KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்‘ என்று சுதந்திரம் பெறுவதற்கு சுமார் 30 வருடங்கள் முன்பாகவே பாடியதற்காக பாரதியை தீர்க்கதரிசி என்று பாராட்டுவது உண்டு. பாரதியின் இன்னொரு தீர்க்கதரிசனம்தான் இன்னும் நிறைவேறாமலே இருக்கிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி பாடலுக்கு சீக்கிரமே நூற்றாண்டு விழா வந்துவிடும். அதை யாராவது கொண்டாடினால் நிச்சயம் எல்லா அரசியல் கட்சிப் பிரமுகர்களும் பங்கேற்று உரை நிகழ்த்தி சிறப்பிப்பார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஜாதி அமைப்பில் நம்பிக்கையில்லை என்று வெளியே சொல்லலாம். ஆனாலும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது ஜாதி அடிப்படையில் வாக்காளர் எண்ணிக்கை, வேட்பாளருக்கு ஜாதியில் இருகும் செல்வாக்கு எல்லாவற்றையும் பரிசீலிக்கத்தான் செய்கின்றன. சம பலத்தில் இரு பெரிய ஜாதிகள் இருக்கும் தொகுதியில் சமரச ஏற்பாடாக, அடுக்கில் அடுத்த இடத்தில் இருக்கும் மூன்றாவது ஜாதியைலிருந்து வேட்பாளரை தேர்வு செய்வது உட்பட , வேட்பாளர் தேர்வில் பல ஜாதி ரீதியிலான சூட்சுமங்கள் உள்ளன.

கட்சிகள் அரசியலை ஜாதி ரீதியில் அணுகும்போது ஏன் ஜாதி அடிப்படையிலேயே அரசியல் கட்சி தொடங்கிவிடக் கூடாது என்ற ஆசை பல ஜாதி சங்கங்களுக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தோன்றியது. அப்படித்தான் வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது.

ஜாதி சங்கங்கள் பெருகியதற்கும் அவை அரசியல் கட்சிகளாக மாறியதற்கும் பல சமூகக் காரணங்கள், சரித்திரக் காரணங்கள் உள்ளன. ஜாதிக்கு அப்பாற்பட்டு எல்லா மக்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தவோ, கலாசார தளத்திலிருந்து ஜாதியை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டவோ, பிரதான அரசியல் கட்சிகளிடம் செயல் திட்டங்கள் இல்லாமற்போனதும் இதில் ஒரு காரணம்.

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்த வெவ்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் உளவு அமைப்புகள் விதவிதமான முயற்சிகளை எடுத்திருக்கின்றன. (தன்னைத் தானே பலவீனப்படுத்திக் கொள்ளும் 'ஊழல், வாரிசு அரசியல் போன்ற ' பல அம்சங்கள் அதனிடமே இருப்பது தனிக் கதை.) தி.மு.கவுக்குள் உள் முரண்பாடுகள் வெடித்த போதெல்லாம் அதைப் பயன்படுத்தி மத்திய ஆளுங்கட்சிகளின் சார்பில் உளவு அமைப்புகள் காய் நகர்த்திய பல முயற்சிகளில் சில ஜெயித்தன. சில தோற்றன. ஈ.வி.கே.சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ என்று பிரபலங்கள் விலகியபோதெல்லாம் இந்த முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

திராவிட இயக்கத்தை பலவீனப்படுத்த அப்படி எடுக்கப்பட்ட இன்னொரு ஆயுதம் ஜாதி. தி.மு.கவின் செல்வாக்கு தென்தமிழ் நாட்டில் இல்லையென்று ஆகிவிட்டபிறகும் வட தமிழ் நாட்டு பலத்தால் அது தாக்குப் பிடித்தது. வட தமிழ் நாட்டில் வன்னியர்களுக்கு இருக்கும் (பல நியாயமான) அதிருப்திகளைப் பயன்படுத்தி தி.மு.கவிடமிருந்து அந்த வாக்குகளை பிரிக்க எண்பதுகளில் முயற்சிகள் நடந்தன. அதற்கு வாய்ப்பாக அமைந்தது வன்னியர் சங்கப் போராட்டம். ஒரு புதிய இயக்கம் ஆளும் கட்சியுடன் மோதாமல் எதிர்க்கட்சியுடன் வன்முறை மோதலில் ஈடுபட்ட வரலாற்று அதிசயம் அப்போது நடந்தது. அண்ணா அறிவாலயத் திறப்பு விழாவுக்கு வந்த தி.மு.கவினரும் தென் ஆற்காடு பகுதி வன்னியர் சங்கத்தினரும் மோதிக் கொண்டார்கள். அதை எம்.ஜிஆர். ஆட்சி வேடிக்கை பார்த்தது.

அதன் விளைவுகள் இன்று வரை அரசியலில் எதிரொலிக்கின்றன. வட தமிழகத்தில் பா.ம.கவின் துணை இல்லாமல் தி.மு.கவுக்கும் சரி அ.இ.அ.தி.மு.கவுக்கும் சரி வெற்றி வாய்ப்புகள் குறைவு என்ற நிலை தொடர்கிறது.

வன்னியர் சங்கத்தின் அரசியல் அவதாரம் அடைந்த வெற்றி இதர ஜாதிச் சங்கங்களுக்கும் ஆசையைக் கிளப்பி விட்டது. ஆனால் யாருமே அந்த அளவு தேர்தல் லாபத்தைப் பார்க்க முடியவில்லை என்பதற்கு இரண்டே காரணங்கள்தான் உள்ளன.

ஒன்று வேறு எந்த ஜாதியும் வன்னியர்கள் போல ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமாக குவிந்து வாழும் வசதியைப் பெற்றிருக்கவில்லை. அப்படிப்பட்ட வசதி ஓரளவு இருக்கக்கூடிய முக்குலத்தோர் ஏற்கனவே ஜெயலலிதா தலைமையின் கீழ் அ.இ.அ.தி.மு.க.வால் திரட்டப்பட்டுவிட்டார்கள். தனியே ஒரு முக்குலத்தோர் கட்சியை அமைக்க முடியாமலும் ( தேவைப்படாமலும்) போய்விட்டது. நடிகர் கார்த்திக்கும், பார்வர்ட் பிளாக்கும் இன்னமும் முயற்சிப்பது வடக்கே வன்னியர் போல தெற்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தத்தான்.

இந்த வட்டார பலம் தேர்தலில் பயன் தந்ததற்கு இன்னொரு காரணம் நம்முடைய தேர்தல் முறையாகும். போட்டியாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஜெயிக்கிறார் என்ற தத்துவத்தில், 100ல் 49 ஓட்டுகளுக்கு எந்த மரியாதையும் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய்விடுகிறது. பிரதிநிதித்துவ முறைத் தேர்தல் மட்டும் இருந்தால் முதலில் பயன் அடையக்கூடியவர்கள் தலித் கட்சிகள்தான். தலித் ஓட்டுகள் சுமார் 14 சதவிகிதம் இருந்தாலும், அவை தமிழகமெங்கும் சிதறி இருக்க்கின்றன.

இந்த சிக்கலினால்தான் இப்போது கூட அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒன்பது தொகுதிகளில் எட்டு தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை ஜெயிக்கவைக்கும் அளவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் தலித் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக இல்லை என்பதும், இதர ஜாதியினர் தலித் வேட்பாளரை ஏற்கமாட்டார்கள் என்று நமது பண்பாடு பற்றி அரசியல்வாதிகளுக்கு இருக்கும் உறுதியான நம்பிக்கையும்தான் இந்த முடிவுகளுக்குக் காரணமாகும்.

நடக்கப் போகும் தேர்தலில் ஓர் ஆறுதல் 2001ஐப் போல இந்த முறை ஜாதிக் கட்சிகளின் கூட்டணி என்பதாக எதுவும் பகிரங்கமாக உருவாக்கப்படவில்லை என்பதாகும். அந்தத் தேர்தலில் தி.மு.க தன்னுடன் பிராமணர் சங்கத்தை தவிர ஏறத்தாழ எல்லா ஜாதிக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டது. ராஜாஜி போன்ற ஒரு பெரிய தலைமை பிராமண சங்கத்துக்கு அப்போது இருந்திருந்தால், அதையும் நிச்ச்யம் சேர்த்துக் கொண்டிருக்கும்.

தி.மு.க நிச்சயம் ஆட்சியை மறுபடியும் கைப்பற்றும் என்று பல அரசியல் அறிஞர்கள் அப்போது சொன்ன ஆரூடம் பலிக்கவில்லை.

அதற்கு என்ன அர்த்தம்? மக்கள் ஜாதி அடிப்படையில் ஓட்டு போடுவதில்லை என்பதா? அல்லது சில ஜாதிக் கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு செல்வாக்கு உள்ளது என்று அர்த்தமா? இரண்டுமே உண்மைகள்தான்.

ஜாதி அடிப்படையில் தனிக்கட்சி நடத்த முடியாது என்று தங்கள் அசல் பலத்தை உணர்ந்துவிட்ட பல ஜாதித் தலைவர்கள் இந்த முறை பெரிய கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டார்கள். சிலர் அரசியலை விட்டுவிட்டு வியாபாரங்களையும் தொழிலையும் காப்பாற்றிக் கொள்ளப் போய்விட்டார்கள். களத்தில் எஞ்சியிருப்பது பெரிய எண்ணிக்கையில் பலம் உள்ள ஜாதிகள் சார்ந்த கட்சிகள் மட்டும்தான்.

இரண்டாவதாக, ஒரு நெருக்கடியான சூழலில் தன் குடும்பம், தன் ஜாதி என்ற உணர்வுகள் உசுப்பிவிடப்பட்டு அவற்றால் உந்தப்படுவதைத் தவிர மற்ற சமயங்களில் மக்கள் பொதுவாக ஜாதி அடிப்படையில் ஓட்டு போடுவதில்லை. அப்படிப் போடுவதாயிருந்தால், கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி ஒரு தேர்தலிலும் ஜெயிக்கவே முடியாது. இருவரும் பிறக்க நேர்ந்த ஜாதிகளுக்கு உள்ள எண்ணிக்கை பலம் அவ்வளவு குறைவானது.

மக்கள் திருமணம் போன்ற அந்தரங்க விஷயங்களில் ஜாதிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அரசியலில் அளிக்கவில்லை என்று ஆறுதலடைவோம். இன்னமும் அரசியலில் ஜாதி முழுச் சாப்பாடு அல்ல. தொட்டுக் கொள்ளும் ஊறுகாய்தான். இல்லாவிட்டால் முழுத் தமிழகமும் பாப்பாப்பட்டி, கீரீப்பட்டிப் போல சீரழிந்திருக்கும்.

(ஓ! பக்கங்கள் - ஆனந்த விகடன் - மே 2006)