KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
Tamilselvan
ச. தமிழ்ச்செல்வன்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!
தொழிற்சங்க அனுபவங்கள் - 27

சங்க-தேசிய-சர்வதேசிய -மனக்குழப்பங்களுடன்..

வேலை நிறுத்தம் உந்தித் தள்ளிய வேகத்தை விட்டுவிடாமல் ஓடிக் கொண்டிருந்தோம். அம்பாசமுத்திரம் வட்டாரத்திலேயே அஞ்சல் துறையில் ஒரு இருபது பேருக்கு மேல் மார்க்சியம் படிக்கிற - பேசுகிற தோழர்களாக மாற்றம் பெற்றோம். மாரத்தான் வகுப்புகளாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தோம். ஆன்மீகத் தொடர்சொற்பொழிவுகள் போல அம்பையில் வாரம் ஒரு தலைப்பில் நானே பேச ஆரம்பித்தேன். வெளியிலிருந்து ஆள் கிடைத்தால் அந்த வாரம் எனக்கு விடுமுறை. என் வாசிப்புக்கு அது பெரும் தீனியாக அமைந்தது. போல்ஷ்விக் கட்சியின் வரலாறு, சீனப்புரட்சியின் வரலாறு, இயக்கவியல் பொருள்முதல்வாதம் -எல்லாம்தான். மாமிவீடு என்று எங்கள் வட்டாரத்தில் பிரபலமாகிவிட்ட தோழர்கள் டி.வி.எஸ்-கோமதி அம்மாள் வீடுதான் எங்கள் நிரந்தர வகுப்பறையானது. எங்கு போனாலும் இப்படி பத்துப் பேருக்கு சளைக்காமல் சாப்பாடு போடுகிற வீடுகள் எங்களுக்கு அமைந்து கொண்டே இருந்ததால் வேலை லேசாக இருந்தது.

காலையில் ஒரு அமர்வு - மதிய உணவு அங்கேயே தோழர்கள் இருவரும் தயாரித்து வழங்க - மாலையில் ஒரு அமர்வு. மொத்தம் ஒரு தலைப்புக்கு ஐந்து மணி நேரம் என்று ஓட்டிக் கொண்டிருந்தேன். தடி தடி புத்தகங்கள் மீண்டும் என் கைக்கு வந்து சேர்ந்ததில் எனக்குப் பெரிய மனநிறைவு இருந்தது. இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை அந்த நாட்களில்தான் தேடித் தேடிப் படிக்கத் துவங்கினேன். அந்த வாசிப்பு என் மன உலகத்தை விஸ்தாரப்படுத்தி என்னை வேறு ஒரு மனிதனாகவே மாற்றிவிட்டது எனலாம். சொந்த வாழ்வை எந்த யோசனையுமின்றிப் பலி கொடுத்த அந்தத் தியாகிகள்தான் அசலான என் பித்ருக்கள் என்கிற உணர்வு அந்த நாட்களில் என்னை மிகவும் அலைக்கழித்தது. அவர்கள் ஏதோ கடந்துபோன வரலாற்றின் மனிதர்களாக எனக்குப் படவில்லை. கூடவே வாழ்ந்துகொண்டிருக்கும் அண்ணன் தம்பி அப்பா கொல்லப்பட்டதுபோல இருந்தது. குதிராம் போசுக்காகவும் சித்திரங்குடி மயிலப்பனுக்காகவும் கனகலதா, ப்ரிதிலதாவுக்காகவும் கையூர் தியாகிகளுக்காகவும் கண்ணீரில் கரைந்தன பல இரவுகள். சின்னச் சின்ன நோட்டுகளில் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டே இருந்தேன்.

1984 செப்டம்பர் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நாட்டிலும் உலகத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அக்டோபரில் இந்திராகாந்தி கொல்லப்பட்டு ராஜீவ்காந்தி பிரதமரானார். 1.1.85 இல் தபால் துறையும் தந்தி-தொலைபேசித் துறையும் இரண்டு துறைகளாகப் பிரிக்கப்பட்டன. அதே 85இல்தான் சோவியத் அதிபர் செர்னன்கோ காலமானார். அவரது இடத்தில் கோர்பச்சேவ் பொறுப்பேற்றார். இம்மூன்று விஷயங்கள் குறித்தும் கவலையோடும் காரசாரமாகவும் அம்பாசமுத்திரத்தில் நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம்.

இப்போது பார்க்கையில் செர்னன்கோவின் மரணம்தான் சோவியத் வீழ்ச்சியின் துவக்கம் என்பது தெரிகிறது. ஆனால் அப்போது நான் கோர்பச்சேவினால் மிகவும் கவரப்பட்டிருந்தேன். அவரது பெரஸ்திரோய்க்காவும் க்ளாஸ்நாஸ்த்தும் புரட்சிகரமான விஷயங்களாக என் மனதை ஆக்கிரமித்தன. லெனின், ஸ்டாலினுக்குப் பிறகு உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட ஒரு சோவியத் தலைவர் அவர்தான் என்று நான் எல்லோரிடமும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தேன். அவருடைய ஒவ்வொரு உரையும் அறிக்கையும் மனப்பாடமாக என் மனதில் இருந்த நாட்கள் அவை.

இந்திராகாந்தி சுடப்பட்ட அன்று அம்பாசமுத்திரத்தில் அஞ்சலகத்தில்தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆபீசைப் பூட்டச்சொல்லி காங்கிரஸ்காரர்கள் கல்வீசியபோதுதான் அவரது மரணம் உறுதியாகிவிட்டது தெரிந்தது. எங்களது அலுவலகத்தை ஒட்டிய சினிமா தியேட்டரின் அதிபர் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் தலைமையில் நடந்த ஊர்வலத்தின் இறுதியில் சீக்கிய நாய்களை எங்கே கண்டாலும் கண்டதுண்டமாக வெட்டிப் போடவேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார். அவர் வெகுசீக்கிரத்தில் வேறுகட்சிக்குப் போய்விட்டார். பணக்காரனுக்குக் கட்சி, கொள்கையெல்லாம் சும்மா ஒரு மூடாக்குத்தானே.

மத்திய அரசு ஊழியராக இருந்ததால் எப்போதுமே எங்களுக்கு டெல்லியில் நடக்கும் ஆட்சி மாற்றம் பற்றித்தான் அதிகம் கவலை இருக்கும். ஒருவேளை மாநில அரசு ஊழியனாகப் போயிருந்தால் மத்தி ஆட்சி பற்றிக் கவலைப்படாமல் இருந்திருப்பேனோ என்னவோ. மனநிலைகளை இதெல்லாம்கூடத்தான் தீர்மானிக்கின்றன. ராஜீவ்காந்தி மிருக பலத்தோடு பாராளுமன்றத்தேர்தலில் வென்று வந்தது பெரும் மனச்சோர்வை எங்களுக்குத் தந்தது. வலுவான மத்திய அரசு என்றால் ஊழியர்களுக்குப் பட்டை நாமம்தானே.

அஞ்சல் துறையால் மத்திய அரசுக்கு நட்டம்தான். தொலைபேசியால்தான் நல்ல ரெவின்யூ. எத்தனை காலத்துக்கு போஸ்டலின் நட்டத்தை டெலிகாம் தாங்கிக் கொண்டிருக்க முடியும். இலாகாவை இரண்டாகப் பிரிக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டால் டெலிகாம் ஊழியர்களின் ஊதியம் உட்பட உயர்ந்து ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று ஒரு பிட்டை தோழர்.ஓ.பி.குப்தா போட்டுவிட அது தீயாகப் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் ஒன்றுக்கு நாங்கள் ஒப்புக்கொண்டிருந்ததால் கணக்கு வழக்குகள் போட்டுக்காட்டி போஸ்டல் நமக்குப் ஒரு பெரிய சுமை என்று நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பது சங்கம் இனைந்த NFPTE என்கிற கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக குப்தா நீடிக்க முடியாதபடிக்கு உள் நெருக்கடிகள் முற்றியதும்கூட அவர் இந்த பிரிவினை முயற்சிக்கு உடந்தையாகப் போனதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று நாங்கள் வேகமாகப் பேசிக்கொண்டோம். ஏனெனில் அவரது தலைமையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு 1984இல் அது சங்கத்தின் பெடரல் கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு அவர் இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அரசாங்கத்தோடு எந்த ரகசியப் பேச்சு வார்த்தையும் நடத்தக்கூடாது சங்கத்தின் பிற தலைவர்களோடு கலக்காமல் அரசிடம் எந்த வாக்குறுதியும் தரக்கூடாது எனவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவருக்கு ஒரு கிடுக்கிப் பிடி போடப்பட்டிருந்தது. எதுக்குடா வம்பு டெலிகாம் தனியாப் போயிட்டா நாமதானே ராஜா என்று தோழர் குப்தா நினைத்திருக்கலாம்.

தேசத்தின் மீதோ ஊழியர்கள் மீதோ அக்கறையற்ற தலைமைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் இதுபோன்ற நிலைமைகளை தொழிற்சங்க இயக்கம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கும் என்று கீழ்மட்ட ஊழியர்களாகிய நாங்கள் அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் டீ குடித்தபடி ராத்திரி நேரங்களில் பேசிக்கொண்டு திரிந்தோம்.

அந்தச் சமயம் அமெரிக்கா நியூட்ரான் குண்டு ஒன்றைத் தயாரித்து உலகையே அச்சுறுத்தியது. அது ஆளை மட்டும் கொல்லும் பொருட்கள் கட்டிடங்கள் அப்படியே இருக்கும் என்றார்கள். அமெரிக்காவின் ஒவ்வொரு குண்டு தயாரிப்புக்கும் பதிலடியாக அதே வகைக் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த சோவியத்யூனியன் இந்த குண்டை நாங்கள் ஒருபோதும் தயாரிக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது.

சோவியத் எம்பஸியிலிருந்தும் பெங்களூர் திரைப்பட ஆவணக் காப்பகத்திலிருந்தும் யுத்த எதிர்ப்புப் படங்களை வரவழைத்து ஒரு 16 mm புரஜெக்டருடன் ஊர் ஊராகப் போய் படம் போட்டுக்கொண்டு அலைந்தேன். தமுஎச சார்பில் மாவட்டம் முழுக்க பல ஊர்களில் இத்திரையிடலை நடத்தினோம்.

பையன் சித்தார்த்தின் மழலைப் பேச்சுக்களும் கோர்பச்சேவின் நீண்ட உரைகளும் ஓ.பி. குப்தாவின் துரோகங்களும் திரைப்படங்களுக்குப் பிந்திய என் உரைகளுக்கான குறிப்புகளும் என என் மூலையும் ராத்திரித் தூக்கங்களும் குழம்பிக்கிடந்த நாட்களாக அவை கடந்தன.