KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

தேர்தல் களத்தில் ஜாதி, பண பலம், ஆள் பலம், அதிகார பலம், இலவச அறிவிப்புகள் இவற்றுக்கெல்லாம் இருக்கும் செல்வாக்கிலும் முக்கியத்துவத்திலும் ஒரு சதவிகிதம் கூட, கட்சிகளின் கொள்கை - சித்தாந்த விஷயங்களுக்கோ, வேட்பாளர்களின் தரத்துக்கோ கிடையாது என்பது யதார்த்தமான நிலை.

தேர்தல் முறையே கோளாறானதாக இருக்கிறது. மொத்தம் நூறு வாக்காளர்கள் இருந்தால், அதில் 40 பேர் ஓட்டு போடவே வருவதில்லை. மீதி 60 பேர் போட்ட ஓட்டில், 40 சதவிகித ஓட்டு வாங்கினவர் வென்றவராகிறார். அதாவது 24 ஓட்டு. மொத்த வாக்குகளில் 24 சத விகிதம் மட்டுமே பெற்றவர் தொகுதிக்கு பிரதிநிதியாம்.

கடந்த சட்டமன்ற தேர்தல் விவரங்களைப் பாருங்கள். வாக்காளர்களில் 41 சதவிகிதம் பேர் ஒட்டு போடப் போகவே இல்லை. போட்டவர்கள் 59 சதவிகிதம் மட்டும்தான். இந்த 59 ஓட்டில் 40 சதவிகிதம் (அதாவது மொத்த 100 சதவிகித வாக்காளர்களில் 24 சதவிகிதம்தான்) பெற்று ஜெயித்தவர்கள் 7 பேர். 59 ஓட்டில் 50 சதவிகிதம் (100க்கு 30) கிடைத்து ஜெயித்தது 91 பேர். 59 ஓட்டில் 60 சதவிகிதம் (100க்கு 36) வாங்கி எம்.எல்.ஏவானவர்கள் 129 பேர். 59 ஓட்டில் 70 சதவிகிதம் (அதாவது 100க்கு 42) பெற்று வென்றவர்கள் 7 பேர்.

ஒரு எம்.எல்.ஏ கூட எந்தத் தொகுதியிலும் மொத்த வாக்காளர்களில் சரி பாதி பேரின் ஆதரவைக் கூடப் பெறவில்லை. அதிகபட்சமே 42 சதவிகிதம்தான். எவ்வளவு அபத்தமான ஜனநாயகம் இது?

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நடமாடமுடியாத அளவு உடல் உனமுற்றவர்கள், முதியவர்கள், மிக அவசர வேலையாக ஊரில் இல்லாமல் போனவர்கள் என்று பத்து சதவிகித வாக்காளர்களை ஒதுக்கிவிட்டால், மீதி 90 சதவிகிதம் ஓட்டு போட்டிருக்க முடியும். ஆனால் 59 சதவிகிதம்தான் போடுகிறார்கள். போடாத 31 சதவிகிதம் பேரும் வந்து யாருக்காவது ஓட்டு போட்டால் கூட முடிவுகள் மாறக் கூடும். அப்படியே போட்டாலும், இந்த தேர்தல் முறையில் எல்லா ஓட்டுக்கும் சமமான மரியாதை இல்லை. ஒரு கற்பனைக்கு 100 ஓட்டும் பதிவானதாக வைத்துக் கொள்வோம். 51 ஓட்டு வாங்கியவர் வென்றவர் ஆவார். மீதி 49 ஓட்டுக்கு பிரதிநித்துவம் இல்லை. அந்த 49 பேரும் வென்றவரை நிராகரித்தவர்கள். அவர்கள் கருத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லை.

எனவே நூறு சதவிகிதம் மக்கள் ஓட்டளித்தாலும் கூட, இந்த தேர்தல் முறையில் மெய்யான மக்கள் பிரதிநிதித்துவம் கிடையாது. இந்த அபத்தமான தேர்தல் முறை நமக்கு ஆங்கிலேய ஆட்சியால் அடிமைக்காலத்தில் அளிக்கப்பட்டது. அதையே இன்னமும் கட்டிக் கொண்டு அழுகிறோம். உலகத்தின் பெரும்பாலாண நாடுகளில் இது இல்லை. பிரிட்டனின் பழைய அடிமை நாடுகளிலும், பிரிட்டன், அங்கிருந்து போய் ஆக்ரமித்த அமெரிக்கா முதலிய நாடுகளில் மட்டுமே உள்ளது. நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல் என்று சுமார் நூறு நாடுகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைதான் உள்ளது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் பல வகைகள் இருந்தாலும் அடிப்படை ஒன்றுதான். எந்த ஓட்டும் வீணாவதில்லை என்பதே அடிப்படை. இப்போது தமிழ் நாட்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை இருந்தால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் எந்த அளவு வாக்கு சதவிகிதம் இருக்கிறது என்று கடந்த பல தேர்தல்களாக கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு சில சதவிகிதம் கூடுதலாகவோ குறைவாகவோ அவ்வப்போது இது மாறலாம். ஆனால் ஏறத்தாழ கீழ்வரும் பட்டியல்தான் ஓரளவு நம்பத் தகுந்தது என்று வைத்துக் கொண்டு பார்ப்போம்.

அ.இ.அ.தி.மு.க, தி.மு.க இருவருக்கும் தலா 24 சதவிகிதம். காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விஜயகாந்த் கட்சி ஆகியோருக்கு தலா 7 சதவிகிதம். வைகோவின் ம.தி.மு.க திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கு தலா 4 சத்விகிதம். மீதி 9 சதவிகிதம் உதிரிகள்.

இந்த அடிப்படையில் 234 சீட்டுகளை விகிதாசாரப் பிரதிநிதித்துவமாக விநியோகித்தால், யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று பார்ப்போம். அ.இ.அதி.மு.க, தி.மு.க - தலா 56 சீட். காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விஜயகாந்த் கட்சி ஆகியோருக்கு தலா 16 சீட். வைகோவின் ம.தி.மு.க, திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கு தலா 9 சீட். மீதி உதிரிகளுக்கு 24 சீட். இதுதான் ஒவ்வொரு கட்சியின் அசல் பலத்துக்கேற்ற சீட் பிரிவினை.

ஆனால் இப்படி நடக்கப் போவதில்லை. தகுதிக்கு மீறியோ தகுதிக்குக் குறைவாகவோதான் எல்லாருக்கும் சீட்டுகள் கிடைக்கும். ஒரு தேர்தலில் இதனால் லாபமடையும் கட்சி இன்னொரு தேர்தலில் நஷ்டமும் அடைந்திருப்பதுதான் நமது தேர்தல் வரலாறு.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வந்தால்தான், கட்சிகளின் கொள்கை, சித்தாந்தம், செயல்முறைகளுக்கு முக்கியத்துவம் வரும். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ, தலித் கட்சிகளுக்கோ எல்லா தொகுதிகளிலும் ஆதரவாளர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போதைய தேர்தல் முறையில் அந்த ஒட்டுகள் அர்த்தம் இழக்கின்றன. கூட்டணி தர்மத்துக்காக, தங்கள் கட்சி யாரை ஆதரிக்கிறதோ அவர்களை விரும்பாவிட்டாலும் ஆதரிக்கும் கட்டாயம் இப்போது இருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் இந்த சிக்கல் தீ£ர்ந்துவிடும்.

தேதல் முறையில் இந்த சீர்திருத்தத்தை நோக்கிப் போக வேண்டுமானால், இப்போதைய தேர்தல்முறையின் கோளாறுகளை இன்னும் அதிகமாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு வசதியாக ஏற்கனவே சட்டத்தில் 49 ஓ இருக்கிறது.

எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விரும்பாவிட்டால், அதை ஓட்டுச்சாவடியில் பதிவு செய்யும் உரிமையை தேர்தல் விதிகள் 1961 சட்டத்தின் 49 ஓ பிரிவு வழங்கியிருக்கிறது. இதையும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு ரகசிய பட்டனாக சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முடங்கிக் கிடக்கின்றன.

விரலில் மை வைத்த பிறகு சாவடி அதிகாரியிடம் 49 ஓ போட விரும்புவதாக சொன்னால் போதும். அதற்குரிய பதிவேட்டில் எழுதி நம் கையெழுத்தை பதிவு செய்வார்.

ஒரு தொகுதியில் நூற்றுக்கு 59 ஓட்டு பதிவாகும் சூழலில் அதில் 24 ஓட்டு வாங்கியவர் ஜெயிக்கிறார். 49 ஓவுக்கு 25 ஓட்டு விழுந்தால் என்ன ஆகும்? எல்லா வேட்பாளர்களும் நிராகரிக்கப்படுகிறார்கள்.

ஒரு தொகுதியில் 2 லட்சம் ஓட்டில் வெறும் 5 ஆயிரம் ஓட்டு வைத்திருக்கும் ஜாதிக்கு அரசியல் கட்சிகள் பயப்படுகின்றன. கூட்டணியில் இடம் தரத் தயாராக இருக்கின்றன. தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் 49 ஓட் போட்டால்தான், பொதுவான மக்களுக்கும் அரசியல் கட்சிகள் பயப்பட ஆரம்பிப்பார்கள். அப்போது தங்கள் அசல் பலத்துக்கேற்ற சீட்டாவது கிடைத்தால் போதும் என்ற பயம் வரும். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசாதவர்கள் எல்லாம பேசத் தொடங்குவார்கள்.

இதெல்லாம் கனவு, கற்பனை என்று அலுத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. வேட்பாளரின் சொத்துக் கணக்கைக் காட்ட அத்தனை கட்சியும் மறுத்தது சரித்திரம். இன்று சட்டப்படி காட்டியாக வேண்டும். ஜெயலலிதாவும் கருனாநிதியும் ஆளுக்கு 24 கோடி சொத்து வைத்திருக்கிறார்கள். சோனியாவிடம் 7 கோடிதான். புத்ததேவ் பட்டாச்சார்யாவிடம் வெறும் 75 ஆயிரம்தான் என்பதை மக்கள் அறிய முடிகிறது.

49 ஓவுக்காக நாங்கள் நடத்திவரும் எளிமையான ஓ போடு பிரசாரத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு உற்சாகம் தருகிறது. ரகசிய பட்டனாக 49 ஓ இருந்தால், இந்த தேர்தலிலேயே குறைந்தது 50 தொகுதிகளில் 49 ஓ ஜெயித்துவிடும். பகிரங்கமாக 49 ஓ போடுவதற்கு பயம் இருக்கும் அளவுக்கு கடந்த கால அரசியல் இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் தொகுதிக்கு நூறு பேராவது 49 ஓ போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது மக்கள் அரசியல்வாதிகளுக்கு தரும் எச்சரிக்கை மணி.

49 ஓ ரகசிய பட்டனாக வந்து மக்களால் சரியாக பயன்படுத்தப்பட்டால், இன்னும் பத்தாண்டுகளில் தேர்தல்முறையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அப்போதுதான் இருவரில் யார் மேல் என்ற சாலமன் பாப்பையா பாணி பட்டிமன்றத்துக்கு முடிவு வரும்.

(புதிய பார்வை - மே 2006)