Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
சிறுகதை
ம. காமுத்துரை

பகடை

“ஏண்டா... இத்தன் நாளாக் காணாம்னு ஒரு வார்த்த கேட்பீகளாண்ணே...!'' சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த செல்வராஜ், திடுமென கண்ணீர் சொறியலானான். எனக்கு விக்கினபாடுமில்லை. விரைச்சபாடுமில்லை.

“என்னா இது... ச்சின்னப் புள்ளத்தனமா... என்னா ஆச்சு...?'' சாய்ந்திருந்த நாற்காலியிலிருந்து நிமிர்ந்தேன்.
அவனோ இரும்பு பெஞ்சில் குறுகிக் கொண்டு கண்ணீரைத் துடைத்தான். மேல்மாடி என்பதால் அவன் அழுகை எங்களுக்குள் முடிந்து போனது. கீழ்த்தளமாயிருந்தால்... சங்கடம்தான்.

எப்படியும் மாசத்துக்கொருமுறை வந்து போவான் குமுளியில் ஒரு கண்கண்ணாடிக் கடையில் வேலை. அதற்கு முன் இங்கே நண்பர் குமார் கடையில் வேலை பார்த்தான். அப்போது பழக்கமானது. நண்பர் கடனாளியாகி திருப்பூர் ஓடிப்போனார். போனவர் இவனுக்கு நாலைந்து மாத சம்பளபாக்கி தரவேண்டும். அது சம்பந்தமாய் வருவதும், அவரைப்பற்றி விசாரிப்பதுமான தொடர் சந்திப்பில் பழக்கம் பரிவாகி கொஞ்சம் அன்யோன்யப்பட்டது.

மொட்டை மாடியில் தென்னங்கிடுகால் ஒரு சிறிய அறை அமைத்திருந்தேன். இதுதான் எனக்கான இடம். கிழக்குப் புற சன்னல் வழியே வீரப்ப அய்யனார் கோவிலின் கோபுரம் தலை மட்டத்தில் தெரியும். எதிர்புறம் மேற்குத் தொடர்ச்சி மலை. பச்சைப்பாம்பாய் திமில் பூண்டு நிற்கும். இவன் இங்கே வருகிற போதெல்லாம் கேள்வியோடுதான் வருவான்.

“சாமிக இருக்க கோவுரத்திலல்லா எதுக்குண்ணே செலைகளெல்லா அம்மணம்மா நெஞ்ச உருட்டி நிக்கிது! ஒவ்வொண்ணுல பாத்தா கால விரிச்சு கிட்டுக்கூட அசிங்கம் புடுச்சு நிக்கிம்...!''

“பச்சமலைல யார்னெ தீ வெக்கிறது...? தெனமு எங்குட்டாச்சும் ஒரு பக்கம் எரிஞ்சு கிட்டுத்தெ இருக்கு பாருங்க இங்க இருந்து பாக்குறப்பவே அனலு அலஅலயா தெரிறத... பாவம் எத்தன பட்சிக, குட்டிக துள்ளத் துடிக்க சாகும்...? கவருமெண்டுல இதெல்லா பாக்கமாட்டாகளா...”

இவனது இப்படியான பாமரத்தனமான கேள்வி, சமயத்தில், சில புதிய சிந்தனையைக் கிளறி விடுகிற அதிசயம்கூட நிகழ்வதுண்டு. இன்றைக்கு அவன் வருகிற போது கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன்.

“யாருண்ணே...?''

சொன்னேன்.

“எங்க சாரப் (குமார்) பத்தி கேட்டு எழுதுங்கண்ணே...'' என்றான். "சரி!' என்றேன். “நாங் கேட்டதா ஒரு வரி போடுங்க'' அழுத்தினான். சம்மதித்தேன் “அவரப் பாக்கணும் போல இருக்குணே... எத்தன வருசம் ஆச்சு... நீங்களெல்லாம் போறீக பாக்குறீக... ஒரு தரங்கூட என்னியக் கூட்டிப் போக மாட்டேங்கிறீக...'' என்றவன், “ஆனா எங்க குமார் சார்லா இப்படி இருக்கமாட்டார். வரேன்னு ஆவுகம் வச்சுகிட்டே இருந்து பட்டுன்னு ஒருநா கௌம்புடா செல்வம்னு கூட்டிட்டுப் போவார். பாவம்... நல்லவங்களுக்குதே ரொம்ப கஷ்டம் வரும் போல...''

அப்படி பேசிக் கொண்டே இருந்தவனின் முகம் மேகத்துக்குள் சிக்கிய நிலவாக கறுத்துப் போனது. கண்களில் இமையில் ஒரு படபடப்பு, “ஆனாண்ணே இப்ப இருக்க எங்க ஓனர் சரியில்லணே...” என்று எச்சி முழுங்கினான்.

“யேஞ் சம்பளந் தரலியா...?''

“ப்ச்... சம்பளமென்னாண்ணே... இந்த மாசமில்லாட்டி அடுத்தமாசம்...! ஆனா மனுசன்னா, சுத்தம் வேணும்ணே... பேச்சு சுத்தம். மனசு சுத்தம்...'' சொல்லிக் கொண்டிருந்தவன்தான் கரகரவென கண்ணீர் சிந்தலானான்.

“மன்னிச்சுக்க செல்வம்... நா எப்பவும் போல ஜாலியா பேசிட்டேன். சொல்லு என்ன விசயம்...?''

“இல்லண்ணே, நா என்னா ஒங்க கூடப் பொறந்தவனா... ஒற மொற சொந்தமா... ஏதோ ஒரு வந்தட்டிப் பெய... வந்தா காப்பிச் செலவு...'' மூஸ்மூசென அழுதான்.

இப்படி ஒரு மனநிலையில் அவனை இதுவரை சந்தித்ததில்லை. இத்தனை ஆழமான உள்பொதிவுகள் வைத்த பேச்சை கேட்டதில்லை. எல்லாமே அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் நிகழ்வுதான். ஒரு குழந்தையின் மனநிலைதான் நேற்றுவரை சந்தித்த செல்வராஜ்...

குமுளியில் அவனுக்குப் பெயர் ராஜா ராஜ். கடைக்கு வந்ததும் முதல் வேலை விளம்பர பலகை முதல் உள்ளே இருக்கும் ஷோ கேஸ், மேசை, தரைவிரிப்பு என இண்டு இடுக்கு அத்தனையும் ‘பளிச்' என கண்ணாடி மாதிரி வைத்திருக்க வேண்டும். இதற்காகவே பிரத்தியேகமான துடைப்பமும் கெட்டித் துணியிலிருந்து நைஸ் துணிவரை வகைவகையான துடைப்பான்களும். இவன் கைவசம் ஒப்படைத்திருக்கிறார் முதலாளி.

“கண்ணுல தூசி விழச் சம்மதிச்சாலும் கண்ணாடிக் கடைல காத்தூசு இருக்கவிடக் கூடாது...'' என்று வீசுகிற காற்றையே மறித்துக் கொள்வார். கூட்டி முடித்து கூடையில் அள்ளி கொட்டிவிட்டு வந்ததும். விபூதியை நீரில் பிசைந்து கண்ணாடிக் கதவில் பூசுவான். அது காய்ந்ததும் மெல்லிய துணி கொண்டு அழுந்தத் துடைப்பான். அது டி.வி. பெட்டியை மூடி இருக்கும். மடக்கு கதவு (ஷட்டர்) போல அடுக்கடுக்காக உதிரும். கண்ணாடியின் நிர்வாணம் மனசை கிளுகிளுக்க வைக்கும்.

சில சமயம் விபூதி காய்ந்த நிலையில் கதவில் கைவிரலால் சித்திரங்கள் வரைவான். வீடு போல. வாசலில் நதியோட, எதிர்க்கரையில் தென்னை மரம் தலைவிரித்துப் போட்டு நிற்கும். கரையோரமாய் படுக்கை வசத்தில் ஒரே ஒரு நீளபெஞ்ச் கிடக்கும். தூரத்து மலை முகடுகளுக்குள் சூரியன் வெளிப்படும் அல்லது மறைந்து கொண்டிருக்கும். வானத்தில் ரெண்டு பறவைகள் பறந்து கொண்டிருக்கும். ‘டிக்' போட்டது போல வரைந்தால் அது பறவைகளாகி விடுகிற விந்தை அவன் சித்திரக்காரன் ஆன பிற்பாடுதான் தெரிந்தது.

ஒருநாள் கண்ணும், மூக்கும் காதும் போட்டு வட்டமாய் முகம் செய்தான். கழுத்து, மார்பு கைகால் இழுத்து விட்டான். வளைய வளையமாய் நெஞ்சு வரைந்து விட்டதால் சேலை வரைவது எப்படி என தெரியவில்லை. ஆண் உருவமாயிருந்தால் பாண்ட்டோ, ட்ரவுசரோ... வேட்டிகூட இழுத்துவிடலாம்... சேலை உடுத்தி விடுவதற்காக எட்ட நின்று பார்த்து யோசித்தான். ஆளுயரக் கண்ணாடி என்பதால் இவன் உயரத்திற்கும் கூடுதலாயிருந்தது அது.

தொப்புளுக்குக் கீழாய் படுக்கைக் கோடு போட்டு சேலைக்கான பிரயத்தனங்கள் செய்து கொண்டிருந்தபோது விநாயகா ஆப்டிகல் குமரன் வந்தான்.

“சூப்பர்...'' என்றான் இவன் திடுக்கிட்டு எழுந்தான்.

“வசந்தாக்கா மாதிரியே இருக்கு!... என்னா செய்யப் போற...?''

“சேல வரயப் போறெ...!''

“சேலயா... வேஸ்ட் தொப்புளுக்குக் கீழ ஒருச்சாண் எறக்கி ஆட்டியன் வரஞ்சிடு... அம்சமா இருக்கும்''

புரியாமல் விழித்தான்.

குமரன் வரைந்து காண்பித்ததும். ஆடிப்போனான் செல்வராசு (ராஜ்)

“அய்யோ'' என்றவன் துணி எடுக்கக் கூடக் காத்திராமல் கைகளாலேயே அழித்தான். குமரனுக்குச் சிரிப்புத் தாள வில்லை. "அப்படியே விட்டிருந்தா எவாரம் பிச்சு எடுக்கும்ல...”

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு சிறிய ஓய்வுக்காக வருவான் குமரன். சில சமயம் விசேஷமான உணவு கொண்டு வந்து தருவான். நல்ல நண்பன்.

“ச்சீ... பப்ளிக்கான கடைல இந்தமாதிரியல்லா அழிம்பு பண்ணக்கூடாது....'' ராஜா சொன்னான்.

“நீ மட்டும் வசந்தாக்காவ வரஞ்ச... அது குசும்பு இல்லியா...''

“அதென்னா வசந்தாக் காவா...?''

“பின்ன... அம்புட்டுப் பெரிய நெஞ்சு...''

உண்மைதான் அந்தக்கா நல்ல ஓங்கு தாங்காய் இருப்பார்கள். முதன் முதலாய்ப் பார்த்த போதே ஒரு கிளர்ச்சி உண்டாக்கி விட்டார்கள். கண்ணாடி வாங்க எத்தனையோ விதமான பெண்கள் வந்து போகிறார்கள். ஆனால் வசந்தாக்கா தனிதான். ஒரு ரிப்பேருக்காக வந்தார்கள். அதற்கும் முன்னால் ஓனருக்கு பழக்கமாய் இருக்க வேண்டும். இதே போல மத்தியானப் பொழுதில்தான் பெரும்பாலும் வருவார்கள். அது அனேகமாக ஓனர் இருக்கக் கூடிய நாளாக இருக்கும். ‘வில்லை' கீழே விழுந்து விடுவதாகவும் பிரேமில் சரியாய் உட்காரவில்லை என்றும் சொன்னார்கள். ஓனர் வாங்கிப் பார்த்து ‘வில்லை' லேசாய் கிரைண்டிங் பிடிக்கச் சொன்னார். கண்ணாடி மேசையின் உள்பக்கமாகவே மிசின் மாட்டி இருந்தார்கள். சில கடைகளில் அதற்கென உள்ளே தனியறை இருக்கும். இங்கே வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே சரி செய்து கொடுப்பது போன்ற ஏற்பாடு.

மெசினுக்கு பக்கத்தில் மேசையை ஒட்டி பெஞ்சை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டார் வசந்தாக்கா. இருவருக்கும் இடையில் ஒரு அடி அகலமுள்ள கண்ணாடி மேசை தான் தூரம். அது ‘டா'னா வடிவத்தில் வெளிவாசல் வரை நீண்டு கல்லாவருகே கண்ணாடிக் கதவில் முடியும். இன்னொரு முனை வலதுபுறம் திரும்பி சுவரில் முட்டி நின்றது. சுவரோரம் ரிப்பேர் சரி செய்யும் உபகரணங்கள் இவனுக்கான ஆசனம். கல்லாவுக்குள்ளும் கருவிகள் இருக்கும். லேசான வளைசல், நிமித்தல்... வேலைகள் ஓனரும். கிரைண்டிங் இவனும். அன்று வசந்தாக்கா இவனைப் போட்டு இம்சித்தது. “ஓனர் சீக்கிரத்துல வேலய முடிச்சுடுவாரு... நீ என்னா தம்பி இப்பிடி இழுக்கிற...''

மல்லிகை வாசமும், ஏதோ ஒரு செண்ட்டின் நெடியும் வியர்வை நாற்றமும் கலந்து சூழ்ந்து கொண்டன.

“சரியா புடிக்க வேணாமாக்கா...''

“சரியாப் புடிக்கவா...'' சிரித்தார். “புடிக்க வேண்டி தானப்பா... படிக்க இம்புட்டு நேரமா...'' மறுபடி சிரித்தார்.

“சீட்டிங் பாக்கணும்லக்கா... அவசரத்துக்கு தேயாதுல்ல''

“ஓ... கோ... சீட்டிங் வேற பாக்கணுமா...'' ஒரு பக்கம் ஓனரைப் பார்த்துக் கண்ணடித்தார்.

“வசமா ஒக்கார வக்கெனும்னா...''

“ஸ்பீடு பத்தாதேப்பா... ஓனர்ட்ட குடுத்துப்பாரு எப்பிடி, எவ்வளவு சீக்கிரமா சீட்டிங் பாத்து ஒக்காத்தி வக்கிறார்னு...'' சிரிப்பு.

“அவருக்கு அனுபவம் கூடுதலுக்கா...”

“கூடுதல் அனுபவமா... ஹோ ஹோ...'' சிரிப்புத் தாளாமல் பக்கத்திலிருந்த இவன் மேல் சாய்ந்து அவனை அமுக்கிக் கொண்டு சிரித்தார். இவனுக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது. அது கிரைண்டிங் பண்ணிய வெப்பத்தால் கூட இருக்கலாம்... ஆனாலும் வசந்தாக்கா வரும் போதெல்லாம் அவரின் முன்புறம் தன்மேல் சாய்ந்ததும் அந்த வாசனையும் ஞாபகத்தில் எழுந்தன.

“அடப்பாவிகளா... நீங்க கண்ணாடிக்கட நடத்துன லட்சணம் இதுதானா...! என்னாடா... நம்மாளு ஒரே கடைல இத்தன்னாளா இருக்கானேன்னு பாத்தே...?'' அவன் மூச்சுவிட்ட இடைவெளியில் புகுந்தேன் நான்.

ஆமாமென்றோ, இல்லையெனவோ அல்லது உடம்பைத் திருகி வெளிவருகிற ஒரு அசட்டுச் சிரிப்போ அவனிடம் இல்லை. கல்லாய் இருந்தான். எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. இதைவிட ஆச்சர்யம் காப்பியை வேண்டாம் என்றது. அவன் ஒப்பித்துக் கொண்டிருக்கும் போது கீழிருந்து காப்பி வந்திருந்தது சமயத்தில் இவனே இறங்கிப்போய் எடுத்து வருவான்.

அந்த வெளிப்பாடு புதிதாயிருந்தது. “பிராந்தி இல்லப்பா... காப்பிதே...''

“எதா இருந்தாலும் இன்னிமே ஓசில ஏதும் வாங்கிக்கிறதில்லணே...!''

“டே செல்வொம்...!'' நான் பட்டென எழுந்து விட்டேன். அவன் அமர்ந்துதான் இருந்தான். ஒரு வகையில் நான் கூட கல்தான். எந்த உணர்வும் என்னிடம் பிரதிபலித்து அதிர்வுக்குள்ளாக்காது என்ற இறுமாப்பு இருந்தது. முதல் முதலில் அதை உடைத்து விட்டான்.

“இது ஓசி இல்ல உபசரிப்பு...!

அவன் கடைசிவரை அதைத் தொடவே இல்லை. நம்மாளு தான... நம்ம ஓனர்தான என்று வாங்கிச் சாப்பிடுவதும், அதற்காக நிறையச் செலவுகளை பைசாவாக அல்லாமல் மனசு வழியாகவும் உடம்பு வழியாகவும் அனுபவித்ததாகச் சொன்னான்.

“அட சாமி... அப்பனுக்கு சுப்பையெ பாடஞ்சொன்ன கணக்கா இருக்கேடா... நீ என்னாடா சாமி சொல்லப் போற... புல்லரிக்குதப்பா...'' காலை நீட்டி சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டேன். இவன் கிளம்பிய பிறகுதான் சாப்பிட முடியும். வயிற்றில் ஏதோ ஒரு அமிலம் சுரப்பதான உணர்வு.

மடமடவென சட்டையைக் கழற்றினான். அய்யர் வீட்டுப் பையன் போல கனிந்த நிறம். வயதுக்குரிய வாகு இல்லாமல் பூஞ்சான் உடம்பு, முகத்திலும் தேகத்திலும் சுருக்கங்கள் படிந்து நறுங்கிப்போன வளத்தி, வயசை நிர்ணயிக்க முடியாத தோற்றம். விலாவிலும் முதுகிலுமாய் ஒன்றிரண்டு இடங்களை காண்பித்தான். சிவந்து கன்றிப்போய் இருந்தது.

“என்னா செல்வம்... என்னாப்பா இது...?''

“அடி... ணே அடி. ரூமுக்குள்ள அடச்சு வச்சே அடிச்சாங்கண்ணே... ஒரு நா ரெண்டு நாளா... நா... நான்குக்குப் பதில் ஐந்து விரல் காட்டினான். கண்கள் நீரில் மிதந்தன. ஓனருக்கும் வசந்தாக்காவுக்குமான உறவில் பாலமாக இவனை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்திக்காத நாளில் தகவல் கொண்டு சேர்க்கவும் செலவுக்கு பணம் கொடுத்து வருவதும் இவனுக்கான கூடுதல் வேலையாயிற்று.

வீட்டுக்கு இவன் வந்தாலே வசந்தாக்கா உற்சாகமாகி விடும். பெரும்பாலான நேரங்களில் அந்த வீட்டில் வேறுயாரையும் இவன் பார்த்ததில்லை. அக்கா மட்டும் நைட்டி போட்டு படுத்திருக்கும். இல்லாவிட்டால் நைசான சேலைகட்டி எதாவது புத்தகம் படித்துக் கொண்டிருக்கும். மொட மொடப்பான சேலையை விட நைஸ் சேலைதான் எடுப்பாய் இருக்கும். சமீப காலங்களில் அந்தக்கா கடைக்கு வருவதில்லை. அதனால் இவன் அடிக்கடி அவர் வீட்டுக்கு போக வேண்டி இருந்தது.

“ஓனர்தே கடைக்கு வர வேணான்ட்டாரே செல்வம்''

அது இவனுக்கு பெருத்த நஷ்டமாயிருந்தது. வெள்ளிக் கிழமைகளில் தலைமுழுகி தூக்கணாங்குருவிக் கூடாய் தலை வாரி பெரிய ரோசாப்பூவைச் சொருகி வயலெட் கலர் சேலை உடுத்தி வந்தார்களென்றால்... சினிமா நடிகைகள் ஓடிப்போக வேணும். வந்ததும் இவனது இருக்கையை ஒட்டித்தான் உட்காருவார்கள். ஷாம்பு வாசனையும் பவுடர் மணமும் கிறங்கடிக்கும்.

“சண்டையாக்கா...'' கொஞ்ச நாளாக ஓனரின் செய்கையில் பதட்டமும் பரபரத்த முழிப்பும் இவனை அப்படி நினைக்க வைத்தன.

“சண்டையா... ம்... அப்பிடியே வச்சுக்கோ... செல்வம்...!''

“அய்யோ... அடிச்சிட்டாரா...'' இவனுக்கு திடுமென தனது அப்பா ஞாபகம் வந்தது. அவர்கள் சண்டையில் அப்பாவின் கை நீட்டலுக்குப் பிறகு ஓயும். அதும் இந்தக் கடைக்கு வந்தபிறகு வீட்டுப்பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை. அதும் வசந்தாக்கா, டூட்டிக்குப் பிறகு சுத்தம். வகையான சாப்பாடு, காசு... யாராச்சும் வந்தால் ஊருக்கு சம்பளத்தை கொடுத்து விடுவான். அந்தப் பணத்தை வச்சு எதும் சண்டை வரலாம். அது போலவா...

“சேச்ச...''

“அடிப்பாராக்கா...''

“சும்மா அடிப்பரா...?''

“அப்புறம்...!''

“ம்... இங்க பார்.'' அவன் கையைப் பிடித்து தனது அடிவயிற்றில் கையை அழுத்தி வைத்தார்.

“வகுத்த வீங்க வெச்சுட்டார்...'' சிரிப்பு

உள்ளங்கை கண்ட வெதுவெதுப்பும், மிருதுத்தன்மையும் அவனால் மறக்க முடியாததாயிருந்தது.

“கர்ப்பமா...'' நான்

“ம்...'' தலையாட்டினான்

“ஏற்கனவே அந்தாள் கல்யாணமானவர்ன...''

“ரெண்டு புள்ளைக வேற...''

“நாசமாப் போச்சு... அப்றம்...''

“அந்தக்கா தாலிகட்டச் சொல்லி சண்ட போடுறாங்க!”

“கரெக்ட்.''

“இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்குல்ல... பிரச்சன வரும்ல...''

“இப்பத்தே ஆவுகம் வருது ... ம்...?''

“அதால... இப்பத்தக்கி வாண்டாங்கறாரு...''

“புள்ள பொறந்தபெறகு செய்யலாங்கறாரா...?''

“ஆனா, அந்தக்கா வீட்ல ஒரே கரச்சல்...!''

“கடைக்கி வந்தாகளா...!''

“வந்தாங்களா... ஒரே மானக்கேடுண்ணே... சாதியப் பத்தியெல்லா வைறாக...''

“ஒங்கக்கா கிட்டச் சொல்லி டியென்சி பண்ணச் சொல்லீர்ப்பாரே...''

“அதெல்லா சொல்லியாச்சு... முடியாதுண்ணுட்டாக...!''

“சபாஷ்...'' கதை சுவாரஸ்யமாக இருந்தது. “மொத பொண்டாட்டிக்கு தெரிமா...''

“அவங்க வீட்ல என்னெய் வைராங்கண்ணே...''

“யே...ன்''

“நாந்தே இதுக்கெல்லாங் காரணமா.''

“அதனால ஒன்னய கட்டிக் கிடச் சொல்றாங்களா''

பேசிக்கொண்டே இருந்தவன் இந்தக் கேள்வியால் மௌனமானான். மெதுவாய் ஆமெனத் தலையசைத்தான். முகத்தில் திகில் ஏறி இருந்தது. கண்களில் கலக்கமும் உதட்டில் பயமும் நிலைத்தது. சீண்டிப் பார்க்க என்னுள் ஆசை.

“நீ என்னா சொன்னெ...?''

என்னது என்பது போல தலையை மேல் நோக்கி அசைத்துக் கேட்டான்.

“நீ சரின்னுட்டியாண்னே...''

உடம்பு நடுங்குவது போலத் தெரிந்தது. எழுந்து நின்றான்.

“யேண்ணே...'' குரலிலும் நடுக்கும்.

எனக்கு குதூகலமாயிருந்தது. பிறத்தியாரைச் சீண்டுவதற்கு ஏனிந்த விருப்பமோ மனசுக்கு.

“வேறென்னா வழி செல்வம்... ஓனரு அம்புட்டுச் சிக்கல்ல இருக்காரு... உனக்கோ எல்லாந் தெரியும்... ரெண்டும் ரெண்டும் நாலுதான்...''

“ரெண்டும் ரெண்டும் நாலா...''

“ஆமா... நீ கலியாணம் முடியாதவெ. அந்தப் பிள்ளையும் அப்பிடித்தான்... அதெஞ்சரி. போ... போய்த் தாலியக்கட்டு...”

“தாலியக் கட்டவா...?'' கூண்டுக்குள் சிக்கிய பெருச்சாளி போல பரபரத்தான். சட்டென ஒரு வினாடியில் “நா இல்ல... வேணாம்... விட்டுடுங்கண்ணே... அய்யோ அய்யய்யோ...'' என்ற அலறியபடி விருட்டென ஓடினான். மாடிப்படிகளில் அவனது காலடிஓசை வினோதமாயிருந்தது. ஓடுவது போலவும் குதிப்பது போலவுமான தப்படிகள்.

சத்தம் கேட்டு மனைவியும் மகளும் மேலே வந்தனர். நானே குழப்பத்தில் இருந்தேன். நிச்சயம் இது சிக்கல் மிகுந்த பிரச்சனையாய் இருக்க வேண்டும். மனைவியோடு அவன் வீட்டுக்குப் போனேன். எங்களைக் கண்டதும் அவனது தாயார் அழுதார்.

வசந்தா, வீட்டிலிருந்து தன்னை துரத்திவிட்டதாக ஓனரிடம் வந்து அழுதிருக்கிறாள். அவர் வீட்டிலும் பிரச்சனை இருப்பதால் செல்வத்திடம் கொஞ்சம் பணம் கொடுத்து வீரபாண்டியிலுள்ள அவளது உறவினர் வீட்டில் சிலநாள் இருக்கும்படி விட்டு வரச்சொல்லி இருக்கிறார். ஆனால் அவளது உறவினர்கள் செல்வத்தை சிறை பிடித்துக் கொண்டார்களாம். ஓனர் தலை மறைவாகி விட்டார். ஒருவாரம் அவனை அடித்து ஓனரின் இருப்பிடத்தை கேட்டிருக்கிறார்கள். தெரிந்தால்தானே சொல்ல... கடைசியில் வசந்தாவை இவருக்கே கட்டிவைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எப்படியோ இரவோடு தப்பித்து ஓடி வந்திருக்கிறான். அவனது தாயாரின் அழுகை ஓயவில்லை.

“இங்க வந்தாகளா''

“அசிங்க அசிங்கமா பேசுறாங்கய்யா... மாமா வேல பாத்தவெ... குடும்பமே தப்பிலிக்குடும்பமாம்...''

“ஒரு வாத்த சொல்லீர்க்கலாம்ல...''

“தெரு சிரிச்சது பத்தாம ஊர் சிரிக்கவாங்கய்யா?''

ரொம்ப வருத்தமாயிருந்தது. செல்வத்தை ரொம்பத்தான் புண்படுத்தி விட்டேன்.

“ஓனரு என்னா ஆனாரு...'' மனைவி கேட்டாள்.

“போலீஸ்ல புகார் குடுத்துருக்கம்மா...''

முதலில் செல்வத்தை கண்டுபிடிக்க வேண்டும். இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, அவன் சந்தோசப்படும்படியாக பேச்சைத் தொடுக்க வேண்டும். "குமார் சாரை பார்த்தாக சொல்லி பேசலாமா...'' அவனை சந்திக்கவிருக்கும் கணத்திற்காக காத்திருக்கிறேன்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com