மகாத்மா ஜோதிபா புலே, டாக்டர் அம்பேத்கர் போன்ற ஓர் அறிஞர் மற்றும் சாகு மகாராஜா போன்றவர்களை அளித்ததன் மூலம் மகாராட்டிரம் இந்நாட்டைப் பெருமைப்படுத்தியது. பஞ்சாப் – கான்ஷிராம், சந்த் ராம் போன்ற தேசத் தலைவர்களை அளித்தது. பாபு ஜெகஜீவன் ராம், பி.பி. மண்டல், கர்பூரி தாகூர், சிபு சோரன் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற தலைவர்களை பீகார் அளித்தது. சகோதரி மாயாவதி அவர்களை உத்தரப் பிரதேசம் அளித்தது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமாவது அறுதிப் பெரும்பான்மையோடு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது. மகாராட்டிரம், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலித் பெரும்பான்மை மக்கள், மாநிலத்தின் நிர்வாகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை ஆற்றக் கூடிய அளவிலான இடத்தைப் பெற்றுள்ளனர்.

farmer_270உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் அவர்கள் குறைந்தது அதிகார மய்யத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளையாவது எடுத்துள்ளனர். ஜார்க்கண்டிலும் சட்டீஸ்கரிலும் மாநிலத்தின் பழங்குடி மக்கள் தங்களைத் தாங்களே சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ஆனால், மநுவாதி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியின் கீழ் உள்ள மாநிலங்களிலோ, தலித் பெரும்பான்மை சமூகமானது – முற்படுத்தப்பட்ட சாதிய சமூகத்தைவிட மிகவும், கோடானுகோடி மைல்கள் தூரம் பின் தங்கியுள்ளது. பெரும்பாலும் பயிற்றுவிக்கப்பட்ட குண்டர்களாலான தொண்டர்களால் அவர்கள் கட்டுப்பட்டவர்களாகவும், வாயை திறக்க அனுமதிக்கப்படாதவர்களாகவும் வைக்கப்பட்டனர். காவல் நிலையங்களை தங்களின் முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ள கட்சி வட்டத்தின் இறுக்கமான கண்காணிப்பு வளையத்தின் கீழும் – அச்சுறுத்தலின் கீழும் ஏழைகளும் சுரண்டலுக்குள்ளானவர்களும் அடிமைகளாகவே வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மநுவாதிகளைவிட மார்க்சியவாதிகள், சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு அதிகமான சேதம் விளைவிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். மார்க்சியம் எனும் ஆயுதத்தை ஏந்திய பிறகு மநுவாதிகளே மேலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக ஆகின்றனர்.

ஓர் இனத்தையோ, ஒரு மொத்த வகுப்பையோ தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்கான உறுதியான வழிமுறை என்பது, அவர்களை தொடர்ச்சியாக அறியாமையில் வைத்திருப்பதாகும். கல்வி மறுக்கப்பட்ட ஒரு வகுப்பு, தனது உரிமைகளை குறித்த எந்த உணர்வுமற்று இருக்கிறது. அதனால் சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளுக்கு இம்மக்கள் எளிதாக பலியாகின்றனர். அவர்கள் போராட்டமின்றி, மரங்களைப் போல எதிர்ப்புணர்வு அற்றவர்களாக இருக்கின்றனர். கல்வி அறிவு பெற்றவர்களே போராட்டத்திற்கான தூண்டுதலைப் பெறுகின்றனர். இதனால்தான் மநு சட்டங்கள், சூத்திரர்கள் (தீண்டத்தகுந்தவர்கள் உட்பட) கல்வி அறிவு பெற அனுமதிக்கக் கூடாது என்கின்றன. கிருஷ்ணன் என்ற கடவுள் கீதையில் இவ்வாறு கூறுகிறார் : “சுயமாக தங்களை உருவாக்கிக் கொண்ட அறிவாளிகள், அறியாமையில் இருப்பவர்களுக்கு கல்வி புகட்டக் கூடாது. மாறாக, அவர்களை உடல் உழைப்பில் ஈடுபடவே வழிநடத்த வேண்டும்.'' தனது தோட்டத்தைப் பராமரிப்பவர்கள், அறிவெனும் மரத்தின் பழங்களை சுவைப்பதை கடவுளானவர் எப்போதும் தடுத்தே வந்திருக்கிறார்.

சூப்பர் கம்ப்யூட்டர் காலத்தில், மநு ஆதி காலத்தில் செய்ததை, இந்தியாவின் மார்க்சியத் தலைவர்கள் உலகத் தத்துவமான மார்க்சியத்தின் பெயரால், மேலும் இறுக்கமாகவும் வெளிப்படையாகவும் மநுவின் தத்துவத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். மார்க்சியவாதிகள் அதிகாரத்திற்கு வந்த சிறிது காலத்திலேயே மேற்கு வங்க அரசு, ஆங்கில மொழி வழிக் கல்வியை தடை செய்தது. தேர்வில் வெற்றி தோல்வி என்ற முறையையும் அதே நேரத்தில் ஒழித்தது. எட்டாம் வகுப்பு வரை தேர்வுகள் இன்றி செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, பாதியில் படிப்பை கைவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வாழ்க்கையின் அனைத்து நடைமுறை பயன்பாட்டிற்கும் அவர்கள் பயனற்றவர்களாகத் திகழ்ந்தனர். இதனால் வேறு வழியின்றி ஊழல் மலிந்த தொண்டர்களின் கூட்டத்தோடு இணைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இக்கல்வி முறை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பணக்காரர்கள் மற்றும் உயர்தட்டு மக்களின் நகரப் பள்ளிகள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டனர். ஆளும் வகுப்பினரின் குழந்தைகள் வெளிநாட்டிலோ, பிற மாநிலங்களிலோ – ஆங்கில வழி கல்வி முறையும் ஆண்டுதோறும் தேர்வுகளும் உள்ள மிஷினரி பள்ளிகளிலோ, பொதுப் பள்ளிகளிலோ கல்வி பெறுகின்றனர். மேற்கு வங்கத்தில் கல்வி அறிவு பெற்றோரின் சராசரியானது, மிகவும் மோசமான முறையில் குறைந்து வந்துள்ளது.

கேரளாவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சராசரி அதிகமாகத்தான் இருக்கிறது. ஆனால், பெரும்பான்மை மக்கள் தங்களுடைய சொந்த மொழியைத் தவிர பிற மொழிகள் தெரியாதவர்களாகவும், புரியாதவர்களாகவுமே உள்ளனர். அதன் விளைவாக, அவர்கள் பிற மாநிலங்களில் உள்ள மக்களோடு தொடர்பு கொள்ளவோ, தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளவோ, ஒரு தேசியப் போராட்டத்தை உருவாக்கவோ இயலாதவர்களாக உள்ளனர். கேரளாவில் பார்ப்பனர்களின் மக்கள் தொகை ஒரு சதவிகிதம்கூட இல்லை. ஆனால், 2007 இல் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவரான அச்சுதானந்தன், மாநிலத்தில் முதல்வராகும் வரை, நம்பூதிரிகளே மார்க்சிய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தினர்.

வெளி உலகத்தினருடன் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறனை மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினர் இழந்துவிட்டனர். அவர்களால் தங்களுடைய உணர்வுகளையோ, சிக்கல்களையோ வெளிப்படுத்த முடியாது. தங்களுடைய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது. அவர்களால் பிறரிடமிருந்து புதிய சிந்தனைகளையும் ஊக்கத்தையும் பெறவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியாது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வாழ்வின் எல்லா நிலைகளிலும் காது கேளாத, வாய் பேசாத முட்டாள்களாக நடக்க அவர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கொள்கையை எந்த மார்க்சியவாதியும் எதிர்க்கவில்லை.

ஆனால், வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், 1823 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "பொது அறிவுறுத்தல் குழு' சமஸ்கிருத கல்விக்கு பெரும் தொகையை செலவிட முடிவெடுத்தபோது, ராஜாராம் மோகன் ராய் அதை எதிர்த்து அம்ஹெர்ஸ்ட் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில், பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்நாட்டு மக்களை அறியாமை இருட்டில் வைத்திருப்பதுதான் பிரிட்டிஷ் அரசின் கொள்கை எனில், அவர்கள் சமஸ்கிருத கல்வியை அளிப்பது சரியானதாக இருக்கும். ஆனால், மக்களின் நிலையை மேம்படுத்துவதுதான் அரசின் நோக்கமெனில், கல்வியில் பரந்த கொள்கை வேண்டும். ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் கல்லூரி ஒன்றை தொடங்க வேண்டும். அய்ரோப்பாவில் கல்வி கற்ற ஆசிரியர்களை அங்கு நியமிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நினைத்த பலனை அடைய முடியும்.'' இந்த சூழலில் மார்க்சியத் தலைவர்கள் பின்பற்றிய கல்விக் கொள்கையின் மூலம் அவர்களின் நோக்கத்தை அறியலாம்.

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மாயோ பிரபு, வங்காளத்தைச் சேர்ந்த "உயர் சாதி'யினரை நோக்கி கை நீட்டி 1872 இல் சென்னார் : “இந்த வடிகட்டும் முறை எனக்கு பிடிக்கவில்லை. வங்காளத்தில் நாம் சில நூறு "பாபூ'க்களை மிக அதிக அரசு செலவில் ஆங்கில வழியில் கற்பிக்கிறோம். அதில் பலர் தங்களுக்கான கல்வித் தொகையை தாங்களே கட்டும் அளவுக்கு வசதியானவர்கள். அதோடு அரசு வேலை பெறுவதைத் தவிர, கல்வி பெறுவதற்கு வேறெந்த நோக்கமும் அற்றவர்கள். அதே வேளை, பல கோடிக்கணக்கான மக்களுக்கு கல்வியை அளிப்பதற்கான எந்த முயற்சியையும் நாம் எடுக்கவில்லை. கல்வி பெற்ற மேதாவிகளான "பாபூ'க்கள் அதை ஒருபோதும் செய்யப் போவதில்லை. அவர்களுக்கு எந்த அளவுக்கு அதிகமாக கல்வி அளிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமாக அதை அவர்கள் தங்களுக்குள் சுருக்கிக் கொள்வார்கள். தாங்கள் பெற்ற கூடுதல் அறிவை, அதிகாரத்தை அடைவதற்கான வழியாக வைத்துக் கொள்வார்கள்.''

"அதிகாரத்தை அடைவதற்கான வழி' என்ற சொற்றொடரை கவர்னர் ஜெனரல், சமூகத்தின் கீழ் தட்டில் உள்ளவர்களை பாகுபடுத்தியும் ஒடுக்கியும் வந்த "பாபூ'க்கள் அல்லது "பத்ரலோக்' வகுப்பினருக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளதை கவனியுங்கள். தீண்டத்தகாதவர்கள், முஸ்லிம்கள், கீழான சூத்திரர்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு கல்வி எட்டாதிருக்கும் வகையில் இவர்கள் கற்சுவரை கட்டி எழுப்பினார்கள். கவர்னர் ஜெனரலின் இந்த மறைமுக கருத்துகள் ஒரு சிலரை கடுமையாக காயப்படுத்தலாம். ஆனால், காலனிய காலத்தின் புகழ் பெற்ற இந்தியர்கள், பெரும்பான்மை மக்களுக்கு கல்வி அளிப்பதை எதிர்த்தே வந்துள்ளனர் என்பதற்கு வரலாறு பல சான்றுகளை அளிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் கல்வி பெற அனுமதிக்கப்பட்டால், வீட்டு வேலைகள் செய்வதற்கு எளிய வேலைக்காரர்கள் எவ்விதம் கிடைப்பார்கள் என்ற கருத்தின் அடிப்படையில், கல்வி கீழ் நிலை மக்களை சென்றடைவதை எதிர்த்த அதே வகுப்பினரை ரவீந்திரநாத் தாகூர்கூட கண்டித்துள்ளார்.

சமூக மறு கட்டமைப்புகான இந்த வெளிப்படையான முறையானது, வங்காளத்தின் தலித் பெரும்பான்மை மக்களுக்கு எட்டாத தூரத்திலேயே மார்க்சியவாதிகளால் வைக்கப்பட்டுள்ளது. முதியோர் கல்வி, கல்வி அறிவின்மையை அகற்றுதல் மற்றும் "சர்வ சிக்ஷா அபியான்' ஆகியவற்றின் பெயரில் ஒட்டுமொத்த ஏமாற்று வேலை தொடர்கிறது. பீகார், உத்தரப் பிரதேசம் ஏன் வங்காள தேசத்தில் பெருகி வரும் அளவுக்குகூட மேற்கு வங்கத்திலோ, திரிபுராவிலோ பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும் பெருகவில்லை.

இத்தகைய கல்வி அறிவு மற்றும் கல்வித் தரத்தை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் அல்லது உழைக்கும் மக்கள், குறிப்பாக இந்த முதலாளித்துவ பாணியிலான சமூக – பொருளாதாரக் கட்டமைப்பில், கீழ் நிலை வேலைகளைத் தவிர பிற வேலைகளைப் பெற முடியுமா? 30 ஆண்டு கால மநுவாதி மார்க்சியவாதிகளின் ஆட்சியானது, கீழான சூத்திர வகுப்பினரைக் கொண்ட பழமையான அமைப்பிலிருந்து புதிய தலைமுறை அடிமைகளை உருவாக்கக் கூடிய ஒரு நிர்வாக எந்திரத்தை உருவாக்கிய அரசாக உருவெடுத்ததே ஆகும். இந்த சூழலில் பெரும் தொழில் திட்டங்களினால் பயனடைந்தவர்கள் யார்? நந்திகிராம், சிங்கூர் மற்றும் தயாமொந்தார்பொர் பகுதிகளை சேர்ந்த படித்த அல்லது அரைகுறையாகப் படித்த மக்கள், தகவல் தொழில்நுட்பத் துறை அல்லது பெட்ரோ கெமிக்கல் துறைகளில் தொழிலாளிகளாக, காவலர்களாக, பளு தூக்குபவர்களாக, சுத்தம் செய்பவர்களாக, ஏவலாளிகளாகப் பணிபுரிய வரிசை கட்டி நிற்பார்கள். புதிதாக உருவாகியுள்ள வங்காள பாகாபாந்த்கள், இங்கிலாந்தில் எலிசபெத் காலத்தில் இவர்களைப் போல இருந்தவர்கள் போல தங்கள் பங்கை ஆற்ற தயாராக இருந்தனர்.

இதன் விளைவாக, மேற்கு வங்கத்தில் தனித்துவமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தங்களுக்கு வெகு காலத்திற்கு பின், நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென் அவர்களின் தன்னார்வ நிறுவனமான "ப்ரசிதி ட்ரஸ்ட்' எனும் அமைப்பு 2000 இல் நடத்திய ஆய்வின்படி – மித்நாபூர், புருலியா, பங்குரா மற்றும் பீர்பம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது தெரிய வந்தது. மேற்கு வங்கத்தில் சாதி அமைப்பு மட்டும் முழு வீச்சில் நிலைத்திருக்கவில்லை; இந்து நூல்களான மநு, கீதை அல்லது வேதங்களில் குறிக்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக அரசியல் சட்ட அடிப்படை யிலான இடஒதுக்கீடு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதற்கு கடும் எதிர்ப்பும் இருக்கிறது. இதைவிட மோசமாக, பல ஆண்டுகளாக எவ்விதப் பெரும் எதிர்க்கட்சிகளுமின்றி தொடர்ந்து மார்க்சியவாதிகள் ஆண்டு வருகின்ற ஒரு மாநிலத்தில் (மேற்கு வங்கம்), தீண்டாமையின் பெயரால் வெறுப்பின் கொடூர வடிவம் இன்னமும் நடைமுறையில் உள்ளது.

கேரளாவை பொருத்தவரையில், குருவாயூர் கோவிலில் மத்திய அமைச்சரின் மகன் அக்கோயிலின் புகழ் பெற்ற விழாவான "குழந்தைகளுக்கு முதல் திட உணவு வழங்கும் விழா'வை தொடங்கி வைத்தõர். (மத்திய அமைச்சர்) வயலார் ரவியின் மனைவி கிறித்துவர் என்பதால், அவர்கள் மகன் இந்து அல்லாதவர் ஆகிறார். இதனால் கோயிலின் புனிதத் தன்மைக்கு இழுக்கு நேர்ந்து விட்டது என பார்ப்பன புரோகிதர்கள் சேர்ந்து கோயிலை முழுமையாக கழுவி விட்டுள்ளனர். இவற்றோடு ஒப்பிடுகையில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு தீண்டத்தகாத சமார் பெண், லக்னோ அரச பீடத்தில் அமரும் நிலையை அடைந்திருப்பது பாராட்டுக்குரியது. முதலமைச்சராக அவரின் அதிகாரப்பூர்வ தொடுதலினால் மாநிலமே அசுத்தமாகி விட்டதாக மாநிலத்தைக் கழுவி விடும் துணிவு பார்ப்பனர்களுக்கு இல்லை. பழமையான மநு சட்டங்கள், சூத்திரரை ஆட்சியாளராகக் கொண்ட அரசை விட்டு, பார்ப்பனர்கள் வெளியேற வேண்டும் என்றே சொல்கிறது.

கன்னங்கருப்பாக இருக்கும் காளி தேவியை வணங்குவதற்காக, அந்த களிமண் சிலையின் நெற்றியில் குங்குமம் இட, ஒரு தீண்டத்தகாதவராக இருந்தபோதும் கோயிலுக்குள் நுழைய துணிந்தார் என்பதற்காக ஹுக்ளி மாவட்டம் ஆரம்பக்கை சேர்ந்த ஷராமா ஷீத் என்னும் பெண்மணியை தண்டித்ததாக மேற்கு வங்கத்தில் அண்மையில் ஒரு நிகழ்வு நடந்தது. இத்தனைக்கும் அந்த குங்குமம் கடவுளின் தட்டிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தது. அவர் தீண்டத்தகாத பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் மனைவியாவார். அதனால், அவர் கோயிலுக்குள் நுழைந்தது என்பது இந்து கடவுளுக்கு தீட்டை ஏற்படுத்திவிட்டது. இது, மிக அண்மையில் தலைப்புச் செய்தியாக வந்தது. கம்யூனிச வங்கத்தைச் சேர்ந்த நாளேடுகள் இத்தகைய சாதிய வெறுப்பு, தீண்டாமை, தீண்டத்தகாதவர்கள் மீதான வன்கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வெளியிடுகின்றனர்.

2007 இன் முன் பகுதியில் நாளேடுகளில் வந்த ஒரு செய்தியானது, நடுநிலையான சொல்லப்போனால் மனித மனதையே உலுக்கியது. ஒரு மாவட்டப் பள்ளியில் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர், கங்கை நீர், மாட்டுச் சாணி, மாட்டுச் சிறுநீர், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட "புனித' கலவையினால் மொத்த பள்ளியையும் "சுத்த'ப்படுத்தினார். இது எதற்காகவெனில், இவருக்கு முன் பல ஆண்டுகளாகப் பணியில் இருந்த தலைமை ஆசிரியர் ஒரு தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர். மார்க்சிய வங்கத்தின் பள்ளிக் குழந்தைகள் என்னமாதிரியான பாடத்தை கற்றிருப்பார்கள் என்று நமக்குத் தெரியவில்லை.

பார்ப்பனிய மார்க்சியவாதிகள் என்ன சொன்னாலும், வங்கத்தில் சாதி இருப்பை மறுத்தாலும், அங்கு சாதி இருக்கத்தான் செய்கிறது. மேலும், ஒவ்வொரு முடிவின் பின்னும் அது தவிர்க்க இயலாத முக்கியப் பங்கை ஆற்றுகிறது. இது, மேற்கு வங்கம் முழுவதிலும் நிலவக்கூடிய உண்மையாகும். இடதுசாரி அரசானது அவர்களது அய்ந்தாவது ஆட்சிக்காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அந்த உணவு கீழ்சாதி அல்லது தீண்டத்தகாதவர்களால் சமைக்கப்படுவதால், அதை உண்பதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

நமது சமூகத்தில் குறிப்பாக சற்று முன்னேறிய பிரிவினரிடையே மிக பலமாக உருவாகியுள்ள இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தானது, சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிரான மிக விந்தையான வாதங்களை முன்வைக்கிறது. சமூகத்தின் ஒரு சில பிரிவினரை பிற்படுத்தப்பட்டவர்களாக மாற்றியதில் சாதிய அமைப்பு வரலாற்று ரீதியாக ஆற்றிய முக்கியப் பங்கை மறுத்து, மாறாக, சமூக பிற்படுத்தப்பட்ட தன்மையை பொருளாதார நிலையோடு சமன்படுத்தும் சூழ்ச்சிகரமான – முட்டாள்தனமான முயற்சி இத்தகைய அனைத்து வாதங்களுக்கு பின்னும் இருக்கிறது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் சமத்துவம், பொருளாதார வளங்கள் போன்றவற்றை அணுக முடியாததே – பிற்படுத்தப்பட்ட தன்மை உருவாவதற்கான மூல காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. இடஒதுக்கீடு திட்டத்தில் சாதியை ஒதுக்குவதும், அல்லது பிற்படுத்தப்பட்ட தன்மையின் திரண்ட குறியீட்டின் அடிப்படையில் அதை செயலற்றதாக மாற்றுவது என்பது, "உயர்சாதி'யினரின் ஒட்டுமொத்த அதிகாரத்தை நிலைப்பெற செய்வதற்கான வழியையே ஏற்படுத்தும்' என்று பேராசிரியர் இம்தியாஸ் அம்மாத் எழுதுகிறார்.

இதையொட்டி இந்திய சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருக்கின்ற சாதியின் இருப்பை மறுப்பதன் மூலம் பார்ப்பனிய மார்க்சியவாதிகள் பார்ப்பனிய சாதியினரின் ஒட்டுமொத்த அதிகாரத்தை நிலைப்பெறச் செய்யவே முயல்கின்றனர் என்று நாம் கூற முடியும். வங்காளத்தைச் சேர்ந்த ஒன்றுமறியாத தலித் மக்கள், பல நூற்றாண்டுகளாக பார்ப்பனர்களால் கற்றுக்கொடுத்தபடி, சாதி இல்லை என்பதை "புரிந்து கொண்டதாக' எளிதாக நடிக்கின்றனர். அந்த நிலையை அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. இதன் விளைவாக, வங்காளத்தில் எவ்வித சாதிய போராட்டத்திற்கும் ஆதரவில்லை. இந்தியப் படிநிலை சமூகமானது வகுப்பு படிநிலையை கொண்டதல்ல. இதனால், இங்கு வகுப்புப் போராட்டம் நடைபெறவே இல்லை. வகுப்புப் போராட்டம் மற்றும் சாதிய போராட்டம் ஆகிய இரண்டும் இல்லாத நிலையில் பார்ப்பனர்களின் தெய்வீக ஆட்சி எவ்வித பாதிப்புமின்றி நிலைபெறுகிறது. ஆதரவற்ற உழைக்கும் மக்கள், தங்களை சுரண்டுபவர்களையே தங்களுக்கு அளிப்பவர்களாக ஏற்றுக் கொண்டிருப்பது என்பதுதான் மிகவும் கேவலமான ஒன்றாகும்.

- எஸ்.கே.பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It