ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை அறிக்கையாக மனித உரிமைக் கவுன்சில் அய்.நா.விடம் சமர்ப்பித்துள்ளதால் ஆத்திரமடைந்த நடுவண் ஆட்சி, இனி அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்துடன் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருக்கிறது.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளி வந்த அதே நாளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு அரசு சாராத அமைப்புகள், இந்திய இராணுவம் பொது மக்கள் மீது நடத்திய சித்திரவதை படுகொலைகளை விளக்கும் அறிக்கையையும் வெளியிட்டது.

4 குழந்தைகளை இராணுவம் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவமும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த அரசு சாரா அமைப்பின் அறிக்கையை அய்.நா. மனித உரிமைக் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து மனித உரிமை மீறல் தொடர்பாக இந்த அறிக்கை வெளி வந்த அதே நாளில் அய்.நா. மனித உரிமை ஆணையமும் அறிக்கை வெளியிட்டது. இது நடுவண் ஆட்சிக்கு கடும் ஆத்திரத்தை உருவாக்கியுள்ளது.  அய்.நா. மனித உரிமை ஆணையர் 2018ஆம் ஆண்டில்  மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று, 2019 மார்ச்சில் கடிதம் எழுதிக் கேட்டார்.

அத்துடன் 2018ஆம் ஆண்டில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களில் மிக மோசமான கவலைக்குரிய 13 சம்பவங்களை அவர் பட்டியலிட்டிருந்தார். பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்ற எட்டு அப்பாவிப் பொது மக்களில் 4 குழந்தைகளும் கொல்லப்பட்ட சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப் பட்டிருந்தது. அத்தனையும் உண்மைக்கு மாறானவை என்று ஒரே வரியில் அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி மறுத்ததோடு மனித உரிமைக் கவுன்சிலோடு இனி இந்தியா எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளாது என்று அறிவித்து விட்டார். மனித உரிமை ஆணையாளர் சையத் ரா அல் உசேன் இந்தியாவிடம் பாகுபாடு காட்டுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் அய்.நா. சிறப்பு அதிகாரிகள், இந்தியா ஏற்கனவே ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட உடன்பாடுகளை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். உடன்பாட்டில் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் சிறப்பு அதிகாரிகள் - இந்தியாவுக்குள் நேரில் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதும் அடங்கும். அதற்கு 20 முறை அனுமதி கேட்டும் இந்தியா மறுத்துள்ளது. இராணுவத்தால் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பொது மக்கள், இராணுவத்தினர் அல்ல என்று அய்.நா. மனித உரிமை ஆணைய அறிக்கை கூறுகிறது.

Pin It