உலகின் மிகப் பெரிய ‘ஜனநாயக நாடு’ என்று கூறப்படும் இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் படைத்த ‘தேர்தல் ஆணையம்’ அதன் நம்பகத் தன்மையை இழந்து நிற்கிறது.

இதுவரை நடந்த எந்த பொதுத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு சார்பாக நடந்து கொண்டதே இல்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே மாறிப்போய் செயல்பட்டார் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா.

இராணுவத்தின் தாக்குதலை ஆட்சியின் சாதனையாகப் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை பகிரங்கமாக மீறினார் மோடி. நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய பிரதமரே இப்படி தரம் தாழ்ந்து செயல்பட்டார்.

தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பு நிலையை மூன்று பேர் கொண்ட ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அசோக் லாவசா ஏற்கவில்லை.

தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை மீறிய மோடியின் பேச்சு, விதி மீறல்களுக்குள் வராது என்று தலைமை தேர்தல் அதிகாரி நற்சான்றிதழ் வழங்கினார். மற்றொரு உறுப்பினரான அசோக் லாவசா இது விதிமுறைகளை மீறியப் பேச்சு என்று குறிப்பு எழுதினார். எதிர்ப்பைப் பதிவு செய்யத் தயாராக இல்லை தலைமை தேர்தல் அதிகாரி. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தைப் புறக்கணித்தார் அசோக் லாவசா. ஊடகங்களில் செய்திகள் வந்தன. கருத்து மாறுபாடுகள் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார், தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோர.

லாவசா தனது எதிர்ப்பை மூன்று முறை எழுத்து மூலம் பதிவு செய்திருக்கிறார். பிரச்சினை நாடாளுமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் பற்றியது என்றாலும், தேர்தல் முடிந்த பிறகு இது குறித்துப் பேசலாம் என்று கூறி விட்டார் தலைமை தேர்தல் அதிகாரி. நம்பகத் தன்மையை இழந்து நிற்கும் தேர்தல் ஆணையம் மீண்டும் மோடியை பிரதமராக்க எடுத்த அனைத்து முறைகேடுகளுக்கும் பலன் கிடைக்குமா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரியும்.

ஆனால் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் ‘டெபாசிட்’டையே இழந்து நிற்கிறது!

Pin It