KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
எம்.ஏ.சுசீலா

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்!

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான பேராசிரிய வாழ்வில் இலக்கியக் கல்வியிலும், இலக்கிய ஆய்வுகளிலும் வாழ்வின் செம்பாதிக்கு மேல் செலவிட்டு, அதிலேயே ஊறி, உட்கலந்து போன நிலையில், இன்றைய கல்விச் சூழலில் இலக்கியக் கல்வியும், ஆய்வுகளும் சிரிப்பாய்ச் சிரிக்கும் அவலம் கண்டு “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்'' என்ற புலம்பத்தான் தோன்றுகிறது. செய்யும் தொழில் ஈடுபாடும், கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சியும் எஞ்சியிருக்கக் கூடிய எவருக்கும் இன்று நேர்த்திருப்பது இந்த வேதனைதான்!

"60களில் நிலவிய தமிழ் எழுச்சிச் சூழலில், மொழியின் மீதும், அதன் இலக்கிய மரபுகளின் மீதும் தீரா வேட்கை கொண்டு கல்லூரியின் இளநிலைப் (பி.ஏ., பி.எஸ்ஸி.,) படிப்பை வேதியல், இயற்பியல், பொருளாதாரம், வரலாறு என வேறுபட்ட துறைகளில் மேற்கொண்டிருந்தாலும் அதனைத் தொடராமல், தமிழ் முதுகலை (எம்.ஏ)யை ஆர்வத்தோடு நாடி வந்து தமிழிலக்கியத்தை ஆராக்காதலுடன் அணைத்துக் கொண்ட தலைமுறை ஒன்று இருந்தது. உண்மையான மன எழுச்சியுடன் தேர்ந்து கொண்ட துறை என்பதால் கவிதை, நாடகம், பிற படைப்பிலக்கித் துறைகள், ஆய்வியல் எனப்பல துறைகளிலும் அத்தலைமுறையைச் சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க முத்திரைகளைப் பதித்தனர். புறத்தூண்டுதல்கள் அல்லது அங்கீகாரங்கள் ஆகியவையும், பொருளாதார லாபம் பெறுதல் போன்றவைகளும் அவர்களின் முதன்மையான நோக்கமாக அமைந்திருக்கவில்லை.

தமிழ்மொழியின் மீது மெய்யாகவே பற்றுக் கொண்டு, அதன் இலக்கண இலக்கியங்களை ஆர்வம் கலந்த தேடல் நோக்குடன் கற்றுக் கொள்ள விரும்பி, இளங்கலை நிலையிலிருந்தே (பி.ஏ) தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்து கொண்டவர்களும், மேற்குறித்த முதல் சாராரைப் போன்றவர்களே!

70களின் இறுதியிலும், 80களின் தொடக்கத்திலும் தொழிற்கல்வி மீது மக்களுக்குப் பெருகிற மோகம், உண்மையான இலக்கிய ஆர்வமும், தேடலும் கொண்ட இளம் தலைமுறைகளையும் கூடப் பொறியியல், மருத்துவம் ஆகிய (வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தருவனவாகவும், பெற்றோரின் மனப்பதட்டத்தைத் தணிக்கக் கூடியனவாகவும் எண்ணப்பட்ட) துறைகளின் பால் ஈர்த்துச் சென்றது. கலை/அறிவியல் கல்லூரிகளின் பிற பட்டப்படிப்புகளில் இப்போக்கால் ஏற்பட்ட பெரும் தாக்கம், இலக்கியக் கல்வியிலும், இலக்கிய ஆய்வுகளிலும் ஏற்படுத்திய சரிவு என்றைக்குமே சரிக்கட்டிக் கொள்ள முடியாத, கடைத்தேற்றிக் கொள்ள இயலாத மாபெரும் வீழ்ச்சியாக அமைந்துவிட்டது. தொழிற்படிப்புகள் கிடைக்காத சூழலில் கலை, அறிவியல் பட்ட வகுப்புக்களை நாடி வருவோர், இரண்டாம் நிலைக் குடிமக்கள் போல் கருதப்பட்ட நிலையில், இலக்கிய மாணவர்கள் கடையரிலும் கடையராக நடத்தப்பட்டதில் வியப்பில்லை.

இலக்கியப் பிரிவில் 50 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்குமாயின் அதில் விரும்பி வருவோரின் விழுக்காடு 10% கூட இருப்பதில்லை; பிற படிப்புகளுக்கு விண்ணப்பித்து விட்டு, மதிப்பெண் குறைபாடு காரணமாகத் தமிழ் இலக்கியம் பயிலுமாறு கல்லூரி நிர்வாகத்தால் தள்ளப்படுபவர்களே மிகுதியாகும் சூழலில்....., தங்களுக்கு ‘விதிக்கப்பட்டதை' விரும்பி ஏற்காமல்...., ‘விதியே' என்று ஊக்கமும் இல்லாதவர்களாகவே 3 ஆண்டுகளும் அவர்கள் கழித்து விட்டுப் போவதைப் பார்க்கையில், இலக்கியக் கல்வியின் எதிர்காலம் குறித்து அவ நம்பிக்கை மேலிடுவதைக் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை. செமஸ்டர் கல்வி முறையின் அகமதிப்பீட்டு முறை தொடர்ச்சியாக எழுத வேண்டிய கட்டுரை வினாக்களில் மதிப்பெண் குறைந்தாலும் ஓரிரு தொடர், பத்திவினா முதலியவற்றில் ஈடுகட்டி விடக்கூடிய வினாத்தாள் அமைப்பு, சில தன்னாட்சி நிறுவனங்களில் தரப்படும் எளிமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றால் பிழையில்லாத தமிழ்த் தொடரமைப்புகளைக்கூட உருவாக்கத் தெரியாதவர்களும் தப்பிப் பிழைத்து விடுவதோடு, இளங்கலை, முதுகலை, தமிழ்ப்பட்டதாரிகளாக (அதுவும் முதல் வகுப்பில்) தேர்ச்சி பெறும் கேவலம், மாநிலத்திலுள்ள பல கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாக நடந்தேறிக் கொண்டிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

மேற்குறித்த இலக்கியப்பட்டதாரிகள், கல்வியாளர்களாக, ஆய்வாளர்களாக வளர்ச்சி பெறும் சூழலில் அவர்கள் பெற்ற இலக்கிய அறிவு, இயல்பான பரினாமமாக இல்லத நிலையில், அவர்கள் வழங்கும் கல்வி, அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு ஆகியனவும் அரைவேக்காட்டுத் தனமாகவும் தேவைக்குத் தீனி போடுவதற்காகவே செய்யப்படுவதாகவுமே அமைந்து போகிறது. “சில ஆண்டுக் காலத்திற்காவது தமிழ் எம்.பில்.,பி.எச்டி., ஆய்வுகளைத் தடை செய்ய வேண்டும்'' என்று, பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஒரு மூத்த பேராசிரியர் குறிப்பிட்டதில் உண்மையில்லாமலில்லை. ஆய்வுத் தலைப்புகள் பலவும் அவற்றின் அபத்தம் காரணமாகத் தலையில் அடித்துக் கொள்ள வைப்பவை; உள்ளடக்கம் என்ற பெயரில் இடம் பெறுபவை, செய்திகளின் பொருத்தமின்மை காரணமாகவும், வரிசையாக அடுக்கப்படும் மேற்கொள் பட்டியல்களாலும் உண்மையான அறிவுத்தேடல் கொண்டேரைக் கூசிக்குறுக வைப்பவை. நூற்றாண்டு விழவே முடிந்து விட்ட ஒரு கவிஞரைப் பற்றிய எம்.பில். ஆய்வு, அவர் பிறந்த வருடத்தை 1960களை ஒட்டியதாகக் குறிப்பிட்டதென்பது பானைச் சோற்றின் பதச்சோறாகும்.

அத்தகைய ஆய்வேடுகளும் கூட அறிவுச் சந்தையில் விலைபோய் விடுகிற அக்கிரமங்கள், அன்றாட நடப்பாகப் பல பல்கலைகளிலும் நிகழ்ந்தேறி வருவதை என்னவென்று சொல்வது?

“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோன்னு போவான்'' என்ற பாரதியின் வழித்தோன்றல்கøளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய நவீன முனைவர்களின் சூதுவாதுகள் சொல்லிலடங்காதவை. குதிரை பேரம் நடக்கும் அரசியல் சீரழிவுகளைப் போல, அறிவுலகச் சீரழிவின் அசிங்கமான வெளிப்பாட்டை, முனைவர்பட்ட பேரத்தில் காணமுடியும். நெறிகாட்டுவதில் விதம் விதமாய் நிலவும் நெறியற்ற போக்குகள்!! அன்பளிப்புக்கள், அடித்தொண்டு ஊழியர்கள், நெறியாளரின் பிற பணிகளில் (வகுப்பெடுத்தல், தாள் திருத்தல்) உதவுதல், பெண்ணாக இருப்பின் பாலியல் சீண்டல்களுக்கு ஆட்பட நேர்தல் என்று இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். திருத்துநரின் திருவிளையாடல்களோ வரம்பு மீறிய அராஜகத்தின் மோசமான வெளிப்பாடுகள்.

ஆய்வேட்டைத் திருத்துவதற்குப் பல்கலைக் கழகத்திலிருந்து முதல் வகுப்புப் பயணப்படியும், ஊதியமும் பெற்றுக் கொண்டு, விள்ளாமல், விரியாமல் அதைக் கையகப்படுத்திக் கொள்வதற்காக ஆய்வாளரிடமிருந்தே அத்தொகையைத் "தண்டல்' செய்யும் சிறுமையின் உச்சம்! அதற்கும் மேல் முனைவர் பட்டம் வழங்கியதற்காக ஆய்வாளர் மகிழ்ந்து (!?) அளிக்கும் "அன்பளிப்பு'! (தஞ்சாவூரென்றால் கிலோக் கணக்கில் முந்திரிப்பருப்பு, மதுரையென்றால் சுங்காடிச் சேலைகள்.... இன்னும் விலைமதிப்புள்ள பல தரப்பட்ட பொருட்கள் என்று நீண்டு போகும் பட்டியல்) வழங்கப்பட்டுள்ள படிச் செலவுக்குள் பல்கலை விடுதியில் தங்கி விட்டுப்போகாமல், ஆய்வாளரின் செலவில் நட்சத்திரவிடுதிகளில் தங்குதல்.... உணவு.... உல்லாசம்!! இவ்வாறு தரம் தாழ்ந்த திருத்துநரின் நம்பகத்தன்மை எப்படிபட்டது என்பதை எவரும் எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும்!

பதவி உயர்வுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் “கல்யாணச் செலவு'' செய்து (அன்மையில் ஓர் ஆய்வாளர் இதே தொடரைப் பயன்படுத்தியதைக் கேட்க நேர்ந்தது) முனைவர் பட்டம் பெறப் (படிப்பதைத் தவிரப் பிற எல்லாவற்றையும் செய்து) "போராடும்' ஆசிரியர்கள் ஒரு புறமிருக்கத் தமிழ் ஆய்வுகளுக்குக் கல்வி நிறுவனங்களால் அண்மைக் காலலமாக விளைந்துவரும் சில நெருக்கடிகளும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் மூலைக்கொன்றாய்ப் பெருகிவரும் "உலகமய'க் கலவிச் சூழலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் போட்டிகளில் முனைப்பாக இயங்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், ‘நாக்' எனப்படும் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவிடம் ‘தர நிர்ணயம்' பெற்ற நட்சத்திரக் கல்லூரிகளாகவும் ஏ + கல்லூரிகளாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளவும், ஐ.எஸ்.ஓ.எனப்படும் உலகத்தர சான்றினைப் பெறவும் கடுமையாகப் போராடி வருகின்றன. இப்போட்டி ஆரோக்கியமானதாக அமைந்து நல்லதொரு கல்விச் சூழல் உருவாவதில் அனைவருக்குமே மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான்! ஆனால் இப்போட்டியின் சில மோசமான பக்கங்கள் இலக்கிய ஆய்வுகளைக் கேலிக் கூத்தாக்கும் பொழுது, அது குறித்த கருத்தையும் கண்டிப்பாக முன்வைக்க வேண்டியதாகிறது.

தேசிய மதிப்பீட்டுக் குழு, கல்லூரி ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கும் முதன்மைத் தகுதி, தேசிய, சர்வதேசக் கருத்தரங்குகளில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரை வழங்குவதென்பதே! கொள்கையளவில் சிறப்பாக இலட்சிய பூர்வமாகத் தோற்றமளிக்கும் இத்தகுதி, நடப்பியல் கல்விக் களங்களில் மலினமாக்கப்பட்டுக் கொச்சையாகிப் போனதைச் சொல்லவும் நாக்கூசுகிறது. தர நிர்ணயக் குழுவின் தகுதிப் பாட்டை எட்ட வேண்டுமென்பதற்காகச் சரியான திட்டமிடுதல்கள் இன்றி, தேசிய, சர்வதேசக் கருத்தரங்கள் என்ற பெயரில் சராசரியான தரத்துக்கும் கீழாக நிகழ்த்தப்படும் ஆய்வு அரங்குகள்! அனுபவ முதிர்ச்சி அதிகம் பெற்றிராத இளம் ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் அண்மையில் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் கூடப் பன்னாட்டு கருத்தரங்கம் என்ற பெயரில் நடத்தப்படும் அமர்வுகள்!! அவற்றில் பங்கேற்றுக் கட்டுரை வாசிக்கப் பேராளர் கட்டணமாக ரூ.300 முதல் 500 வரை வசூல் செய்து அக்கட்டுரைகளை அல்லது கட்டுரைச் சுருக்கங்களை எந்தவிதமான தணிக்கைக்கோ, தரக்கட்டுப்பாட்டுக்கோ உட்படுத்தாமல் நூல் வடிவமாக்கி, அந்த ‘ஆய்வுத் தொகுப்பு நூல்', தமிழ் கூறும் நல்லுலகில் ‘உலா' வந்துவிடும் அவலம்!

சிப்பிக்குள் முத்தாக, ஆய்வு செய்பவரின் கடும் உழைப்பையும், தேடலையும், புதிய சிந்தனைகளையும் வெளிக்காட்டும் சில கட்டுரைகள் அத்தகைய நூல்களிலும் இடம் பெற்றுள்ள போதும், அவற்றின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணிவிடக் கூடியது மட்டுமே என்ற உண்மையை எவராலும் மறுக்க இயலாது. முதுகலை நிலையில் தரப்படும் பயிற்சிக் கட்டுரைகளையும் விட மோசமான தரம் கொண்ட கட்டுரைகளே மிகுதியாக நிரம்பியுள்ள அவ்வாறான ஆய்வு நூல்களைப் புரட்டும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி எத்தகைய மோசமான மதிப்பீடுகளை மனதில் கொள்வார்கள் என்பதை எளிதாக அனுõனித்து விடலாம். எந்தக் குப்பையாக இருந்தாலும், வெளியிடப்பட்டுவிட்டால் அந்தக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்து ஆசிரியரின் தகுதி! எத்தனை கருத்தரங்கங்கள் நடந்தன என்பதைக் கொண்டு கல்வி நிறுவனத்தின் தகுதி! உண்மையான தகுதி என்பது எங்கோ ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சியாடிக் கொண்டிருப்பது மனச்சாட்கிக்குத் தெரிந்தபோதும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் இலக்கியப் போலிகளின் கையில் இன்றைய இலக்கியக் கல்வி சிக்கியுள்ள சோகத்தை விண்டுரைக்க வார்த்தையில்லை.

‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கிய நக்கீரனை மேன்மைப்படுத்திப் பழம்புராணம் பாடிக் கொண்டிருப்பதும், சங்கப் பலகையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காய்த் திருவள்ளுவரும் கூடப் பாடுபட வேண்டியிருந்ததை விளக்கிக் கொண்டிருப்பதும், இராமாயண அரங்கேற்றம் எதிர்கொள்ள வேண்டியிருந்த கேள்விக் கணைகளைக் குறித்துக் கதைப்தும் மட்டுமே இலக்கிய ஆசிரியர்களின் பணியாகி விட்டது. ‘உள்ளதன் நுணுக்க'மாய்த் தமிழாய்வைக் கொண்டு செல்வதும், அதற்கான ஊக்க விதைகளை இளம் உள்ளங்களில் தூவுவதுமே வருங்கால இலக்கிய ஆய்வுகள் கேலிக் கூத்தாக்கப்படாமல் தடுக்க உதவுபவை. அதனை நோக்கிய முன்னகர்தலின் முதல் கட்டம், "தன்னெஞ்சறிவது பொய்'யாகி விடாமல் உண்மையான தகுதியை இலக்கிய ஆசிரியர்கள் வளர்த்தெடுப்பதேயாகும். இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் அதை நோக்கியதே.