன். ஏனென்றால் அரசின் பார்வை நம் பக்கம் திரும்பி விட்டது என்று நான் சொன்னேன், என்று அவர் எழுதுகிறார்.

இந்தக் கருத்து வேறுபாடுகள் வளர்ந்து வந்து 1936இல் அவர்களெல்லாம் வெளியேறுகிறார்கள். அதற்கு பிறகு காங்கிரசில் இணைந்து விடுகிறார்கள். ஒரே ஒரு மாநாடு சமதர்ம கட்சி என்கிற பெயரில் நடத்தினார்கள். கட்சியின் மாநாட்டின் தீர்மானமே, எஸ்.ஏ.டாங்கே அறிவுரை சொன்னதின்படி நாம் காங்கிரசின் உறுப்பினராகி விடுவோம் என்ற ஒரே தீர்மானம்தான் அதோடு போய் விட்டது அந்த கட்சி. ஆனாலும், இப்படிப்பட்ட நெருடல்கள் பெரியாருக்கும், சமதர்ம கட்சியின ருக்கும் இருந்தது தான் அந்த சிக்கல்.

போனவுடனே பெரியார் மேல் இருந்த கோபத்தில் ஜீவா இராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்; கம்பராமா யணத்தை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விடுகிறார், ஜீவானந்தம். பெரியாரோடு இருந்தவரை கம்பராமாயணத்தை எதிர்த்துப் பேசி வந்தவர் அவர். விலகிப் போனவுடன், அப்படிப்பட்ட நெருடல்கள் வருகின்றன.

அது முடிந்த பிறகு, பெரியாரின் நிலை என்னவாக இருந்தது என்பதை மட்டும்தான் சொல்கிறேன். அதுவரைக்கும் கம்யூனிஸ்டாக இருந்தவர், கம்யூனிசம் பேசியவர், அதற்கப்புறம் பெரியார் மாறிவிட்டாரா? இது மட்டும் தான் நாம் பார்க்க வேண்டியது என்று நான் கருதுகிறேன்.

1972இல் உறையூரில் ஒரு கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்திற்கு தலைப்பே கம்யூனிசம் தான். கம்யூனிசம் என்கிற தலைப்பில் பெரியார்  உரையாற்றி யிருக்கிறார். அதில் அவர் சொன்னதை மட்டும் - மற்றபடி நிறைய செய்திகள் இருந்தாலும், உங்களிடம் படித்து விடவேண்டும் என்று நினைக்கிறேன்.

09.01.1972 பெரியார் மறைவதற்கு முந்தைய ஆண்டில்.  1972இல் பேசிய பேச்சு. நாட்டு மக்களெல்லாம் ஒரு குடும்பம் போல எல்லா மக்களும் பாடுபடவேண்டும். வருகிற லாபம் விளை பொருள் முதலியவற்றை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது. இது தான், குடும்பத்தில் செய்வதை போல, இது தான் பொதுவுடமையாகும் என்று சொல்லிவிட்டு, “கோடீஸ்வரனுக்கு எப்படி தனது ஒரு கோடி ரூபாயைக் காப்பது என்கிற கவலை, அத்தோடு நின்றுவிடுவது இல்லை. தனக்கு ஒரு கோடி தானே உள்ளது, அடுத்தவனுக்கு இரண்டு கோடி ரூபாய் இருக்கிறதே என்று நினைக்கிறான்” என்றெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியாக அவர் சொல்கிறார். 

“மனக் கவலை குறைகளையெல்லாம், பொதுவுடமை ஒன்றினால் தான் நிவர்த்தி செய்ய முடியும். பொதுவுடமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே, மனிதன் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டு மென்பதுதான். சொந்த உடமை என்பது கவலை நிறைந்த வாழ்வாகும். மனிதன் என்னவென்று நினைத்துக் கொள்கிறான்”.

பெரியார் சொல்கிறார்: “மோட்சம் முக்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரியுமா?” என்று கேட்டுவிட்டு சொல்கிறார். “துக்கம் நாசம், சுக பிராப்தி. துக்கம் அழிந்துவிட வேண்டும், சுகமாக இருக்க வேண்டும் என்பது தான், மோட்சம் முக்தி என்பதற்கான பொருள். உங்களுக்கு பொதுவுடமை வந்தால் இவைத் தேவைப்படாது.

ஏனென்றால், உங்களுக்கு துக்க நாசம் ஏற்பட்டுவிடும், சுக பிராப்தி ஏற்பட்டு விடும். எனவே உங்களுக்கு மோட்சம் நரகம் கூட தேவை இருக்காது. அந்த சிந்தனைகூட வராத நிலை வந்துவிடும். தயவு செய்து பொதுவுடமைக்கு வாருங்கள். துக்க நிவர்த்திக்கும் குறைபாடுகள் ஒழிப்பிற்கும் பரிகாரம், பொதுவுடமை தான் ஆகும். நம் நாட்டிலும் கம்யூனிஸ்ட்காரர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் தம் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டும் பொதுவுடமையை சாதனமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று தொடர்ந்து பேசுகிறார். கம்யூனிஸ்ட்கள் மீது பெரியாருக்கு கோபம் இருந்தது. ஆனால் கம்யூனிசம் மீது எப்போதும் கோபம் இருந்தது இல்லை என்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It